அறிவின் சிகரமே,
உன்னை உரிமையோடு கையில் எடுத்தது
ஒரு ஜூலை மாதத்தில்.
கண்ணைக் கவரும் அட்டைப்படம்;
கருத்தை நிறைக்கும் அடுத்தடுத்த பக்கங்கள்!
அது எப்படி,
புரட்டும் போது புதுமையாய் விரியும் நீ,
சுருட்டும்போதும் ஸ்னேகமாய்ப் புன்னகைக்கிறாயே!
பரந்த பிரபஞ்சத்தை விரல் நுனியில் பொதிந்திருக்கிறாய் ;
வரலாற்று அம்சங்களை வார்த்தைகளில் பதிந்திருக்கிறாய்!
ஓ, எங்கு யார் எப்பொழுது தாகத்தோடு திறந்தாலும் ,
பாகுபாடு கருதாது பயன் தரும்
தண்ணீர் குழாய் போல் திகழத்தான்,
உன் அறிவு பெட்டகத்தை
அவ்வப்போது அப்டேட் செய்து கொள்கிறாயோ!
வெவ்வேறு பெயர்களில் உலவும் நீ,
ஒவ்வொரு நிலையிலும் வெற்றிகளையே குவிக்கிறாய்!
பாரம்பரியத்தோடு வளர்ந்த நீ,
சுவாரசியம் குன்றாமல் சாகசங்கள் நிகழ்த்துகிறாய்!
முதிர்வின் விளக்கமே,
வலிக்காமல் அடிக்கும் ரகசியத்தையும்,
அன்பாக கண்டிக்கும் அதிசயத்தையும்,
முழுமனதோடு மன்னிக்கும் புது சுகத்தையும்
கடல் கடந்தும் கற்பித்திருக்கிறாய்.
பகிர்வின் பரஸ்பரத்தையும்,
புனைவின் நவரசத்தையும்,
உறவின் நிதர்சனத்தையும்,
உணர்வுகளினூடே கடத்தி இருக்கிறாய்!
நீ சென்ற இடமெல்லாம் சிறப்பு;
நீ வென்ற விருதுகள் எண்ணிக்கை
உனக்கே தெரியாதது தான் வியப்பிலும் வியப்பு!
எடுப்பா கை பிள்ளையாமே நீ;
யார் சொன்னது?
எடுப்பவர் பசியாற்றும் அ்பூர்வக் குழந்தை!
படிப்பவரை செதுக்கிடும் அற்புத சிற்பி!
சரி வா,
உன்னை வடித்த சிற்பியும்,
நீ செதுக்கிய சிற்பமும் ஒரு சேர இசைக்கும்
வசீகரப் போற்றுதல்களுக்குச் செவிமடுப்போம்.
நெகிழ்வின் சுரங்கமே ,
உன் மெய் தொட்டுப்பயிலும் பாக்கியம் பெற்றவள் நான்.
அந்த தொடுகைக்கு பங்கம் நேர கண்கலங்கி நின்றவளுக்கு,
கண்ணீர் துடைக்கும் கைகுட்டையானது தொழில்நுட்பம்!
இணைய பக்கங்கள் ஒலிபெயர்க்கப்பட்டு,
இதய அரங்கில் பத்திரமாய் நிரப்பப்பட்டு வருவதும்,
செவிவழி நுகரப்படும் மொழி அலைகள்
சிந்தனை விதையை தூண்டி,
படைப்பு சோலையின் பரந்த வெளியில்
பங்களிப்பைச் செலுத்த வடிகால் அமைப்பதும்
உனக்குத் தெரியும் தானே!
வார்த்தைகளின் வலிமை சொன்ன உயிர்ப்பின் நீரோட்டமே,
உன் வருங்காலம் செழித்திட,
வளங்கள் பல சேர்ந்திட,
உறவுகள் மேம்பட,
இறையருள் துணை வர
வாழ்த்து வலையை பரிசளிக்கும்
உன் அன்பு வாசகி
***தொடர்புக்கு: thodugai.thoorikha@gmail.com
Be the first to leave a comment