வேதனை: “சிகிச்சை பெற ஆட்கள் ஏராளம், சீக்கிரமே தொடங்குங்கள்!”

வேதனை: “சிகிச்சை பெற ஆட்கள் ஏராளம், சீக்கிரமே தொடங்குங்கள்!”

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது
கணினி வழியே தேர்வெழுதும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள்
புகைப்படம் காப்புரிமை: தி இந்து

அண்டை மாநிலமான ஆந்திராவில் கணினி வழியே தங்கள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள். டிஜிட்டல் வினாத்தாள்கள் வழங்கப்பட்டது என்று தி இந்துவில் எழுதப்பட்டிருப்பதைப் படித்தபோது மெய் சிலிர்த்தது.

தமிழ்நாட்டில் ஏன் இந்த மாற்றம் இன்னும் நிகழவில்லை என்ற ஏக்கம் மேலெழுகிறது. இங்கே பார்வைத்திறன் குறையுடையோருக்கான கல்வி குறித்தெல்லாம் போதிய கவனமோ அக்கறையோ எவருக்கும் இல்லை. பார்வையற்றோர் கல்வி நலனில் உண்மையான அக்கறை இருந்திருந்தால், பார்வையற்றவர்கள் அவர்கள் விரும்பினால் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் ஆங்கில மொழித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு பெறலாம் என்ற அரசாணையெல்லாம் எப்படி வெளிவரும்?

தமிழகத்தில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப்பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இல்லை. டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறுவது முக்கியம் என்கிறார்கள். சிறப்புப்பள்ளிகளில் பணியாற்ற வேண்டுமானால், டெட் தேர்வில் தேர்ச்சிபெறுவதைக் காட்டிலும், பார்வையற்ற மாணவர்களுக்குக் கற்பிப்பதில் இளநிலைப் பட்டயப் பயிற்சி (Junior Diploma in Teaching the Blind) முடித்திருக்க வேண்டும் என்பதே முதன்மைத் தகுதி.

உரிய பயிற்சியை முடித்துக் காத்திருப்பவர்களிடம் டெட் தேர்ச்சி இல்லை. டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய பயிற்சி இல்லை. இந்த நிலையை அரசிடம் விளக்கி, ஏதேனும் சிறப்பீன நடவடிக்கை மேற்கொள்ளும் புத்தாக்க சிந்தனையெல்லாம் துறையிடம் இல்லை. இதையே சொல்லிக்கொண்டு காலம் கடத்திவிட்டார்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள். இப்போது கேட்டால், தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஏன் தொகுப்பூதியம்? சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்க் காலிப்பணியிடங்கள் சிறப்புப்பள்ளிகளில் இருக்கின்றன. அவற்றுக்கான ஊதியங்கள் உரிய கணக்குத் தலைப்புகளின் கீழ் ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் அரசிடம் அப்படியே (surrender) ஒப்படைக்கப்பட்டு, மீண்டும் அடுத்த நிதி ஆண்டில் பெறப்படுகிறது. சரி, அப்படியே தொகுப்பூதியத்தில் நியமிப்பது என்றால், யாரை நியமிப்பார்கள்? டெட் இருப்பவர்களிடம் அடிப்படைப் பயிற்சி இருக்காது. அடிப்படைப் பயிற்சி பெற்றவர்களிடம் டெட் தேர்ச்சி இராது. சொன்னால் புரிந்துகொள்ளும் நிலையில் ஆணையரக அலுவலர்கள் இல்லை. அவர்களுக்கு சிறப்புப்பள்ளிகளை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்கிற தெளிவோ, புரிதலோ, போதிய அக்கறையோ இல்லை.

சரி, சிறப்புப்பள்ளிகளின் தாய்த்துறையான பள்ளிக்கல்வித்துறையிடமே ஒப்படைத்துவிடச் சொன்னால், கூடாதென்று லாபி செய்யத் தொடங்கியிருக்கிறது ஒரு கூட்டம். மாணவர்களுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காத, இப்போது போலவே எப்போதும் எந்த ஒரு கண்காணிப்புக்கும் உட்படாமல் இருந்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பல சிறப்புப்பள்ளி ஆசிரியர்களின் தந்திரோபாயமே  இந்த லாபி. அதுபற்றி வேறொரு தருணத்தில் விரிவாகப் பேசலாம்.

துறையின் அமைச்சரான முதல்வரோ, “ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மன வருத்தம் அடைந்துவிடக் கூடாது” என்று ஒவ்வொரு மேடையிலும் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால், யாரிடம்? யார் இந்த வருத்தங்களுக்கெல்லாம் ஊற்றுமுகமோ அவர்களிடம்.

இப்படியே போனால், ஒவ்வொரு பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளி வளாகத்திலும் கூடுதலாக ஒரு மனவள மையம் அமைக்க வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது.

அந்த மையத்தில், முதன்மையாக நான்கு வகையினருக்கு சிகிச்சை நிச்சயம் தேவைப்படும்.

*சிறப்புப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள்,

* அங்கே பயிலும் மாணவர்கள்,

*உரிய பயிற்சி முடித்து டெட் காரணத்தால் பணிவாய்ப்பு பெறாமல், தங்கள் வயதையும் வாழ்வையும் இழந்துகொண்டிருக்கும் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள்,

*இறுதியாக, இதையெல்லாம் எங்கே சொல்வது, எவரிடம் முறையிடுவது என்று பரிதவிக்கும் சிறப்புப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்.

***சகா,

தொடர்புக்கு: anbullasaga@gmail.com

வெளி இணைப்பு: https://www.thehindu.com/news/national/andhra-pradesh/all-six-visually-impaired-students-who-took-ssc-exam-on-laptops-score-above-60/article66820065.ece

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *