“அப்படியே ஸ்ட்ரைட்டா போங்க.” எனப் படிகளில் ஏறியபிறகு, தன் பிடியைவிட்டார் அந்த வழிப்போக்கர். அத்தோடு, “சார் இவரை” தூரத்தில் யாருக்கோ சைகை செய்தபடி எதிர்த்திசையில் நடந்தார்.
சைகையின் பலனாய் மீண்டும் சங்கரின் கைகளைப் பற்றியது இன்னொரு கை. “சார் வாங்க” முன்னோக்கி இழுத்து, ஒரு இருக்கையில் அமர்த்தினார் அலுவலக உதவியாளர்.
“யாரப் பார்க்கணும்”
“மாவட்ட அதிகாரியைத்தான் சார்” அலுவலக உதவியாளரின் கேள்விக்குப் பதில் சொன்னார் சங்கர்.
“ஐயா இல்ல, அவரோட பீ.ஏ.வைப் பார்க்கிறீங்களா?”
“ஐயா எப்போ வருவாரு?”
“தெரியலையே!”
“எப்படியும் ஈவ்னிங் வருவாருதானே?”
“தெரியலை. பீ.ஏ. சாருக்குத்தான் தெரியும். நீங்க அவரைப் பாருங்க. ஏன் எதுவும் மனு கொடுக்கணுமா?”

“ஆமா. எங்க ஸ்கூலுக்கு டெஃப் ஸ்கூலுக்கெல்லாம் கலைப்போட்டி கிடையாதுன்னு உத்தரவு வந்திருக்கு.”
“ஓஹோ அப்படியா?” நீங்க எந்த ஸ்கூலு?”
“ப்லைண்ட் ஸ்கூல்”
“அது எங்க இருக்கு?”
“அண்ணா சிலை பக்கத்தில”
“அண்ணாசிலை பக்கத்திலையா? . . .” அவர் யோசித்தார்.
“பைக் ஷோரூம் எதிரே>” சங்கர் முடிப்பதற்குள்
“அதுக்கு எதிர்த்த மாதிரி ஒரு அனாதை ஆசிரமம்தானே இருக்கு.”
“அனாதை ஆசிரமமா ?
அது பள்ளிக்கூடம். கண்ணுத் தெரியாத குழந்தைங்கல்லாம் தங்கிப் படிக்கிற உண்டு உறைவிட சிறப்புப்பள்ளி. 10ஆம் வகுப்புவரை இருக்கு.” வந்த ஆத்திரத்தை ஒருவாறாக அடக்கிக்கொண்டு பதில் சொன்னார் சங்கர்.
“சார் அது பள்ளிக்கூடமா? எனக்குத் தெரியாது சார். அங்க நீங்க என்னவா இருக்கீங்க?”
“நான் டீச்சர்.”
“உங்கள மாதிரி குழந்தைங்களுக்குப் பாடம் நடத்துறீங்க?”
“ஆமா”.
“கவர்மண்ட் வேல தானே?”
“ஸ்கூலும் கவர்மண்ட் ஸ்கூல்தான்”
“ஓஹோ அப்படியா? சார் எங்க ஊருலகூட ஒரு பையன் இருக்கான் சார். அவனுக்குக் காது கேட்காது, பேச்சு வராது. அவன சேர்த்துப்பிங்களா?”
“அதுக்கும் தனியாவே சிறப்புப்பள்ளி மேகலா கல்யாண மண்டபம் பக்கத்தில இருக்கே! அதுவும் அரசாங்கப் பள்ளிதான். உங்க ஊர்ல கண்ணுத் தெரியாம யாராவது குழந்தைங்க இருக்கா?”
கண்ணுத் தெரியாம குழந்தைங்க யாரும் இல்ல சார். ஒருத்தர் இருக்காரு, அவருக்கு எப்படியும் 35 40 வயசு இருக்கும்.”
என்ன பண்ராறு?”
“சும்மாதான் சார் இருக்காரு. தம்பி குடும்பத்தோட இருக்காரு.”
பீ.ஏ. இருக்கும் அறைக்கதவு திறந்து மூடப்பட்டதில் ஏசியிலிருந்து வந்த குளிர்காற்று சகிதம் ஒருவர் வெளியேறினார். உள்ளே சென்று வந்த அலுவலக உதவியாளர், “சார் வாங்க” என்று சங்கரின் தோளில் கைவைத்துத் தள்ளிக்கொண்டுபோனார்.
மூடிய குளிர்ந்த அறையில், தரைவிரிப்பின் மென்மையோடு காலணிகளின் டொப் டொப் கதையாடல் கொஞ்சம் இதமாகத்தான் இருந்தது. “வாங்க” என்ற சத்தம் வந்த திசைநோக்கிக் கைகூப்பத் தலைப்பட்ட சங்கரின் இடக்கையில் மடித்துவைக்கப்பட்ட மனுவும், சுருட்டிக்கட்டப்பட்ட ஊன்றுகோலும் இருந்ததால், வலக்கையை மட்டும் இலேசாக உயர்த்தி பீ.ஏ.வுக்கு வணக்கம் சொன்னார் சங்கர்.
“பார்த்து உட்கார வைப்பா” பீ.ஏ.வின் கட்டளைக்குக் கூடுதல் பணிவு காட்டும் முகமாக, ஒரு இருக்கையைப் பிடித்து அதில் சங்கரைத் திணிக்கப் போராடினார்அந்த அலுவலக உதவியாளர்.
முன்பக்கம், பக்கவாட்டுப் பகுதிகள் என அலைந்துகொண்டிருந்த சங்கரின் வலக்கைக்கு அந்த இருக்கையின் இடக்கைத் தண்டு பிடிபட்டது. மேசைக்கும் இருக்கைக்கும் இடையே குறைந்த இடைவெளியே இருந்ததால், சங்கரின் நுழைவு, இருக்கையைச் சற்று பின்நோக்கி நகர்த்தியது. தரைவிரிப்பின் மென் தழுவலால் மௌனமாக வழிவிட்டது இருக்கை. பீஏவுக்குப் புறமுதுகு காட்டிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு மெத்தென்று இருந்த இருக்கையில் நிதானமாக அமர்ந்தார் சங்கர்.
“சொல்லுங்க சார்” பீ.ஏ. கேட்டார்.
சார் நான் ப்லைண்ட் ஸ்கூல் டீச்சர்”
“தெரியும் சொல்லுங்க”
“ஐயாவைப் பார்க்கணும் சார்”
“ஐயா இப்போ ஊர்ல இல்ல”
“எப்போ வருவார்?”
“ஏன் என்ன விஷயம்?”
“கலைப்போட்டிகள்ல ப்லைண்ட் ஸ்கூல், டெஃப் ஸ்கூல் கலந்துக்க வேணாமுணு உத்தரவு வந்திருக்கு.” சொல்லிக்கொண்டே தொடர்புடைய ஆணையோடு தான் கொடுக்க வேண்டிய மனுவையும் பீ.ஏ.வை நோக்கி நீட்டினார் சங்கர்.
மனுக்கற்றையை வாங்கிப் பிரித்துக்கொண்டிருந்த பீ.ஏ.விடம்,
“நாங்க பள்ளி அளவில போட்டியெல்லாம் நடத்தியாச்சு. ஆனா இப்போஇந்த உத்தரவைக் காட்டுறாங்க” என்றார் சங்கர்.
“அப்படியா? சரி நான் ஐயாகிட்ட சொல்றேன். நானே உங்க ஸ்கூலுக்கு வாரதாத்தான் இருந்தேன். ஒருநிமிஷம்” எனச் சொல்லிவிட்டு, யாருக்கோ போன் செய்தார்.
“சார் அந்த ப்லைண்ட் ஸ்கூல் . . . ஓ. 22ஆம் தேதியா? ஓகே சார் ஓகே சார்.”
அவர் தேதி பற்றிச் சொன்னதும் இன்றைக்கு 19ஆம் தேதி என்ற சிந்தனை சங்கரின் மனதில் ஓடியது.
அழைப்பைத் துண்டித்துவிட்டு, “சார் சொல்லுங்க. மொத்தம் எத்தனை பசங்க படிக்கிறாங்க?” என்று கேட்டார் பீ.ஏ.
“100 பேரு. ஆனா போட்டில கலந்துக்கிட்டது ஒரு 50 குழந்தைங்க இருக்கும்”
“ஓஹோ. நான் என்னணு பார்க்கிறேன்.” செல்பேசியைத் துலாவியபடி,அடுத்த கேள்விக்குத் தாவினார் பீ.ஏ.
சரி நீங்க தனியாத்தான் வந்தீங்களா? உங்க ஹெச்.எம். வரலையா?”
“அவருக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குன்னு கொஞ்சம் வெளியே போயிருக்கார். நானும் பள்ளி சார்பா வரலை. எங்க சங்கம் . . .” சங்கம் என்ற சொல்லை பீ.ஏ. கவனித்ததாகத் தெரியவில்லை.
“எல்லாக்குழந்தைங்களுக்கும் அப்பா அம்மா இருக்காங்களா?”
“கண்டிப்பா சார். அவுங்க அப்பா அம்மா இல்லாத குழந்தைங்களெல்லாம் இல்லை. படிக்கத்தான் இங்க வந்திருக்காங்க.” என்று சொன்ன சங்கர், பள்ளியைப் பற்றித் தெரிந்துகொள்வதில் பீ.ஏ ஆர்வம் காட்டுகிறார் எனப் புரிந்துகொண்டார். அதனால், கிடைத்த இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, பார்வைத்திறன் குறைபாடுடைய குழந்தைகளின் கல்வி குறித்தும், சிறப்புப் பள்ளிகள் தொடர்பாகவும், அவை இன்றைய உள்ளடங்கிய கல்வி முறையால் சந்திக்கும் பின்னடைவுகள் பற்றியும் கூடுதலாக விளக்க முயன்றார். அதற்குள் பீ.ஏ. மீண்டும் குறுக்கிட்டார்.
“சார் உங்க ஹெச்.எம். நம்பர் கொடுங்க.” பீ.ஏ. கேட்டதும் உற்சாகமான சங்கர், தலைமை ஆசிரியரின் எண்ணை மனப்பாடமாகச் சொன்னார்.
“சரிங்க சார், இப்போ ஐயா ஊர்ல இல்ல. அவுட் ஆஃப் ஸ்டேஷன். 22ஆம் தேதி நான் ஐயாவக் கூட்டிட்டு வரேன்.” எனச் சொன்ன பீ.ஏவின் தொனியில் “கிளம்புங்க”என்ற சொல் உட்பொதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினாலும், சங்கருக்கு அவர்மீது ஒருவித நம்பிக்கையும் மதிப்பும் ஏற்பட்டது.
“சார் உங்க நம்பர் கிடைக்குமா?” சங்கர் மெல்லிய குரலில் கேட்டார்.
“குறிச்சுத் தரட்டுமா”
“இல்ல நீங்க சொல்லுங்க நான் கேட்டுக்கிறேன்”.
ஒரே ஒருமுறை மட்டும் கேட்ட தனது சியூஜி எண்ணை அப்படியே பிசிரின்றித் திருப்பிச் சொன்ன சங்கரிடம் வாவ் சொல்லிக் கைகுலுக்கி அனுப்பினார் பீ.ஏ.
அலுவலக உதவியாளரின் கைபிடித்து அறையின் வாசலை நெருங்கிக்கொண்டிருந்த சங்கரின் காதில் விழுந்தது பீ.ஏ.வின் குரல்.
“சார் ப்லைண்ட் ஸ்கூல் ஹெச்.எம். தானே? நான் மாவட்ட அதிகாரியோட பீ.ஏ. பேசுறேன்.”
“அட எவ்வளவு வேகம்!” பீ.ஏவின் அக்கறையான நடவடிக்கை கண்டு சங்கருக்கு சிலிர்த்தது. அடுத்து என்ன கேட்பார்? தலைமை ஆசிரியரின் பதில் எப்படியிருக்கும் என்ற ஆர்வம் சங்கரிடம் மேலோங்கியதால், நடையின் வேகத்தைக் குறைத்து அவர்களின் உரையாடலைச் செவிமடுத்தபடியே மெல்ல மெல்ல அடிவைத்தார் சங்கர்.
“சார் வார 22ஆம் தேதி, நம்ம சாரோட வொய்ஃபுக்கு பிறந்தநாள் வருது. அதான் குழந்த்ஐங்களுக்கு லஞ்ச் கொடுக்கலாமுணு கேட்கச் சொன்னாரு. நூறு குழந்தைங்கதானே? ஸ்டாஃப்ஸ் எல்லாம் சேர்த்துச் சொல்லுங்க”
சங்கரை வெளித்தள்ளி மூடிக்கொண்டது அறையின் கதவு.
***சகா,
தொடர்புக்கு: anbullasaga@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

9 replies on “மனு: சிறுகதை”
பொதுவாக அரசு அதிகாரிகள் இப்படிதான் உள்ளனர். இதில் மாற்றம் ஏற்பட்டால் எல்லாம் நன்றாக இருக்கும்
LikeLike
கதை அருமை என்று சொல்லி எளிதில் கடந்துவிட முடியாது. இவர்களின் பொதுப் புத்தியில் உறைக்கும்வரை உரத்துச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
சிறப்பு சார் தடைகள் உடைபட வாழ்த்துகள்!
LikeLike
ஊனமுற்றோர் அனாதைகளாக இருப்பது விரும்பத்தக்கது; அப்படி அநாதை இல்லையென்றாலும் பெற்றோறாள் கைவிடப்பட்டிருந்தால் நன்றாக இருக்கும்; அதுவும் இல்லையென்றால் குறைந்தபட்சம் பரம ஏழைக் குடும்பமாகவாவது இருக்க வேண்டும். கூடவே எல்லோரும் நன்றாகப் பாட வேண்டும், படிக்க வேண்டும், உடைகள் பார்க்கப் பரிதாபம் கிளப்ப வேண்டும். எல்லாம் எதற்கு? நீங்கள் தரப்போகும் சிறு நன்கொடை கேக்/பிஸ்கட் அல்லது ஒருவேலைச் சோற்றுக்கு! நல்லா இருக்குல்ல?
LikeLike
أنابيب الحديد الزهر في العراق تفخر مصنع إيليت بايب بكونها واحدة من الموردين الرائدين لأنابيب الحديد الزهر في العراق. تُصنع أنابيب الحديد الزهر لدينا وفقًا لأعلى المعايير، مما يوفر متانة وموثوقية استثنائية لمشاريع البنية التحتية المختلفة. مثالية لأنظمة المياه والصرف الصحي، تُعرف هذه الأنابيب بقوتها وطول عمرها. يضمن التزام مصنع إيليت بايب بالجودة أن توفر أنابيب الحديد الزهر لدينا أداءً أمثل ومرونة، مما يجعلنا الخيار المفضل للمقاولين والمهندسين في جميع أنحاء المنطقة. لمزيد من المعلومات حول أنابيب الحديد الزهر لدينا، يرجى زيارة موقعنا الإلكتروني على ElitePipe Iraq.
LikeLike
Spotify premium ücretsiz Google SEO çalışmaları ile web sitemizin kullanıcı deneyimi de iyileşti. http://www.royalelektrik.com/
LikeLike
Последние новости https://useti.org.ua бизнеса и финансов, новости политики, эксклюзивная аналитика и советы экспертов
LikeLike
Rulet oyna Google SEO, dijital pazarlama stratejimizde önemli bir rol oynuyor. https://www.royalelektrik.com/istanbul-elektrikci/
LikeLike
Sosyal medya takipçi satın al Google SEO, dijital pazarlama stratejimizin temel taşı oldu. https://royalelektrik.com//esenyurt-elektrikci/
LikeLike
Yorum yaparak takipçi Google SEO, web sitemizin performansını artırmak için mükemmel bir yol. https://royalelektrik.com//esenyurt-elektrikci/
LikeLike