தமிழக அரசைச் சாடும் சீஏஜி (CAG) அறிக்கை: உள்ளடக்கம் என்ன?

தமிழக அரசைச் சாடும் சீஏஜி (CAG) அறிக்கை: உள்ளடக்கம் என்ன?

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது

நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா

கடந்த அக்டோபர் 11, புதன்கிழமை அன்று, தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுத் தணிக்கைக் கட்டுப்பாட்டாளரின் (comptroller and auditor general CAG) அறிக்கை, மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான தமிழக அரசின் மெத்தனத்தைச் சாடுவதாக அமைந்துவிட்டது. மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கொள்கையை உருவாக்காமலிருப்பது, மாற்றுத்திறனாளிகள் தொடர்பான முறையான தரவுதளத்தைப் ஏற்படுத்திப் பராமரிக்காதது மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை வாரியக் கூட்டத்தை முறையாகக் கூட்டாதது போன்ற காரணங்களால், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திட்டங்களை உருவாக்கி அமல்ப்படுத்துவதில் மிகப்பெரிய சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2019 – 2022 ஆம் ஆண்டுகளை உள்ளடக்கிய இந்த அறிக்கை, சென்னை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக்கொண்டது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 (RPD act 2016) மற்றும் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் (TN Rights of Persons with Disabilities Rules, 2018) விதிகளின்படி, உரிய வல்லுநர்களை உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை வாரியத்தை ஏற்படுத்தி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம். அதன்படி, கடந்த 2017ல் அமைக்கப்பட்ட வாரியமானது, கடந்த 2022 ஆம் ஆண்டுவரை, மூன்று முறை மட்டுமே கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது. அத்தோடு, கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கொள்கையை உருவாக்குவது குறித்து உரையாடலே இடம்பெறவில்லை என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016ன் அடிப்படையில், முறையான மேம்படுத்தப்பட்ட கொள்கை வகுக்கப்படாமல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயங்கி வருகிறது. இதனால், மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துவதில் மிகப்பெரிய பின்னடைவு காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தேசியக்கொள்கை 2006ன்படி, மாற்றுத்திறனாளிகளின்சமூகப் பொருளாதாரநிலை குறித்த தகவல்கள் முறையான கால இடைவெளிகளில் திரட்டப்பட்டு, தொகுக்கப்பட்டு, விரிவாக ஆய்வுக்குட்படுத்தப்படுவதோடு, பயனாளர்கள் குறித்த விவரங்கள், பொதுமைப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தின் வாயிலாகப் பராமரிக்கப்பட வேண்டு்ம் என்பது கட்டாயம். அத்தோடு, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016ன்படி, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை, பள்ளிவயது மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கண்டறியும் பொருட்டு, விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். கடந்த 2022 நவம்பர் மாதம் இறுதிவரை அத்தகைய கணக்கெடுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை என அந்த அறிக்கை கவலை தெரிவிக்கிறது.

இதுவரை, தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக, 14.34 லட்சம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தினை ஏற்படுத்தி, அந்தத் தகவல்கள் பராமரிக்கப்படவில்லை. மாவட்ட அலுவலகங்களில் காணப்படும் இந்தத் தகவல்களை உள்ளடக்கிய பதிவேடுகளும் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பது தணிக்கை நடவடிக்கைகளின்போது தெரியவந்ததாகவும், எனவே, மையப்படுத்தப்பட்ட தரவுதளத்தினை ஏற்படுத்திப் பராமரிக்குமாறு தமிழக அரசுக்கு இந்த அறிக்கையின் வழியே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பகிர

1 thought on “தமிழக அரசைச் சாடும் சீஏஜி (CAG) அறிக்கை: உள்ளடக்கம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *