சுமார் 400 கோடி செலவில், 88 ஏக்கரில் வண்டலூருக்கு அருகே தென் தமிழகப் பேருந்துகள் வந்து செல்ல வசதியாகப் புதிய பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாகப் பேருந்து நிலையம் அமைப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது இறுதிக் கட்டப்பணிகள் நடந்துவரும் சூழலில், புதிய பேருந்து முனையமானது, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட வேண்டும் என முதல்வருக்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் நலன் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் (டாராடாக்) கடிதம் எழுதியுள்ளது.
டாராடாக் கடிதத்தில், “சென்னை வண்டலூர் அருகே விரைவில் புதிய பேருந்து நிலையம் திறக்க உள்ளது மகிழ்ச்சி.
இப்புதிய பேருந்து நிலையம் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்க அரசு முயற்சிகள் எடுத்துள்ளதை அறிகிறோம். எனினும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் முழுமையாக பயன்படுத்த ஏற்றதாக உருவாக்கப்படவில்லை என தகவல்கள் எமது சங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளோம்.
குறிப்பாக, பார்வை மாற்றுத்திறனாளிகள் தொட்டுணர்ந்து செல்லும் தரை (tactile floor) அனைத்து இடங்களுக்கும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்றும், செவி மற்றும் பேசும் திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகள் அறியும் வகையில் காட்சி அறிவிப்பு (digital display) எல்லா இடங்களிலும் முழுமையாக அமைக்க ஏற்பாடு இல்லை என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கடுமையாக பாதித்த மாற்றுத்திறனாளிகள் இயன்ற அளவில் பேருந்துகளின் அருகாமையில் சென்று வாகனங்களை நிறுத்த தனி வசதி, இளைப்பாறும் அறைகள் இல்லை என தெரிகிறது.
உரிய ஆய்வு
எனவே, மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்க பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும உயர் அதிகாரிகளை கொண்டு விரைவில் முழுமையான ஆய்வு செய்திடவும், சட்ட விதிகளின்படி உரிய வசதிகளை இப்புதிய பேருந்து நிலையத்தில் ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிடக் கோருகிறோம்.
மனித வழிகாட்டி
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் நாட்டிலேயே முன்னுதாரணமாக இப்பேருந்து நிலையத்தில் மனித வழிகாட்டிகள் நியமித்திடவும் கோருகிறோம்.
கடைகளில் 5%
இப்புதிய பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு குத்தகைவிட உள்ளன. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி 5% கடைகளை ஒதுக்கீடு செய்ய உத்தரவிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தமிழக முதலமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கோருகிறது.” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Be the first to leave a comment