உங்களுக்கு ஒளிபடைத்த கண்ணினாள் கார்குழலியைத் தெரியுமா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது தான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே, தன் பார்வையற்ற பெற்றோர் தடையின்றி அச்சு நூல்களை எளிதில் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், 200க்கும் மேற்பட்ட அச்சு நூல்களை மின்நூல்களாக மாற்றி வழங்கியவர்தான் மு. கார்குழலி.

முருகேசன், லட்சுமி தம்பதியினரின் செல்ல மகளான கார்குழலி, தற்போது பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 500க்கு 482 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
480 என்ற மதிப்பெண்தான், தான் படிக்கும் வடசென்னிமலை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் இறுதியாகப் பெறப்பட்ட முதல் மதிப்பெண், அதுவும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்ற செய்தியைப் பள்ளியின் அறிவிப்புப் பலகையின் மூலம் அறிந்துகொண்ட கார்குழலி, இதைவிட நாம் ஏன் அதிக மதிப்பெண் பெற முடியாது என்ற எண்ணத்தில் கருத்தூன்றிப் படித்துள்ளார். மேலும், பெற்றோருக்கு இணையாகப் பாசம் காட்டிக் கற்பிக்கும் இதே ஆசிரியர்கள்தான் பத்தாண்டுகளுக்கு முன்பு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் கற்பித்துள்ளனர். எனவே, தன்னால் அதைவிட அதிக மதிப்பெண்கள் பெறமுடியும் என்ற கனவை மெய்ப்பித்து ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை வழங்கியுள்ளார் கார்குழலி!
சேலம் மாவட்டம், ஆத்தூரில் இவரது தந்தை முனைவர் மு. முருகேசன் அவர்கள் அரசுக் கல்லூரி பேராசிரியராகவும், தாயார் லட்சுமி அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். பேராசிரியர் முருகேசன் அவர்கள் நிறைய கல்வியியல் சார்ந்த நூல்களை வாசிக்கக்கூடியவர். மேலும், கல்வியியல் சார்ந்த பல கருத்தரங்குகளில் பங்கேற்றுக் கருத்துகளைப் பகிர்ந்து வருபவர்.

தனியார்ப் பள்ளிகள் பெரும்பாலும் பிள்ளைகளை பொம்மைகளாகவே உருவாக்கி வருகின்றன என்பதை உணர்ந்ததன் விளைவாகவே, தங்களது ஒரே மகளை அரசுப்பள்ளியில்தான் சேர்த்துப் படிக்கவைக்க வேண்டும் என்று முடிவுசெய்து, அதன்படியே அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளனர்.
எதையும் கண்ணால் பார்த்துப் படிக்கும் தங்கள் குழந்தையின் கற்றலைப் பார்வையற்ற பெற்றோராகிய தாங்கள் எவ்வாறு கண்காணிப்பது என்று சிந்தித்த முருகேசன் லட்சுமி தம்பதியர், தொடக்கக் கல்வியில் தன் மகள் படிக்கும் வகுப்பிற்கான புத்தகங்களை பிரெயிலில் வாங்கிப் படித்துக் கற்பித்து வந்துள்ளனர்.
இவ்வாறு சிறப்பான முறையில் கற்றுத் தேர்ந்த கார்குழலி, தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் 96, ஆங்கிலம் 97, கணிதம் 98, அறிவியல் 95, சமூக அறிவியல் 96 என மொத்தம் 482 மதிப்பெண்கள் பெற்று தன் பெற்றோருக்கும் வடசென்னிமலை அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
சமுதாயத்திற்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்தப் பெற்றோருக்கு எனது பணிவான வணக்கங்களையும், தொடர்ந்து சாதிக்கத் துடிக்கும் குழந்தை கார்குழலிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்களும் கார்குழலிக்கு உங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்பினால்,
பேராசிரியர் திரு. முருகேசன் அவர்கள்,
9962445442
என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்.
நன்றி.
சேது பாண்டி
தொடர்புக்கு: pandiyaraj18@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

One reply on “வாழ்த்து: தன் பார்வையற்ற பெற்றோருக்குப் பரிசளித்த பத்தாம் வகுப்பு மாணவி!”
சிறப்பு, மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்!
LikeLike