கொண்டாட்டம்: “முட்களும் சுகமே! முல்லைகளைச் சுமப்பதால்”: அன்னையர்தின சிறப்புக் கலந்துரையாடல்

கொண்டாட்டம்: “முட்களும் சுகமே! முல்லைகளைச் சுமப்பதால்”: அன்னையர்தின சிறப்புக் கலந்துரையாடல்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

“அம்மா அம்மா எங்கம்மா இருக்க?” என்று கேட்கும் தன் குழந்தைக்கு “மாடி ஸ்டெப்ஸ்க்கு வா குட்டி” என்று பதிலளிக்கிறாள் அந்த பார்வையற்ற தாய். ஒரு வழியாக அந்த தாயை அடைந்ததும்  குழந்தை ஓவென்று அழத் தொடங்கிவிடுகிறது. “என்னம்மா குட்டி” என்று அந்தத் தாய் கேட்க, “அம்மா கால்ல முள்ளு குத்திட்டும்மா.  அக்காவோட கருவக்காட்டுக்கு செருப்பு போட்டுட்டுதான் போனேன். அதையும் மீறி முள்ளு கால்ல குத்திருச்சும்மா” என்று அந்த முள் குத்திய இடத்தைத் தொட்டுக்காட்டியபடி மீண்டும் அழுகிறது  குழந்தை. “முள்ளை எடுத்தாச்சா” என்று கேட்ட தாய், அந்த இடத்தை வருடிக் கொடுத்தபடி அவளைச் சமாதானப்படுத்துகிறாள். அந்தச் சமாதானப் பேச்சுவார்த்தையில் பக்கத்து வீட்டுப் பெட்டிக் கடைக்கும் பங்கு கொடுக்கப்பட்டது.

ஆம்!  இது கலிகாலம். செருப்பை மீறி முட்கள் காலைப் பதம் பார்க்கும் ஒரு வினோதமான காலம். செருப்பு இருக்கிறது என்று சாதாரணமான பெண்களே தைரியமாக வாழ முடியாத சூழலில், சவால்களையே வாழ்க்கையாகப் பெற்ற பார்வையற்றோர் நிலை என்னவாக இருக்கும்? அதிலும் திருமணம் என்ற பெயரில் தன் விருப்பு வெறுப்புகளை எல்லாம் இன்னொரு குடும்பத்திற்காக விட்டுக்கொடுத்து, ஒரு குழந்தையைப் பெற்று, அந்தக் குழந்தையின் சுகத்தையே தன் சுகமாகக் கருதி, கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து, பாதுகாத்து வளர்க்க வேண்டியது எவ்வளவு சவாலான விஷயம்!

 இந்த மாத அன்னையர்தின சிறப்புப் பகிர்வாக நமது விழிச்சவால் அன்னையர் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு உரையாடல் நிகழ்த்தினோம். 2 நாட்கள், மாலை 6 மணி வாக்கில் தொடங்கிய உரையாடல் சுவாரசியமாக ஒரு மணி நேரம்வரை தொடர்ந்தது. உரையாடலில் சகோதரி செந்தமிழ்ச்செல்வி, சகோதரி விஜயலட்சுமி, சகோதரி ராமலட்சுமி, சகோதரி பிரியா ஷாந்தகுமார் இவர்களோடு நானும் சித்ராக்காவும் உரையாடினோம். அந்த உரையாடலின் சாராம்சத்தை இதோ இந்தப் பகிர்வின்மூலம் உங்களுக்குள்ளும் கடத்துகிறேன்.

நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தபடி தன்னுடைய முதல் கேள்வியை முன்வைத்தார் சித்ரா அக்கா.

சித்ரா: நீங்கள் கருவுற்றது முதல்,  குழந்தை  பிறந்தது வரையிலான காலத்தில் சந்தித்த சவால்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

ராமலக்‌ஷ்மி:  என்னைப் பொறுத்தவரை, இர்ரெகுலர் பீரியட்ஸ் இருந்ததால் மூன்று மாதத்திற்குப் பிறகுதான் கர்ப்பம் உறுதியானது. அப்பொழுது மனதுக்குள்  நிறைய குழப்பங்கள் மண்டிக் கிடந்தன. நாமே பார்வையற்றவராக இருக்கிறோம் நமது குழந்தையை எப்படிப் பெற்று எப்படி வளர்க்கப் போகிறோம்? அதற்கு ஒரு புதிய உலகத்தை அறிமுகம் செய்ய நம்மால் முடியுமா? என்றெல்லாம் எண்ணியிருக்கிறேன்.  ஒரு கட்டத்தில் அந்தக் கருவை அழித்துவிடலாமோ என்ற எண்ணம்கூடத் தோன்றியது. அது தவறு என்று என் கல்வி அறிவு மிகக் கடுமையாக    எச்சரிக்க, என் கணவருடைய உதவியுடன் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுத்தேன்.

 விஜயலட்சுமி: எனக்கு 2 குழந்தைகள்.  நாங்கள் இருவருமே பார்வையற்றவர்கள்,  அரசுப் பணியாளர்கள்.  முதல்முறை  கருவுற்ற காலத்தில் அருகில் யாரும் இல்லாததால், டெலிவரி ஆகும்வரை என்னுடைய வீட்டு வேலைகள் சமையல் உட்பட அனைத்தையும் நானே கவனித்துக்கொண்டேன்.

முதல் குழந்தை தடையின்றிப் பிறந்துவிட, இரண்டாவது குழந்தை பிறப்பில் எனக்கு எதிர்பாராத உடல்நலச் சிக்கல் ஏற்பட்டது. சிசேரியன் மூலம் குழந்தையை பெற்றேன். குழந்தைக்கு மூச்சுத் திணறல்  உள்ளிட்ட சில பிரச்சினைகளால் 22 நாட்கள் மருத்துவமனையிலேயே வைத்ததோடு, என்னையும் தனிமைப்படுத்திக் கவனித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.  நிறைய சவால்களுக்குப் பிறகு,இப்பொழுது நல்லபடியாக வளர்ந்திருக்கிறான். பெரிய குழந்தை இரண்டாவது குழந்தையின் வளர்ப்புக்கு உதவியாக இருந்தது.

செந்தமிழ்ச்செல்வி: திருமணமான மறு மாதமே எனக்கு இருந்த அறிகுறிகளைக்கொண்டு கார்ட் போட்டு கர்ப்பத்தை உறுதிப்படுத்திக்கொண்டேன். அந்தத் தகவலைப் பகிர்ந்ததும், சக பணியாளர் ‘அய்யோ அப்படியா!’ என்று வருத்தத்தோடு கேட்க, மருத்துவர் ‘நீ கன்சீவாயிட்டியா!’ என்று ஆச்சரியமாகக் கேட்க, இப்படியான சூழல்கள் நம்மைக் குறித்து சமூகத்தின் பார்வை என்னவாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வழிவகுத்தன.

அது எனக்கு எட்டாவது மாதம். திடீரென்று யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்பட்டது. வழக்கமாகச் செல்லும் மருத்துவமனையில் மருத்துவர் இல்லை. புவனகிரியிலிருந்து கடலூர்வரை சென்று, அங்கே ஒரு மருத்துவமனையில் அட்மிட்  ஆனபோது, என்னை டேஞ்சர் கேஸ் என்றும், ‘இவர்களை ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கிறீர்கள்’ என்றும் என்னைச்  சோதித்த மருத்துவர் கேட்டதாக, ஸ்கேன் செய்த இன்னொரு மருத்துவர்  சொன்னார். “மேடம் நாங்கள் இருவரும் அரசுப் பணியாளர்கள்தான். பணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவருடைய அந்த வார்த்தைகளுக்குக் காரணம் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்” என நான் சொன்னேன்.

அப்படியே இன்னோரு சம்பவம். அந்த மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அன்று இரவே மீண்டும் பயங்கரமான வலி ஏற்பட, ஜிப்மர் மருத்துவமனைக்கு பெண் துணையின்றி, நானும் என் கணவருமாகச் சென்றோம். லேபர் வாடுக்கு உள்ளே அழைக்கப்படும்போது, அங்கே ஆபரேஷன் செய்து நின்ற ஒரு பெண் எனக்கு வழிகாட்ட, அதைக் கடிந்துகொண்ட செவிலியரிடம், என் பார்வையின்மையை எடுத்துரைக்க, ‘வாய் கிழிக்கிற! வகுத்துல புள்ளையவேற  வாங்கினுக்குற” என்று சொல்ல, அவர் பேசும் முறை தவறு என்பதை நான் சொன்னபிறகும், மீண்டும் “அதான் ஆண்டவன் உன்னை இப்படிப் படச்சிகிறான்” என்ற அவரின் வார்த்தைகளைக் கேட்டுக் கொதித்து, வந்த வழியே நியாயம் கேட்டு திரும்பிவிட்டேன். “என் உயிரே போனாலும், எனக்கு நியாயம் கிடைக்காமல் நான் ஆபரேஷன் செய்துகொள்ளப் போவதில்லை” என்று சொல்ல, பல சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒரு வழியாக ஆபரேஷன் நடந்து முடிந்தது.

பொதுவாகவே பல மருத்துவமனைகளில், “உனக்கே கண்ணு தெரியாது; உனக்கு எதுக்கு புள்ள?” என்பதுதான் பார்வையற்ற பெண்கள் எதிர்கொள்ளும் கேள்வி.

சித்ரா: ஆம். இது நிறைய பார்வையற்ற தம்பதிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைதான். தமிழ்ச்செல்வி வெளிப்படையாகச் சொல்லிட்டாங்க.

செலின்;  எனக்கு 2013ல் திருமணம் ஆனது. 2015ல் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகிய நான்கு மாதத்துக்குள், எனக்குப் பின் திருமணமானவர்கள் எல்லாம் கன்சீவாகிவிட்டதாக வசவுச் சொற்கள் அணிவகுக்கத் தொடங்கிவிட்டன. அதுபோக,  “பிள்ளை பெறுவதற்கு  மாத்திரை கொடுங்கம்மா” என்று வெளிப்படையாகக் கேட்பவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் சூழல்  ஏற்பட்டுவிட்டது.  கருவுற்ற காலத்தில், பணிபுரியும் இடத்திற்கு பயணிக்கும் தூரம் பெரிய சவாலாக இருந்தது.

பிரியா ஷாந்தகுமார்: எனக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தையைச் சுமந்தபோது ஆறு ஏழு மாதத்தில் மாமியார் கருத்து வேறுபாட்டில் சென்றுவிட, என்ன செய்யப் போகிறோம் என்ற குழப்பம் மேலிட,  அம்மாவை வைத்துக் குழந்தையைப் பார்த்துக்கொண்டோம். சில காலம் அம்மா, சில காலம் மாமியார் என மாறிமாறி குழந்தையை வளர்த்ததில், நிறைய சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.

இரண்டாவது குழந்தை பிறந்தபோது, பெரியவன் படித்துக்கொண்டிருந்தான். அம்மா வீட்டில் வைத்து, குழந்தைக்குப் பால் கொடுப்பது, படிக்கும் பையனைக் கவனிப்பது என சில சவால்கள் இருந்தன. ஒன்றரை மாதத்திற்கெல்லாம் குழந்தையை மெல்லமெல்லக் குளிக்க வைப்பதுமுதல் எல்லாவற்றையும் கவனிக்கத் தொடங்கிவிட்டேன்.

சித்ரா: ஒரு பார்வையற்ற தாயாக கைக்குழந்தையைப் பேணியதில் தாங்கள் சந்தித்த பிரச்சனைகள் குறித்துப் பேசலாமே! குழந்தையைத் தூக்குவது,  பால் கொடுப்பது, தொட்டிலில்  போடுவது உள்ளிட்ட பல விடயங்களில் பிரச்சனைகளை எதிர்கொண்டிருப்பீர்கள். சில சம்பவங்கள் மனதை அதிகம் பாதித்திருக்கக்கூடும்.அப்படி ஏதாவது?

விஜயலட்சுமி: எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது பால் பற்றாக்குறையால்தான் அழுகிறது குழந்தை என்பதைப் புரிந்துகொள்வதற்கே மூன்று மாதங்கள்  பிடித்தன. சிறிது காலம் மாமியாரும், அடுத்தடுத்து அம்மாவும் பார்த்துக்கொண்டார்கள். இரண்டாவது குழந்தைக்கு போதிய அளவு பால் இருந்தது. பள்ளிக்கு அருகில் வீடு பார்த்துக்கொண்டு, அடிக்கடி குழந்தையை வந்து கவனித்துக்கொண்டேன். ஒரு வயதுக்கு மேல் இரண்டு குழந்தைகளையும் அம்மா வளர்த்தார்கள்.

ராமலக்ஷ்மி: உறவுகளுடன் பிறந்து வளர்ந்ததால், குழந்தையைத் தூக்குவது, பால் கொடுப்பதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. எனக்கு  ஒரு பார்வையற்ற சகோதரி மருத்துவமனையில் உதவியாக  இருந்தது மட்டுமல்லாமல், குழந்தையை குளிக்கவைக்க, பராமரிக்க என பலவற்றையும் பார்வையற்றோரின் கோணத்தில் இருந்து சிந்தித்து, சொல்லிக்கொடுத்தார். அவரை என்னுடைய தெய்வம் என்று உங்கள் முன் சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

 ஒரு 9 மாதம் இருக்கும். குழந்தை தவழப் பழகிக்கொண்டிருந்த சமயம் அது. தெரியாமல் ஒரு பூச்சியை எடுத்து வாயில் போட்டுவிட்டாள்.  உடல் நிறம் ரெட்டிஷ் ஆகிவிட்டது. கலரில் மாற்றம் இருந்தாலும், சிந்திக்கத் தோன்றவில்லை. பிறகு பாதிப் பூச்சி பல்லில்  மாட்டிக்கொண்டிருக்கும்போதுதான் பார்த்து மிரண்டுவிட்டேன். பயந்துபோய் பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தபோது, அது கம்பளிப் பூச்சிதான் என்று சொல்ல, பயம் நீங்கப் பெற்றவளாய்  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.  அவள்  தேறி வந்துவிட்டாள்.

பிரியா ஷாந்தகுமார்: சங்கில் பால் கொடுக்க, மருந்துகளை ஊற்ற பால்காரர்கள் மற்றும் என் கணவருடைய நண்பர்கள் உதவி செய்தார்கள். குழந்தை இரவில் உறங்காமல் அழுதுகொண்டே இருக்கும். பூச்சி பொட்டு பயமிருந்ததால், விளக்கோடு விழித்திருக்க வேண்டும்.

பார்வையற்ற தாய்

செந்தமிழ்ச்செல்வி: எனக்கு சிறுவயதிலிருந்தே குழந்தைகள் என்றால் அவ்வளவு பிரியம். எந்த ஊரில், எந்தத் தெருவில், எந்த வயதில், எந்த மாதத்தில், எத்தனை குழந்தைகள்இருக்கிறார்கள் என்பது  குறித்த அத்தனை விஷயங்களும் எனக்கு அத்துபடி. அது என் குழந்தை வளர்ப்பிற்கு பேருதவியாக இருந்தது. முதல் குழந்தையைப் பொறுத்தவரை,  மாமியார் அருகில் இருந்ததால், குளிக்க வைப்பது உள்ளிட்ட அத்தனையும் படிப்படியாக கற்றுக்கொண்டேன். இரண்டாவது குழந்தை பிறந்து முப்பதாவது நாள். மாமியார் கோபித்துச் சென்றுவிட, அன்று குளிக்கவைக்க என் குழந்தையை கையில் எடுத்தேன்; இன்றுவரை நானே அத்தனை வேலைகளையும் அடுத்தவரை எதிர்பார்க்காமல் செய்துகொள்கிறேன். எனக்கு முன்பிருந்தே சில விஷயங்கள் தெரியும். அது அப்போதைக்கு உபயோகப்பட்டது. மற்றபடி முழுப் பார்வையற்ற பெண்களுக்கு கைக்குழந்தை வளர்ப்பு சவாலான விஷயம்தான்.

பெரும்பாலான பார்வையற்றோர் சங்கில் வைத்து மருந்துகளைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு சிரமப்படுகிறார்கள். அதற்கு ஒரு வழி சொல்கிறேன். சங்கை வைத்திருக்கும் கையின் முழங்கைப் பகுதியில் குழந்தையின் ஒரு கையையும், வாயை தொட்டு பார்க்கும் கைக்குப் பின்  பகுதியில் இன்னொரு கையையும் மெதுவாக பிடித்துக்கொண்டு, குழந்தைகள்  துள்ளாமல் இருப்பதை உறுதிபடுத்தியபின்,, வாயைத் தொட்டுப் பார்க்கும் கையில் தலையைப் பிடித்துக்கொண்டு, கடைவாய் பகுதியில் சங்கின் முனையை வைத்து, மெதுவாக ஊதிவிட்டால்,  குழந்தை மருந்தைக் குடித்துவிடும். இதற்கு சவால் எங்கே வருகிறது என்றால், மருந்தின் அளவைக் கண்டுபிடிப்பதில். ஆம். அதற்கு ஒருவர் உதவி தேவைதான். எனக்கு 10 எம்.எல் என்றால் கால் சங்கு வரும் என்று என் கணவர் சொல்லித் தந்திருக்கிறார். இதுபோன்ற சில டிப்ஸ் தெரிந்திருப்பதால், மற்றவர் உதவியை நாடாமல், என்னுடைய குழந்தையை நானே வளர்க்க முடிந்திருக்கிறது.

செலின்: பாப்பா பிறந்தபோது எடை குறைவாக இருந்ததால், (2.2 கிலோ கிராம்) ஐசியூவில் வைத்திருந்தபோது,  பால் பவுடரையும் பழக்கிவிட்டார்கள். தாய்ப்பால் பழக்குவதில் சிரமம் ஏற்பட, அடித்துப் பிடித்து அம்மா வீட்டுக்குக் கிளம்பி வந்துவிட்டேன். அம்மா கொடுத்த மூலிகை உணவுகளால் பால் அதிகமாகச் சுரக்கத் தொடங்கியது. மெல்லமெல்ல பாப்பா பால் குடிக்கப் பழகியவள், பால் பௌடரை  மறந்துவிட்டாள்.  ஆறுமாதம் கழித்து பவுடரைப் பழக்க சிரமப்பட வேண்டியிருந்தது.  வீட்டில் உள்ள பெரியவர்களை அனுசரித்ததால், தடுப்பூசி போட, மருந்து மாத்திரை கொடுக்க என எந்த விஷயத்திலும் கவலை இருந்ததில்லை. எனினும்,  பணிக்குச் செல்லும் நேரம் தவிர, பெரும்பாலும் குழந்தையை கவனிப்பதை என்னுடைய பொறுப்பாக்கி கொண்டேன்.

செந்தமிழ்ச்செல்வி:  எனக்கு பால் கொடுப்பதற்கு ஒரு நர்ஸ் சொல்லிக்கொடுத்தார்கள். அதுபோல என்னுடைய நாத்தனார் சில டிப்்ஸ் கொடுத்தார்கள். இப்படியாக அதுபோன்ற சமயங்களில் நல்ல வழிகாட்டுதல்கள் பார்வையற்றோருக்குக் கிடைத்தால் சிறப்பாக இருக்கும்.

சித்ரா: உடல்நலக் குறைவு நேர்ந்தபோது எப்படிச் சமாளித்தீர்கள் என்பது பற்றி?.

செந்தமிழ்ச்செல்வி: குழந்தை டயப்பர் மாற்ற அழும். கொஞ்சமாக யூரின் அல்லது மோஷன் இருந்தால் அதற்கு அழும்.  இது தவிர எந்தெந்தப் பகுதிகளில் வலித்தால் எப்படி அழும் என்று கணிக்கத் தெரியும். கழுத்து, காது, அக்குள், வயிறு, கால் என்று ஒவ்வொரு அங்கமாக மெல்லமெல்ல அழுத்த வேண்டும். வலி இருக்கும் இடத்தைத் தொடும்போது குழந்தை வீறிட்டு அழத் தொடங்கிவிடும். இப்படி என்ன பிரச்சனை என்பதை தொட்டுப் பார்த்து தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு கவனித்துக்கொள்வோம்.

  குழந்தைக்கு அம்மை போட்டதைக்கூட, தொட்டுப் பார்த்து நானே கண்டுபிடித்துவிட்டு, மற்றவர்களைக்கொண்டு உறுதிபடுத்திக்கொண்டேன். இன்னும் ஒரு செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் பதினோராம் வகுப்பு படிக்கும் பொழுது, ஒரு உறவுக்காரருக்கு குழந்தை பிறக்க, மருத்துவமனைக்கு சென்று அந்த குழந்தையை தூக்க முற்பட்டபோது, குழந்தையை தூக்குவது குறித்த பயம் அவர்கள் பார்வையில் படர்வது கண்ட உறவுக்காரர், பெற்றவளை விட அவளுக்கு குழந்தையை நன்றாக தூக்க தெரியும் என்று சொல்ல, நானும் அதை நிரூபித்து காட்டினேன். அப்பொழுதுதான் நம்மைப் பற்றி சமூகம் இப்படியும் நினைக்கும் என்பது எனக்கு புரிந்தது.

விஜயலட்சுமி: நான் பாப்பா பிறக்கும் தருவாயில் இஸ்லாமியரோடு குடியிருந்தேன். எனக்கு வளைகாப்பு போடும் அளவுக்கு அவர்கள் என்மீது அதிக அன்பும் அக்கறையும் காட்டினர். மருந்துகளைப் புகட்ட உதவினர். பாப்பாவுக்கு மூன்று மாதமாக இருக்கும்போது, திடீரென்று தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள்.  எந்தக் கைமருந்தும் கை கொடுக்கவில்லை. உடனடியாக இஸ்லாமிய உறவுகளிடம் கேட்டபோது, கழுத்து சுளுக்கி (உரம்)இருப்பதாகச் சொல்லி எடுத்துவிட்டார்கள். அதுதான் நான் சந்தித்த மிகப்பெரிய சவால்.

பார்வையற்ற தம்பதிகள்

செந்தமிழ்ச்செல்வி: உரம் விழுவதைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு டிப்ஸ். காதைத் தொட்டால் குழந்தைகள் அழும். இது தவிர எந்தப் பகுதியில் உரம் விழுந்திருக்கிறதோ, அந்தப் பகுதியில் பால் குடிக்காமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கும்.

 சித்ரா: சாதாரணப் பெண்களுக்கும் இது பிரச்சனைதான். தொட்டிலை முறையாகக் கட்டுவது, குழந்தையைச் சரியாகக் கிடத்துவது, தலைப்பகுதியைக் கொஞ்சம் மேடாக அமைத்துக் கொடுப்பது  போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் கருத்தில்கொள்ளப்படும் பட்சத்தில் உரம் விழுவது தவிர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது.

பிரியா ஷாந்தகுமார்: தடுப்பூசி போடும் சமயங்களில் அழுதுகொண்டே இருப்பார்கள். நம் குழந்தைகளைக் கவனிப்பவர்கள் சில சமயங்களில் காதில் ஊற்ற வேண்டிய மருந்தை வாயில் ஊற்றிவிடுவார்கள். ஒருமுறை,  பெரியவனுக்கு மூன்று வயதாக இருக்கும்பொழுது காலையில் மருத்துவமனைக்கு செல்லலாம் என்று நினைத்திருக்க, fits  ஏற்பட்டுவிட, அதிக சிரமப்பட்டு ஈரோட்டிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்க்க வேண்டியதாகிவி்ட்டது.

செலின்:  பாப்பாவுக்கு மூன்று மாதம். தொடர் அழுகைக்குக் காரணம் தெரியாமல் திகைத்தபோது, பக்கத்து வீட்டு இஸ்லாமிய சகோதரி மூலம் ஒவ்வாமையாக இருக்க கூடும் என அறிந்தேன். அன்று சாப்பிட்ட முருங்கைக்காய் சாம்பார் காரணமாக இருக்கலாம் என்று எண்ணியபடி அன்றோடு முருங்கைக்காயை நிறுத்திவிட்டேன். இது தவிர அடுத்தநாள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதோடு, குழந்தைக்கு அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி, வாந்தி, காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட உடல்நலக்  குறைபாடுகளுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை மொத்தமாக வீட்டில் வாங்கி வைக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொண்டேன்.

 விஜயலட்சுமி: எனக்கு ஒரு அனுபவம். ஒருநாள் மொச்சையும் காலிஃபிலவர் சாப்பிட்டுவிட்டேன். குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது என்பது தெரியாது. அது அழுதுகொண்டே இருந்தது. அதிகாலை 4 மணிக்கெல்லாம் ஹவுஸ் ஓனர் வீட்டுக் கதவை தட்டி விசாரித்தபோதுதான் என் தவறு புரிந்தது. அவர் கொடுத்த கைமருந்துக்குப் பின் குழந்தை தூங்கிவிட்டது.

செந்தமிழ்ச்செல்வி: என் கதையில் இனிப்பு போட்ட உளுந்து வடை.  குழந்தைக்கு வயிறு உப்பி, பால் குடிக்காமல்  அழுதபோது, அதற்கான வைத்தியமாக முருங்கைக் கீரைக் கொழுந்தாகப் பறித்து, உப்புக்கல் போட்டு, சாறு எடுத்து அரை சங்கு குடிக்கக் கொடுத்துவிட்டு, கொஞ்சம் வயிற்றில் தடவிவிட்டேன்.  என்ன காரணம் என்று சிந்தித்தபோது நான் சாப்பிட்ட உளுந்துவடை என்று என் மாமியார் சொல்லக் கேட்டுத்  தெரிந்துகொண்டேன்.

 ராமலக்ஷ்மி: மயிலிறகில் தேன் தோய்த்துக் கொடுத்தால் வாமிட்டிங் நின்றுவிடும்.

செந்தமிழ்ச்செல்வி: கொஞ்சமாகத் தேனை உள்ளங்கையில் ஊற்றி, மயிலிறகைக்கொண்டு பத்துமுதல் 20வரை நன்றாகத் தேய்த்துப் பின் குழந்தை வாயில் வைக்கும் பொழுது வாமிட்டிங் நின்றுவிடும்.,

அதுபோல, நீண்ட தூரம் டயப்பர் போட்டு பயணிக்கும் குழந்தைகள் சந்திக்கும் சில அசவுகரியங்களைச் சமாளிப்பதற்கு ஒரு டிப்ஸ். குழந்தையின் டயப்பறை அகற்றிவிட்டு முருங்கைக் கொழுந்து சாறு பருகக் கொடுக்கலாம். வயிற்றிலும் தேய்த்துவிடலாம். ஆண் குழந்தையின் யூரின் போகும் இடத்தில் பச்சைத் தண்ணீரைக் கொஞ்சம் அடித்தால் லாவகமாக நீர் பிரிந்துவிடும்.

 சித்ரா: குழந்தை வளர்ப்பது ஒரு கலைதான். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருப்பதில்லை. கேட்டுத் தெரிந்துகொண்டு குழந்தையை வளர்த்துக்கொள்ள வேண்டியதுதான். பெரும்பாலான இடங்களில் பெரியவர்கள் வழி நடத்துவார்கள். பார்வையற்றோரைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொள்வதாலும், பெரியவர்கள் அரிகிருப்பதை விரும்பாததாலும் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.

தொடர்ச்சி, இதழின் இறுதிப் பகுதியில்.

பகிர

3 thoughts on “கொண்டாட்டம்: “முட்களும் சுகமே! முல்லைகளைச் சுமப்பதால்”: அன்னையர்தின சிறப்புக் கலந்துரையாடல்

  1. பார்வையற்ற தம்பதியர்கள் கொள்ளும் சவால்களையும் அவர்கள் எவ்வாறு தனது வாழ்க்கையை தனது நிலையை குழந்தைகளை வளர்க்கும் அளவிற்கு பன்படுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவாகவும் எடுத்துரைத்த இந்த பதிவிற்கு மிகுந்த நன்றிகள்

  2. அன்னையர் தின சிறப்புப் பகிர்வு மிகவும் அருமை. குடும்ப மகளீருடைய பல்வேறு சிரமங்களை நன்றாக நமக்கு கூறிய அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள் ❤🍎🌹👍🏻

  3. ஒவ்வொருவரும் குழந்தையை பெற்று பிறகு படிப்படியாக வளர்ப்பது என்பது அனைவருக்கும் கடினமான ஒன்றாகும். குறிப்பாக பார்வை சவால் கொண்டவர்களுக்கு கூடுதல் சவால் இருக்கும் அத்தகைய சவால்களை சிறந்த முறையில் கலந்து ஆலோசித்த அனைவருக்கும் வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *