திறந்தது தீர்ப்புச் சாளரம், திறக்குமா தீர்வுக் கதவு?

திறந்தது தீர்ப்புச் சாளரம், திறக்குமா தீர்வுக் கதவு?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

பார்வையற்ற மாணவர்களின் கல்விநலனைக் கருத்தில்கொண்டு, உடனடியாக சிறப்புப்பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் நடைபெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்

உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும், நியமனத்துக்கான பணிகளைத் தொடங்கிடுமாறு ஆசிரியர்த் தேர்வு வாரியத்துக்குத் தாங்கள் கடிதம் எழுதியிருப்பதாகவும், பதிலுக்கு ஆசிரியர்த் தேர்வு வாரியம் தங்களிடம் சில விளக்கங்களைக் கேட்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதிலில் குறிப்பிட்டுள்ளது.

பார்வைத்திறன் குறையுடையோரு்க்கான சிறப்புப்பள்ளிகளில் பணியாற்றிட, இடைநிலை ஆசிரியர்ப் பயிற்சி (D.T.Ed) முடித்தவர்கள் பூவிருந்தவல்லி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 2014 வரை தமிழக அரசால் நடத்தப்பட்ட பார்வையற்றோருக்குக் கற்பிப்பதில் இளநிலைப் பட்டயப் பயிற்சியும் (Junior Diploma  in Teaching the Blind JDTB), இளங்கலைக் கல்வியியல் (B.Ed) முடித்தவர்கள் இதே பிரிவில் முதுநிலைப் பட்டயப் பயிற்சியிலும் (Senior Diploma in Teaching the Blind SDTB) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

மேற்சொன்ன தகுதிகளோடு 30ற்கும் மேற்பட்டவர்கள் பல ஆண்டுகளாக அரசுப்பணிக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஆனால், ஆசிரியர்த் தகுதித்தேர்வில் () தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பதே பணிநியமனம் நடைபெறுவதிலுள்ள முக்கிய சிக்கல் என்கிறது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. இதே காரணத்தைச் சொல்லி, கடந்த 11 ஆண்டுகளாகத் துணைவிடுதிக்காப்பாளர்களாகப் பணியாற்றும் சுமார் 10 நபர்களை ஆசிரியர்கள் ஆக்காமல் அப்படியேவைத்திருக்கிறது துறை. கற்பிக்கும் பணிவாய்ப்புப் பெறலாம் என்ற கனவுகளோடு வந்தவர்கள், ஒருபுறம் அதிகப் பொறுப்புகளும் சுமைகளும் அழுத்தமும் நிறைந்த விடுதிசார்ந்த 24 மணிநேரப் பணியில் கடந்த பதினோரு ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருப்பதோடு, மறுபுறம் டெட் தேர்ச்சி பெற இயலாமல் அதீத மன அழுத்தத்துக்கும் உள்ளாகியுள்ளனர்.

இவர்களின் எண்ணிக்கை மிகமிகச் சிறியது என்பதால் தங்கள் பாடுகளை வெளியே சொல்லவும் முடியாமல், உள்ளேயே புழுங்கவும் முடியாமல் தங்கள் அன்றாடங்களைக் கடத்திக்கொண்்டிருக்கிறார்கள்.  மனநலம், உடல்நலம், குடும்பநலம் என எல்லா முனைகளில்உம் இவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் அழுத்தங்களால் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளைப் பொருத்தவரை, பள்ளிகளோடு இணைத்து இயக்கப்படும் விடுதிகள் முக்கியமானவை. எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்தே கற்றுக்கொள்ளும் ஒரு சாதாரணக் குழந்தையின் விடுதி வாழ்க்கையிலிருந்து  ஒரு பார்வையற்ற குழந்தையின் விடுதி வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது.

கல்விக்காகத் தங்கள் பெற்றோரைப் பிரிந்து வருடத்தில் 250 நாட்களுக்கு மேல் பார்வையற்ற மாணவர்கள் விடுதியில்தான் இருக்கிறார்கள். 5 வயதுமுதல் 20 வயதுவரை உள்ள மாணவர்களுக்குத் தாய்க்குத் தாயாய், தகப்பனுக்குத் தகப்பனாய் இருந்து, அவர்களுக்கு அடிப்படை அன்றாட வாழ்க்கைத்திறன்களைக் கற்பிப்பதில் பெரும்பங்காற்றுபவர்கள் விடுதிப் பணியாளர்கள்.

ஏதோ ஒரு ஒவ்வாமையால் குழந்தை எடுக்கும் வாந்தியைக் கையில் ஏந்தும் இவர்கள்தான், அந்த வாந்திக்கான காரணத்தை விளக்கிப் பக்கம் பக்கமாக நிர்வாகத்தலைமைக்கு பதிலறிக்கையும் தந்து கைகட்டி நிற்க வேண்டியிருக்கிறது.

இப்படிப் பார்வையற்ற மாணவர்களோடே தங்கி, உண்டு, உறவாடும் இந்தத் துணைவிடுதிக்காப்பாளர்களுக்குப் பார்வையற்ற குழந்தைகளை எப்படிக் கையாள வேண்டும் என்கிற அனுபவப் பயிற்சி அதிகம். தாங்கள் ஏற்கனவே பெற்றுள்ள சிறப்புப் பயிற்சிகளால் தங்கள் அனுபவங்களை முறைபடுத்திக்கொள்ளவும் அவர்களால் இயலும்.

முன்பெல்லாம் அரசு சிறப்புப்பள்ளிகளில் துணைவிடுதிக் காப்பாளர் நியமனங்கள்தான் பெரும்பாலும் நடைபெறும். அப்படி நியமிக்கப்பட்டவர்கள், ஓரிரு ஆண்டுகளில் அவர்களின் கல்வித்தகுதிக்கேற்ப ஆசிரியர்களாக பணிமாறுதல் பெறுவார்கள். இன்று அரசு சிறப்புப்பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான மூத்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் அனைவருமே முதலில் துணைவிடுதிக்காப்பாளர்களாகப் பணிநியமனம் பெற்றவர்கள்தான்.

எனவே, பார்வையற்ற மாணவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, டெட் தேர்ச்சி என்கிற முட்டுக்கட்டையை நீக்கி, இவர்களைத் துணைவிடுதிக் காப்பாளர் பணியிலிருந்து ஆசிரியர்களாக நியமிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்வது அவசியமும் அவசரமுமான ஒன்று. இந்த விவகாரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, ஒரு சிறப்பின நடவடிக்கையாக இவர்களுக்கு மட்டும் டெட் தகுதித்தேர்விலிருந்து விலக்கு வழங்கிட வேண்டும்.

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளில் பல ஆண்டுகளாக நிலவிவந்த கடுமையான

ஆசிரியர்ப் பற்றாக்குறைக்கு

நிரந்தரத் தீர்வுகாண வேண்டியது அவசியமும் அவசரமுமான ஒன்று என உயர்நீதிமன்றமே தன் தீர்ப்பில் தெளிவுபடுத்திவிட்டது. எனவே, சிறப்புப்பள்ளிகளில் டெட் தேர்வு தகுதி குறித்து அரசு உடனடியாக ஒரு முடிவுக்கு வருவதே பணிநியமன நடவடிக்கையில் நேர்மறை பலன்களை ஏற்படுத்தும். அதைவிடுத்து, உரிய பயிற்சிகளோடு டெட் தேர்ச்சி பெறுவதும் கட்டாயம் எனத் தொடர்ந்து வலியுறுத்துவது பணிநியமன நடவடிக்கைகளுக்குத்தான் முட்டுக்கட்டையாக அமையும். காரணம், டெட் தேர்ச்சி பெற்றவர்கள் சிறப்புப்பயிற்சி முடிக்கவில்லை, சிறப்புப்பயிற்சி முடித்தவர்களிடம் டெட் தேர்ச்சி இல்லை என்பதே களத்தில் நிலவும் எதார்த்தம்.

அரசின் முன்னிருக்கும் வழிகள்தான் என்ன?

*பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளில் பணியாற்றும் 10 துணைவிடுதிக்காப்பாளர்களை அவர்களின் பணியனுபவத்தைக் கருத்தில்கொண்டு, ஆசிரியர்களாக நியமிக்கலாம்.

*உரிய பயிற்சிகளோடு டெட் தேர்ச்சி பெற்றவர்கள் 2அல்லது 3 நபர்கள் இருக்கிறார்கள். அவர்களை விரைந்து பணிநியமனம் செய்யலாம்.

*டெட் தேர்ச்சி பெறாமல், உரிய பயிற்சிகளோடு அரசுப்பணிக்காகக் காத்திருப்பவர்களுக்கு டெட் தேர்ச்சி பெறுவதில் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை நிபந்தனையாக்கி அவர்களைப் பணிநியமனம் செய்யலாம்.

*சிறப்புக் குழந்தைகளுக்கான  கற்பித்தல் உத்திகள், அவர்களின் சிறப்புத் தேவைகள், அவைகளைக் கையாளும் வழிமுறைகள் குறித்தான பொருண்மையில் வினாக்களைத் தொகுத்து, சிறப்புப்பயிற்சி பெற்றஇவர்களுக்குமட்டும்சிறப்பு டெட்தகுதித்தேர்வை நடத்தலாம்.

*எல்லாவற்றிற்கும் மேலாக, அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் சிறப்புப்பள்ளிகளில் பணியாற்றும் டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் (SCERT) வழங்கப்படும் பணியிடைப் பயிற்சிகளை இவர்களுக்கும் வழங்கி, இவர்களை ஆசிரியர்ப் பணியில் நிரந்தரம் செய்யலாம்.

தீர்ப்பு என்கிற சாளரத்தின் வழியே நம்பிக்கைக் காற்றை அனுப்பியிருக்கிறது நீதிமன்றம். தீர்வு என்கிற கதவைத் திறந்து, நற்பயன்களின் நுழைவை அனுமதிக்கட்டும் அரசு.

பகிர

1 thought on “திறந்தது தீர்ப்புச் சாளரம், திறக்குமா தீர்வுக் கதவு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *