Categories
சிறப்புப் பள்ளிகள் நிகழ்வுகள்

களம்: அருஞ்செயல் என்னும் பெருஞ்செயல்

எனக்கே தெரியாமல் நடக்கும் என் வீட்டு விஷேஷம் ஒன்றில் பங்கேற்ற திகைப்பூட்டும் மகிழ்ச்சி என்னை ஆட்கொண்டது.

கடந்த சில ஆண்டுகளாக பார்வைத்த்இறன் குறையுடையோருக்கான சில அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளிகளில் கர்ணவித்யா அமைப்பு 6 முதல் 8 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குக் கணினி வகுப்புகளைச் செயல்படுத்தி வருகிறார்கள்.

இந்தக் கல்வியாண்டின்  தொடக்கத்தில், பூவிருந்தவல்லி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கர்ணவித்யா அமைப்பால் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இப்போது அந்த மாணவர்களின் அன்றாட வகுப்பறைச் செயல்பாடுகள் தொடங்கி, அனைத்துக் கற்றல் நிலைகளிலும் மடிக்கணினி தவிர்க்க இயலாத இடத்தைப் பிடித்துவிட்டது.

இதன் நீட்சியாகவும், கூடுதல் சிறப்பாகவும்  வெறும் பயிற்சி வகுப்புகளோடு நின்றுவிடாமல், ‘அருஞ்செயல்’ என்ற நிகழ்வினை ஏற்படுத்தி, சிறப்புப் பள்ளிகள்தோறும் 6 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 11 வகையான போட்டிகளை நடத்தினார்கள்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கணினி வழியில் எழுதுதல், வாசித்தல், பேச்சுப் போட்டி, திருக்குறள்ள் ஒப்புவித்தல் என அனைத்துப் போட்டிகளுமே அந்தந்த பள்ளிகளில் ஒருங்கிணைக்கப்பட்டன. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் கர்ணவித்யா பயிற்சி வளாகத்தில் நேற்று (01.பிப்பரவரி.2025) அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில், பாளையங்கோட்டை, பரவை, தஞ்சை, திருச்சி, சேலம், ஆரணி, பூவை என ஏழு பள்ளிகளைச் சேர்ந்த நூறு மாணவர்கள் பங்கேற்றனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என அந்த வளாகம் பூண்டிருந்த விழாக்கோளம், எனக்கு என் மதுரைப் பள்ளி நாட்களை நினைவுபடுத்தியது.

1990களில் எனது மேன்மைக்குரிய ஆசிரியர் திரு. சண்முகம் அவர்களால் மதுரையில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மிக வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அப்போது, ஐயா அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினத்தை இப்படித்தான் கொண்டாடுவார். திட்டத்தின் கீழ் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் பார்வையற்ற மாணவ மாணவிகளை அழைத்துப் போட்டிகள் நடத்துவார். செல்போன்கள் இல்லாத அந்த காலத்தில், நாங்கள் எங்கள் எதிர்கால உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ள அது இனியதோர் வாய்ப்பாக அமைந்தது.

சரி, ஆட்டோகிராஃப் ஃப்லாஷ்பேக்கை நிறுத்திவிட்டு, மீண்டும் கர்ணவித்யாவுக்கு வருவோம். வெளி ஊர்களிலிருந்து வருபவர்களுக்கான பயணம் தொடங்கி அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பூவைப் பள்ளி சார்பில் நிகழ்வில் பங்கேற்ற 25 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என எங்களை அழைத்துச் செல்ல இரண்டு வாகனங்கள் வந்தன.

வளாகத்தில் எங்கு திரும்பினாலும், “சார் நல்லா இருக்கீங்களா” என என்னிடம் படித்த முன்னால் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் குரல்கள் வழிமறித்தபடியே இருந்தன. போதாதற்கு கர்ணவித்யாவின் பயிற்சியாளர்கள், தன்னார்வலர்கள் என அங்கேயும் எனது முன்னால் மாணவர்கள். எனக்கே தெரியாமல் நடக்கும் என் வீட்டு விஷேஷம் ஒன்றில் பங்கேற்ற திகைப்பூட்டும் மகிழ்ச்சி என்னை ஆட்கொண்டது.

பிஸ்கட் தேனீர் சகிதம் நடந்த தொடக்க நிகழ்வுக்குப் பின், மாணவர்களுக்கான போட்டிகள் தனித்தனி அறைகளில் ஒருங்கு செய்யப்பட்டன. மாணவர்களைப் போட்டி நடக்கும் அறைகளுக்கு அழைத்துச் செல்லுதல், மதியம் அவர்களுக்கான உணவு பரிமாறல், கழிவறை அழைத்துச் செல்லல் என அனைத்துமே இனி தாங்கள்தான், மாலையில் நடக்கும் பரிசளிப்பு விழாவில் சந்திக்கலாம் என்கிற அன்புக் கட்டளைகளோடு, எங்களுக்கும் மாணவர்களுக்குமிடயேயான தொடர்பைத் துண்டித்தார்கள் தன்னார்வலர்கள். எந்தப் பள்ளி மாணவர்களையும் தங்கள் ஆசிரியர்கள் நெருங்கிவிடாதபடிக்குத் தன்னார்வலர்கள் தங்களோடு அழைத்துச் சென்றுவிட்டார்கள். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களாகிய நாங்கள் வேறு கட்டடத்துக்கு இடம் மாற்றப்பட்டோம். “எல்லாமே அவுங்களே பார்த்துக்குவாங்கலாம், நமக்கு வேலையே இல்ல போங்க” என நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்ட அதேசமயம், “அப்பாடா, டீச்சர்ஸ் யாருமேகூட வரலைடா” என மாணவர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள்.

மாலை நடந்த விழாவில், நியூ இந்தியா அஷூரன்ஸில் பணியாற்றும் திரு. கண்ணன் அவர்கள், இராணுவக் கர்னல் ஒருவர் மற்றும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எழிலன் நாகநாதன் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மூன்று ஆண்டுகளாகத் திட்டமிட்டு, 11 பள்ளிகளை அணுகி, அவற்றுள் ஏழு பள்ளிகள் எங்கள் முயற்சியில் கைகோர்த்தமைக்கு நன்றிகள் என அருஞ்செயல் நிகழ்வுக்கான முன் முயற்சிகள் பற்றி இயல்பாக உரையாடினார் செல்வி. சிவசங்கரி. அதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த கர்ணவித்யா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரகுராமன் அவர்கள், நான்கு முக்கிய கோரிக்கைகளை மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தார்.

*நவீனக் கற்றலை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, அனைத்து நிலையிலுள்ள பார்வையற்ற மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டும்.

*கையில் வழங்கப்பட்ட கணினிகளை முறையாகப் பயன்படுத்த அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

*பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களின் வகுப்பறைச் செயல்பாடுகள் கணினியை உள்ளடக்கியதாக அமையும் வகையில், அரசு கொள்கைகள் வகுக்க வேண்டும்.

*பார்வைத்திறன் குறையுடய மாணவர்களுக்கான சிறப்பாசிரியர்கள் போதிய அளவில் நியமிக்கப்பட வேண்டும்.

“உங்களுக்குப் பார்வைப்புலன் இல்லை என்றாலும், பிற புலன்கள் தனித்தன்மை கொண்டதாக இருக்கும் எனச் சட்டமன்ற உறுப்பினர் ஆரம்பித்தாலும்கூட, “தோழர் ரகு சொன்னதை அப்படியே முதல்வர் கவனத்துக்குக் கொண்டுசெல்கிறேன். ஏனெனில், அவர் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உங்கள் உரிமை சார்ந்தவை” என முடித்தபோது நெகிழ்வாக இருந்தது.

கையாள்வதற்கு எளிதாக வழங்கப்படும் உணவுப் பொதிகள் கர்ணவித்யாவின் தனித்துவம். வளாகத்தில் எப்போதும் எவர் ஒருவரும் தன்னைப் பார்வையற்றவர் என உணரவே மாட்டார். அந்த அளவிற்கு, தன்னார்வலர்கள் தொடங்கி, அறிமுகமே இல்லாத நன்கொடையாளர்கள்கூட காட்டும் கண்ணியமான அணுகுமுறை என ஒவ்வொன்றும் போற்றுதலுக்குரியது.

-தமிழகத்தின் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகள். விடுதியுடன் கூடிய உண்டு உறைவிடப் பள்ளிகள் என்ற காரணத்தாலேயே கல்வியின் பொருட்டுத் தங்களின் பள்ளிகாலத்தின் பெரும்பான்மையை நான்கு சுவர்களுக்கிடையே கழிக்க நிர்பந்தப்பட்ட மாணவர்கள். இவர்களை ஒரு குடையின்கீழ் இணைத்துக் கணினி கற்பித்தார்கள், போட்டி நடத்தினார்கள், பரிசுகள் கொடுத்தார்கள் என்பதெல்லாம் விழாவுக்கான சிறப்புகளாக இருக்கலாம். ஆனால், அப்படிச் சந்தித்துக்கொண்ட மாணவர்கள் தங்களுக்குள் புதியதோர் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்கள், தொழில்நுட்பம் குறித்து உரையாடினார்கள், எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஒருவரையொருவர் அறியத் தலைப்பட்டார்கள் என்பதே விழாவைத் தனித்துவம் கொண்டதாக மாற்றிவிட்டது.

பார்வையற்றோரிடையே புதியதோர் நவீனத் தலைமுறையைச் செதுக்கிடச் சிந்தித்துச் செயலாற்றிக்கொண்டிருக்கும் கர்ணவித்யாவின் முயற்சிகள் ஒவ்வொன்றும் அருஞ்செயல் மட்டுமல்ல, பெருஞ்செயலும்கூட. அத்தகைய செயல்பாடுகள் இந்த ஆண்டு மட்டுமல்லாமல், இனிவரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் என வாழ்த்துகிறோம்.

***ப. சரவணமணிகண்டன்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

2 replies on “களம்: அருஞ்செயல் என்னும் பெருஞ்செயல்”

கர்ணவித்யா அமைப்பு மேற்கொள்ளும் புதிய நவீன தலைமுறையை உருவாக்கும் முயற்சி வெற்றி பெறட்டும். நாளைய சமுதாயம் புதிய புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி வாழ்வில் மேம்பட வாழ்த்துகிறோம்.

Like

கர்ணவித்யா அமைப்பு மேற்கொள்ளும் புதிய நவீன தலைமுறையை உருவாக்கும் முயற்சி வெற்றி பெறட்டும் மற்றும் மாணவர்களின் மேம்பாட்டிற்காக நவீன தொழில்நுட்ப வழிவகைகள் மென்மேலும் சிறக்கட்டும்

Like

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.