விளையாட்டு: பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட்

விளையாட்டு: பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட்

ஆக்கம் சிதம்பரம் இரவிச்சந்திரன் வெளியிடப்பட்டது
கிரிக்கெட் விளையாடும் பார்வையற்றவர்கள்

இன்று உலகம் முழுவதும் கிரிக்கெட் பெரும்பாலான நாடுகளில் புகழ்பெற்று விளங்குகிறது. பார்வையற்றவர்களும் தங்கள் திறமைகளைக் காட்டி ஆடக்கூடிய ஒரு விளையாட்டாக இது மாறியுள்ளது. பார்வையற்றவர்கள் பல துறைகளில் அரும்பெரும் சாதனை செய்யும் நிலையில் இந்த விளையாட்டில் அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். பல சர்வதேச போட்டிகளில் இந்திய அணி பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.

1990களில் இந்தியாவில் விழித்திறன் அற்றவர்களுக்கான கிரிக்கெட் பிரபலமாகத் தொடங்கியது.  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் மாநில அளவில் கிரிக்கெட் அணிகள் உருவாக்கப்பட்டு இது பிரபலமடையச் செய்யப்படுகிறது. 

முதல் ஆசியக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இது ஜனவரி 17,2016ல் தொடங்கி ஜனவரி 24 வரை கேரளாவில் கொச்சியில் கலூர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றது. இப்போது பல மாநிலங்களில் மாநில அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பார்வையற்றவர்களுக்கான வெள்ளைநிற கிரிக்கெட் பந்து

பார்வையற்றவர்களாக இருப்பவர்கள் எவ்வாறு கிரிக்கெட் விளையாடமுடியும்?. சாதாரணமாக விளையாடப்படும் கிரிக்கெட்டில் இருந்து இந்த வகை கிரிக்கெட் அதில் விளையாடப்படும் பந்தில் வேறுபடுகிறது. பயன்படுத்தப்படும் பந்து சலங்கைப் பரல்கள் போல சத்தம் எழுப்பும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு பந்தாகும்.  இது கடினமான ப்லாஸ்டிக்  கலவையால் (hard core plastic mixture) உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இது ஓசையெழுப்பும். இது உருளும்போது சத்தம் எழும்பும்.  இந்தச் சத்தத்தைக் கேட்டு முழுவதுமாகப் பார்வைத்திறன் இல்லாத வீரர்கள் விளையாடுகின்றனர்.

முழுப் பார்வையற்றவர்கள் 4 பேர். இவர்கள் பி1 (b1) என்று அழைக்கப்படுவர். இதேபோல பி2 (b2)மற்றும் பி3 (b3)என்ற குழுக்கள் பார்வைத்திறன் குறைபாடுள்ளவர்கள். இதற்காக 2/16, 6/16 என்ற அளவுகள் உள்ளன.  இத்தகைய குழுக்களில் இருப்பவர்கள் பார்த்தும், கேட்டும் கிரிக்கெட்டை விளையாடுபவர்கள். இங்கு எல்லைக்கோட்டுப்பகுதி (boundary) எனப்படும் பகுதி 45 முதல் 55 அடி இருக்கும். 22 அடி உள்ள விக்கெட் இதில் உள்ளது. இதில் ஒரு மையக்கோடு (central line) இருக்கும். இக்கோட்டுக்கு முன்பு பந்தை பிட்ச் செய்து பந்து வீசுபவர் எறியவேண்டும்.  பந்தை விளையாடுபவருக்கு இந்தப் பந்து உருண்டுகொண்டுதான் போகவேண்டும் என்பது விதி. இதனால் பந்தை கையின் கீழ்ப்புறமாகவே (under arm action) வீசவேன்டும். இவை முக்கிய வேறுபாடுகள்.

பார்வையற்றவர்களுக்கான வெள்ளைநிற கிரிக்கெட் ஸ்டெம்ப்

இதில் உலோக ஸ்டம்ப்புகள் (stumps) பயன்படுத்தப்படுகின்றன. பந்து வீசுபவருக்கும், விளையாடுபவருக்கும் எப்போதும் ஸ்டம்பை பிடித்துப் பார்க்கவேண்டும் என்ற அவசியம் உள்ளது. இவை தரையுடன் பொருத்தப்பட்டிருக்கும்.  கூடுதலான நோ பால்கள் (no balls) என்று சொல்லப்படுபவையும் இதில் உண்டு. பந்தை அடித்து விளையாடுபவருடன் பந்தை வீசுபவர் விளையாடுவதற்குத் தயாரா என்று கேட்கவேண்டும். பந்தை வீசும்போதே பந்து வீச்சாளர்  ‘play’  என்று சொல்லியபடியே பந்தை வீசுவார்.  பந்து வருகிறது என்பதை விளையாடுபவர் கூடுதலான கவனத்துடன் கேட்டு விளையாடுவார். விளையாடும்போது ஏதாவது தவறுகள் நேர்ந்தால் அவ்வாறு வீசப்படும் பந்துகள் நோ பால்கள் என்று அறிவிக்கப்படுகின்றன. மையக்கோட்டைத் தாண்டி பந்து விழுந்தாலும் அதுவும் நோ பாலாகவே கருதப்படுகிறது. இவை தவிர சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Counsil- ICC) வரையறுத்துள்ள மற்ற எல்லா விதிமுறைகளையும், பார்வையற்றவர்களுக்கான சில தனிப்பட்ட விதிமுறைகளையும் இணைத்துதான் இந்த விளையாட்டுக்கான சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

விளையாட்டை ஊக்குவிப்பதற்கான முக்கிய குறிக்கோள் விழித்திறன் குறைபாடுடையவர்கள் இந்த விளையாட்டின் மூலம் ஒரு புதிய வெளிச்சத்தை, ஒரு புதிய காட்சியைப் (cricket through vision)  பெறவேண்டும் என்பதே. பார்வையற்றவர்களுக்கென்று மிகக் குறைவான விளையாட்டுகளே உள்ளன. விளையாட்டு உணர்வை’ (sportsmanship) பார்வையற்றவர்கள் பெறவேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.  இதன் மூலம் விழித்திறன் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையைப் பெற்று மற்ற விஷயங்களிலும் தளர்வடையாமல் முன்னேற வாய்ப்பு ஏற்படுகிறது. விழித்திறன் இல்லையென்றாலும் உலகத்தின் முன்பு தங்களின் திறமைகளை எடுத்துக்காட்ட இது ஒரு அரிய வாய்ப்பு.

பார்வையற்றவர்கள் கிரிக்கெட்

உடற்குறைபாடு இல்லாதவர்கள் ஆடும் கிரிக்கெட்டிற்கு அளிக்கப்படும் ஆதரவு இதற்கும் அளிக்கப்படவேண்டும். விளம்பரதாரர்கள் போட்டிகளுக்கு உரிய ஆதரவைத் தரவேண்டும். இந்த நோக்கத்திற்காக நிகழ்த்தப்பட்டதே முதல் ஆசியக் கோப்பை. பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் ஆசியாவைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் பங்கேற்று சிறப்பித்தன.  இந்த விளையாட்டுப்போட்டிகளுக்கான நல்லெண்ண தூதராக இருந்தவர் பிரபல திரைப்பட நடிகர் மம்முட்டி.

பார்வையற்றவர்கள் என்றால் அவர்கள் மீது வெறும் பரிதாபம் காட்டினால் போதும் என்று மக்களிடம் ஒரு பொதுவான கருத்து இருந்துவருகிறது. எந்த ஒரு விழித்திறன் மாற்றுத்திறனாளியும் மற்றவர்களுடைய பரிதாபத்தையோ, கருணையையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது இல்லை.  மாறாக அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் அவர்களிடம் இருக்கும் திறமைகளை அங்கீகரிக்கவேண்டும் என்பதே. அவர்களை ஒதுக்கிவைக்காமல், மற்றவர்களோடு  திறமையின் அடிப்படையில் சரிசமமாக நடத்தப்படவேண்டும் என்பதே. ஒரு நிமிடம் இரண்டு கண்களையும் இறுக்கமாக மூடிக்கொண்டு தெருவில் நடக்கச் சொன்னால் எப்படியிருக்கும் என்று ஒரு கணம் மற்றவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். வாழ்க்கை முழுவதையும் பார்வை என்ற மாபெரும் இயற்கையின் அருள் இல்லாமலேயே வாழ்ந்தாலும் நம்பிக்கையைத் தளரவிடாமல் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் நடைபோடும் நம் சகோதர சகோதரி விழித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகம் அங்கீகாரத்தை அளிக்கவேண்டும்.

ஆதரவுடன் அனுசரனையுடன் அவர்களை சாலையைக் கடக்க மட்டும் கைப் பிடித்து உதவிக்கரம் கொடுக்காமல் அவர்களின் வாழ்வு சிறக்கவும் சமூகம் நல்லாதரவு தரவேண்டும். அதன் மூலம் மனிதராகப் பிறந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கமுடியும்.

***தொடர்புக்கு: nrvikram19@gmail.com

முக்கிய இணைப்புகள்:

உலகக் கோப்பை 2018: மீண்டும் வென்றது இந்தியா! – பாலகிருஷ்ணன் மருதமுத்து

***Blind cricket

***CRICKET ASSOCIATION FOR THE BLIND IN INDIA

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *