அனுபவம்: இசைப் பயணத்தில் என் நினைவுகள்

அனுபவம்: இசைப் பயணத்தில் என் நினைவுகள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இசையை நம் உடலின் உறுப்பு என்றே சொல்ல வேண்டும். உடலில் இருந்து உயிர் பிரிந்துவிட்டால் எப்படி இவ்வுலக வாழ்வு சாத்தியம் இல்லையோ, அதுபோல சிலரிடமிருந்து இசையைப் பிரித்துவிட்டால் அவர்களது வாழ்வு அர்த்தமற்றதாகிவிடும். அப்படி இசையோடு இரண்டறக்  கலந்தவர்கள் பட்டியலில் இடம்பெறுபவன்தான் நான். நாமெல்லாம் சில துறைகளை நேசித்திருப்போம்; அவை கை கொடுத்திருக்காமல் இருக்கலாம். சில துறைகளை இதெல்லாம் ஒரு துறையா? என்று சிந்தித்திருப்போம். ஆனால், அதுவே நமக்கு உணவளித்து, உணர்வோடு வாழ வைக்கும். அதுதான் என் வாழ்விலும் நடந்தது. அது எந்தத் துறை? எப்படி எனக்கு அறிமுகமானது? உள்ளிட்ட விளக்கங்களை எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்கிறேன்.

கார்மேகம்
கார்மேகம்

நான் 2001ஆம் ஆண்டு இசைக்கல்லூரியில் சேர்ந்தேன். எங்களுக்கு முதன்மைப் பாடம் (Major) குரலிசை அல்லது வாய்ப்பாட்டு (Vocal). துணைப்பாடமாக நான் தேர்ந்தெடுத்தது மிருதங்கம். எங்கள் வகுப்பில் எல்லோரும் இசைக் குறிப்புகளை எழுதிவைத்துப் பாடுவார்கள். நாங்கள் ஒரு நால்வர் பார்வையற்றோர். எந்தக் குறிப்பையும் எழுதிவைக்காமல் அவர்கள் பாடுவதைக் கவனித்து, எங்கள் செவிகள் சொல்வதைக் கேட்டு, முழுமையாகத் திறமையாகப் பாடி முடித்துவிடுவோம். என்னைக் குறித்து நானே பெருமைப்படும் விஷயம் என்னவென்றால், மற்றவர்கள் குறிப்புகளைப் பார்த்து விரைவாகக் கற்றுக்கொள்வார்கள். லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்த மாதிரி மெதுவாகக் கற்றுக்கொண்டாலும், தெளிவாக கற்று, ஆழ் மனதில் பதியவைத்துப் பாடிவிடுவேன்.

 அது இளங்கலை வரலாறு முடித்திருந்த சமயம். ஜூலை மாதம் அட்மிஷன் போட்டிருந்தபோதிலும், மதிப்பெண் சான்றிதழ் தொடர்பாகக் கொஞ்சம் அலைய வேண்டியிருந்ததால், ஆகஸ்டு மாதத்திலிருந்துதான் கல்லூரிக்குச் செல்ல முடிந்தது.

அதைக் கண்ட கல்லூரிப் பேராசிரியர்கள் “எதுக்குக் கல்லூரியில சேந்த?” என்று கேட்க, “தவிர்க்கமுடியாத சூழ்நிலை, விரைவில் பிக்கப் செய்துவிடுவேன்” என்று பதிலளித்தேன். சொன்ன மாதிரி இரண்டே வாரத்தில் நான் தவறவிட்ட எல்லாப் பாடங்களையும் கற்றுக்கொண்டேன்.

எல்லோருடைய குரலிசையையும் கேட்டுக் கற்று, அவர்களுக்கு இணையாகப் பாடுவதைக் கேட்டு வியந்த ஆசிரியர்கள், “பார்வையற்றோர் பலர் இசையில் சிறந்து விளங்குகிறார்கள். நீ பெரிய ஆளாக வருவாய்” என்று மனமுவந்து பாராட்டினார்கள். இது ஒரு  நினைவு.

 அடுத்து சொல்லப்போவதுதான் இங்கு முக்கியமாகப் பகிரப்பட வேண்டியது. எங்களுக்கு சரளி வரிசை, ஜெண்டை வரிசை, தேட்டு வரிசை, மேல்ஸ்தாய் வரிசை, அலங்கார வரிசை என்று ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஜதீஸ்வரம் என்ற ஒரு பிரிவிருக்கும். முழுக்க முழுக்க ஸ்வரங்கள் மட்டுமே இருக்கும். அவை கம்பீரநாட்டை ராகத்தில் அமைந்திருக்கும். ஸ்வரங்களை இறுதியில் பாடுகிறேன். இப்பொழுது நினைவுகளைப் பகிர்கிறேன்.

அப்போது அந்த ராகத்தை பாரதி மகாதேவன் மிஸ் சொல்லிக்கொடுக்க, எல்லோரும் கற்றுக்கொண்டிருந்தபோது, நான் மட்டும் கவனிப்பதுபோலப் பாசாங்கு செய்துகொண்டிருந்தேன். கம்பீரநாட்டையில் மொத்தம் ஐந்து பகுதிகள் இருக்கும். மூன்றை மட்டும் சொல்லிக்கொடுத்துவிட்டு, இரண்டு நாளை பார்க்கலாம் என்று சொன்னார்கள். நான் நான்காவது மற்றும் ஐந்தாவது பகுதிகளை எல்லோர் முன்னிலையிலும் பாடிக் காண்பித்தேன்.

பயங்கர கைதட்டல். “நான் உனக்குச் சொல்லித் தரவே இல்லையே! உனக்கு எப்படித் தெரியும்? தனியாக எங்கேயாவது இசை பயில்கிறாயா?” என்று கேள்விகளை அடுக்கினார் பாரதி மகாதேவன் மிஸ்.  நான் புனித வளனார் பார்வையற்றோர் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய அருட்சகோதரிகள் இசை வகுப்பிற்குச் செல்லச் சொல்வார்கள். நான் மறுப்புத் தெரிவித்து, சில பனிஷ்மென்ட்களை வாங்கி, பிறகு இசை பயில செல்வேன். அப்போது எங்களுடைய இசை ஆசிரியர் கமலகுமாரி டீச்சர் அவர்கள் எங்கள் வகுப்பில் என்னையும் ஆனந்த் என்ற நண்பரையும் தேர்ந்தெடுத்து, இந்த ராகத்தை எங்களுக்கு டிக்டேட் செய்து ப்ரெயில் பேப்பரில் எழுதி, மனப்பாடம் செய்வித்து, ஒரு விழாவில் பாடவைத்தார்கள். நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போது கற்றதுதான் இன்னும் நினைவிருக்கிறது என்று சொன்னேன். இன்றும் என்  பெயரை கேட்டால்,  அந்த ஆசிரியர், “கார்மேகம் நன்றாகப் பாடுவார்; சிறப்பாக வருவார்” என்று சொல்வதாகக் கேள்விப்படுகிறேன். இன்றுவரை அதை என்னால் மறக்க முடியாது.

நான் தமிழ்வழிச் சான்றிதழுக்காகச் சென்றபோதுகூட, “கார்மேகம்! நன்றாகத் தெரியும்; சொல்லித் தருவதை விரைவில் கற்றுக்கொள்வான்; சொல்லித் தராதவற்றைக்கூட எங்கிருந்தாவது கற்றுக்கொண்டு பாடுவான்” என்று பெருமிதம் பொங்க அவர் கூறியதைக் கேட்டபோதுதான், நாம் ஆசைப்பட்ட எல்லைக்கோட்டைத் தொட்டது போன்றதொரு உணர்வு ஏற்பட்டது.

இன்னொரு நினைவு.

 மேஜரில் நானும் இன்னொரு பெண்ணும்  போட்டிபோட்டு பாடுவோம். இறுதித் தேர்வில் அவர் நொட்டேஷனுடன் பாடியதால் முதல் இடத்தையும், நான் மனனம் செய்து பாடியதால் இரண்டாம் இடத்தையும் பெற்றோம். எங்களுக்கு இடையில் வெறும் மூன்று மதிப்பெண்கள்தான். எங்களுக்கு விருதும்,சிறப்பு பரிசாக ‘தென்னக இசையியல்’ என்ற புத்தகமும் வழங்கப்பட்டது. அதையும் என்னால் மறக்க முடியாது. சரி இப்போது பாடுகிறேன்.

ராகம்: கம்பீரநாட்டை,

தாளம்: ஆதி,

பண்: நட்டப்பாடை,

காண்தாரம்: பீயந்தை காந்தாரம்.

சகமபநிசா

சாநிபமகசா.

பாமபா கமபமகசகம பநிப சாநி பநிபபா மகசகமா. (3)

பாபப மமப மமப மபமமக கசமக பமநிப சாநிபம கசகம

(பாமபா)

பநிபபமா மபமமக கமகக சசா பபா சசாநிபமகசகம.

(பமபா)

நி நிசா நிநிசா நிசாநிநிபமா பநிபசாநிப மகசகமா.

(பமபா)

சா சாநி நிப பாம க கசகசா நிபமக சகமபநி சாநிப நிபாம பாமக மாகசா மகம பநிபபாமகசககமா பநிபபநிபபா மமபமமபமம ககமககமகக சநிசகமபா கமபநி பசாநிசாநிசா  நிநிசாநிப நிசசாநிப மபபாமக நிசகம (பமபா)

நான் பாடியதைக் கேட்க,

இந்த ராகத்தில் சில சினிமாப் பாடல்கள் இருக்கின்றன.

‘இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்-சிங்காரவேலன்’

‘பனிவிழும் மலர்வனம்-நினைவெல்லாம் நித்யா’

காற்றினிலே வரும் கீதம்-ரசிகன் ஒரு ரசிகை’

இசை நாளில் என்னுடைய நினைவுகளைப் பகிர வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.

இரை உண்ணலும் இனவிருத்தி செய்தலும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. மனிதனை மற்ற உயிர்களிடமிருந்து வேறுபடுத்தி, அவனைத் தனித்துவமுடையவனாகக் காட்டுவது அனுபவித்துப் புரிந்துகொள்ளக்கூடிய இசை. அந்த இசைத்துறையில் சிறந்து விளங்கும் அண்ணன் பழகுவதற்கு எளிமையானவர். நிறைய நல்ல குணங்களுக்குச் சொந்தக்காரர்.  இயற்கையில் கார்மேகங்கள்கூட மழை தர மறுக்கலாம். அண்ணனிடம் எப்பொழுது என்ன பாடல் கேட்டாலும், இசை குறித்து என்ன சந்தேகம் கேட்டாலும் உடனடியாகப் பதில்தரத் தவறுவதில்லை. அவருக்குப் பயங்கர நினைவாற்றல். பள்ளி குறித்த பெரும்பாலான சம்பவங்களைத் தேதியோடு நினைவில் வைத்திருப்பார். எம் பள்ளி பழைய மாணவர் வாட்ஸ்அப் குழுவில் அவருக்கு ‘வளனார் வளாக டைரி’ என்ற சிறப்புப் பெயரிட்டிருக்கிறோ்ம்.

தமிழ் இசையில் 72 மேளகர்த்தா ராகங்களில், சுத்த மத்திமத்தை அடிப்படையாகக்கொண்ட 36வது தாய்ராகமான ஜலநாட்டையிலிருந்து பிரிந்ததுதான் ச க ம ப நி என்ற 5 ஸ்வரங்களை மட்டுமே கொண்ட கம்பீர நாட்டை என்னும் சேய் ராகம்.

சிறுவயதில் ஹார்மோனியம் கற்கும் வாய்ப்புக் கிடைத்ததால் கம்பீரநாட்டை கொஞ்சம் பரிட்சயம். மற்றபடி அண்ணனிடம்தான் முழுமையாகக் கற்றிருக்கிறேன். எனினும் முதல் முறையாக இசைக் குறிப்புகளை எழுதுகிறேன். இசையும் எழுத்தும் சங்கமிக்கும் இந்தப் புதிய வாய்ப்பை மனதார வரவேற்கிறேன். இசையோடு பயணிப்போம்!

தொகுப்பு: X. செலின்மேரி

தொடர்புக்கு: celinmaryx@gmail.com

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *