Categories
கல்வி தொடுகை மின்னிதழ் examinations results

கூற்று உடைந்தது, கூட்டையும் தகர்க்கணும்!

விதிவிலக்குகள்தான் பல நேரங்களில் விதி சமைக்கும் நெருப்பாகவும் இருக்கிறார்கள்.

வெளியான சிபிஎஸ்சி 12ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ்நாடு 98.74 தேர்ச்சி விழுக்காட்டினைப் பதிவு செய்துள்ளது. தேசிய விழுக்காடே 87.98 எனும்போது ஒரு தமிழனாய்ப்பெருமிதம் கொள்ளாமல் இருப்பதெப்படி?

அதனினும் பெருமிதப்பட வந்து சேர்ந்தது இன்னொரு செய்தி. அதே சிபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் நாகர்கோவிலைச் சேர்ந்த பார்வைத்திறன் குறையுடைய மாணவி லிபிகா, தனது தேர்வை மடிக்கணினி வழியே தானே எழுதி, 500க்கு 449 மதிப்பெண்கள் பெற்று அசத்திவிட்டார். செவி குளிரும்படியான இந்தச் செய்தியை நமக்குச் சொன்னவர், லிபிகாவின் முன்னோடியாகவும், தமிழகத்தின் முதல் பார்வயற்ற பெண்ணாகவும், தனது 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகளை மடிக்கணினி வழியே எழுதிச் சாதித்த தங்கை

ஓவியாவின்

அப்பா.

லிபிகா

லிபிகாவும் ஓவியாவைப்போலவே தனது 10ஆம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வினை மடிக்கணினியில் எழுதிச் சாதித்தார். இது தொடர்பாக, ஓவியாவையும், லிபிகாவையும் அழைத்து, தொடுகைக்காக சாகித்யா அவர்கள் செய்த நேர்காணல் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்போது 12ஆம் வகுப்பிலும் அதேதான். பார்வையற்றவர்கள் மின்னணு கருவிகளைப் பயன்படுத்தியும் தேர்வுகளை எழுதலாம் என்ற சிபிஎஸ்சியின் ஒற்றை வாக்கியத்தைச் சிக்கெனப் பற்றிக்கொண்டுவிட்டார்கள் லிபிகாவும் அவர் படித்த ஆர்பிஎஸ் செண்ட்ரல் பள்ளியும். பிறகென்ன, தொடர் மின்னஞ்சல்கள் வழியே  இடைவிடாத வலியுறுத்தல்களை லிபிகாவுக்காகச் செய்தபடியே இருந்திருக்கிறது பள்ளி நிர்வாகம்.

அடுத்து என்ன எனக் கேட்டால், வெளிநாட்டில் படிக்க வேண்டும், பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும் என்கிறார் லிபிகா.

“Come out from your comfort zone”, “எல்கேஜியில் என்னை ஒரு பள்ளி எனது பார்வைக்குறைபாடு காரணமாக நிராகரித்தது. உண்மையில் அந்தப் பள்ளிக்கு நான் நன்றி சொல்லவே விரும்புகிறேன்”.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேசிய லிபிகா இல்லை. நிதானமாய், முதிர்ச்சியோடு கேள்விகளை எதிர்கொள்கிறார்.

பெற்றோரின் அரவணைப்பில் வளரும் பார்வைத்திறன் குறையுடைய குழந்தைகள், அதீத பாதுகாப்பு உணர்வு காரணமாக, படிப்பில் ஜொளிக்கிறார்கள், அன்றாட வாழ்க்கைத் திறன்களில் பின்தங்கிவிடுகிறார்கள் என்ற கூற்றை மட்டுமல்ல, தன் வீடு என்னும் கூட்டையும் உடைத்துக்கொண்டு பறக்கத் துடிக்கிறார் லிபிகா. வெளிநாடு சென்று படிப்பதே சிறுவயதுமுதல் தன் வாழ்நாள் லட்சியம் என்கிறார். எவரின் உதவியும் இல்லாமல், சுயமாகவே கிட்டத்தட்ட 20 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கிறார்.

அயல்நாட்டுப் படிப்பு தொடர்பாக ஏதேனும் வழிகாட்டல் தேவைப்பட்டால் எங்களிடம் கேளுங்கள் என நாம் முடிப்பதற்குள்,

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னைப் போலவே சிபிஎஸ்சி தேர்வில் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்ற கேரளாவைச் சேர்ந்த பார்வைத்திறன் குறையுடைய மாணவி

Hannah Alice Simon,

தற்போது வெளிநாடு ஒன்றில் உயர்கல்வி பயில்வதாகவும், அவரோடு தொடர்ந்து பேசிவருவதாகவும் வேகமாக வந்துவிழுந்தது லிபிகாவின் ரிப்லை.

மடிக்கணினியுடன் லிபிகா

“சார் உங்களுக்கு ஏதாச்சும் கைடன்ஸ் வேணுமுணா என்னைக் கேளுங்க” சொல்லாமல் சொன்ன லிபிகாவின் கையில் இருப்பது மடிக்கணினி அல்லவே! அது அலாவுதீன் கையிலிருந்த அற்புத விளக்கன்றோ!

அதனால்தான், அனைத்துப் பார்வையற்றவர்கள் கையிலும் மடிக்கணினி தவழ்வதை உறுதி செய்யுங்கள் என்று தமிழக அரசிடம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். அத்தோடு, இன்னொரு கோரிக்கையும் வைத்தாக வேண்டும்.

சிபிஎஸ்சி கடைபிடிக்கும் விதியைப்போலவே, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளையும் பார்வைத்த்இறன் குறையுடைய மாணவர்கள் மின்னணு கருவிகள் துணைகொண்டும் எழுதலாம் என்ற விதியை உடனடியாக அமல்ப்படுத்த வேண்டும் என்பதே அது.

நமது கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமானால், ஓவியா, லிபிகா போன்றவர்களின் சாதனைகள்  பற்றி உடனடியாகத் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லவேண்டும். அதற்கு தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் துணைசெய்ய வேண்டும்.  

விதிவிலக்குகள்தான் பல நேரங்களில் விதி சமைக்கும் நெருப்பாகவும் இருக்கிறார்கள். பறந்து பறந்து உயரம் தொடுங்கள் லிபிகா! வாழ்த்துகள்!

***ப. சரவணமணிகண்டன்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

2 replies on “கூற்று உடைந்தது, கூட்டையும் தகர்க்கணும்!”

கூற்று உடைந்தது கூட்டை தகர்த்தது மாணவி லிபிகா வின் சாதனை. மின்னணு உபகரணத்தின் உதவியால் வாழ்நாள் இலட்சியத்தை அடைய முயற்சி செய்துவரும் லிபியாவின் இலட்சியம் நிறைவேற நாம் நெஞ்சார வாழ்த்துவோம். ஓவிய, லிபிகா மற்றும் ஹொனா அலிஸ் சியோன் போன்றவர்களின் சாதனை நாளை சாதிக்க குடிப்பவர்களுக்கு முன்னோடியாக உள்ளனர். இந்த சாதனைக்கு துணைசெய்த ஒவ்வொருவருக்கும் பாராட்டுக்கள்.

Like

உண்மைதான். இத்தகைய சாதனைகள் நிச்சையம் ஊடக வெளிச்சம் பெறவேண்டும். அவரவர் தொடர்பில் உள்ள ஊடக நண்பர்களுக்கு நாம் இந்தக் கட்டுரையைப் பகிர வேண்டும். இந்த வாய்ப்பு கிடைத்தாள் தமிழ் நாடு அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் பார்வையற்றோர் பலரும் இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்துவார்கள்!

Like

Leave a reply to கு. முருகானந்தன் Cancel reply