“விருப்பத்துக்கும் அடைதலுக்கும் இடைப்பட்ட போதாமைகளே குறைபாடு (Disability)!” சொல்கிறார் வினோத் அசுதானி: யார் இவர்?

“விருப்பத்துக்கும் அடைதலுக்கும் இடைப்பட்ட போதாமைகளே குறைபாடு (Disability)!” சொல்கிறார் வினோத் அசுதானி: யார் இவர்?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
வினோத் அசுதானி

தன் சிந்தி மொழி நூலுக்காக சாகித்திய அகாதமி விருது வென்றிருக்கிற வினோத் அசுதானி பற்றி தமிழகத்தில் பேச்சே இல்லை. சாகித்திய அகாதமி விருது வெல்வதென்ன புதிதா? தமிழிலும்கூட ஆண்டுதோறும் எவரேனும் ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுக்கொண்டுதான்இருக்கிறார். நினைவில் வைத்துக்கொள்ளும் பொறுப்பு போட்டித்தேர்வுகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் மாணவர்களைச் சேர்ந்தது. அதிலும்கூட தமிழ் எழுத்தாளர் என்றால் வினா எதிர்பார்க்கலாம். சிந்திமொழி பற்றி நமக்கென்ன?

ஆம் வினா இருக்காது. ஏன் யூபிஎஸ்சி தேர்விலும்கூட இதையா கேட்கப்போகிறார்கள். இது இந்த ஆண்டுச் செய்தி, பொதுத்தளங்களைப் பொருத்தவரை இது ஒரு பெட்டிச் செய்தி. ஆனால், பார்வையற்றோராகிய நமக்கு?

நாக்பூரைச் சேர்ந்த வினோத் அசுதானி ஒரு பார்வையற்றவர். ஆங்கிலத்திலும் உளவியல் படிப்பிலும் முனைவர் பட்டம் வென்றிருக்கிறார்.

சிந்தி மொழியின் முக்கிய படைப்பாளர்களின் 18 நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். சுமார் 9 முறை சாகித்திய அகாதமி விருதின் இறுதிப் பட்டியலில் இவருடைய நூல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த ஆண்டு ‘உன் கைகளைக்கொடு’ என்ற அவருடைய கவிதை நூலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சாகித்திய அகாதமி விருது வெல்லும் முதல் பார்வையற்ற எழுத்தாளர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

வினோதின் அம்மாவுக்குப் பிறந்த 8 குழந்தைகளில் 5 பேர் பார்வையற்றவர்கள். அவர்களுள் வினோத் நான்காம் பார்வையற்றவர். இரண்டு அக்காள்கள், பின் அண்ணன் கன்சாம் அசுதானி, வினோத் அசுதானி, தம்பி ராஜேஷ் அசுதானி. சகோதரர்கள் மூவரும் சமூக செயல்பாட்டாளர்களாகப் பார்வையற்றோரிடையே நன்கு பரிட்சயமானவர்கள்.

“தொடர்ச்சியாகப் பார்வையற்ற குழந்தைகள் பிறந்ததால், உறவினரிடையே ஒருவித புறக்கணிப்பை அம்மா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. உறவினர், அண்டை அயலார் என பலருக்கு தங்கள் குழந்தைகளை என் அம்மா மடியில் கிடத்துவதில் அவ்வளவு தயக்கங்கள் இருந்தன. சமூகத்தில்தான் இத்தகைய புறக்கணிப்புகள். நாங்கள் எங்கள் பெற்றோரால் எப்போதுமே புறக்கணிக்கப்படவில்லை. எங்கள் குடும்பம் பொருளாதாரத்தில் இடைப்பட்டது என்றாலும், என் அப்பா எங்களை எப்போதும் ஊக்கப்படுத்திக்கொண்டேதான் இருந்தார்.

முழுப் பார்வையற்றவன் என்றாலும் என் அப்பா அருகாமையிலுள்ள மைதானத்துக்கு என்னை அழைத்துப்ப்ஓய், அங்கே மிதிவண்டி ஓட்டக் கற்றுத் தந்தார். பார்வையில்லையே என்பதால் எந்த ஒரு உலகியல் சார்ந்த விடயத்தையும் பெற்றோர் எங்களுக்குச் சொல்லித்தராமல் இல்லை.

தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போல ஊனமுற்றோர் இலக்கியமும் பெருக வேண்டும். தன்னைப் பற்றித் தானே எழுதுவது, முக்கியப் படைப்பாளிகள் பார்வையில் ஊனம் சித்தரிக்கப்படுவது, ஊனமுற்ற கதாபாத்திரங்களை பல்வேறு படைப்பு வடிவங்கள் வழியே கையாள்வது போன்றவற்றை உட்கூறுகளாக்கி ஊனமுற்றோர் இலக்கியம் (Disability Literature) ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.

அவ்வாறான முயற்சிகளில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். பொதுச்சமூகம் நம்மை தாமாகவே முன்வந்து அங்கீகரிக்கும் என்றெல்லாம் நாம் நினைப்பது வீண். நாம்தான் சிறுகச் சிறுக நமக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

நம்முடைய ஊனமுற்ற படைப்பாளிகளில் பெரும்பாலோர் நம்மைப் பற்றியே எழுதிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய உரிமைகள், நமது அன்றாடம் என அவை ஒரு வட்டத்துக்குள் சுருங்கிவிடுகின்றன. அதனால் அவை பொதுச்சமூகத்தின் கவனத்தையும் பெறுவதில்லை.

பார்வையின்மை என்பது என்னுடைய தனி அனுபவம், எனக்கான சிக்கல். அந்த தனிப்பட்ட உண்மையைக்கொண்டு நான் இந்த வாழ்வை, உலகத்தை எப்படிப் பார்க்கிறேன் என்பதை எழுத வேண்டும். உங்களின் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து பெறப்படும் உண்மைகளைப் பிரபஞ்ச உண்மையோடு இணைப்பதே இலக்கியம் என நான் கருதுகிறேன்.

விருப்பத்துக்கும் அடைதலுக்கும் இடைப்பட்ட போதாமைகளே குறைபாடு (disability)எனலாம்.  அது உடல் சார்ந்தது, கலை சார்ந்தது, பணம் சார்ந்தது எனப் பலப்பல. அவ்வாறான போதாமைகளை எதிர்கொள்ளாத மனிதர்கள் எவரேனும் உண்டா? எனவே, எனக்கு உடல் சார் போதாமை, இன்னொருவருக்கு பணம் சார் போதாமை, வேறொருவருக்கு கலைசார் போதாமை.

சிறுவயதில் சிறப்புப்பள்ளியில் ஏழாம் வகுப்புவரை படித்தேன். அங்கே எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எட்டாம் வகுப்புக்கு பொதுப்பள்ளியில் சேர்ந்தது முதல் போராட்டம்தான். பள்ளித் தேர்வுகளின்போது நல்ல பதிலி எழுத்தர்களைக் கண்டடைவதில் போராட்டம். கல்லூரியில் பாடங்களைப் பதிவு செய்து படிப்பதில் போராட்டம்.

சொன்னால் நம்புவீர்களா தெரியாது. என் தங்கை உஷா என்னுடைய கல்லூரிப் படிப்பு முழுவதுக்குமான பாடங்களை எனக்கு ஒலிப்பதிவு செய்து தந்தாள். இதற்காக சுமார் ஆறு ஏழு ஆண்டுகள் ஒருநாள் தவறாமல் தினமும் இரண்டு மணிநேரத்தைச் செலவிட்டிருக்கிறாள்.

நான் முதுகலையில் தங்கப் பதக்கம் வென்றபோதும், பணிவாய்ப்புக்காக கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஏறி இறங்கியிருக்கிறேன். இன்றும் அதே நிலைதான் என்றாலும், 70 80களில் நிலைமை இன்னும் மோசம். பார்வையற்றவர்கள் மீது பொதுச்சமூகத்துக்கு பல ஐயங்களும் தயக்கங்களும் இருந்தன.

அவ்வாறான ஒரு நேர்முகத் தேர்வில், “நீங்கள் பார்வையற்றவர் என்பதால் உங்களால் கரும்பலகையைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பிக்க முடியாது. ஆகவே உங்களை நிராகரிப்பதைத் தவிர எங்களுக்கு வழியில்லை” என்றார்கள்.

“உங்கள் கல்லூரியில் இருக்கிற அனைத்துப் பேராசிரியர்களுமே கரும்பலகையைப் பயன்படுத்துபவர்கள். ஆனாலும் உங்கள் கல்லூரியின் தேர்ச்சி சதவிகிதம் ஏன் ஐம்பதைக்கூடநெருங்கவில்லை” நான் கேட்டேன்.

இதன்மூலம் பார்வையற்ற நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான். உங்களுக்கு எது இயலும் இயலாது என்பதை நீங்கள் பார்வையுள்ளவர்களுக்கு நன்கு புரியவைத்துவிடுங்கள். அது மிகவும் முக்கியம்.

இப்போது நான் நாக்பூர் பாபா ராம்தேவ் பொறியியல் கல்லூரியில் ஆங்கிலம் கற்பிக்கிறேன். என்னுடைய வகுப்பின் முதல்நாள் முதல் பாடவேளையின்போதே என்னுடைய மாணவர்களிடம் நான் ஒன்றைத் தெளிவுபடுத்திவிடுவேன். எனக்கு பார்வை கிடையாது. அதனால் நீங்கள் என்னுடன் சைகைகள் தவிர்த்துக் குரலால் மட்டுமே உரையாட வேண்டும்வேண்டும்.

பாடவேளை முடிந்ததும் உங்களில் ஒருவர் என்னை நான் போகும் இடத்துக்கு அழைத்துச் சென்று விட்டுவர வேண்டும். ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் இது மாணவர்களுக்கு என் முதல் அறிவுறுத்தலாக இருக்கும்.

ஊன்றுகோலைப் பயன்படுத்தி என்னால் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியும். ஆனாலும் வாய்ப்புகள் இருக்கும்போது நான் யாருக்கு என்னை நிரூபித்துக்கொள்கிற அவசியம் இருக்கிறது? தவிர இவ்வாறு எனக்கு வழிகாட்டுவதன் மூலமாக, ஆண்டுக்கு சுமார் நூறு மாணவர்களுக்கு ஒரு பார்வையற்றவரை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வும் ஏற்படுகிறதல்லவா?

என் அக்காள்கள் இருவருமே தங்களைப் போன்ற பார்வையற்றவர்களைத்தான் திருமணம் செய்வது என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதுபோலவே சகோதரர்கள் நாங்கள் மூவருமே பார்வையுள்ளவர்களைத்தான் மணம் முடிப்பது என்பதில் உறுதியாக இருந்தோம். அதிலும் நான், நன்கு படித்துப் பணியிலுள்ள ஒரு பார்வையுள்ள பெண்ணைத்தான் திருமணம் செய்யத் தீர்மானித்திருந்தேன். அப்படித்தான் என் தங்கையின் தோழியைக் காதலித்துக் கரம் பிடித்தேன். அவர் நன்கு படித்தவர். ஒரு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.”

***பார்வையற்றோரால் நடத்தப்படும் இணைய வானோலியான ரேடியோ உடானுக்கு வினோத் அசுதானி வழங்கிய பேட்டியிலிருந்து.

***தொகுப்பு: ப. சரவணமணிகண்டன்

வெளி இணைப்புகள்:

https://timesofindia.indiatimes.com/city/nagpur/city-sindhi-poet-asudani-is-2023-sahitya-akademi-award-winner/articleshow/106167093.cms

பகிர

2 thoughts on ““விருப்பத்துக்கும் அடைதலுக்கும் இடைப்பட்ட போதாமைகளே குறைபாடு (Disability)!” சொல்கிறார் வினோத் அசுதானி: யார் இவர்?

  1. Hai this is Sriharan A. In this morning I was discussed regarding how Visually impaired treated with by the society. But now I feel motivate myself.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *