Categories
அனுபவம் தொடுகை மின்னிதழ் விமானப்பயணம்

பறத்தலும் பறத்தல் நிமித்தமும் (3)

தலைக்கு மேலே தொட்டுப் பார்த்தேன். ஆம் ஒரு பொத்தான் இருந்தது. அப்படியே இன்னொன்றும் வட்ட வடிவில் கைக்குத் தென்பட்டது.

பறத்தலும் பறத்தல் நிமித்தமும் முதல்ப்பகுதி

பறத்தலும் பறத்தல் நிமித்தமும் இரண்டாம் பகுதி

நான் நினைத்திருந்ததுபோலவே, ஒரு தனியார் சொகுசுப் பேருந்துதான் ஃப்லைட்டும்.  ‘தாழம்பூச் சேல, அங்கம் உனதங்கம்’ என குமுக்குகளும் ஜிலுப்புகளுமான 90களின் பாட்டுகளைச் சத்தமாய் வைத்து அளறவிட்டிருந்தால் அச்சு அசல் நான் சொன்னதேதான். 3+3 என்ற இருக்கை அமைப்பு. ஓரளவுக்கு அகலமான இடைவெளி. உள்ளே முழுக்கக் கம்பளத் தரைவிரிப்பு.

எங்களின் வரிசை எண்ணான 20ஐ தேடி, அங்கே வலப்புறத்தில் D,E,F எனக் குறிக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தோம். வெல்வெட் உறைபோட்ட இருக்கைகள். தேவைப்பட்டால் நீட்டிக்கொள்ளலாம் என்ற வகையில், ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவே அவற்றுக்கான எல்லைச்சாமிகளாய் சாய்வுப் பகுதியில் ஒளிந்துகொண்டிருந்த கைவைக்கும் தண்டுகள். கனமான பக்குல்களுடன் ஒவ்வொரு இருக்கையிலும் பொருத்தப்பட்டிருந்த இருக்கை வார்கள் (Seat Belts).

விமான இருக்கையில் அமர்ந்திருக்கும் மூவர்

எனக்கு நம்மூர் தனியார்ப் பேருந்து ஒன்றில் அமர்ந்திருக்கும் உணர்வு மட்டுமே. திறக்கமுடியாதபடிக்கு, விமானத்தின் உடலோடு பொருத்தப்பட்டிருந்தன பக்கவாட்டுக் கண்ணாடிகள். தேவைப்பட்டால் திறந்த்உகொள்ளவும், மூடிக்கொள்ளவும் அதனையொட்டி அமைக்கப்பட்டிருந்த மெல்லிய ப்லாஸ்டிக் மூடிகளை மூடுவதும் திறப்பதுமாக இருந்தாள்சன்னலோரத்தில் அமர்ந்திரு்ந்த வெண்பா. பேருந்தைப் போலவே நம்முடைய பொதிகளை தலைக்கு மேலே வைத்துக்கொள்ளவும் ஒரு வசதியிருந்தது.

தலைக்கு மேலே இருந்த ஸ்பீக்கரில் ஃப்லைட் கிளம்புதலில், அதன் பயணத்தில், பின் தரை இறங்குகையில் பயணிகளாகிய நாம் கவனத்தில்கொள்ள வேண்டியவை குறித்து, மெல்லிய குரலில் ஆங்கிலம், ஹிந்தி என மாறிமாறி அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். அவற்றுள் இருந்த முக்கியமான செய்தி, ஃப்லைட் புறப்பட்டு மீண்டும் தரையிறங்கும்வரை, அதாவது மொத்தப் பயணத்திலும் உங்கள் மொபைல் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை நீங்கள் ஃப்லைட் மோடில்தான் பயன்படுத்த வேண்டும் என்பது. இந்த எல்லா அறிவிப்புகளும் அச்சுக் கையேடாக, ஒவ்வொரு இருக்கையின் சாய்வுப் பகுதிக்கு பின்பக்கமாக செருகப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அத்தோடு அவற்றின் பிரெயில் வடிவமும் கிடைக்கும் எனவும் அந்த அறிவிப்பில் சொன்னார்கள். பாலகிருஷ்ணனின்வலியுறுத்தலுக்கு இணங்க, நான் பிரெயில் கையேட்டைக் கேட்டுப் பெற்றேன். இரண்டு விதமான கையேடுகள். ஒன்றில் நான் மேற்சொன்ன வழிமுறைகளும், மற்றொன்றில் விமானத்தில் நமக்கு வழங்கப்படும்வசதிகள் குறித்தும் எழுதப்பட்டிருந்தது. வசதிகள் என்றால், தண்ணீர், டிஷூவ் பேப்பர்இத்யாதி, இத்யாதி.

பறப்பதற்கு இன்னும் பத்து நிமிடங்களே பாக்கி. “ஃப்லைட் ஏறிட்டோம்” தன் தலைமுறை எழுதும் புதிய வரலாற்றை உரியவர்களுக்கு அறிவிக்கக் கிடைத்த மிகக் குறைந்த அவகாசம். முடிந்தவரை ஃபோன் அடித்துச் சொல்லிவிட்டோம். புறப்ப்ஆட்டுக்குச் சரியாக ஓரிரு நிமிடத்துக்கு முன்பு எங்கள் இருக்கைக்கு வந்த பணிப்பெண் என்னிடம் பேசினார். எது தேவை என்றாலும் உடனடியாக தலைக்கு மேலே இருக்கிற பொத்தானை அழுத்தும்படி அறிவுறுத்தினார். ஆங்கிலம் சுமந்த மெல்லிய குரலைவைத்து அனுமானித்தால் வயது 25க்குள் இருக்கலாம். ஒல்லியான தேகம், சிவந்த நிறம், நீலநிறத்தில் குட்டைப் பாவாடையும்,மேல்ச்சட்டையும் அணிந்து, தலையில் தொப்பிபோல ஒன்றை வைத்திருப்பதாய் கேள்விப்பட்டேன்.

தலைக்கு மேலே தொட்டுப் பார்த்தேன். ஆம் ஒரு பொத்தான் இருந்தது. அப்படியே இன்னொன்றும் வட்ட வடிவில் கைக்குத் தென்பட்டது. அதுதான்

ஆக்சிஜன் மாஸ்க்

என்றார்கள்.

அதாவது, ஃப்லைட் உயரப் பறக்கையில் ஒருவேளை நமக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படலாம். அப்படி நேர்கையில், மேலிருந்து அந்த மாஸ்க் தானாகவே கழன்று வந்து நம் மடியில் விழும். அதை நம் முகத்தில் அவர்களின் அறிவுரைக்கேற்ப பொருத்திக்கொள்ள வேண்டும்.

ஆக்சிஜன் மாஸ்க்

அதுபோலவே, நமது இருக்கைக்கு அடிப்பக்கத்தில் உட்புறமாக  பாதுகாப்பு ஜாக்கெட் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். அவசர காலங்களில் ஒருவேளை விமானம் நீருக்குள் இறங்கும் சூழல் ஏற்பட்டால், இந்த பாதுகாப்பு ஜாக்கெட்டை எவ்வாறு அணிந்து, விமானத்திலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்தும் அறிவிப்புகள் செய்யப்பட்டன. ஆக்சிஜன் மாஸ்க், சேஃப்டி ஜாக்கெட் தொடர்பான அறிவிப்புகள் உரிய செயல் விளக்கங்களோடு பணிப்பெண்களால் அனைவர் முன்னிலையிலும் செய்துகாண்பிக்கப்பட்டன. இதுதவிர, விமானத்தில் முன்பக்கம், நடுவே, பின்பக்கம் என மூன்று வழிகள் இருப்பதையும், அவற்றைப் பயன்படுத்தி, அவசர காலங்களில் எப்படி வெளியேறுவது என்பது குறித்தும் சொன்னார்கள். குறிப்பாக, றெக்கை வழியாக வெளியேறுவது பற்றியும் சொல்லத்தான் செய்தார்கள். ஓரளவுக்குமேல் என்னால் உள்வாங்க முடியவில்லை. காரணம், பலவீனமான ஒலியமைப்பு.

சரியாக காலை 8.30. விமானம் புறப்பட்டது. அனைவரும் இருக்கை வார் அணியும்படி அறிவுறுத்தப்பட்டோம். உரிய நேரத்தில் கிளம்பியதாய்க் காட்டிக்கொண்டு, பயணிகளைப் பிதுங்கப் பிதுங்க ஏற்றும் நோக்கில் பேருந்து நிலையத்துக்குள்ளேயே அணு அணுவாய் நகருமே நம் தனியார் பேருந்துகள். அதுவே விமானத்தின் தொடக்க வேகம். ஒரு குற்இப்பிட்ட தூரம்வரை நேர்கோட்டுப் பாதையில் ஓடுதளத்தில் ஓடியது. பிறகு, வேகமாக ஓடிவந்து நீளம் தாண்டும் ஒரு வீரரைப்போல சீறி எழுந்து, ஓடி மேலேறியது. அந்தக் கணத்தில் கொஞ்சம் உள்ளு்க்குள் ஏதோ செய்ததுபோல் இருந்தது. இதுவரையில்தான் உங்களுக்கு பக்கவாட்டுக் கண்ணாடிகளில் கடந்து செல்லும் ஊர்கள், வீடுகள் எல்லாம் சின்னச் சின்னதாய் தெரியுமாம்.

-முன்பக்கம் உயர்ந்தும், பின்பக்கம் தாழ்ந்துமாக ஒரு ஏணியென மேலேறியது. சிறிது தூரம்வரை, கொஞ்சமே கொஞ்சம் பக்கவாட்டுக் கோணல்களையெல்லாம் கடந்து, ஒரு குறிப்பிட்ட உயரத்துக்குப் பின், மின்தூக்கிகள் தளம் இறங்குவதைப்போல, அப்போதைக்கு உள்ளுக்குள் ஏற்படுகிற ஒருவித அசௌகரியத்தைத் தந்தபடி,  சரியான உயரத்துக்குத் தன்னைச் சமப்படுத்திக்கொண்டு, தொடர்ந்து ஏற்றம் இறக்கமின்றி சீராகப் பறந்தது.

“ஆஹா. சூப்பர். மேகத்தில பறந்துட்டிருக்கோம். பக்கவாட்டுல வெள்ளையும் நீலமுமா மேகங்கள்”. வெண்பாவும் மோனிஷாவும் சிலிர்த்தார்கள். எனக்கோ இன்ஜின்கள் முடுக்கிவிடப்பட்டு, ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கு்ம் பேருந்துபோலத்தான் உணர்வெழுந்தது.

இரண்டரை மணிநேரப் பயணத்தில் இணையத்தைப் பயன்படுத்த இயலாது என்பது எனக்கு மேலும் அலுப்பைத் தந்தது. அடுத்தமுறை என்றால், பார்ப்பதற்கு ஏதாவது ஒரு திரைப்படத்தைப் பதிவிறக்கிச் செல்ல வேண்டும் அல்லது இணையமின்றி படித்துக்கொள்ளும் வகையில் சில மின்புத்தகங்களையாவது தரவிறக்கிக்கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. பக்கவாட்டில் கண்ணுக்கு அகப்பட்டதையெல்லாம் குறித்து உரையாடியபடி, வெளியே இருந்து வாங்கிவந்த சிற்றுண்டிகளைக் கொறித்தபடி பயணித்தோம்.

அவ்வப்போது பணிப்பெண்கள் சிற்றுண்டி கேட்டவர்களுக்குப் பரிமாறியபடியும், என்னிடம் வந்து ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா எனக் கேட்டபடியும் இருந்தார்கள். விமானம் புறப்பட்டு ஒரு ஒன்றரை மணிநேரத்திற்குப் பிறகு, ஓர் அறிவிப்பு செய்யப்பட்டது. “இப்போது தட்பவெட்பம் கொஞ்சம் மோசமாக இருப்பதால் அனைவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்து இருக்கை வார் அணியவேண்டும் என்றது அது. அதுவரை அங்குமிங்குமாக நடமாடியவர்கள் பணிப்பெண்கள் உட்பட அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்தார்கள். முன்னிலும் ஓர் சிறு அமைதி. வெளியில் சொல்லவில்லை என்றாலும், எனக்கு உள்ளுக்குள் கொஞ்சம் கலக்கம்தான். எங்கெங்கோ சென்று திரும்பின என் எண்ணங்கள்.

வரும் மார்க்கத்திலும்இதே போன்றஓர் அறிவிப்பு. செல்வழியில் சொன்னது போன்றதுதானே என்று சட்டைசெய்யாதவனை, விமானத்தின் கேப்டன் ஒலிவாங்கியில் சொன்ன ஒரு செய்தி கொஞ்சம் உலுக்கித்தான்விட்டது. “இப்போது நாம் 37000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறோம்!” எத்தனை மகத்தான உயரிய செய்தி இது.

டெல்லி நெருங்கிக்கொண்டிருக்கையில் மூத்த பணிப்பெண் ஒருவர் எங்களிடம் வந்து, தன் கையால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு குறிப்பை தந்து மோனிஷாவைப் படிக்கச் சொன்னார். “உங்களோடு பயணித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என எழுதி, அனைத்துப் பணிப்பெண்களும் கையெழுத்திட்டிருந்தார்கள்.  கூடவே வெவ்வேறு சுவையில் தயாரிக்கப்பட்டிருந்த பாப்கான் பாக்கெட்டுகள் இரண்டினை  எங்களுக்கு வழங்கியதோடு, “இறங்கிவிட வேண்டாம், உங்களோடு நாங்கள் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று சொல்லிவிட்டுப் போனார்.

இலக்கை நெருங்கியதும் விமானம் மெல்லக் கீழிறங்கத் தொடங்கியது. இப்போது மேகங்கள் மறைந்து, ஊர்கள், வீடுகள் சிறியதாய்த்தென்படுவதாகச்சொன்னார் மோனிஷா. இலக்கு வரப்போவதாய் ஒலிவாங்கியில் அறிவித்தார்கள். “உங்கள் பயணத்துக்காக இண்டிகோவைத் தெரிந்துகொண்டதற்கு நன்றி. உங்கள் கருத்துகளை, ஆலோசனைகளை எனச் சொல்லி ஒரு இணையதள முகவரி அந்த அறிவிப்பிலேயே தரப்பட்டது.

செல்வழி, வருவழி அனுபவங்கள் கிட்டத்தட்ட ஒன்றே என்றபோதும், டெல்லியிலிருந்து சென்னைக்கு வருவதற்காக விமான நிலையம் வந்து சேர்ந்தபோது நிகழ்ந்த ஒன்றைப் பற்றிச் சொல்ல வேண்டும். துணையாள் வேண்டும் எனக் கேட்டுவிட்டு, நாங்கள் பரிசோதனைச் சாளரத்துக்கு அருகில் நின்றிருந்தோம். அப்போது மத்திய காவல்ப்படை உடையணிந்த ஒருவர் எங்களை அணுகி, சென்னையில் அவரின் உயர் அலுவலர் ஒருவரிடம் தான் தரும் அழைப்பிதழ் ஒன்றைச் சேர்த்துவிடுமாறு வேண்டினார். அவர் எவ்வளவோ வேண்டிக்கொண்டும் நான் அதைக் கடுமையாக மறுத்துவிட்டேன். அவர் என்னைக் கடிந்துகொண்டு வேறுபக்கம் போனார். என்னளவில் நான் செய்தது சரியெனவே நம்புகிறேன்.

விமானத்திலுள்ள கழிவறை

செல்வழியில் நாங்கள் தவறவிட்ட அனுபவம் ஒன்று உண்டு. ஆம்! ஃப்லைட்டில் கழிவறை எப்படி இருக்கும்? வருவழியில் பார்த்துவிடுவது என முடிவு செய்தோம். இரயில் பெட்டியில் இருப்பதுபோலவே இருக்கைகள் கடந்து, வழி கடந்து விமானத்திலும் அதன் அமைவிடம். ஒற்றைப் பக்கமாக மட்டும் அமைக்கப்பெற்ற மிகச் சிறிய கழிவறை. டிஷூவ் பேப்பர்தான் முதன்மை. கதவைத் திறந்து உள்ளே போய் மூடிவிட்டு, முன்னேறவெல்லாம் வேண்டாம், அப்படியே ஒரு மேற்கத்திய கழிப்பிடம். வலப்பக்கத்தில் கைகழுவிக்கொள்ள வாஷ்பேஷன்.

நினைவில் இருந்த எல்லாவற்றையும் இறக்கிவிட்டு, தரையிறங்கும் காட்சியை மட்டும் கழற்றிவிட்டால்  எப்படி என்றா கேட்கிறீர்கள். மீண்டும் அதே நம்மூர்ப் பேருந்து நிலையங்கள். அங்கே உள்ளே நுழையும் பேருந்துகள் வேகத்தடை தாண்டி, கடமுட கடமுட என வேகமாய் ஓடி நடைமேடையில் நிற்குமே அதே உணர்வுதான் இங்கேயும்.

ஊனமுற்றவர்கள் குறித்தும், அவர்களுக்கான சிறப்புத் தேவைகள் பற்றியும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் என எங்கும் சிறந்ததோர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் நம் சக ஊனமுற்ற தோழர்கள். எந்த ஓர் இடத்திலும் கழிவிரக்கப் பார்வையையோ, சுமை என்ற மனத்தாங்கலையோ நான் எதிர்கொள்ளவே இல்லை என்பது மிகப்பெரியமனநிறைவைத் தந்தது.

இந்த இடத்தில் பொதுவாகவும், இறுதியாகவும் ஒன்றைச் சொல்லியாக வேண்டும்.

தமிழ்நாட்டைப் போலவே இண்டிகோவிலும் இருமொழிக் கொள்கை ஏற்றமுறச் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், ஹிந்தி, ஆங்கிலம்.

இந்திய உள்நாட்டு விமானப்பயணத்தில், 61% பங்கினைத் தன்னிடம் வைத்திருக்கிற, ஓராண்டில் கிட்டத்தட்ட 10 கோடி மக்களுக்கான விமான சேவை வழங்கியிருக்கிற பெருமையெல்லாம் கொண்ட இண்டிகோவின்

(IndiGo)

சென்னையிலிருந்து  புறப்படும் விமானத்தில் தமிழ் அறவே இல்லை.

இப்போதைக்கு நெஞ்சைத் தைக்கிற விஷயம் இதுதான். தமிழ்நாட்டையும், தமிழகத்தையும் அந்தரத்தில் விட்டுவிட்டார்கள் என்று போராடி மாநில உரிமை மீட்கும் தொடர் வரலாறு நம்முடையது என்றாலும், அந்தரத்தில் தமிழ் இல்லை என்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஏவுகணையில் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றும் முன்னர், இண்டிகோவில் ஏற்றுங்கள் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. 

அப்படியே, இந்த Boarding Pass, Sheet Belt, buckle, tissue paper போன்ற சொற்களுக்கான சரியான தமிழ்ச்சொற்களைத் தந்துதவுமாறு தமிழறிஞர்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நிறைந்தது.

புகைப்படங்கள்: D. வெரோனிக்கா மோனிஷா மற்றும்

S.V. வெண்பா.

இதர புகைப்பட மூலம் விக்கிப்பீடியா.

***ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

4 replies on “பறத்தலும் பறத்தல் நிமித்தமும் (3)”

எல்லாவற்றையும் விளக்க இளம்பெண் புகைப்படம் எடுத்துக்கொள்ள நடுத்தர வயது பெண். எழுத்தாளருக்கு வந்த சோதனை யப்பா

Like

இளம் பெண் எப்படி என்பதனை, கேள்வி பட்டீர்களா! அல்லது கேட்டு பெற்றீர்களா? Sir?!

Like

நண்பர் சரவணமணிகண்டன் சார் அவர்களுக்கு வணக்கம். உங்கள் இந்த அனுபவ பகிர்வு படிக்கும் எங்களுக்கும் ஆகாய விமானத்தில் பயணம் சென்றுவந்த மகிழ்ச்சி தரும் வகையில் உள்ளது. உங்களுடைய ஒவ்வொரு வரிகளும் அனைவரின் மனதையும் தொடும் வகையில் உள்ளது சார்

Like

Leave a reply to Naveen E Cancel reply