தேதி 20 ஆகிவிட்டது. இன்னும் சென்னை புத்தகக் காட்சிக்குச் செல்லாமல் இருப்பதா? மனதை அரித்த சிந்தனையில் உதித்தது திட்டம். அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கான புத்தகங்களில் 10ஐக் கூட வாங்கப்போவதில்லை என்றாலும், நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திரு. ரகுராமன் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிற கர்ணவித்யா அரங்கையும், பிரெயில் புத்தகங்கள் இடம்பெற்றிருக்கிற செம்மொழி தமிழாய்வு நிறுவன அரங்கையும் சென்று பார்த்து சிறு ஆதரவு வழங்க வேண்டியது நம் தலைக்கடன் ஆயிற்றே! இன்று இல்லை, ஆனால் இன்றை விட்டால் நாளை கடைசி என்ற நிலையில், சனிக்கிழமை மாலை மகள் வெண்பா மற்றும் சித்ராக்காவோடு சென்னைப் புத்தகத் திருவிழாவுக்குச் சென்றேன்.
“அண்ணா இதுக்கு மேல போகக்கூடாதுபோல” கண்காட்சி நிகழும் மைதானத்தின் நுழைவு வாசலிலேயே ஆட்டோ ஓட்டுனர் தயக்கத்துடன் வண்டியை நிறுத்த, சொல்லிக்கொள்ளலாம் என்றபடி உள்ளே ஓட்டச் சொன்னோம். வழியெங்கும் தடுத்து நிறுத்தப்படுவதும், நாங்கள் “Blind” என்று சொன்னபடியே ஊன்றுகோலைமேலுயர்த்திக் காட்டுவதுமாக அறிவரங்கின் பிரகாரம் வந்து சேர்ந்தோம்.
அங்கே நுழைவுச் சீட்டு வழங்கும் கவுண்ட்டர் எண்கள் தொடர்பான அறிவிப்பில் தொடர் மாற்றங்கள். இங்கும் அங்குமென அலைந்துகொண்டிருந்த எங்களை ஒருவர் “உங்களுக்கு ஃப்ரீ” என மடைமாற்றினார். பூந்தமல்லியிலிருந்து ஆட்டோவுக்கு 400 கொடுத்து வந்தவர்களுக்கு இது பெரிய ஆஃபர் இல்லை என்றாலும், கவுண்ட்டரைத் தேடி அலைக்கழிந்த பாப்பாவுக்கு சிறு நிம்மதி.
அப்போதே மணி மாலை ஆறைத் தொட்டுவிட்டதால், முதலில் கர்ண வித்யா அரங்கைப் பார்த்துவிடுவது என முடிவு செய்தோம். அரங்கு எண் 2தான். ஆனாலும், தேடலில் தடம் மாற, நாங்கள் தடுமாற ஒருவழியாக முதல் வரிசையில் முதன்மை அரங்காக இருந்ததில் மகிழ்ச்சி.
அரங்கில் சட்டம் படித்துக்கொண்டிருக்கும் ஓரிரு பார்வையற்ற இளைஞர்களின் உதவியுடன் வருபவர்களுக்குப் பார்வையற்றவர்களின் வாசிப்பு தாகம் குறித்து விளக்கிக்கொண்டிருந்தார் ஐயா ரகுராமன். எங்கள் வருகைக்கு மனம் மகிழ்ந்ததோடு, தங்களின் அரங்கமைப்பைச் சுருக்கமாக விளக்கினார்.
அரங்கின் முகப்பில் கணினியை வைத்துக்கொண்டு, அதைத் திரை வாசிப்பான் மூலமாக இயக்கி, தொழில்நுட்ப வளர்ச்சியால் பார்வையற்றோர் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஏற்பட்டு வருகிற மாற்றங்கள் குறித்து விளக்கினார்கள்.
மிகுந்த பொருட்செலவில் பிரெயில் புத்தகங்களை உருவாக்கிப் பார்வையற்றோரிடம் கையளிப்பதைக் காட்டிலும், மிக எளிய முறையில் மின்னூல்களாக (E-books) படைப்புகளை வெளியிடலாம். அப்படி வெளியிடும் பட்சத்தில், அவற்றை இயந்திரக் குரல் வழியே படித்துக்கொள்ளவோ, அல்லது பிரெயில் குறியீடுகளாக மாற்றிப் படித்துக்கொள்ளவோ வகைசெய்யும் ஆர்பிட் ரீடர், சக்ஷம் ஈவா11 ஆகிய மின்னணுக் கருவிகளையும் அரங்கினுள்ளே காட்சிப்படுத்தி இருந்தார்கள்.
அத்தோடு,
என்கிற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சில பிரெயில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்தப் புத்தகங்களின் தனித்துவம் என்பது, இவற்றை வாசிக்கும் பார்வையற்றவர்கள் அச்சுப் புத்தகம் படிக்கும் அனுபவத்தைப் பெறுவார்கள். காரணம், புத்தகத்தில் பிரெயில் எழுத்துகளோடு உள்ளடக்கங்களை விவரிக்கும் விளக்கப்படங்கள் பார்வையற்றோர் தொட்டுணரும் வகையில்,மேடுறுத்தப்பட்ட (embossed) கோடுகள் மற்றும் புள்ளிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பார்வையற்றோரின் எழுத்தார்வத்தை வெளிச்சம் போட்டு காட்டும் நோக்கத்தோடு, சில பார்வையற்ற எழுத்தாளர்களின் புகைப்படங்கள், விரல்மொழியர், தொடுகை உள்ளிட்ட மின்னிதழ் குறித்த விளக்கப்படங்கள் அரங்கச் சுவர்களை அலங்கரித்தன. அத்தோடு, சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும் இந்தியாவின் பார்வையற்ற எழுத்தாளர்
புத்தகங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஒரு சாமானிய வாசகரைப்போல பார்வையற்றோரும் சமகால வாசிப்பைச் சுகிக்க முடியும். ஆனால், அதற்கு முதலில் படைப்பாளர்கள், பதிப்பாளர்கள் தங்கள் தயக்கங்களைக் கைவிட்டு, பார்வையற்ற வாசகர்களுடன் அமர்ந்து திறந்த மனதுடன் உரையாடி, தங்கள் பதிப்புகளை/வெளியீடுகளை மின்புத்தகங்களாகவும் வெளியிட வேண்டும் என்பதுதான் வருவோர் போவோரிடம் கர்ண வித்யா அரங்கு முன்வைத்த கோரிக்கை.
ஆனால், எத்தனை படைப்பாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் தீவிர வாசகர்களின் காதுகளில், மூளையில் இந்தச் செய்திகள் எட்டின என்பது கேள்விக்குறிதான். இன்னும் உடைத்துச் சொன்னால், எத்தனை படைப்பாளர்கள் இந்தப் பக்கம் தலைகாட்டினார்கள் என்று கேட்டாலும் ஒருகை விரல்களுக்குள் எண்ணிக்கையை அடக்கிவிடலாம் என்றே தோன்றுகிறது. இருந்தாலும், ஆண்டுதோறும் இத்தகைய அரங்கொன்றை உருவாக்குவதில் உறுதியுடன் இருக்கிறார் கர்ண வித்யா நிர்வாகி திரு. ரகுராமன். காஸ்ட்லி சங்குதான் என்றாலும், நாம் ஊதிக்கொண்டே இருப்போம் என்றவருக்குக் கைகொடுத்து வெளியே வந்தோம்.
செல்பேசி இன்றைய 2K பிள்ளைகளின் ஆறாம் விரலாய் மாறிப்போன சூழலிலும் மின்புத்தகங்கள் வெளியிடுவதில் படைப்பாளர்களிடையே நிலவும் தயக்கங்களை புரிந்துகொள்ளவே முடியவில்லை. இவர்களுள்
போன்றோர் விதிவிலக்குகள். அதிலும் திரு. ஜெயமோகன் அவர்கள், தனது வெண்முரசு என்கிற மிகப்பெரிய நாவலை முற்றிலும் விலையில்லாப் படைப்பாக அதற்கென்றே ஒரு
உருவாக்கி வெளியிட்டுள்ளார். அவரின் முக்கியப் படைப்பான
தொகுப்பில் இடம்பெற்ற அனைத்துக் கதைகளும், அவர் எழுதிய சில புகழ்பெற்ற நாவல்களும் அவருடைய தளத்திலேயே படிக்கக் கிடைக்கின்றன. காலச்சுவடு பதிப்பகத்தின் பெரும்பாலான வெளியீடுகளும் அமேசான் கிண்டிலில் தாராளமாகக் கிடைக்கின்றன.
கண்முன் இத்தனை உதாரணங்கள் இருந்தும், ஏன் தயக்கம்? அது தயக்கமாக இருக்காது. பயம் அல்லது மனநிறைவின்மை. அச்சுப் புத்தகம் சிந்தனையின் பரு வடிவம். அதற்கு கனம் இருக்கிறது, நிறம் இருக்கிறது, அதற்கு மணம்கூட இருக்கிறது. செல்லக் குழந்தையென கையில் வைத்துப் பார்க்கலாம், நீவி விடலாம், மார்பில் போட்டுக்கொண்டு தூங்கலாம், முத்தம்கூடக் கொடுக்கலாம். மின் புத்தகத்தை என்ன செய்வது? இப்படி ஏதேதோ உள்ளுக்குள் மின்னிக் கொண்டிருக்க, அலைந்துகொண்டிருக்கும் கூட்டத்திற்கு நடுவே, வெண்ப்ஆ எங்களைக் கூட்டிச் சென்றுகொண்டிருந்தாள்.
அடுத்த படையெடுப்பு, செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்.
அரங்கு எண் 406 அல்லது 410 என ரகுராமன் சொல்லியிருந்தார். 400கள் தொடங்கும் வரிசையில் நுழைந்து ஒரு தன்னார்வலரிடம் விசாரித்தோம். அவரும் அரங்கின் பட்டியலில் தேடினார். “பெயரைச் சரியாகச் சொன்னால்தான் கண்டுபிடிக்க முடியும்” என்ற வாக்கியம் இலேசான எரிச்சலோடு அந்தப் பெண்ணிடமிருந்து எட்டிப் பார்த்தது. நான் பட்டியலை வாங்கி வெண்பாவிடம் கொடுத்தேன். இதே பட்டியலை பிரெயிலிலும் வைத்திருக்கலாமே என்று நினைத்தபோதே, வாக்குச் சாவடிகளில் வழங்கப்படுகிற பிரெயில் வேட்பாளர் பட்டியல் நினைவுக்கு வந்தது.
வெண்பா செம்மொழி என்ற சொல்லை உச்சரித்தபடியே, S வரிசையில் தேடிக் கண்டுபிடித்தாள். எண் 341 என்று சொன்னவள், அதைக் குறித்தும் கொண்டாள். இனி 341ஐ தேட வேண்டும். மடித்த ஊன்றுகோலைக் கையில் வைத்திருக்கும் பார்வையற்ற இருவரைக் கூட்டிக்கொண்டு ஒரு சிறுமி இங்கும் அங்கும் அலைவது அந்தக் கூட்டத்திலும் ஒருவருக்கு உறுத்தியிருக்கிறது. “பாப்பா எங்க போகணும் டா?” அந்த நபர் கேட்டார். செம்மொழி அவள் நினைவிலிருந்து எழ மறுக்கிறது. நான் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் என்றேன்.
அவள் பட்டியலில் தான் குறித்த இடத்தைக் காட்டி, “341 எங்க இருக்கு அங்க்கில்” என்றாள். “பாப்பா இது சீரியல் நம்பர் டா. ஸ்டால் நம்பர் இந்தப் பக்கம் பார்க்கணும்சரியா” ஞாலத்தின் மாணப் பெரிய வழிகாட்டல். இதுபோன்ற வழிகாட்டல்களைச் செய்கிற, புத்தக காட்சி சாலையில் நுழைந்தது முதல், நாங்கள் வெளியேறும் வரை எங்களோடு உடன் வருகிற சில தன்னார்வலர்களையாவது பப்பாசி ஏற்பாடு செய்திருக்கலாம். ‘கண்காட்சி’ என்பதால் தோன்றியிருக்காதோ என்னவோ! ஆனால், பார்வையற்ற நண்பர்களுக்குச் சொல்லும் வகையில் எனக்கொன்று தோன்றுகிறது. இதுபோன்ற அறிவரங்கங்களுக்குத் தனியாக செல்லாதீர்கள். அதீதத் தனிமையை உணர்வீர்கள், கூடவே அந்தக் கேள்வியும் உங்களைத் துளைக்கும். “துணைக்கு யாரும் வரலையா?”
எளிதாகிவிட்டது அரங்கு தேடும் வழி என்பதால், கூடுதலாக தும்பி மற்றும்
அரங்கு எண்களைத் தேடிக் குறித்துக்கொள்ளச் சொன்னேன்.
செம்மொழித் தமிழாய்வு நிறுவன அரங்கில் நுழைந்தோம். தமிழ் செவ்விலக்கிய நூல்களை பிரெயிலில் பதிப்பித்துக் காட்சிப்படுத்தியிருப்பதாகவும், அந்த நூல்கள் வேண்டுவோர் நிறுவனத்துக்கான இணையதளத்தில் பதிவுசெய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், இணையத்தில் பதிவு செய்யும் நடைமுறை குறித்து அந்த அரங்கில் விளக்குவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி படித்தேன்.
தலைக்கு மேலே இருந்த ரேக்குகளில் பிரெயில் புத்தகங்கள் நின்றன. கனமான அந்தப் புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படித்துப் பார்த்தோம். அப்போது எங்களை அணுகிய அந்த அரங்கைச் சேர்ந்த ஒருவர், “புத்தகங்கள் வேண்டுமானால், இணையத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளுங்கள். இணையத்தில் சென்று பார்த்தாலே அதற்கான வழிமுறைகள் கொடுத்திருக்கின்றன” என்று சொன்னவர்,
என்ற இணைய முகவரியைக் கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டார்.
இணையத்தில் அப்படி எந்த வழிமுறையும் சொல்லப்படவில்லை. தொலைபேசி எண்ணும் உபயோகத்தில் இல்லை என வருகிறது. மின்னஞ்சல் செய்துதான் பார்க்கவேண்டும்.
அடுத்ததாக தும்பி மற்றும் விஷ்ணுபுரம் சென்றோம். நிச்சயம் புத்தகம் வாங்குவதற்கு இல்லை. ஆனால், நமக்கு ஐயா ஜெயமோகன் தளத்தின் வழியே, எழுத்துகளால் அறிமுகமான எவரேனும் இருக்கலாம். அவர்களை நேரில் சந்திக்கலாம் என்பதனால்.
ஏற்கனவே பரிட்சயமான திரு. மனோ, திரு.
என எவரும் தும்பி அரங்கில் இல்லை. விஷ்ணுபுரம் அரங்கில்
அவர்களைச் சந்தித்தேன். அவர் கட்டுரைகள் ஒன்றிரண்டு தளத்தில் படித்திருக்கிறேன். எழுத்து போலவே குரலிலும் கனிவு இருந்தது. அவர்தான் பாப்பாவை அரங்கு எண் 112க்குக் கூட்டிபோய் காட்டச் சொன்னார்.
112 அரங்கு செல்லும் வழியில் பாப்பா கேட்டாள், “அப்பா புத்தகம் எப்படி எழுதுறது?” “அதற்கு நீ நிறையப் படிக்கணும், அதுக்குத்தான் உன்னை இங்கே கூட்டி வந்திருக்கோம்” என்றார் சித்ராக்கா.
நூல்வனம் அரங்கில் “நான் படிக்கப் போகிறேன்” எனச் சொல்லி இரண்டு சிறு புத்தகங்களை வாங்கினாள் மகள்.
பிறகு சிற்றுண்டி கொறித்துவிட்டு, வெளியேறும் வழியை நோக்கி நடந்தோம். அப்போது மணி எட்டு. பக்கவாட்டில் ஆங்காங்கே விளம்பரக் காணொளிகள் ஓடிக்கொண்டிருந்தன. கூட்ட அரங்கில் கைதட்டல்களுக்கு நடுவே எவரோ ஒரு அறிவாளுமை பேசிக்கொண்டிருந்தார்.
ஒரு ஓரமாய் நின்று ஓலா உபர் புக் செய்து பார்த்தேன். வெகுநேரமாக புக் ஆகவில்லை. புக் ஆன ஓரிரு ஓட்டுநர்களும் சொல்லிவைத்தாற்போல், முதன்மைச் சாலைக்கு வந்தால் ஏற்றிக்கொள்வதாகவும், மைதானத்துக்கு உள்ளே வர முடியாது எனவும் மறுத்துவிட்டார்கள்.
பக்கவாட்டில் போடப்பட்டிருந்த ப்லாஸ்டிக் இருக்கைகளில் எங்கள் மூவரையும் அமரச் சொல்லிவிட்டு, போகும் வரும் ஆட்டோக்கள் கார்களை வழிமறித்து உதவி கேட்டார் பாதுகாப்புக்கு நின்றிருந்த ஒரு காவலர். உட்கார்ந்ததும் தான் கையில் வைத்திருந்த புத்தகத்தைத் திறந்து சத்தமாகப் படித்துக்கொண்டிருந்த மகள்,எழுந்து, அங்கு வந்த முதியவர் ஒருவருக்குத் தன் இருக்கையைக் கொடுத்தார். வெகுநேரம் ஆகியும் காவலர் முயற்சி பலிக்கவில்லை. அவரே தொனி தளர்ந்து “அப்படியே மெல்ல நடந்திடுறீங்களா” என்றார். எனக்கு அலுப்பாக இருந்தது. “கவலப்படாத அப்பா! நான் பெரியவளாகி, இதே கண்காட்சிக்குக்கார்லவருவோம்” என்றாள் மகள்.
நீண்ட வழிதான் என்றாலும், வெண்பாவிடம் பேச்சு கொடுத்தபடியே நடந்ததால் தூரம் தெரியவில்லை. அவளும் அத்தனை கூட்டத்துக்கும் நடுவே எங்கள் இருவரையும் மிக ஜாக்கிரதையாக வழிநடத்திப் போனாள். அவளுக்கு அது பழகிவிட்டது. இரு மருங்கிலும் சிறு வணிகர்கள் தங்கள் பொருட்களை விற்றபடி நின்றார்கள். அவர்களுள் பர்பிவிற்கும் ஒரு பார்வையற்ற நண்பரும் இருந்தார்.
நெரிசல் கடந்து அகன்ற சாலைக்கு வந்தபோது ஆசுவாசமாக இருந்தது. “அப்பாடா” என்றவனிடம், “அப்பா பேட்டரி கார் சர்வீஸ் எல்லாம் இல்லையா பா? நீங்ககூட நடந்துறுவீங்க சரி, ஆனா நான் எந்திரிச்சு இடம் கொடுத்தேன்ல ஒரு வயசான தாத்தா, அவர்லாம் இவ்லோ தூரம் நடப்பாரா? பாவமில்ல!”
மகளின் கேள்விக்கு என்னிடம் பதில்இல்லை. ஆனால், சட்டென்று ஒரு மனக்காட்சி ஓடி மறைந்தது.
அந்தக் காட்சியில், பிரபள படைப்பாளராகிவிட்டாள் மகள். தன் பதிப்பாளர் நண்பர்களோடு இணைந்து, அனைவரும் அணுகுவதற்கு எளிதான ஒரு புத்தகக் காட்சி சாலையை வடிவமைத்திருக்கிறார்கள்.
அங்கே சர்க்கர நாற்காலி சென்றுவர தனிப்பாதைகள்,
ஒவ்வொரு அரங்கிலும் பிரெயில் எழுத்துகளில் அறிவிப்புப் பலகைகள்,
பிரெயில் முறையில் வெளியிடப்பட்ட அரங்கு வரிசை குறித்த பட்டியல்,
மொத்த அரங்கமைப்பைப் புரிந்துகொள்ளும்படியாகத் தயாரிக்கப்பட்ட பிரெயில் வரைபடங்கள்,
ஒவ்வொரு அரங்கிலும் அச்சுப் புத்தகங்களுக்கு இணையாக வைக்கப்பட்டுள்ள மின்புத்தகங்களுக்கான இணைப்புப் பட்டியல்கள்,
சைகை மொழியில் அரங்கை விளக்கும் நிபுணர்கள்,
பார்வையற்றோர் உட்பட அனைத்துவகை மாற்றுத்திறனாளி வாசகர்கள் மற்றும் தனித்துவரும் முதியவர்களை கவனித்துக்கொள்ள தன்னார்வ பாதுகாவலர்கள்,
இறுதியாக, முதியவர்களை, மாற்றுத்திறனாளிகளை எளிதாக முதன்மைச் சாலைக்குக் கொண்டு சேர்க்கும் ஏராளமான வாகனங்கள் என அரங்கம் கலைகட்டியது. அப்படி ஒரு வாகனத்தில் என் வயதொத்த சில பதிப்பாளர்கள் மற்றும் படைப்பாளர்களோடு இருக்கைகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
“அப்போலாம்” என ஆரம்பித்து, நான் மேலே எழுதியவற்றையெல்லாம் ஒரு கடந்தகால நினைவாக அவர்களிடம் பகிர்ந்துகொண்டு வந்தேன். பரஸ்பர பெருமித உரையாடல்களோடே நாங்கள் எங்கள் இலக்கை அடைந்தோம்.
***ப. சரவணமணிகண்டன்
வணக்கம் சார் தங்களுடைய ஒவ்வொரு அனுபவமும் பல்வேறு தகவல்கள் கொடுப்பதாக உள்ளது சார்