Categories
association letters தொடுகை மின்னிதழ்

நிகழ்வு: “சிறப்புப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றிடுக:” அறிவே துணை ஆய்வு மையம் தீர்மானம்

தீர்மானங்கள்

பார்வையற்றோரின் மேம்பாட்டை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டு வரும் அறிவே துணை ஆய்வு மையத்தின் பொதுக்குழு கூட்டம், கடந்த 30-09-2024 அன்று கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்கீழ் இயங்கும் சிறப்புப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. தமிழ்நாடு சமூக நலத்துறையின் கீழ் இயங்கிவரும் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளை முன்னர் இருந்ததுபோல் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வருமாறு பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வுமையம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

2. மேலே கேட்டுக்கொண்டபடி பள்ளிக்கல்வித் துறையின் கீழ் கொண்டுவரும்போது சிறப்புப் பள்ளிகளுக்கான தனிப்பட்ட திட்டங்கள் வகுத்துத் தரப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக அந்தந்த பள்ளியே தேர்வுக்கான கேள்வித்தாள்களை தயாரிக்க வேண்டும். இது பார்வையற்ற மாணவர்கள் பிரெயிலில் தேர்வெழுத பேருதவியாக இருக்கும். 1970 களில் இந்த முறை கையாளப்பட்டதின் மூலம் பார்வையற்றவர்களுக்குத் தரமான சிறந்த கல்வி கிடைத்தது. அந்த அனுபவத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட வேண்டுமென்று இவ்வமைப்பு வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

3. 1970களில் இருந்ததுபோலவே “செஞ்சிலுவை” “சாரணர்” அமைப்புகளைச் சிறப்புப் பள்ளிகளில் கொண்டுவருவதன் மூலம் பார்வையற்றவர்களைச் சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இணைக்க உதவும் என்பதால், இதற்கு ஆவணம் செய்யுமாறு அரசை இவ்வமைப்பு வேண்டிக் கேட்டுக்கொள்கிறது .

தீர்மானங்கள்

4. மாற்றுத்திறனாளிகளின் குறிப்பாகப் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைச் செலவினம் அதிகம். இதைக் கடந்தும் அவர்கள் சேமிக்க விரும்பினால், அவர்களுக்குக் கூடுதல் வட்டி தர வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

5. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கல்விக்காகவும், அறிவை வளர்த்துக்கொள்வதற்காகவும், மொழி அறிவை வளர்த்துக்கொள்வதற்காகவும் பிரெயில் எழுத்தையே நம்பி இருக்க வேண்டி உள்ளது. இந்நிலையில் அவர்களுக்கான பிரெயில் எழுத்து நூல்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 140 gmm தாள்களுக்கு விற்பனையில் 12% ஜிஎஸ்டியும் புத்தகமாக்கித் தரும்போது சேவை வரியாக 5% ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. பிரெயில் புத்தகங்கள் அச்சுப் புத்தகங்களைவிட பல மடங்கு விலை அதிகம். இதில் ஜிஎஸ்டியும் சேரும்போது மிக அதிகமாக விலைகொடுத்து வாங்க வேண்டியுள்ளது. எனவே மேற்குறித்த இரண்டு வகையில் வரும் ஜிஎஸ்டிகளில் இருந்தும் விலக்களிக்குமாறு மாண்புமிகு மத்திய நிதியமைச்சரைப் பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வுமையம், ஏகமனதாகக் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.” என அந்த அமைப்பின் தீர்மானங்கள் தெரிவிக்கின்றன.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

3 replies on “நிகழ்வு: “சிறப்புப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றிடுக:” அறிவே துணை ஆய்வு மையம் தீர்மானம்”

Leave a reply to Harga Borak Cancel reply