Categories
அனுபவம் தொடுகை மின்னிதழ் விமானப்பயணம்

பறத்தலும் பறத்தல் நிமித்தமும் (2)

உங்கள் கருத்துகளைக் கருத்துப் பெட்டியில் பரிமாறி, புரிதல்கள் மேம்பட வகைசெய்யுங்கள்.

பறத்தலும் பறத்தல் நிமித்தமும் முதல்ப்பகுதி

டெல்லிக்கு விமானப்பயணம் என்று முடிவு செய்த அடுத்தநாளே, அதாவது பிப்பரவரி மாதத்தின் முதல்வாரத்தில் சென்னையிலிருந்து டெல்லிக்கு எக்கனாமி பிரிவில் ஒரு டிக்கெட் எவ்வளவு என்று பார்த்தேன். ரூ. 5100 முதல் 5800 வரை எனக் காட்டியது இணையம். நான், மகள் வெண்பா, மோனிஷா மூவர் பயணம் என முடிவாவதற்கே பிப்பரவரி 15 ஆகிவிட்டது. அதற்குள் பயணக்கட்டணம் 6500 என எகிறியிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல மேலும் இது அதிகரிக்கும் என்பதால், முன்பதிவுப் பணியில் இறங்கினோம்.

முன்பதிவு செய்யும் இணையதளங்கள் நமது திரைவாசிப்பான் பயன்பாட்டுக்கு அவ்வளவு உகந்தவையாகப்படவில்லை. எனவே, மோனிஷாதான் முன்பதிவு செய்தார். ஆதார்கார்டு போன்ற தங்களின் அடையாள அட்டை ஒன்றைக்கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். பெரும்பாலும் ஆதார்கார்ட்உ அவர்கள் பட்டியலிலும் இருக்கும் என்பதால் அதுவே சரியான தெரிவாக இருக்கும்.

ஊனமுற்றவர்கள் தங்கள் பயணக் கட்டணத்தில் பாதியைச் செலுத்தினால் போதும் என்பது அரசின் திட்டம். ஆயினும் அதற்கான வசதிகள் எதுவும் இணையதளங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. என் கருத்துகளில் முரண்படுவோர், மேலதிகத் தகவல்கள் அறிந்தோர், கருத்துப் பெட்டியில் தங்கள் தகவல்களை தயவுகூர்ந்து வெளியிடவும். அது நமது அறிதலை மேம்படுத்த உதவும்.

மூவரும் ஒரே வரிசையில் அமர்ந்து செல்வதானால், அதற்கு தலா 200 கட்டணம் அதிகம் செலுத்த வேண்டும். கூடவே காப்பீடு கட்டணம் வேறு. பொதுவாக தனிநபர் தன் கையில் 7 கிலோவரை உடைமைகள் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. கையில் அல்லாமல், விமானத்தில் ஏற்றிச் செல்ல தனிநபர் ஒருவர் 15 கிலோவரை அனுமதிக்கப்படுகிறார். ஆனால், அதற்காகவும் அவர் தனியாக முன்பதிவு செய்ய வேண்டும்.

நாங்கள் தலா ஏழு கிலோ மட்டும் கையில் கொண்டுசெல்வது என முடிவு செய்தோம். இதுதவிர, உங்களுக்கு உணவு அல்லது சிற்றுண்டி தேவையெனில், அதையும் பயணச்சீட்டுக் கட்டணத்தோடு கூடுதலாகச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு சான்வெஜ் அதிகமெல்லாம் இல்லை 300 ரூபாய்தான். வானத்தில் பறந்தபடி சாப்பிடுவதால், அது தேவர்களின் அமுதத்துக்கு ஒப்பான மதிப்பு கொண்டதாகக்  கருதப்படுகிறது போலும். சுவையில் அல்ல, விலையில்.

உங்கள் பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்டாலும், நீங்கள் போர்டிங் பாஸ்பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதற்காக பயணத் தேதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், பயண நேரத்திலிருந்து 48 மணிநேரத்துக்கு முன்பாக, உங்கள் ஃப்லைட்டுக்கான இருக்கை ஒதுக்கீடு குறித்த விவரங்கள் தொடர்புடைய விமானத்துக்கான நிறுவனத்தின் இணையதளத்தில் காண்பிக்கப்படும். நீங்கள் அந்த தளத்தில் உலவி, உங்கள் போர்டிங் பாஸ் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இதை ‘Web Check in’ என்கிறார்கள். பெறப்படும் போர்டிங் பாஸை, நீங்கள் அலைபேசியிலும் வைத்துக்கொள்ளலாம் அல்லது அச்சுப் பிரதியாகவும் கையில் கொண்டுசெல்லலாம். இந்த போர்டிங் பாஸை என்னவென்று மொழி பெயர்க்கலாம். நுழைவுச் சீட்டு என்றாலும் உதைக்கிறது. தமிழறிஞர்கள் கவனத்துக்கு விட்டுவிடுவதே சாலச்சிறந்தது.

17 மார்ச், வெள்ளிக்கிழமை காலை 8.30க்கு எங்களது விமானம் கிளம்பும். அதற்கான போர்டிங் நேரம் காலை 7.30. அதாவது நாம் ஏழு மணிக்கெல்லாம் விமான நிலையத்தில் இருக்க வேண்டும். “காலங்காத்தால சீக்கிரமாப் போனா எப்படி சாப்புடறது?” மனைவியின் கவலைக்கு அவரே உபாயமும் சொன்னார். “ஏங்க ஏர்ப்போட்ல எல்லாமே காஸ்ட்லியாம். யூட்டூப்ல பார்த்தேன். ஆளுக்கு நாளு சப்பாத்தி கட்டிட்டு போங்க. முடிஞ்சா ஏர்ப்போட்ல உட்கார்ந்து சாப்பிடுங்க, இல்லைனா ஃப்லைட்ல சாப்பிடலாமானு விசாரிங்க” என்றார்.

சில நண்பர்கள் எதுவேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம், ஆனால் விமானத்தில் வைத்துச் சாப்பிடக்கூடாது என்றார்கள். சிலர் சாப்பிடலாம் என்றார்கள். நாங்கள் உணவை வெளியிலேயே முடித்துவிட்டு, சிற்றுண்டியை மட்டும் விமானத்துக்குள் எடுத்துச் செல்வதென முடிவு செய்தோம். டப்பாவைப் பிரித்து விமானத்தில் சப்பாத்தி சாப்பிடும் காட்சி என் மனக்கண்ணில் ஓடியது. கூடவே, சிறுவயதில் தொலைக்காட்சித் தொடராக நான் பார்த்த

எழுத்தாளர் நாரண துரைக்கண்ணனின்

‘வாஷிங்டனில் திருமணம்’

நாடகமும் நினைவில் எட்டிப் பார்த்தது. என்ன அங்கே அப்பளம், இங்கே சப்பாத்தி அவ்வளவுதான்.

விமான நிலையத்தின் D3 பகுதி

இறுதியாக, விமான நிலையத்தில் அமர்ந்து காலை உணவை முடித்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தோம். அதனால் நாங்கள் காலை 6.30க்கெல்லாம் மீனம்பாக்கம் விமான நிலையத்தை அடைய வேண்டியிருந்தது. மோனிஷா ஆதம்பாக்கத்திலிருந்து மகிழுந்து பதிவு செய்து எங்களுக்கு முன்பாகவே வந்து சேர்ந்தார். அவர் எங்கள் இண்டிகோ விமானம் புறப்படவிருந்த டெர்மினல் 1ல் D3 என்ற இடத்தில் எங்களுக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார். நானும் வெண்பாவும் பூவையிலிருந்து ஆட்டோவில் புறப்பட்டுப் போனோம். உள்ளே ஆட்டோவுக்கு அனுமதி இல்லை என்பதால், விமானநிலையத்தின் நுழைவாயிலிலேயே எங்களை ஓட்டுநர் இறக்கிவிட்டுவிட்டார். எங்கே செல்வது, எப்படிச் செல்வது என்று திக்குத் தெரியாமல் திணறிக்கொண்டிருந்த எங்கள் மூவரையிம் அதாவது, நான், வெண்பா மற்றும் என்னுடைய வெண்கோலைப் (White Cane) பார்த்துவிட்ட ஒரு கடைநிலை ஊழியர் நாங்கள் போகவேண்டிய இடத்தை விசாரித்து எங்களை மின்தூக்கிக்குக் கூட்டிச் சென்று ஏற்றிவிட்டார். இறங்கிய தளம் எண் 3ல் மோனிஷா நின்றிருந்தார். காருக்கு மூன்றாம் தளம்வரை வருவதற்கு அனுமதியும், அதற்கான உரிய வசதியும் செய்யப்பட்டிருப்பதை அறிந்து வியந்தேன்.

மூன்றாம் தளத்தை அடைந்து நிற்கும் கார்

காலை உணவை அங்கேயே அமர்ந்து முடித்துவிட்டு எங்கள் போர்டிங் பாஸ் மற்றும் ஆதார் கார்டுகளை எடுத்துக்கொண்டு, வெளி அரங்கைக் கடந்தோம். தங்கள் உறவினர்களை, நண்பர்களை வழியனுப்ப வருபவர்கள் இந்த வெளியரங்கைத் தாண்டி உள்ளே வர அனுமதிக்கப்படமாட்டார்கள். எங்களுடைய பயணச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சரிபார்க்கப்பட்டு, அந்தக் குளிரூட்டப்பட்ட உள்ளரங்கில் நாங்கள் அனுமதிக்கப்பட்டோம்.

விமான நிலையத்தின் உள்ளரங்கு பகுதி

“சார் உள்ளே போனதும் அசிஸ்டண்ட் கேட்டிருங்கஅப்போதான் எதற்கும் எங்கேயும் கியூவ்ல நிக்க வேண்டியிருக்காது” என்கிற நண்பர்கள் பாலகிருஷ்ணன், பாலநாகேந்திரன் குரல்கள் உள்ளுக்குள் எதிரொளித்துக்கொண்டே இருக்க, சிறிது தூரத்திலேயே எதிர்கொண்ட மற்றொரு பரிசோதனைச் சாளரத்தில் எங்களுக்கு துணையாள் வேண்டும் எனக் கேட்டேவிட்டேன்.

என்னுடைய சுமைகளைத் தூக்கிக்கொண்டு, என்னையும் ஒருகையில் பற்றியபடி, விறுவிறுவென துணையாளான அந்த இளைஞன் பொருட்கள் பரிசோதிக்கும் இடத்துக்கு எங்களை அழைத்துப் போனார். அங்கே எங்களுடைய உடைமைகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. உங்கள் பையில் இருக்கும் லேப்டாப், அதன் பேட்டரி, பவர் பேங்க், மொபைல், அதன் சார்ஜர், ஹெட்போன்ஸ், ஊன்றுகோல் ஆகியவற்றை அவர்கள் தரும் ஒரு ப்லாஸ்டிக் டிரேயில் வைத்துவிட வேண்டும். உங்கள் சட்டைப் பைக்குள் கிடக்கும் சில்லறைகளையும் சேர்த்துத்தான். பிறகு துணிகளோடு உங்கள் பையை சோதனைக்கு அனுப்பிவிட்டு, ஒரு சிறு கருவியை உங்கள்மேல் வைத்து அடிமுதல் முடிவரை சோதிப்பார்கள். அதற்கு டிடெக்டர், ஸ்கேனர் என்று என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். வளையும் தன்மைகொண்ட அந்தச் சிறு தண்டு உங்கள்மீது படும்போதெல்லாம் ஒரு மெல்லிய பீப் ஒலி கேட்கும். சில வினாடிகளில் சோதனை முடிந்ததும், எங்கள் துணையாள் என்னுடைய சோதனைக்குள்ளான அத்தனை உடைமைகளையும், மிக நிதானமாக என்னிடம் தந்து எல்லாவற்றையும் முறைப்படுத்த வழிசெய்தார்.

பைகளைப் பரிசோதிக்கும் இடம்

தொடர்ந்து சில வினாடிகள் நடந்து அடுத்த அரங்கு சென்றோம். அங்கே எங்களை ஓர் இருக்கையில் அமர்த்திய அந்த இளைஞன், “இன்னும் கொஞ்ச நேரத்தில கோச் வரும், அதுல ஏறிக்கோங்க” என்று சொல்லிவிட்டு அகன்றார்.

துணையாட்கள் தொடர்புடைய விமான நிறுவனத்தாலேயே ஏற்பாடு செய்யப்படுகிறார்கள். செல்வழியில் சென்னையில் சந்தித்த துணையாளைக் காட்டிலும், வருவழியில் டெல்லியில் எதிர்கொண்ட துணையாள் சற்று கூடுதல் முதிர்ச்சியும் பயிற்சியும் கொண்டவராக இருந்தார். அவர் என்னுடைய கையைப் பற்றவில்லை. மாறாக என்னைத் தன் முழங்கையைப் பற்றிக்கொள்ள அறிவுறுத்தினார். அத்தோடு விமானம் வரை வந்து விட்டுச் சென்றார். மற்றபடி பெரிய வேறுபாடெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாமே தனியாளின் புரிதலைச் சார்ந்ததும்தானே.

அரங்கின் இருக்கையில் நாங்கள் அமர்ந்திருக்க, பக்கவாட்டில் ஜனத்திரள். ஏதோ ஒரு ஃப்லைட்டுக்கான பயணிகள் தொடர்ந்து அறிவிப்பின் வழியே ஒருங்குபடுத்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள். நான் விமானநிலையக் கழிவறைகளைப் பார்த்துவிடுவது என முடிவுசெய்து மோனிஷாவையும், வெண்பாவையும் அனுப்பினேன்.

அவர்கள் இடத்தை அறிந்து வந்ததும், வெண்பாவும் நானும் ஆண்கள் கழிப்பறை நோக்கி நடந்தோம். செல்வழியெங்கும் கண்ணைக் கவரும் கடைகள், விதவிதமாக அடுக்கப்பட்டிருந்த தின்பண்டங்கள், சாக்லேட்டுகள். வெண்பாவின் விவரிப்பில் அவளின் வேட்கையும் விரவியிருந்தது. எகிறியடிக்கும் விலை என்ற புரிதல் அவளிடமும் இருந்ததால் பெரிதாக அனத்தல் இல்லை.

மாறுபட்ட கழிவறையெல்லாம் இல்லை. ஸ்டிக்கைப் பார்த்ததும் உதவிகள் உடனுக்குடன் கிடைக்கின்றன. அங்கே இருந்த ஒரு பணியாளரின் உதவியோடு சுமூகமாய் வெளியேறி என் இடம் சேர்ந்தேன்.

விமானம் நிற்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் துணையாள் சொன்ன கோச் அதாவது பேருந்தில் ஏறினோம். நம்மூர் 2+2 அல்ட்ரா டீலக்சுகள் போன்ற அந்தப் பேருந்தில் ஐந்து நிமிடப் பயணத்தில் ஒரு கல் தரையில் இறங்கினோம். அங்கே பெரிய பெரிய இன்ஜின்களின் சத்தம் காதைத் துளைத்தது. அதுதான் விமானம் என்று அறிந்தேன். புறப்பாடு சார்ந்து ஏதோ ஒரு ஆயத்தப் பணி தொழில்நுட்ப ரீதியில் நடந்துகொண்டிருந்ததால் எழுந்த சத்தம் அது.

விமானத்திற்கு முன்னால் நிற்கும் மூவர்

அங்கே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு, விமானத்தில் ஏறுவதற்கென்றே அதனோடு பொருந்தும்படியாக ஒட்டி அமைக்கப்பட்டிருந்த சாய்வுதளத்தில் ஏறினோம். ஒன்றரைத்தளம் ஏறும் தூரமும் உயரமும் கொண்ட அந்த சாய்தளத்தின் மூன்று திருப்பங்களைக் கடந்து இலேசாக கால் எடுத்துவைத்து விமானத்துக்குள் இறங்கிவிட்டோம். அப்படியானால், தரைதளத்திலிருந்து விமானத்தில் நாம் அமரும் இடம் எவ்வளவு உயரம் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். விமானத்தின் நீளமோ மூன்று பெருந்துகளை ஒன்றன்பின் ஒன்றாக நிற்கவைத்தால் கிடைப்பது என்றாள் வெண்பா.

பறப்போம்!

***ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

5 replies on “பறத்தலும் பறத்தல் நிமித்தமும் (2)”

உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு அனுபவங்களும் ஒரு பார்வையற்றவனின் புரிதலை இவ்வுலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த புரிதல் பொதுச் சமூகத்திற்கு ஏற்பட்டு விட்டால் நமக்குத் தேவையானவை எளிமையாக கிடைத்துவிடும். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி. வாழ்த்துக்கள்.
நானும் சிறு பிராயத்தில் இருந்து நமக்கு விமான கட்டணத்தில் சலுகை உண்டு என்று கேள்விப்பட்டு கொண்டே தான் இருக்கின்றேன். ஆனால் இதுவரை எவரும் அந்த சலுகை கட்டணத்தை பயன்படுத்தியதாக கேள்விப்படவில்லை.

Like

Venbha, Monisha, and your father
வாழ்த்துக்கள் உங்களின் விமான பயணம்…
நீங்கள் சொல்லுவது உண்மை தான் Person with Disabiled (PwD).
விமான பயண சலுகை இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை தான்…
இதற்க்கு தகுந்த அதிகாரிக்கு மணு கொடுக்க வேண்டும்
உங்களுடைய இந்த பதிப்பு
முன்னோடியாக அமையட்டும்

Like

வணக்கம் சார் தங்களுடைய இந்த அனுபவம் நாங்களும் ஆகாய விமானத்தில் சென்று வந்த மகிழ்ச்சி தருகிறது. உங்களுடைய ஒவ்வொரு அனுபவமும் மிகமிக அருமையாக இருந்தது.

Like

விமான அனுபவத்தை எங்களுக்கும் கடத்த நினைத்த உங்களது என்னமும் முயர்ச்சியும் போற்றுதலுக்குரியது.

Like

வணக்கம் சரவணன் சார் உண்மையிலேயே உங்களது எழுத்து பதிவு ஆகா ஆகா அற்புதம் அற்புதம் என்று சொல்லிக் கொண்டே மனதிற்குள் வந்து கொண்டிருக்கின்றது அப்படி ஒரு நேர்த்தியான உங்களது எழுத்து திறமை மிகச் சிறப்பாக உள்ளது நீங்கள் எழுதும் அந்தப் பாங்கு ரம்மை மனதை நிகழ்த்தியது மேற்கொண்டு கருத்துக்களை அனைவருக்கும் கூறியிருந்தார்கள் அதேபோன்றுதான் விமானத்தில் எப்பொழுது நாம் பறக்க போகிறோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது வாழ்த்துக்கள் நன்றிகள் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள் நீங்கள் கூறியது போன்று நமக்கு கட்டணச் சலுகை எதுவும் உள்ளது என்பதனை நானும் அறிந்திருக்கிறேன் அதற்கான வழிமுறை என்னவென்று எனக்கும் கூட தெரியவில்லை என்பதை நிதர்சனம் மேலும் தொடரட்டும் உங்கள் எழுத்துப்படி மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் உங்களுக்கு

Like

Leave a reply to முனைவர் அரங்க ராஜா Cancel reply