மீள்: பேட்டி: இசைக் கலைவாணி

மீள்: பேட்டி: இசைக் கலைவாணி பகுதி (3)

ஆக்கம் X செலின்மேரி வெளியிடப்பட்டது

ரகு: மேடம் நீங்கள் கவிதை எழுதுவதாகவும், கண்ணதாசனுக்கு உங்கள் கவிதைகள் பிடிக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

வாணி: சமீபத்தில் மலேஷியாவில் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்தார்கள். அங்கு சென்றிருந்தபோது, என்னுடைய கவிதையைத் தொகுத்து வெளியிட்டார்கள். என்னுடைய கவிதைத் தொகுப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

ரகு: எங்களுக்கு ஒரு கவிதையைச் சொல்லுங்கள் மேடம்.

வாணி: வாழ வரம் வேண்டி வந்ததிங்கு சில நாள்,

பாதியது ஏக்கத்தில், மீதியோ தூக்கத்தில்.

தூக்கத்திலும் உன் நினைப்புத்தான் வேண்டுமென துணிந்து கேட்டுவிடு;

கனிந்து உனக்கருள்வான் இன்று.

ஏனென்றால், தூக்கத்தில் கனவு வருவது எல்லோருக்கும் இயற்கை. தூக்கத்தில்கூட தீய எண்ணங்கள் சிந்தனைகள் வரக்கூடாது என்பது பொருள். ‘ஒரு குயிலின் குரல் கவிதை வடிவில்’ என்று தலைப்பிட்டு வெளியிட்டிருந்தார்கள். அதில் தூக்கத்தைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். அதை நான் உங்கள் எல்லோருக்கும் படித்துக் காண்பிக்கிறேன். திரு. பாண்டித்துரை என்பவர் முழு முயற்சி எடுத்து அதைத் தொகுத்து வெளியிட்டார். அந்தக் கவிதைத் தொகுப்பிலிருந்து உங்களுக்காக ஒரு கவிதையைப் படிக்கிறேன்.

தூக்கம் ஒன்றே

அன்றாட அலுவலில் கால்கள் இரண்டும் மன்றாடிக் களைத்துப் போய்,

இரவு எப்பொழுது வரும், இமைகள் எப்பொழுது மூடும் என,

இன்பமான தூக்கத்தை எதிர்நோக்குவது

இந்தத் தரணியில் உள்ளோர் அனைவரும் செய்வது.

நோக்கத்தில் வேண்டுமானால் வேறுபாடுண்டு.

தூக்கத்தில் ஏது இங்கு வேறுபாடு?

பரந்த வானத்தைக் கூரையாக்கி,

 பட்டுப்பூச்சி என மின்னும் தாரகைகளை எண்ணி,

கட்டுப்பாடு ஏதுமின்றி,

 கட்டில்கூட இல்லாமல்,

இச்சைபோல் தூங்கும் பிச்சைக்காரனின் தூக்கமும் ஒன்றே!

பட்டுமெத்தை விரித்து,

பால் பழம் அருந்தி,

தான் போட்ட வட்டத்தின் விதிகளை மதித்து,

கட்டுக்கோப்பான வாழ்க்கை நடத்தும்

பட்டத்து அரசரின் தூக்கமும் ஒன்றே.

ஆண்டியின் தூக்கமும் ஒன்றே; அரசரின் தூக்கமும் ஒன்றே.

இமைகள் மூடிய பிம்ப உலகில் சஞ்சரிக்கும்போது,

இம்மையில் வறுமையைக் காண்பவன் அரசனாகிறான்;

கனவுலக வாழ்க்கையிலிருந்து மீண்டு வந்து,

நினைவுகளின்ஊடே நிஜத்தைச் சந்தித்தால்,

அடடா! நான் வேறு அவன் வேறு என

மீண்டும்  உண்மை நிலைக்கு வரும் பரிதாபம்

மீளாத் துயிலுக்குப் பிறகே முடியும்.

ரகு: உங்கள் கவிதையில் ஆழ்ந்த சிந்தனை இருக்கிறது. சமநிலை எவ்வாறு தடுமாறுகிறது என்பதை அழகாக விளக்கியிருக்கிறீர்கள். நீங்கள் கவிதையைப் படித்துக் காட்டியவிதமும் சிறப்பு மேடம். இதுபோல அந்தக் கவிதைத் தொகுப்பில் எத்தனை கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன?

வாணி:  18 கவிதைகள் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.

‘மனிதரில் இத்தனை நிறங்களா’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினேன். யாரையும் மனம் நோகும்படி பேசுவது எனக்குப் பிடிக்காது. யாரையும் வருத்தப்பட வைக்கக்கூடாது. ஔவையாரின் “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்பதுபோல, இந்த மானிடப் பிறவியைப் பெற்றதற்காகவே மனிதன் சந்தோஷப்பட வேண்டும். நமக்கு ஆறறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் நல்ல குணநலன்கள் இருக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

இதோ, அந்தக் கவிதையிலிருந்து சில வரிகள்:

வாழ்க்கை என்பதே ஒரு சக்கரம்தானே?

அது வானத்தை நோக்கி சுழல்வதுதானே?

பூமிக்குத் திரும்பி வருவது இயற்கை; இதில் வழக்காடி ஏன் வாழ்வை வீணாக்குகிறாய்?

வார்த்தைகள் கொட்டினால் வரும் வம்பு;

நம் வாழ்வின் ரகசியம் இதுதான்  நம்பு.

மலரில்தான் பலப்பல நிறம்.

இந்த மனிதரில்கூட இத்தனை நிறங்களா?

ஓ மானுடா!

என்றும் நீ அடுத்தவன் பணத்தைப் பார்க்காதே குணத்தைப் பார்

இனத்தைப் பார்க்காதே அவன் மனத்தைப் பார்.

நிறத்தைப் பார்க்காதே நிஜத்தைப் பார்.

கறுப்பைப் பார்க்காதே அவன் கருத்தைப் பார்.

நுணலும் தன் வாயால் கெடும். இதை நுன்னறிவு படைத்த நீ அறியவில்லையே.

ஓம் பிரம்மனே!

மனிதனின் இத்தனை நிறங்களை நீதான் காட்டியது ஏனோ?

அவர்தம் உள்ளங்கள் அத்தனையையும் வெள்ளையாகப் படைத்திட ஏன் மறந்தாய் சொல்?

ரகு:   சிறப்பு மேடம். எங்களுடைய தவறுகளைச் சிந்திக்கத் தூண்டுகிறது. சினிமாவில் ஏதாவது திரைப்படப்பாடல் எழுதியிருக்கிறீர்களா?

வாணி:  இல்லை. நான் திரைப்படப் பாடல் எழுதப்போகவில்லை. சில இயக்குநர்கள் இசையமைக்கச் சொல்லி என்னிடம் கேட்டார்கள். நான் ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு பாடகியாகப் பாடலை ஒழுங்காகப் பாடினாலே போதும். இசையமைப்பது இசையமைப்பாளர்களது வேலை. ஆனால்,  நானே முருகன் பாடல்களை எழுதி ஒரு  கேசட் ஒலிப்பதிவு செய்திருக்கிறேன். திருமதி. உஷா ராஜகோபாலன் அவர்கள் வயலின் வாசித்தார்கள். குருவாயூர் திரு. துறை அவர்கள்  மிருதங்கமும், திரு. விநாயகம் அவர்கள் கடமும் வாசித்தார்கள். அத்தனையும் அபூர்வமான ராகத்தில் அமைந்த பாடல்கள். எனக்குப் பாடல்கள் எல்லாமே இசையோடு மனதில் வந்துவிடும். நிறைய பாடல்களை எழுதினாலும் 8 பாடல்களை மட்டுமே ஒரு கேசட்டாக ஒலிப்பதிவு  செய்து வெளியிட்டேன். அதில்தான் நான்  மேலே குறிப்பிட்ட ‘வாழ வரம் வேண்டி’ என்ற வரிகள் இடம்பெற்றது. இன்னும் நிறைய பாடல்களை எழுதியிருக்கிறேன்.

ரகு: நீங்கள் சினிமாவில் பாடுவதற்கான வரிகள் உங்களுக்குக் கொடுக்கப்படும்போது ஒரு எழுத்தாளர் என்ற வகையில் அந்த வரிகளில் ஏதாவது மாற்றம் செய்யும் விருப்பமோ வாய்ப்போ கிடைத்திருக்கிறதா? உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள் மேடம்.

வாணி: பாடல் பாடும் பாடகர் பாடகிய அதிகம் பேச மாட்டோம். சொல்லிக்கொடுக்கும் பாடலைச் சரியாகப் பாடிவிட்டு வரவேண்டும். ஆனால், சில சமயங்கள் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு டப் செய்வோம். தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப் செய்வோம்; கன்னடத்திலிருந்து தமிழுக்கு டப் செய்வோம். அப்போது ஒரிஜினல் பாடல்களில் இருக்கக்கூடிய உதட்டசைவுகளை (Lip movement) பார்த்து வரிகளை எழுதிக் கொடுத்திருப்பார்கள். மிகச் சிறந்த பாடலாசிரியர்களுடன் வேலை பார்த்திருக்கிறேன். மூத்த பாடலாசிரியர்களிடம்கூட படத்தைப் பார்த்துவிட்டு இந்த இடத்தில் இந்த வரி சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதுபோல் நிறைய இடங்களில் நிறைய வரிகளை நான் மாற்றிப் பாடியிருக்கிறேன். என்னுடைய வரிகளை அவர்கள் தான் என்ற எண்ணம் இல்லாமல், பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்வார்கள்.

ரகு: குறிப்பிட்ட வரிகள் ஏதாவது நினைவிருக்கிறதா மேடம்?

வாணி:  இல்லை இதைச் செய்யும்போது நிறைய  வரிகளை மாற்றிப் பாடியிருக்கிறேன்

ரகு:  நீங்கள் தமிழ் திரைக்கு வரும்போது சுசீலா அம்மா தான் அதிகம் பாடிக்கொண்டிருந்தார்கள்.

வாணி:  சுசீலா அம்மா, ஜானகி அம்மா இருவரும் பிஸியாகப் பாடிக்கொண்டிருந்தார்கள்

ரகு:  அப்பொழுது அவர்களோடு பாடுவது உங்களுக்குச் சவாலாக இல்லையா மேடம்?

வாணி: அப்படியெல்லாம் இல்லை இசையமைப்பாளர்கள் என்னை அழைத்து நிறைய பாடல்கள் கொடுத்தார்கள். அவர்கள் இருவரும் நான் மதித்துப் பழகும் மூத்த சகோதரிகள்  போன்றவர்கள். இன்றுவரை அவர்களுடன் நல்ல சினேகிதம் இருக்கிறது இருவரும் அருமையான கலைஞர்கள் அருமையான பாடகிகள். அப்படி எனக்கு எந்த பிரச்சனையும் இதுவரை இருந்ததில்லை

https://drive.google.com/file/d/1UnTPUXXzcMxQH_jMmzA56Mzs5QWVOLaJ/view?usp=sharingபேட்டியின் இப்பகுதியைக் கேட்க

ரகு:  ‘நினைவாலே சிலை செய்து பாடல் போல நீங்கள் பாடிய பாடல்களை கேட்டு உங்கள் ரசிகர்கள் உங்களை பாராட்டியது போல ஏதாவது சம்பவங்கள் நினைவில்  இருக்கிறதா மேடம்?

வாணி: எனக்கு நிறைய அருமையான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒருமுறை சென்னை மியூசிக் அகாடமியில் பக்திப்பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியைக் கேட்ட ஒரு ரசிகர், நீண்ட நாட்களாக வயிற்று வலியில் அவதிப்பட்டதாகவும், இந்த நிகழ்ச்சியில் வந்து என்னுடைய பாடல்களை கேட்ட பிறகு அடியோடு நின்றுவிட்டதாகவும் எழுதியிருந்தார். இசைக்கு அப்படி ஒரு effect  இருக்கிறது. அதனால் தான் வாழும் வாழ்க்கையை  இசைபட வாழ்தல் என்று சொல்கிறார்கள். அப்படி வாழும்போதுதான் வாழ்வில் ருசி இருக்கும்.  எல்லோர் வாழ்விலும் இசை ஒரு இன்றியமையாத விஷயம் ஆகி இருக்கிறது அல்லவா?

***வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள்?

இசைக்குழு நடத்தும் பார்வையற்றோரோடான தொடர்புகள்?

இன்னும் சில கேள்விகள் இறுதிப் பகுதியில்!

காத்திருங்கள்.

*** தொகுப்பு: திரு. ரகுராமன்.

எழுத்தாக்கம்: X. செலின்மேரி.

மீள்: பேட்டி: இசைக் கலைவாணி

மீள்: பேட்டி: இசைக் கலைவாணி பகுதி (2)

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *