Categories
தலையங்கம் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: மே, 2023

தலையங்கம்: மற்றும் ஒரு சிறப்புப்பள்ளியா சில பெருநகரக் கல்லூரிகள்?

கூகுல் செய்திகள் வழியாகவும் நீங்கள் எம்மைப் பின்தொடரலாம்.
https://news.google.com/publications/CAAqBwgKMPCzzQswoM_kAw?ceid=IN:en&oc=3

தொடுகை பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். உரையாடலும், உரையாடல் நிமித்தமும்.

மே மாதம் கடந்துபோகிறது. இந்த மாதத்தில்தான் விருட்டென்று வந்துமறைந்த வாழ்வின் முக்கியத் திருப்பங்கள் ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்திருக்கும். மார்ச் தேர்வுகளுக்கான மாதம் என்றால், மே தேர்வு முடிவுகளுக்கான மாதம். ரிசல்ட், அப்லிகேஷன், காலேஜ், ஹாஸ்டல், ஆர்ட் அண்ட் சைன்ஸ், கவுன்சிலிங் போன்ற சொற்கள் எங்கெங்கும் நிறைந்து, உரியவர்களைப் பதட்டமும் பரபரப்பும் கொண்டவர்களாக இயங்கச் செய்கின்றன.

மாதத்தின் முதல் பாதியில், மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.  அதே மாதத்தின் பிற்பகுதியில், எந்தக் கல்லூரியில் சேர்வது, பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப எந்தப் பாடத்தை நம் எதிர்கால வாழ்க்கைக்கு உகந்ததாகத்   தெரிவது என்ற ஆழ்ந்த யோசனை. ஆக முழு மாதமும் யோசனைகள், கருத்துக் கேட்புகள், பரஸ்பர ஆலோசனைகள் மற்றும் அறிவுரைப் பகர்தல்கள்.

பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. சொல்லப்போனால், இந்த விடயத்தில் அதிகக் குழப்பத்துக்கும் பதட்டத்துக்கும் உட்படுபவர்கள் அவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள். சிறப்புப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், தங்கள் வகுப்புத் தோழர்களின் சகிதம் கும்பலாக ஒரே கல்லூரிக்குள் நுழைய உத்தேசிப்பார்கள். சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரக் கல்லூரிகளே அவர்களின் முதன்மைத் தெரிவாக இருக்கும்.

உள்ளடங்கிய கல்வி முறையில், தங்கள் வீட்டுக்கு அருகாமையிலிருக்கிற சாதாரணப் பள்ளிகளில் படித்த மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் ஊர்ப்புறக் கல்லூரிகளையே தெரிவு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். அடைகாத்து, அடைகாத்து கோழிக்கும் குஞ்சுக்கும் அது ஒன்றே உலகம் என்று ஆகிப்போன நிலை.

எது எப்படியோ, இன்றைக்கும் சென்னை போன்ற பெருநகரங்கள்தான் உரிய வாய்ப்புகள் மற்றும் வசதிகளோடு ஒரு பார்வையற்ற மாணவர் தங்கு தடையின்றித் தன் உயர்கல்வியை முடிக்கிற சாத்தியத்தை அவருக்கு வழங்குகிறது. அதிலும், தன்னார்வ வாசிப்பு, பதிலி எழுத்தர்கள் ஏற்பாடு, கல்விசார் நிதி உதவிகள், கற்றலிணைச் செயல்பாடுகளில் பெறும் உதவிகள் போன்ற அம்சங்களில் சென்னையோடு பிற பெருநகரங்களை ஒப்பிடவே முடியாது என்கிற கள எதார்த்தம் எதை உணர்த்துகிறது? பார்வையற்றவர்களுக்கான கல்வி குறித்த விழிப்புணர்வு பரவலாக்கப்படவில்லை என்பதைத்தானே?

இந்த நிலை மாற வேண்டுமானால், அந்தந்தப் பகுதியில் இயங்கும் பார்வையற்றோருக்கான ஊர்ப்புறக் கல்லூரிகள் மற்றும் பொதுப்பள்ளிகளில் பணியாற்றும் பார்வை மாற்றுத்திறனாளி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கரம் கோர்க்க வேண்டும். இவர்கள் இணைந்து, முதற்கட்டமாக எந்த ஒரு புதிய சூழலையும் எதிர்கொள்கிற ஆற்றல்கொண்ட சில பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களைத் தெரிவு செய்து, ஊர்ப்புறக் கல்லூரிகளில் அவர்கள் தங்கு தடையின்றிப் படிக்க வழிவகைகள் செய்திட வேண்டும். படிப்படியாக, ஆண்ட்உதோறும் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகளால், பார்வையற்றோர் குறித்தும், அவர்களுக்கான கல்வி குறித்தும் ஊர்ப்புற மக்கள்  அறிந்துகொண்டு, பார்வையற்றோருக்கான கற்றல் செயல்பாடுகளில்  தங்களையும் இணைத்துக்கொள்வது படிப்படியாக நிகழும். விழிப்புணர்வு பரவலாக்கப்படும் நிலையில், ஊர்ப்புற கல்லூரி நிர்வாகங்களும் உள்ளடங்கிய கற்றல் சூழல்களை ஏற்படுத்துவதில் (inclusive environment) முனைப்பு காட்டத் தொடங்குவார்கள்.

தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட இந்த நவீன யுகத்திலும், சில பெருநகரக் கல்லூரி வளாகங்கள் மற்றுமொரு சிறப்புப்பள்ளியாகக் காட்சிதரும் நிலை ஏற்புடையதுதானா என்பதை சிந்திக்க வேண்டிய தருணம் இது.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

One reply on “தலையங்கம்: மற்றும் ஒரு சிறப்புப்பள்ளியா சில பெருநகரக் கல்லூரிகள்?”

ஆசிரியர் கூறிய கருத்து அனைவரின் சிந்தனையை தூண்டுகிறது. பெற்றோரும் புரிந்துகொண்டு செயல்பட்டால் இனி வரும் நாட்கள் நன்றாக அமையும் 👏🏼👍🏻🙏🏽

Like

Leave a reply to பாஸ்கர் Cancel reply