அலசல்: வலசைப்பாதையின் வரலாறு

அலசல்: வலசைப்பாதையின் வரலாறு

ஆக்கம் M முத்துக்குமார் வெளியிடப்பட்டது

நீங்கள் எங்காவது கண்டிருக்கக்கூடும். சாலையோரத்தில், கடற்கரையில், பேருந்து நிலையத்தில், மார்கெட் பகுதியில் இப்படி மக்கள் அதிகம் கூடும் ஏதாவது ஒரு இடத்தில் டாடாயேசி போன்ற வாகனத்திலோ அல்லது தரையிலோ அமர்ந்து விழிச்சவால் உடையவர்கள் பாட்டுக்கச்சேரி செய்துகொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?

அப்படியென்றால் அவர்களின் பாடலைக் கேட்டுப் பாராட்டியிருப்பீர்கள். அல்லது அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டிருப்பீர்கள் .

பார்வையற்ற இசைக்கலைஞர்கள் சித்தரிப்புப்படம்

“ஆகா! டி. எம். சௌந்தரராஜன் குரல் மாதிரியே  இருக்குயா இவன் குரல். சுசிலா மாரி இந்த பொண்ணு என்னமா‌ பாடுது பாருயா” என்று பக்கத்தில் நிற்பவரிடம் சொல்லி உச்சுக்கொட்டி ரசித்திருப்பீர்கள்.

அனுதாபத்தில் பலர் சில்லறைகளைச் சிதறவிட்டிருக்கலாம், போதையில் சிலர் நோட்டுக்களையும் தள்ளியிருக்கலாம்.

உறங்கிக் கிடந்த சிலரது சிபிசிஐடி மூளை திடீரென்று எழுந்து, “உண்மையாகவே இவன்தான் பாடுறானா, அல்லது பாட்டை ஓடவிட்டு வாயை மட்டும் அசைக்கிறானா” என்ற ஆராய்ச்சியிலும் இறங்கியிருக்கலாம்.

அப்படி உங்களைச் சிந்திக்கவைத்த, பரிதாபப்படவைத்த, மகிழ்வித்த, ரசிக்கவைத்த அந்தப் பாடும் பறவைகளிடம் நிகழ்த்திய உரையாடலே இந்த கட்டுரை.

இவர்கள் அனைவரும் இப்படித்தான் கூறுகிறார்கள்.

“கையில் மூன்று நான்கு டிகிரி இருக்கு. ஆனால் வேலையில்ல” என்று பலர். “நெட்டு டெட்டு எல்லா எலவையும் கிளியர் பண்ணியாச்சு‌ சார். இன்னும் வேலைதான் கிடச்ச பாடில்லை.” என்று சிலர்.  “அந்தக் காலத்தில இப்படியெல்லாம் வசதி கிடையாது தம்பி‌ படிக்க.” என்று‌ சிலர். “எங்களுக்கு வழிகாட்ட ஆள் இல்லப்பா. கண்ணு தெரியாதவங்களுக்கு பள்ளிக்கூடம் இருக்குன்னே எங்களுக்குத் தெரியாது.” என்று சிலர்.

இளமையில் பார்வையை இழந்தவர்கள், குடும்ப சூழ்நிலையால் இதற்குள் வந்தவர்கள், விரும்பி இருப்பவர்கள், வேறு வழியில்லை என்பவர்கள் என்று, இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். இவர்களின் வாழ்க்கை மட்டும் ஒரே விதம்.  இவர்களுக்கும் வேண்டுமல்லவா ஆகாரம்? நடமாடும் இசைக்குழுதான் (Mobile orchestra) இவர்களின் வாழ்வாதாரம்.

எப்படி இயங்குகிறது இந்த நகரும் இசைக்குழு? என்ற கேள்வியுடன் களமிறங்கினோம். அப்படி அலசி ஆராய்ந்த தகவல்களில், ஆச்சரியம், அதிர்ச்சி, மகிழ்ச்சி, துக்கம், காதல், மோதல், துரோகம் என்று பல உணர்வுகளின்‌ சுவைகளை உணர முடிந்தது.

சிலர் பேசும்போது தயங்கினார்கள். சிலர் பேசுவதற்கே தயங்கினார்கள் என்பதுதான் நமக்குச் சவாலாக இருந்தது.

மொபைல் ஆர்கஸ்ற்றா பற்றி எழுதுவதற்கெல்லாம் எதுவும் இல்லை என்று, சிலர் கேட்டை அடைத்துவிட்டார்கள். “தம்பி மொபைல் ஆர்கஸ்ற்றா பத்தி நான்  சொல்றேன், ஆனா என்னோட பர்சனல் லைஃப் பத்தி எதுவும் கேட்கக் கூடாது.” “இதை நம்பி பல குடும்பங்கள் இருக்கு சார். அதனால நீங்க கேள்விப்பட்டதை மட்டும் வச்சு எதாவது எழுதிறாதிங்க‌. பேரு ஃபோட்டொல்லாம் போடவேண்டாம் சார்.” இப்படி பல நிபந்தனைகளுடன் சிலர் நம்மிடம் பேச சம்மதித்தார்கள்.

இதற்கு என்ன முக்கியக் காரணம் என்றால், இந்த வேலையில் இருக்கும் சிலர், தாங்கள் இந்த வேலைசெய்வது தங்களின் குடும்பத்திற்கும், தங்களைச் சார்ந்தவர்களுக்கும் தெரிந்துவிடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் இருப்பதுதான்.

அவர்களிடம் மேடைக் கச்சேரியிலோ, அல்லது வேறு எங்காவது வேலை செய்வதாகவோ சொல்லியிருப்பார்கள்.

இவர்கள் எக்காரணத்தைக்கொண்டும் தங்களின் சொந்த ஏரியாவிற்கு மட்டும் வேலைக்குப் போகவே மாட்டார்கள். அப்படியும் எங்காவது வைத்துத் தன்னைச் சார்ந்தவர்கள் பார்த்துவிட்டால், அவர்களிடம் ஏதாவது ஒரு காரணத்தைக் கூரி சமாளிக்க வேண்டியிருக்கும்.

செய்யும் தொழிலே தெய்வம் தான். ஆனால் பொது புத்தியில் தொழிலைப் பொருத்து உயர்வு, தாழ்வு என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது அல்லவா? இதனால்தான் பலர் நான் துபாயில் பில்டிங் கான்றாக்டர் என்று பில்டப் செய்ய வேண்டியுள்ளது.

எப்படித் தோன்றியது இந்த நகரும் இசைக்குழு கலாச்சாரம்? இதனை யார் தொடங்கியிருப்பார்கள்? என்ற கேள்வியோடு இதனுடைய பிள்ளையார் சுழியைத் தேடி மொபைலில் அழைப்புகளைப் பறக்கவிட்டோம்.

இதனைப் பற்றி‌த் தெரிந்தவர்கள் கூறிய தகவல்களில் இருந்து, ராமமூர்த்தி மற்றும் சாமிநாதன், இவர்கள் இருவரும் இணைந்துதான் விழிச்சவால் உடையவர்களுக்காக நகரும் இசைக்குழுவைத் தொடங்கினார்கள் என்பதை அறிந்தோம். ஆனால் இதன் தொடக்கப்புள்ளியைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? அதைப்பற்றிக் கூறுகிறார், திருச்சியைச் சேர்ந்த தபேலா இசைக்கலைஞர், சாமுவேல் என்பவர்.

“வணக்கம்! என் பெயர் சாமுவேல். என்னுடைய சொந்த ஊர் திருச்சி.

நான் எட்டாவது வரைதான் படிச்சிருக்கேன். எனக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் பார்வை தெரியும். அதனால பார்வை உள்ளவர்களோடுதான் இணைந்து படித்தேன்.

சாமுவேல்

நான் பதினைஞ்சு வயசுல இருந்து கச்சேரிகளில் தபேலா வாசிக்கிறேன். 1979-80 களிலிருந்து நாப்பது வருஷமா எனக்கு இதுதான் தொழில்.

இந்த‌ நாப்பது வருஷத்தில் நான், பல கச்சேரிகளில் வாசித்திருக்கிறேன். அதில் பார்வை உள்ளவர்கள் நடத்தும் கச்சேரிகளும் அடக்கம். தமிழ்நாட்டைத் தாண்டியும் பல இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். அதில், டெல்லி தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச்சங்கம் போன்றவை முக்கியமானவை. பொதிகை டீவியிலும், ஜெயா டீவியிலும் நான் தபேலா வாசித்திருக்கிறேன்.

1980ல், NAB (National association for the blind) இதனுடைய திருச்சி கிளையிலிருந்து, விழிச்சவால் உடையவர்களை மட்டும் உள்ளடக்கிய ஒரு இசைக்குழுவை ஆரம்பித்தார்கள். ஒரு கச்சேரிக்கு  150 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.

விழிச்சவால் உடையவர்களுக்கு ஒரு தொழில் வாய்ப்பாகத்தான் இந்த இசைக்குழு தொடங்கப்பட்டது. இது பல விளிச்சவால் உடைய இசைக்கலைஞர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது. அப்போது மேடைக் கச்சேரி மட்டும்தான் செய்துகொண்டிருந்தோம். 2000க்குப் பிறகுதான், வண்டியில் வைத்து கச்சேரி நடத்தும் முறை அறிமுகமானது.

இதற்குப் பின்னால், ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இருக்கு.

அது 1999, கார்கில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். நானும், என் இசைக்குழு நண்பர்களும், அவ்வப்போது இதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருப்போம். பல இடங்களில், அதற்காக நிதி வசுல் செய்துகொண்டிருந்தார்கள். எங்களுக்கும் கொடுக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் எங்களால், இந்தக் குறைந்த வருமானத்தை வைத்துக்கொண்டு எப்படி கொடுக்க முடியும்?

தினமும் வரும் செய்திகளைக் கேட்கும்போதெல்லாம், நாட்டுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் மட்டும் எங்களுக்குள் எரிந்துகொண்டேயிருந்தது‌. அவ்வப்போது நண்பர்களுக்குள் இதைப் பற்றிப் பேசிக்கொள்வோம். அப்படிப் பேசிக்கொண்டிருந்த ஒருநாள், எங்களுக்கு அந்த எண்ணம் தோன்றியது. உடனே அதைச் செயல்படுத்திக் களத்தில் இறங்கினோம்.

4 நாட்களுக்கு  ஒரு 407 வேன், ஒரு ஜெனரேட்டர். இது இரண்டையும் வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். எங்களுக்கு இது புது அனுபவம். அதனால் மிகவும் ஆர்வமாக இருந்தது. நாங்கள் முடிவுசெய்த அந்த நாள் காலையிலேயே‌, பாடகர்கள், இசைக்கலைஞர்கள் என்று இருபது நபர்கள்வரை, கார்கில் போர் நிதி உதவிக்காக என்று அறிவிப்பு செய்தவாறு கச்சேரியைத் தொடங்கினோம்.”

கார்கில் நிதிக்காகத் தொடங்கிய முயற்சி வென்றதா? சொல்கிறார் சாமுவேல் அடுத்த இதழில்.

***விரல்மொழியர் மின்னிதழுக்காக எழுதப்பட்டு, ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறது இந்தக் கட்டுரை.

தொடுகை மின்னிதழில் வெளியிடுவதற்கு அனுமதி அளித்த விரல்மொழியர் மின்னிதழ் ஆசிரியர் குழுவிற்கும், இதை வெளியிட சம்மதித்த தொடுகை மின்னிதழ் ஆசிரியர்க் குழுவிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல. இந்தத் தலைப்பை எனக்குக் கொடுத்தது, விரல்மொழியர் மின்னிதழ் ஆசிரியர், திரு. பாலகணேசன் அவர்கள்.

இந்தக் கட்டுரைக்காகத் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி, தகவல்களைத் தந்து உதவிய ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும் சாதாரணமாக நன்றி என்று மட்டும் சொல்லிக் கடந்து செல்ல முடியாது. ஏனெனில், இவர்கள் ஒவ்வொருவரும் கூறிய தகவல்களை வைத்து ஒரு புத்தகமே எழுதலாம். அவ்வளவு சுவாரசியமான பல விடயங்கள் தோண்டத் தோண்ட வந்துகொண்டே இருக்கஇன்றன.

சில விடயங்களை நாகரிகம் கருதி எழுத முடியாது. சில விடயங்கள் இரகசியமானவை. இந்தக் கட்டுரையை நாட்கள் கடத்தாமல் சீக்கிரம் முடிக்கவேண்டும் என்ற அவசரத்தில் சில விடயங்களை எழுதமுடியவில்லை. வாய்ப்பு இருந்தால் பின்னர் இதை ஒரு புத்தகமாக வெளியிடுவதற்கு முயற்சிக்கிறேன்.

தொடர்புக்கு: gmmuthukumar06@gmail.com

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *