அறிவிப்பு: திறப்புவிழா! இல்லையில்லை திருப்பவிழா!

அறிவிப்பு: திறப்புவிழா! இல்லையில்லை திருப்பவிழா!

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
தமிழக அளவில்
பார்வையற்றோருக்கான சிறப்பு சுயம்வரம்
நிகழ்ச்சி ஏற்பாடு
மதர் தெரசா பவுண்டேஷன், தஞ்சாவூர்
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 
நாள் 	  : 19-05-2024
நேரம் : காலை 9.30 மணி
இடம் : மதர் தெரசா பவுண்டேசன்
  எண்: 9,10,11, எம்.எஸ்.நகர், 
  மாதாக்கோட்டை ரோடு,  
  தஞ்சாவூர் - 613 005
இல்வாழ்க்கையின் இணை தேட 
இனிதான வாய்ப்பு! 
மனம் விரும்பும் துணை தேட 
மகத்தான வாய்ப்பு! 
பார்வையற்றோர் குறித்தான உணர்வு புரிதலோடும், பார்வையற்றோரின் வழிகாட்டுதல்படியும், பார்வையற்றோருக்காக மட்டுமே நடத்தப்படக்கூடிய ஒரு பிரத்தியேகமான சுயம்வரம் இது.
இந்த நிகழ்வில் திருமணம் செய்ய விரும்பும் பார்வையற்றோரும், பார்வையற்றோரைத் திருமணம் செய்ய விரும்பும் பார்வை உள்ளவரும் பங்கேற்கலாம்.
சுயம்வரம் நடைபெறும் நாளன்று பங்கேற்பாளர்கள் தங்களுடைய தன் விவரக் குறிப்பு மற்றும் முழுநீலப் புகைப்படம் ஒன்றினைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும். 
சுயம்வரம் நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர்களை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் தொலைப்பேசியில் பதிவு செய்யவும். பதிவு செய்கிற நபர்களுக்கு சுயம்வரம் நிகழ்வில் கலந்து கொள்வதற்கான பதிவு படிவம் அனுப்பி வைக்கப்படும். அதில் தங்களுடைய புகைப்படம் மற்றும் விபரக் குறிப்புகளைப் பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
வாய்ப்புள்ளவர்கள் Google form மூலமாகவும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். Google form  நிரப்ப தெரியாதவர்களுக்கு உதவி செய்யப்படும். பொய்யான தகவல்களைத் தயவு செய்து கொடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
 தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய கடைசி நாள் : 13-05-2024

தஞ்சை மதர் தெரசா ஃபவுண்டேஷனின் முயற்சிக்கு வாழ்த்துகளும் நன்றிகளும். காலத்தால் தேவையான, ஆனால், இலக்கு எளிதில் கைகூடிவிடாத முயற்சி என்பதாலேயே உளம் திறந்து நன்றி சொல்லத் தோன்றுகிறது.

‘பார்வையற்றோருக்கான சுயவரம்’ கேட்கும்போதே ஒரு பார்வையற்றவனாக பூரிக்கிறேன். தமிழகத்தில் பல முன்னணித் தொண்டு நிறுவனங்கள் ‘மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவரம்’ எனப் பொதுவான பதாகை நிழலில், ஆண்டுக்கு ஒருமுறை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றாலும், அதுபோன்ற நிகழ்வுகளில் எத்தனை பார்வையற்றோர் பங்கேற்றுப் பயனடைகிறார்கள் அல்லது பயனடையும் சூழல் இருக்கிறது எனத் தெரியவில்லை.

படித்த படிப்புக்கு உரிய பணிவாய்ப்பு பெறுவது ஒரு பார்வையற்றவர் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால். சிலர் அதில் வென்றாலும், அரசின் கொள்கைகள், தனிப்பட்ட முயற்சி போன்ற காரணங்களால் உரிய பணிவாய்ப்பின்றிப் பலர்  தடுமாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருவகையில் உரிய வயதில் எழும் திருமண எண்ணமும் அப்படித்தான். அவ்வளவு எளிதில் எதிர்கொள்ள இயலாத பெரிய சவால் அது.

மணமகன் மணமகளுக்குத் தாலி அணிவிக்கும் புகைப்படம்

படித்து நல்ல பணியில் இருக்கும் பார்வையற்றவர்களிடம்கூட திருமணம் குறித்த பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. குழப்பங்கள் இயல்புதான், ஆனால், குழம்பிக்கொண்டே இருந்து காலத்தைக் கடத்திக்கொண்டே இருக்கிறார்கள் பலர்.

அப்படி எந்த விடயத்தில் குழம்புகிறார்கள்!? “நம்முடைய துணை யார்? நம்மைப் போன்ற முழுப் பார்வையற்றவரா? அல்லது குறைப்பார்வையுடையவரா? அல்லது ஒரு பார்வையுள்ளவரா? யாரைத் தேர்ந்தெடுப்பது? எந்தத் தெரிவு சரியானது? எது நமக்கு ஒத்துவரும்”!?

ஒரு முழுப் பார்வையற்றவரின் இலக்கு ஒரு குறைப்பார்வையுடையவராகவோ, பார்வையுள்ளவராகவோ இருக்க, ஒரு குறைப்பார்வையுடையவரின் ஒற்றை இலக்கு பார்வையுள்ளவர் மட்டுமே என்றாகி, தங்களுக்கான தனித்த சிறைகளைத் தாங்களே கட்டியெழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். விளைவு, பெரும்பாலான பார்வைக்குறையுடையவர்களின் மூச்சுக்காற்றில் முறுகிப் பொசுங்கிக்கொண்டிருக்கிறது காலம்.

சிறப்புப்பள்ளிகள் கோலோச்சிய 60கள் தொடங்கி 2000 வரையிலான காலகட்டத்தில் பல பார்வையற்றவர்களிடம் இந்தக் குழப்பங்கள் அவ்வளவாக இருந்ததில்லை என்றே சொல்லலாம். காரணம், இருபாலரும் தங்கிப் படித்த விடுதிசார்ப் பள்ளிகளில் இளம் வயதிலேயே பூக்கும் நட்பு பின்பு காதலாகிக் கனிந்து திருமணத்தில் முடிந்துவிடும். முரிந்தவைகளும் உண்டென்றாலும், வேறொரு கொடிபற்றிக் கிளைத்துப் படர்ந்து செழித்தவையும் அதிகம்.

தன் வகுப்புத் தோழியிடம் நட்பென்று ஆறாம் வகுப்பிலேயே அடிபோட்டு, பின்பு அதைக் காதலாய் மாற்றி, இருபத்தாண்டுகள் பயணித்துக் கணவன் மனைவியாகிவிட்ட என்னுடைய நண்பனின் கதைபோல பல கதைகள் இருக்கின்றன. எனக்குக்கூட அப்படியான முயற்சிகளில் அனுபவம் உண்டென்றாலும், தளிர்க்கும் வேட்கையைத் தக்கவைத்தபடி, முரிந்து கிளைத்த கதை என்னுடையது.

அவை சினிமாப் பாடல்கள் மட்டுமே பார்வையற்றோரிடம் ஆதிக்கம் செலுத்திய அதி அற்புத காலகட்டம். பாடப்புத்தகங்களின் மனப்பாட செய்யுள்களை வழிமறித்து,

“ஒரு பெண்ணைப் பார்த்து, நிலவைப் பார்த்தேன்” என என் மூத்த அண்ணன்களும்,

“நீ பாக்காம போறியே, இது நியாயமா?” என இளைய அண்ணன்களும்,

“கண்கள் ஒன்றாகக் கலந்ததா!” என நாங்களும்,

“கண்ணுக்குள்ளே காதலா? கண்டதும் நெஞ்சில் மின்னலா?” என தம்பிமார்களும் பிரக்ஞையின்றி பாடிப் பறந்து திரிந்த சுந்தரவனம் அன்றோ அன்றைய சிறப்புப் பள்ளிகள்.

பெண்களும் இலேசுப் பட்டவர்களா என்ன?

“பார்த்த ஞாபகம் இல்லையோ?” ஒரு காலகட்டம்.

“உன் பார்வையில் ஓராயிரம்” இது அடுத்த காலகட்டம்.

“அழகிய திருமுகம் ஒருமுறை பார்த்தால், அமைதியில் நிறைந்திருப்பேன்” கடந்து, இன்று

“கண்ணக் காட்டு போதும் வரை வந்து சேர்ந்தாயிற்று. சினிமாப் பாடல்கள் இலக்கியம் இல்லை என யார் சொன்னது?

இப்படியாகப் பல இருபால்  முழுப் பார்வையற்றவர்களிடையே முகிழ்த்த காதல்கள் அதிகம். இன்றைக்கு அவர்களுள் பலர்  வெற்றிகரமான தம்பதிகள்.

சிறப்புப்பள்ளிகள் நலிந்து, ஒருவகைக் கூட்டுவாழ்க்கை கரைந்துவிட்ட இன்றைய காலத்தில், ஒவ்வொரு இளைய பார்வையற்றோரும் தனித்துவிடப்பட்டிருக்கிறார்கள். தன் மனதுக்கு நெருக்கமான, தனக்கு நம்பிக்கையான ஒரு பாலிய சினேகிதம் இல்லாமல், தன் மனதைக் கொட்ட இயலாமல், தாய்க்கும் சொல்ல இயலாத தன் இரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு சகமனம் கிட்டாதோர்  அதிகம். தொழில்நுட்பம் எல்லோரையும் இணைத்திருக்கிறதே தவிர பிணைக்கவில்லை, உதிரிகளாய் உரையாடிக்கொண்டிருக்கிறோம்.

பார்வையற்றோர் திருமண விடயத்தில் இவை போன்ற அகம் சார்ந்த பிரச்சனைகள் மட்டும்தானா என்றால் அதுதான் இல்லை.  பொதுச்சமூகம் போலவே, திருமணத்தை பாதிக்கும் புறக் காரணிகளும் ஏராளம். இங்கேயும் சாதிகள் சடுகுடு ஆடும்; மதங்கள் மறுதளிக்கும்; பணம் பத்தும் செய்யும்; பெற்றதும் உற்றதும் பிடுங்கியும் உறிஞ்சியும் காலம் ஒப்பேற்றும்.

இது போன்ற அகம் மற்றும் புறம் சார் காரணிகளால் ஆண்களைக் காட்டிலும் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் பார்வைக்குறையுடைய பெண்கள்தான். ஏனென்றால், பெண்ணென்றும், ஊனமுற்றவள் என்றும் இந்தப் புண்ணிய பூமியில் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிற சவால்கள் இரண்டல்லவா?

தன்னுடைய அரசு ஊதியத்தால், தன் தங்கைகள் கரையேறும் வைபோவத்தில், “ஏன் மா நீதானே பொண்ணோட மூத்த அக்கா” என்ற வினாக்களை எதிர்கொள்ளும் எத்தனையோ பார்வைக்குறையுடைய பெண்கள் உண்டு.

“அதான் வேல கெடச்சிருச்சே! எப்போ சாப்பாடு போடுவ” என ஆண்டாண்டுகளாய் எதிர்கொள்ளும் கேள்விக்கு, “நானே போய் எங்க அப்பா அம்மாகிட்ட எனக்குப் பண்ணிவைங்கணு எப்படிச் சொல்ல முடியும்” என்ற பதிலை உள்ளுக்குள் தேக்கி, உதட்டில் வாராத சிரிப்பை வரவழைத்துக்கொள்ளும் சகோதரிகள் எத்தனை எத்தனையோ! அப்பா அம்மா ஆயிற்றே! அவ்வளவு இலேசில் விட்டுக்கொடுத்துவிட முடியுமா என்ன?

முன்னேறியவர்கள் கதை இது என்றால், கல்வியோ, பணிவாய்ப்போ மறுக்கப்பட்ட பல பார்வைக்குறையுடைய பெண்கள் வீட்டிலோ, மறுவாழ்வு இல்லங்களிலோ கிடக்கிறார்கள். வேகும் தேகத்தைப் பிழைத்திருக்கச் செய்து, வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம் என்று அவர்களும், விதி எப்போது வரும் என அவர் சார்ந்த உறவுகளும் ஒவ்வொரு நாளையும் கடத்திக்கொண்டிருக்கிறார்கள். அங்கம் பிழைபட்டோருக்கு அரை ஜான் வயிறு மட்டுமே உடலில் இருப்பதாக எண்ணிக்கொண்டிருப்பவை இந்தியத் தொண்டுள்ளங்கள்.

ஊனமுற்றோருக்கான மறுவாழ்வுச் சிந்தனையில் தன்னைப் பிணைத்து்க்கொண்டிருப்பதாகச் சொல்லும் எவருமே இவைபற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதே இல்லை. பெரும்பாலான இல்லங்கள் சமயம் சார்ந்த நிறுவனங்கள் என்பதால், புலனடக்கம், மூச்சடக்கம் என்கிற போதக புறவழிச்சாலைகளில் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்

இரு பார்வையற்றவர்களிடையே இயல்பாகப் பிறக்கும் காதல் மற்றும் திருமண எண்ணத்தையே கருவறுத்து, அவர்களை தங்கள் இல்லங்களிலிருந்து அப்புறப்படுத்திக்கொண்டிருந்த பல கிறித்துவ நிறுவனங்களுக்கு நடுவே,  காலஞ்சென்ற கண் மருத்துவர் திரு. ஜோசப் ஞானாதிக்கம் அவர்களால் நிறுவப்பட்டு, திருச்சி மன்னார்புரத்தில் இயங்கிவரும் பார்வைக்குறையுடைய பெண்களுக்கான மறுவாழ்வு நிறுவனத்தால் ஒருகாலத்தில் இத்தகைய போற்றுதலுக்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கருத்தொருமித்த பார்வையற்றோர் இருவரின் பெற்றோரையும் அழைத்துப் பேசி, பல எளிமையான திருமணங்களை மதுரையில் தான் தலைமை வகித்த ஒருங்கிணைந்த கல்வித்திட்டக்குழுவின் சார்பில் நடத்திக்காட்டியவர் மரியாதைக்குரிய எனது பண்பாசான் திரு. சண்முகம் அவர்கள்.

இதே சிந்தனையைத் தொழில்நுட்பத்தின் வழியேனும் முன்னெடுக்கலாம் என்ற உணர்வோடு, பார்வையற்றோரால் பார்வையற்றோருக்காகத் தொடங்கப்பட்ட தமிழின் முதல் மின்னிதழான விரல்மொழியர் உருவாக்கிய

மனமேடை

என்ற பக்கத்துக்கும் போதிய ஆதரவுகள் கிடைக்கவில்லை. அதிலும் பெண்களின் பங்கேற்பு ஒன்றோ இரண்டோ இருக்கலாம். காரணம் எல்லோரும் அறிந்ததே.

இத்தகைய சூழலில், மதர்தெரசா ஃபவுண்டேஷன் முயற்சியை ஆதரிப்பது பார்வையற்றோர் ஒவ்வொருவரின் தார்மீகம் எனத் தோன்றுகிறது. திருமணத்திற்கு வரன் தேடுவோர் இந்தத் தருணத்தைத் தவறவிடாது பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆண்களைக் காட்டிலும் பார்வைக்குறையுடைய பெண்களின் பங்கேற்பை அதிகம் வலியுறுத்த விரும்புகிறேன்.

ஏனெனில், அவர்கள்தான் இந்தக் குட்டி வட்டத்துக்குள் சுற்றிச்சுழலும் கிசுகிசுப்புக்களுக்கும், அவதூறுச் சொற்களுக்கும் முகம் கொடுக்க இயலாமல் இதுபோன்ற மேடைகளை அஞ்சுபவர்கள். முதுகுக்குப் பின்னால் பேசப்படும் ஒவ்வொரு சொல்லும் கோழைத்தனத்தின் வார்ப்புகள். அவற்றிற்குத்தான் உங்களின் பெருமதி என்றால், நீங்கள் எவ்வளவு பெரிய கோழைகள் என்பதையும் பெண்களே! சிந்தியுங்கள்.

பார்வைக்குறையுடையோரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும் பார்வையுள்ளவர்களும் பங்கேற்கலாம் என்ற செய்தியும் உவப்பானதே. ஆனால், கருணை உள்ளம், தியாகத்துருக்கம் என்றெல்லாம் கூடுதல் டெசிபல்களில் அதிருவுறும் அகங்கள் கொண்ட பார்வையுள்ளவர்கள் நிகழ்வைத் தவிர்த்துவிடுவது இருதரப்புக்குமே நல்லது.

பெற்றோர், உறவினர், நட்புத்திரள், பார்வைக்குறையுடையோர் சார்ந்திருக்கும் பாதுகாவலர்கள்/தொண்டு நிறுவனங்கள்  தங்கள் கட்டுப்பாட்டில் ஒருங்கியிருக்கும் பார்வையற்றவர்களைத் திருமணச் சிந்தனைகளுக்கு ஆற்றுப்படுத்தி, நிகழ்வுக்கு அழைத்து வாருங்கள்.

திருமணத்துக்கு வரன் தேடும் நம் சகாக்களுக்கு உதவும் வண்ணம், உங்களுக்க்உத் தெரிந்த மணமாகாத அல்லது மணமுரிவுபெற்ற பார்வைக்குறையுடைய ஒவ்வொருவருக்கும் நிகழ்வு பற்றி எடுத்துச்சொல்லி ஆற்றுப்படுத்துங்கள். நிகழ்வில் தன்னையும் இணைத்துக்கொள்ள விரும்பும் பார்வையுள்ளவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக, இந்த அறிவிப்பை அகிலத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டுசேர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. முடிந்தால் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து அறிவிப்பைப் பரப்புங்கள்.

பார்வையுள்ள நண்பர்களும், இது பார்வையற்றவர்களுக்கான பிரத்யேக அறிவிப்பு எனக் கடந்துவிடாமல் அறிவிப்பைப் பகிர்ந்துதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவாம். அப்படியானால் இந்த நிகழ்வு அதன் திறப்புவிழா.

வாருங்கள் திறப்புவிழாவுக்கு! இல்லை இல்லை, உங்கள் வாழ்வின் திருப்பவிழாவுக்கு.

நாள்: மே 19, 2024;

இடம்: தஞ்சாவூர்.

***ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com

பதிவு செய்தவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துப் பேச இந்நிகழ்ச்சியில் வாய்ப்பு அளிக்கப்படும். உங்களுக்குப் பொருத்தமான துணையை முடிந்தால் அன்றே தேர்வு செய்துகொள்ளலாம்.  
சுயம்வரத்தில் பங்குபெற விரும்புபவர்கள் உங்களுடைய உறவினர்கள் இருவரை மட்டும் அழைத்து வரலாம். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் தேனீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.
பார்வையற்றோருக்காகவே நடத்தப்படக்கூடிய இந்த பிரத்தியேகமான  சுயம்வரம் நிகழ்ச்சியில்  பங்கேற்றுப் பயன்பெற உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
பெயர்களைப் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 
ஒருங்கிணைப்பாளர்கள்
திரு. M. நாகராஜன்	:
9003763539
திரு. P. ஜெரோம் :
8012570027
திட்ட இயக்குநர்	
திருமதி. Dr. K. ராதாபாய்		
அன்புடன் அழைக்கும்:
Rtn. Dr. AR. சவரிமுத்து
சேர்மன்
மதர் தெரசா பவுண்டேசன்.
தஞ்சாவூர்.
இதயங்கள் பரிமாறி இல்லறத்தில் நுழையும்
வரம் தரும் இந்த சுயம்வரம்!
பகிர

1 thought on “அறிவிப்பு: திறப்புவிழா! இல்லையில்லை திருப்பவிழா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *