சிந்தனை: அன்னயர் தின வாழ்த்துகள்

சிந்தனை: அன்னயர் தின வாழ்த்துகள்

ஆக்கம் நிதர்சனா வெளியிடப்பட்டது

கடவுள் படைப்பில் அல்லது இயற்கையமைப்பில் தாய்மை என்பது பெண்களுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கொடையாக, பண்பாக, வரமாகக் கருதப்படுகிறது. இலட்சக்கணக்கான விந்தனுக்கள் ஆணிடமிருந்து பெண்ணிடம் பாலுறவு மூலம்  கடத்தப்பட்டு, அதில் சில அனுக்கள் மட்டுமே தப்பிப் பிழைத்து, பெண்ணின் கருப்பையை அடைந்து, கருவாக உருவாகி, பத்து மாதங்கள்  சிசுவைச் சுமந்து,  பல இன்னல்களுக்கு ஆளா,கி வேதனைப்பட்டு, வலிகளைக் கடந்து, இறுதியாக சாதாரனமாக அல்லது அறுவைசிகிச்சை மூலம் தன் குழந்தையை ஈன்றெடுத்து, தன் ரத்தத்தைப் பாலாக்கி, பல பத்தியங்கள் இருந்து, நாவை அடக்கி, இரவு பகல் தூங்காமல் குழந்தையைப் பேணிப் பராமரித்து,  வளர்த்தெடுக்கிறாள். இத்தகைய சிறப்புமிக்க தாய்மையைப் போற்றும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

அன்னையின் அன்பும் பாசமும் அர்ப்பனிப்பும் அளப்பரியதாகும். ஆனால் அவர்களிடம் மட்டும்தான்  தாய்மை என்ற பண்பு உள்ளதா என்ற கேள்வி என்னுள் எழுந்தபோது கிடைத்த பதில்கள்தான் இவை:

மருத்துவமனையில் தங்கள் உறக்கம் மறந்து அல்லும் பகலும் அயராது அர்ப்பனிப்புடனும் அக்கறையுடனும் கவனிக்கும் ஒவ்வொரு ஆண், பெண் செவிலியருக்குள்ளும் தாய்மைப் பண்பு புதைந்திருக்கின்றது. மனைவியை இழந்து மறுமனம் செய்ய விருப்பமில்லாமல் இன்னொரு தாயாகத் தன் குழந்தையை வளர்க்கும் ஒவ்வொரு தந்தைக்குள்ளும் தாய்மை பண்பு மறைந்திருக்கின்றது. நாம் சுகாதாரத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ நம் சுற்றுச்சூழலைத் தூய்மை செய்யும் துப்புரவுத் தொழிலாளி ஒவ்வொருவரின் சேவைக்குள்ளும் தாய்மை நிறைந்திருக்கிறது.

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் மனிதக் கழிவுகளை அகற்றவும் தூய்மைப்படுத்தவும் மனிதர்கள்தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களின் சேவை மிகப்பெரியது. அத்தகைய தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் தாய்மைப் பண்பு இருக்கிறது. எங்கோ யுகோஸ்லேவியாவில் பிறந்து, சேவை செய்வதற்காகவே நம் நாட்டிற்கு வந்து ஏழைகளையும் நோயாளிகளையும் ஆதரவற்றோரையும் அரவனைத்துத் தம் அன்பால், பரிவால், ஆறுதல் அளித்த அன்னை தெரசா மற்றும் அதுபோன்று சேவை செய்யும் அனைவருக்குள்ளும் பல அன்னையுள்ளம் மறைந்திருக்கிறது.

குழந்தையை கையில் வைத்திருக்கும் பார்வையற்ற தாய்

இவை ஒருபுறம் இருக்க, குழந்தை வளர்ப்பு என்பது சிறப்புமிக்க கலையாகும். அப்படியிருக்க மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை வளர்ப்பது சாதாரன காரியமல்ல. அதிலும் பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகளை வளர்ப்பதென்பது அவ்வளவு எளிதானதல்ல. ஒவ்வொரு பார்வை மாற்றுத்திறனாளி குழந்தையின் தாயும் அந்தக் குழந்தைகளின் சிறுவயது  முதலே அவர்களின் சொந்த வேலைகளான பல் துலக்குவது, குளிப்பது, மலங்கழித்து சுத்தம் செய்வது, தன் உணவை தானே எடுத்துச் சாப்பிடுவது, துணி துவைப்பது, மடிப்பது, சமைப்பது,வீட்டைச் சுத்தம் செய்வது, போன்ற இன்னும் பிற அனைத்து வேலைகளையும் செய்யப் பழக்க வேண்டும்.

தலையை அசைத்தல், கண்ணைக் குத்துதல், குணிந்திருத்தல் மற்றும் இன்னும் பிற தேவையற்ற பழக்கங்களை (mannerism)  களைதல் வேண்டும். ஒவ்வொரு பார்வை மாற்றுத்திறனாளி குழந்தையின் தாயும் தான் இல்லாத சூழ்நிலையிலும் தன் மகனோ அல்லது மகளோ இவ்வுலகில் வாழவும் சமூகத்தோடு  ஒருங்கிணைந்து  உறவாடவும்  தெரிந்துகொள்ளக் கற்பிக்க வேண்டும்.             

ஒவ்வொரு பார்வை மாற்றுத்திறனாளி குழந்தையையும் வளர்ப்பது, பராமரிப்பது என்பது அவர்களின் தேவைகளை நாம் நிறைவேற்றுவது அல்ல, மாறாக அவர்கள் தன்னிச்சையாய், சுதந்திரமாய் செயல்படக்கூடிய நிலையை ஏற்படுத்துவதுதான் அவசியம். அதற்கு ஏற்றவாறு அக்குழந்தையை உருவாக்குவதுதான் அன்னைகளின் பணியாக  இருக்க வேண்டும். மேலும் சிறப்புப்பள்ளியில் சேர்த்து முறையான சிறப்புக்கல்வியைக் கொடுத்து இச்சமுதாயத்தில் சமூக பொருளாதார அளவில் ஒரு நல்ல நிலைக்கு தன் குழந்தையை உயர்த்த வேண்டும்.  எனவே இந்த அன்னையர் தினத்தில் அத்தகைய அன்னையராய் திகழ்ந்திடுவோம் என்று உறுதியெடுப்போம்.  உடலளவிலும் உள்ளத்தளவிலும் தாய்மைப் பண்பு கொண்ட அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

***yoursnidharsana@gmail.com

பகிர

1 thought on “சிந்தனை: அன்னயர் தின வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *