இணையட்டும் இருவேறு குரல்கள்

இணையட்டும் இருவேறு குரல்கள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளிகளுக்கான பணிகளை அடையாளம் காணும் குழு திருத்தியமைக்கப்பட்டு, தமிழக அரசால் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை நிலை எண் 11.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நாள் 6.6.2023.

பல்வேறு அரசுத்துறை செயலர்கள், நடுவண் அரசு நிறுவனங்களான

NIEPMD

மற்றும்

NIEPVD

ஆகியவற்றின் இயக்குநர்கள் அத்தோடு மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதிகள் என 20 பேர் அடங்கிய இக்குழுவில் பார்வையற்றோரைப் பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் நமக்கு நன்கு அறிமுகமான ஓய்வுபெற்ற பேராசிரியர் திரு. சகாதேவன் மற்றும் முனைவர் திரு. சிவக்குமார் இருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளமை மகிழ்ச்சிக்குரிய செய்தி.

தெரிந்துகொள்ளப்பட்ட இருவருமே பார்வையற்றோரின் நலன் மற்றும் உரிமைகள் சார்ந்து தொடர்ந்து பங்காற்றி வருபவர்கள். முன்னவர் களம் சார் சமூகப்போராளி என்றால், பின்னவர் சட்டம் சார் உரிமைப்போராளி. பார்வையற்றோர் உரிமைசார் போராட்டங்களில் இருவருக்குமே நீண்டகால அனுபவங்கள் உண்டு. இதற்கெல்லாம் மேலாக, இருவருமே நாம் எளிதில் அணுகக்கூடிய தொலைவில் தொடர்ந்து தங்களை வைத்துக்கொள்பவர்கள்.

ஆனால், நம்மோடு அமர்ந்து பேசுவதும், குளிரூட்டப்பட்ட அறையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு கூடுகையில் பங்கேற்பதும் முற்றிலுமே வேறானது. இன்றைய நிலையில், பெரும்பாலான குழுக்கூட்டங்கள் அப்படித்தான் நடைபெறுகின்றன. பெரிதினும் பெரிது கேட்டு, நுழைக்க முடிந்தால், சிறிதினும் சிறிதான ஒரு கருத்தையோ, கோரிக்கையையோ போகிற போக்கில் சொல்கிற வாய்ப்புதான் அந்தக் கூட்டத்தில் நம் பிரதிநிதிகளுக்கு இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் என்று எல்லாமே பொதுமைப்பட்டுவிட்ட இன்றைய சூழலில், பார்வையற்றோர் சார்ந்த குரல்களெல்லாம் கடைநிலையில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன அல்லது வேண்டுமென்றே பொருட்படுத்தப்படுவதில்லை. இந்த நிலையில், உறவாடிப் பேச ஒன்றும், உரத்துப் பேச இன்னொன்றுமாய் குழுவில் இடம்பெற்றுள்ள இருவேறு குரல்கள் முதலில் தங்களுக்குள் ஒரு ஒத்திசைவை ஏற்படுத்திக்கொள்வது அவசியம்.

ஒரு முழுப் பார்வையற்றவர் ஐஏஎஸ்கூட ஆகிவிடலாம். ஆனால், தமிழக அரசுப்பணியில் தொகுதி ஒன்றில் ஒரே ஒரு பணியிடம் மட்டுமே அவருக்கு அடையாளம் காணப்பட்டிருப்பதெல்லாம் கற்கால சிந்தனைகள் அன்றி வேறென்ன? சரி அடையாளம் காணப்பட்ட பணியிடங்களிலாவது பார்வையற்றவர்கள் முழு ஒதுக்கீட்டைப் பெற்றிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.

சான்றாகப் பள்ளிக்கல்வித்துறையை எடுத்துக்கொள்ளுங்கள்.  அங்கே மொத்தம் 1500 பார்வையற்ற ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களின் ஒதுக்கீடு ஒரு விழுக்காடு என்றால், பள்ளிக்கல்வித்துறையில் மொத்தமே ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள்தான் பணியாற்றுகிறார்களா? அந்த 1500 பேருமே ஒதுக்கீடு அடிப்படையில் பணிக்குச் சேர்ந்தவர்கள்தானா? மெரிட் அடிப்படையிலோ, பிற வகுப்புவாரி ஒதுக்கீட்டிலோ அவர்கள் பணி பெறவில்லையா?

“கடந்த காலங்களில், எங்களுக்கான வாய்ப்புகளை எடுத்து எவரெவரிடமோ கொடுத்துவிட்டீர்கள். எனவே, ஒரு நிவாரண நடவடிக்கையாக, பின்னடைவுப் பணியிடங்களைக் கண்டறிந்து எங்களுக்கான வாய்ப்புகளைத் தாருங்கள்” என்று கேட்டால், ‘நடைமுறைச் சாத்தியமற்றது’ என நழுவிக்கொள்கிற நாசுக்கு அரசியலர்களிடம் உரையாட நமக்கும் ஒரு நாசுக்கு தேவைப்படுகிறது.

முன்னவரின் அனுபவமும், பின்னவரின் அறிவாழமும் அத்தகைய நாசுக்கைக் கட்டியெழுப்பும் என நம்புவோம்.

நெகிழ்வோ, ஆவேசமோ, அதீதம் என்ற நிலைக்குச் சென்றுவிடாதபடி, ஒருவருக்கொருவர் அணைபோட்டுத் தேக்கி, நல்வாழ்வு என்ற விளைச்சலைப் பார்வையற்றோர் சமூகத்தில் ஏற்படுத்திட இருவருக்கும் வாழ்த்துகள்.

***சகா,

தொடர்புக்கு: anbullasaga@gmail.com

அரசாணையைப் பதிவிறக்க:

பகிர

1 thought on “இணையட்டும் இருவேறு குரல்கள்

  1. இனியாவது இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தால் பலருடைய வாழ்வில் வெளிச்சம் கிடைக்கும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *