Categories
கட்டுரைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: மே, 2023

பேட்டி கட்டுரை: புத்தாக்கத் தோழர்கள்!

சங்க இலக்கியங்களில் தமிழ்ப் பெயர்களை ஊர்ப் பெயர்கள், மனிதப் பெயர்கள், விலங்கு பெயர்கள், பறவைப் பெயர்கள் என வகைப்படுத்தி ஆராயத் தொடங்குகிறார். ஆராய்ச்சியின்போது, எண்ணற்ற பெயர்களை கண்டுபிடிக்கிறார்.

மனித நாகரிகத்தின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது, சற்றும் யோசிக்காமல் புத்தகம்  என்று பதிலுரைத்த  ஐன்ஸ்டினின் கருத்துப்படி, காலங்கள் கடந்து, மனித வாழ்வோடு பிண்ணிப் பிணைந்திருப்பவை புத்தகங்கள் என்றால் அது மிகையல்ல. எத்தனைமுறை திறந்தாலும் புதுமையான கருத்துக்களைப் புகுத்திக்கொண்டே இருக்கும் அதிசயப் பரிசுகள் புத்தகங்கள்.

william shakespear

யுனெஸ்கோவின் அறிவிப்பின்படி, 1995ஆம் ஆண்டுமுதல், பிரபல ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த தினமாகிய ஏப்ரல் 23ஆம் நாள் சர்வதேசப் புத்தக தினமாக அனுசரிக்கப்படுகிறது. இன்றைய இயந்திர யுகத்தில் புத்தக வாசிப்பு அருகி வருவதாகச் சொல்லப்படுகிறது. பார்வையற்றோரைப் பொறுத்தவரை,புத்தக வாசிப்புக்காக ஒருவரைச் சார்ந்திருக்கும் நிலை மாறி, சுயமாகப் படிப்பதற்கு ஏற்றவாறு நிறைய அப்ளிகேஷன்கள், வலைதளங்கள், சிறப்புச் சேனல்கள்  வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் Accessible reader, Envision AI, Insta reader, போன்றவை குறிப்பிடத்தக்க அப்ளிகேஷன்கள்.

ஆன்டிராய்டு அலைபேசிகளைப் போல, எல்லா இணைய தளங்களும், குறிப்பாக, வாசிப்பு சார்ந்த பெரும்பாலான இணையப் பக்கங்கள் பார்வையற்றோர் பயன்பாட்டிற்கு ஏற்றவாறே டிசைன் செய்யப்படுகின்றன. அந்தவகையில், தொடுகை இதழின் புத்தக தின சிறப்புப் பகிர்வாக, புத்தக வாசிப்பை நேசிக்கும் சில பார்வையற்ற ஆளுமைகளைத் தெரிவுசெய்து, அவர்களுக்குப் பிடித்த புத்தகங்கள், பிடித்தமைக்கான காரணம், அவை எப்போது, எப்படிப் படிக்கப்பட்டன போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கின்றன. வாருங்கள். எந்தெந்த பிரபலங்கள் எந்தெந்த புத்தகங்களைத் தம் மனம் கவர்ந்ததாகக் கருதுகிறார்கள் என்று தெரிந்துகொள்வோம்!

சையது சுல்தான், முதுகலை ஆங்கில ஆசிரியர்,

அரசு மேல்நிலைப்பள்ளி, திருவரங்குளம், புதுக்கோட்டை:

“உலகப் புகழ்பெற்ற பிரபல ஆங்கில நாடக ஆசிரியர்

ஷேக்ஸ்பியரின்

புத்தகங்கள் இன்றளவும் பலரால் பல இடங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவர் எழுதிய நான்கு துன்பவியல் நாடகங்களில், என் பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்ட நாடகம்

ஒத்தெல்லோ.

அந்த நாடக நாயகனின் பெயரும் அதுதான். அவர் சிறந்த போர் வீரர். திறமையான ஆட்சியாளர். எனினும் கருப்பு நிறத்தவர். அவருடைய கதாநாயகியாக சொல்லப்பட்டவருடைய பெயர் டெஸ்டிமோனா. அந்தச் சொல்லுக்கு ‘ஒளி பொருந்தியவள்,   parivartha wife, பத்தினி’ போன்ற பல்வேறு பொருள்களில்  விமர்சகர்களால் பயன்படுத்தப்படுகின்றன. அவள் இயல்பாகவே அழகு மிகுந்தவள். இருளிலும் அவள் முகம் ஜொலிக்கும் என்று வர்ணித்திருப்பார் ஷேக்ஸ்பியர்.

அந்தக் கதையின் வில்லன் பெயர் இயாகோ. பேரழகியை  விரும்பி மணந்த ஒத்தல்லோவுக்கு, தன் நிறத்தின்பால் தாழ்வு மனப்பான்மை அதிகமாகிவிடுகிறது. டெஸ்டிமோனா உலகத்தையே விலையாகக் கொடுத்தாலும் தவறு செய்ய விரும்பாதவள் என்பதை அவரது தோழியிடம் பகிர்ந்துகொள்வதாக ஒரு காட்சி  இடம்பெற்றிருக்கும். மேலும் இயாகோ எதார்த்தமாக டெஸ்டிமோனாவைச் சந்திக்கும் தருணங்களைக்கூடத் திட்டமிட்டுச் சந்தித்தது போலச் சித்தரித்துவிடுகிறார் சொல்லவா வேண்டும்? நாயகனுக்கு சினம் தலைக்கேறிவிடுகிறது. தன் மனைவியைச் சந்தேகப்பட்டுவிடுகிறார். இந்தக் கோபமும் சந்தேகமும் அவளைக் கொலை செய்வதில் போய் முடிந்துவிடுகிறது.

இந்தக் கதையில் ஷேக்ஸ்பியர் சாலிலோக்கி என்ற புது யுத்தியை  பயன்படுத்தியிருப்பார். அதாவது, கொலை செய்வதற்கு முன்  15 வரிகள் தனக்குள்ளாகவே பேசிக்கொண்டிருப்பார். மேலும்  ‘Put off the light’ என்ற வரிகளை  இரண்டுமுறை பயன்படுத்தி இருப்பார். ஒருமுறை விளக்கு அணைக்கப்பட வேண்டும் என்பதையும்,   மற்றொருமுறை ஒளிபொருந்திய டெஸ்டிமோனாவின் வாழ்வை முடிக்கப்  போவதையும் சுட்டுவதாக சில விமர்சகர்கள் சான்று பகர்கின்றனர். அவர் சொன்ன அந்த சந்தேகப்படும் குணம் எப்போதுமே யாருக்குமே இருக்கக் கூடாது என்பதுதான் என் கருத்து. உறவினர்கள், நண்பர்கள், கணவன், மனைவி மற்ற உறவுகள் யாராக இருந்தாலும் சந்தேகம் இல்லாமல் மகிழ்ச்சியான வாழ்வை வாழ வேண்டும் என்பதே இந்த கதை மூலம் ஷேக்ஸ்பியர் நமக்குத் தெரிவிக்க  விரும்பும் செய்தி.”

அவருடைய கருத்துப் பகிரல், நான் சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்த வகுப்பறைக்கு என்னை அழைத்துச் சென்றுவிட்டது. ஒத்தல்லோ வகுப்பெடுத்த கீதா ராணி மேடம், “Celin  How for you’ve understood?” என்று கேட்டதற்கு, “100% mam”  என்று துணிச்சலோடு  பதில் அளித்தது நினைவுக்கு வந்தது.

மகேந்திரன், விரிவுரையாளர்,

ஆங்கிலத்துறை, தியாகராயர் அரசு உதவிபெறும் கல்லூரி, சென்னை:

Book share

இணையதளத்தில், அண்மையில்

‘Indian Tales’

என்று டைப் செய்து தேடியபொழுது,

ரொமிலா தாப்பர்

அவர்கள் தொகுத்த 16 கதைகள்  அடங்கிய புத்தகம் கிடைக்கப்பெற்றது. ரொமிலா தாப்பர் சிறந்த வரலாற்று அறிஞர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக உதயத்தில் முக்கியப்  பங்குவகித்தவர். வரலாற்று முக்கியத்துவம்  மிகுந்த கதைகளைத் தொகுத்திருக்கிறார் என்பதே வியப்பாக இருந்தது.

சாதாரண வாசிப்பாக எண்ணிய   எனக்கு அதில் இடம்பெற்ற ஒவ்வொரு கதையும் பல்வேறு வரலாற்று அம்சங்கள் பொதிந்த,அறிவுக்கு வலுவூட்டுகின்ற, ஆழ்ந்த வாசிப்பாக அமைந்துவிட்டது. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், குழந்தையும் கீறியும், நள தமயந்தி கதைகள், அக்பர்  பீர்பாலை மந்திரியாக நியமித்ததற்குப் பின்னணியில் இருக்கின்ற  சாமர்த்தியங்கள் என வெவ்வேறு களங்களில்  பயணிக்கிறது புத்தகம். சில தேவதைக்கதைகள், நீதிக்கதைகள், நன்னெறிக் கதைகள் எனத் தொன்மையான வரலாறு சார்ந்த, வாழ்வியல் பொதிந்த, அருமையான நடையில் அமைந்த பல கதைகளை ஒருசேரப் படிக்க முடிந்தது. ரொமிலா தாப்பர் என்ற பெயரே, இந்தப் புத்தக வாசிப்புக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது.””

romila thappar

திரு. மகேந்திரன்,   தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்.  இரண்டு மொழிகளிலும்  படித்தலும் படைத்தலுமாகச் சிறந்த இலக்கியப் பங்காற்றி வருபவர். இவருடைய கவிதைப் புத்தகம் தர்ஷினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சத்தியமூர்த்தி, முதுநிலை எழுத்தர், சமூகநலத்துறை, புதுச்சேரி

கேரி சேப்மேன்

அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய

‘The Five Love Languages’

என்ற புத்தகம், நாகலட்சுமி சண்முகம் என்பவரால் தமிழில்  மொழிபெயர்க்கப்பட்டு, மஞ்சுல்  பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதோடு, அமேசான் கிண்டில் தளத்திலும் வளையேற்றப்பட்டிருக்கிறது அன்பிற்காக ஏங்கும் தம்பதியருக்கும், ஒருவருக்கு ஒருவர் புரிதல் இல்லாமல் தவிப்பவருக்கும், தாம்பத்தியம் மட்டுமே வாழ்க்கை என்று கருதுவோருக்கும் இந்தப் புத்தகம் சிறந்த வழிகாட்டியாக அல்லது வரப்பிரசாதமாக விளங்குகிறது.

தம்பதியருக்கான  ஐந்து மொழிகளைக் காதல் மொழிகளாக வரையறுக்கிறார் சேப்மென்.

1.தம் வாழ்க்கை துணையை மனமுவந்து பாராட்டுதல்

2.வாழ்க்கைத் துணையோடு அதிக நேரம் செலவிடுதல்

3.பரிசுகள் வாங்கி  மகிழ்வித்தல்

4.பணிவிடைகளில் பங்குகொள்ளுதல்

5.தொடுகையில் அன்பை வெளிப்படுத்துதல்.

Gary D. Chapman

இந்த ஐந்து மொழிகளில் எது இணைக்கு உகந்த காதல் மொழி  என்பதை மெல்ல மெல்லத் தெரிந்துகொள்ள வேண்டும். தமக்குப் பிடித்ததை அவர்கள்மீது  திணிக்காமல், அவர்களுக்குப் பிடித்ததை நாம் செய்யும்பொழுது வாழ்க்கை இன்பமயமானதாக அமையும். மேலும் இந்த ஐந்து மொழிகளும் தம்பதியருக்கு  மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பொருந்தும் என்கிறார் சேப்மென். மேலும்,  சிறுவயதில் தொடுகை அனுமதிக்கப்படாத குழந்தைகளே குறிப்பிட்ட வயதுக்குப் பின் தவறான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடுகிறார். நண்பர்கள் திருமண பந்தத்தில் இணையும்  தம்பதியருக்கு இந்த புத்தகத்தை பரிசாக அளிக்கலாம்.”

  திரு. சத்தியமூர்த்தி அவர்களின் கருத்துக்களைக் கேட்டபோது, ‘மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய  விரும்புகிறீர்களோ, அதையே நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்’ என்று பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் மொழியப்பட்ட பைபிள் வசனமே நினைவுக்கு வந்தது. இவர், புத்தகங்கள் வாசிப்பதோடு நிறுத்திவிடாமல், தம் மனம் கவர்ந்த புத்தகங்கள் குறித்த விமர்சனத்தை youtube தளத்திலும் வலையேற்றி வாசகர்களிடையே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி வருகிறார்.

சுமதி, முதுகலைத் தமிழாசிரியர்,

ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை:

“எனக்கு

கவிப்பேரரசர் வைரமுத்து

கவிதைகள் மிகவும் பிடிக்கும். அவருடைய சினிமாப் பாடல்களை விரும்பிக் கேட்பதுண்டு. நான் ரசித்துப் படித்த புத்தகமென்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால்,

வைகறை மேகங்களைச்

சொல்லலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் படித்த புத்தகம் இது.

வைரமுத்து

அவருடைய  ஒவ்வொரு கவிதையிலும் புதுமையான சிந்தனை, அழகான வரி அமைப்பு, இயற்கை வர்ணனைகள் என எல்லாமே வியக்கும்படியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, என்னுடைய கல்லூரிப் பருவத்தில் நான் எழுதிய கவிதைகளையும், புதிதாக எழுதிய சில கவிதைகளையும் தொகுத்து, இளம் துளி பதிப்பகத்தின் உதவியோடு, ‘குடைக்குள் கொடை’ என்று தலைப்பிட்டு ஒரு கவிதைப் புத்தகத்தை எழுதுவதற்கு அந்த புத்தகம்தான் தூண்டுகோலாக இருந்தது.”

 அக்கா சொன்ன பிறகு, அந்த வைகரை மேகங்களைத் தேடினேன்.  வைகறை மேகங்கள் கவிஞரின்  முதல் கவிதைத் தொகுப்பு என்பதும், அவரது 17 வயதுக்குள் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு 19ஆவது வயதில் வெளியிடப்பட்டது என்பதும், அந்தத் தொகுப்பிற்கு கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அணிந்துரை எழுதி இருக்கிறார் என்பதும்  படித்து வியந்த தகவல்கள்.

புத்தக வாசிப்பிலும்  பெண்களுக்குள் ஒரே மாதிரி ரசனை இருக்க முடியுமா என்று  வியப்படையச் செய்தது இரு சகோதரிகள் தெரிந்தெடுத்த ஒரே புத்தகம். ஆம்.  வேலூரில் குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவரும் திருமதி. தாஹிராவும், ஒரு தனியார் தளத்தில் பணியாற்றி வருகின்ற சகோதரி அபிநயாவும்

தீபம் நா பார்த்தசாரதி

அவர்கள் எழுதிய

‘ஆத்மாவின் ராகங்கள்’

புத்தகத்தைத் தங்களுக்குப் பிடித்ததாகச் சொல்கின்றனர்.

 “பொதுவாக,  பார்த்தசாரதி அவர்களுடைய புத்தகங்களில் ஒரு சமூகக் காரணமும், ஒரு தெய்வீகக் காதலும் வெளிப்படுவதைக் காணலாம்.  இந்தப்  புத்தகமானது ஒரு காந்திய சகாப்த நாவல். விடுதலைப் போராட்ட  காலகட்டத்தில் தமிழகத்தின் சூழல், போராட்டக்களம், சிறைச்சாலைகள் உள்ளிட்ட ஒவ்வொன்றையும் மிகத் துல்லியமாக படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.

தீபம் நா. பார்த்தசாரதி

காந்தியின் மீதிருந்த தீவிர பக்தியால் கதாநாயகன்  ராஜாராமன் தம் பெயரை காந்திராமன் என்று மாற்றிக்கொள்கிறார். தேசத்திற்காக இவர் உருக,  இவரை உருகி உருகிக்   காதலிக்கிறார் மதுரம். அது சாதாரணமானதல்ல; தெய்வீகத் தன்மை பொருந்தியது.

சுதந்திரத்திற்கு பிறகுதான் திருமணம் என்ற தீர்க்கமான முடிவோடு, இருவருடைய காதலும் சுவாரஸ்யமாகப் பயணிக்கிறது.  விடுதலைப் போரில் கலந்துகொண்டு காந்திராமன் சிறை சென்ற காலத்தில், அவருக்காகப் பணம், நகை, உறவுகள் உள்ளிட்ட பலவற்றையும் இழந்த மதுரம்,  தேசபக்தியோடு, அவர் இடத்தில் இருந்து அவர் செய்யக்கூடிய எல்லாவற்றையும் சிறத்தை  எடுத்து மறைமுகமாகச் செய்து முடிக்கிறார்.

 அவர் சிறையில் இருந்து திரும்புவதற்குள் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறார். அவர்மீது இருந்த தெய்வீகக் காதலால், திருமணம் செய்துகொள்ளாமலே தம் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்.

  வாசிப்போம் தளத்தில் உணர்வுபூர்வமாகப் படித்ததாகச் சொல்லும் சகோதரி அபிநயா, இந்த நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் காதலுக்கான வார்த்தைகளும், ஒவ்வொரு சூழலுக்குமான வர்ணனைகளும் பிரமிக்க வைப்பதாக கூறுகிறார். அவர் முதன்முதலில் எழுதிய புத்தக விமர்சனம் இந்த நாவலைப் பற்றியது என்றும், அந்த நூல் விமர்சனத்தைத் தம் புத்தகத்தில் எழுதியிருப்பதாகவும் பகிர்ந்துகொண்டார்.

பழனிக்குமார், தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்,

அரசு மேல்நிலைப்பள்ளி, ரெங்கசமுத்திரம், தேனி:

“நான் ரசித்துப் படித்த நாவல் எதுவெனில்,

சு. சமுத்திரம்

அவர்கள் எழுதிய

‘வேரில் பழுத்த பலா’

என்ற குறுநாவல். நண்பர்களிடமிருந்து புத்தகத்தைப் பெற்று,Insta Reader அப்ளிகேஷனைப் பயன்படுத்திப்  படித்தேன். எழுத்தாளருக்குரிய அங்கீகாரமாகிய சாகித்திய அகாடமி விருதை சமுத்திரம் அவர்களுக்குப் பெற்று தந்த நூல் இது. 9 அத்தியாயங்களைக் கொண்ட குறுநாவல். விறுவிறுப்போடு படிக்கத் தோன்றும் புத்தகம்.

ஒரு நேர்மையான அரசியல் அதிகாரி, குடும்பத்திலும் சமூகத்திலும் பணிச்சூழலிலும் சந்திக்கும் சவால்களும் அவற்றிற்கான தீர்வுகளும் புத்தகத்தின் கருப்பொருளாகும்.  இந்த கதையில் முதன்மை நாயகன்  சரவணன். அரசுத் தேர்வு எழுதி அலுவலகத்தில் பணிவாய்ப்பைப் பெற்று, நேர்மையோடு செயல்படுவதால் பல இன்னல்களைச் சந்திக்கிறார். அதே அரசு  அலுவலகத்தில் தேர்வின் மூலம் நியமனம் பெறுகிறார் தாழ்த்தப்பட்ட பெண் அன்னம்.  ஜாதி காரணமாக அலுவலகப் பணியாளர்கள் அவரைத் தவிர்க்க, அவருடைய திறமையை அங்கிகரிக்கும்  சரவணன், அவர் மேல் காதல் கொண்டு, முறையாக திருமணம் செய்து கொள்கிறார்.

சு. சமுத்திரம்

குடும்பத்தில் தங்கை வசந்தாவின் கண்டவுடன் காதலுக்கு முறயான தீர்வை கண்டறிவதோடு, நேர்மை தவறாத  அண்ணன் இறந்துவிட, குடும்பத்தோடு வசிக்கின்ற அன்னைக்கும் ஆதரவாகச் செயல்படுகிறார்.  அவருடைய அண்ணியும் அவருக்கு நிறைய இடர்பாடுகளைத் தீர்க்க ஆலோசனைகளை வழங்குகிறார். இன்னும் சுவையான பல கதாபாத்திரங்களுடன் விறுவிறுப்பாக நகர்கிறது நாவல். அவர் பணியாற்றும் அலுவலகத்தைச் சார்ந்தவர்களே, அவருக்கு எதிராக உயர் அதிகாரிகளுக்குக் கடிதங்களை எழுதிவிடுகின்றனர். அதுபோன்ற நிறைய பிரச்சனைகளுக்கு நேர்மையான முறையில் தீர்வு காண்கிறார் சரவணன். 

மேலும்,  நாம் எங்கெங்கோ உள்ள நண்பர்களைத் தேடி சுவைபடப்  பழகிவிடுகிறோம். நம் நாயகன் தமக்கு அருகில் உள்ள பெண்ணின் எளிமையையும் திறமையையும் கண்டு பழகி, நமக்கான அறிவுரையைப் பகர்ந்து செல்கிறார். இப்படியாக சிறப்பான கதாபாத்திர வடிவமைப்புடன், அருமையான நடையில் எழுதப்பட்ட நாவல் இது. எவ்வளவோ புத்தகங்களை எழுதியிருந்தாலும் அவருக்கான விருதைத் தேடித் தந்தது இந்தப் புத்தகம்தான்.  நண்பர்களே! இந்தப்  புத்தகத்தைப் படித்து நேர்மையோடு  சுவைபட வாழ்வோம்.

ரங்கநாதன், பேராசிரியர்,

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி, உசிலை:

“நான் படித்து ரசித்த புத்தகங்களில் என் மனதில் ஆழப்பதிந்த முக்கியமான புத்தகம்

ராகுல சாங்கிருத்யனின்

‘வால்காவிலிருந்து  கங்கை வரை.’

இவர் சிறந்த  வரலாற்று ஆய்வாளர்; தேர்ந்த எழுத்தாளர்.  இந்தப் புத்தகத்தில் இந்தியா எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதைக் கதைகள் வடிவில் விளக்கிச் சொல்லியிருப்பார். அந்தக் கதைகளில் ஒரு சிறிய கூறை  மட்டும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விளைகிறேன்.

இரண்டு துறவியர். மூத்தவர் இளையவருக்குப் பயிற்றுவித்துக்கொண்டிருந்தார். ஒருநாள் இருவரும் நதிக்கரையில் தியானத்தில் அமர்ந்திருந்தபொழுது கடுமையான சுழல்காற்று. ஆற்றில் சுழிசுழியாய் அலைகள் பெருகத் தொடங்கின.  அங்கே ஒரு அபாயக் குரல். ஒரு பெண்மணி  ஆற்றின் அக்கரைக்குச் செல்ல  வழி அறியாமல் தவித்து அழுது உதவி கேட்கிறார். பெரியவர் உதவ மறுக்கிறார். மனிதாபிமானத்தோடு செயல்படத் துணிந்த சிறியவர், ‘உங்களுடைய பேச்சை மீறுவதற்கு மன்னிக்கவும்’ என்று கேட்டபடி அந்தப் பெண்ணைத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு வந்து அக்கரையில் போய் இறக்கிவிடுகிறார்.

ராகுல் சாங்கிருத்யாயன்

நீந்திக் கரையைக் கடந்த பெரியவர், சிறியவரிடம், ‘நீ செய்தது தவறு. ஒரு பெண்ணைத் தொட்டுத் தூக்கியது, கரைவரை கொண்டு சேர்த்தது   அத்தனையும் தவறு’ என்று கடிந்தபடியே ஆசிரமத்தை அடைந்துவிடுகிறார். ஆசிரமத்திலும் அந்தக் கதை தொடர்கிறது. எல்லோரிடமும் கருத்துக் கேட்கிறார். சிலர் சிறியவருக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் சலசலப்பை ஏற்படுத்தியபடி,  அவரவர்  கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். சிறியவர் ஒரு வாய்ப்பைக் கேட்கிறார்.  கொடுக்கப்பட்டபோது, ‘நான் அந்தச் செயலைச் செய்து முடித்தவுடன், அதாவது  அந்தப் பெண்ணை இறக்கிய உடனே அதை மறந்து விட்டேன். ஆனால்  இந்தப் பெரியவர் அதை மனதில் சுமந்துகொண்டு என்னைத் திட்டியபடியே  வந்ததோடு, இப்பொழுதுவரை அதைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்’ என்று சொல்கிறார்.

 இப்படியாக நாம் அந்தந்த விஷயங்களை அவ்வப்போதே விட்டுவிட வேண்டும் என்ற ஒரு ஆழமான கருத்து இந்தக் கதை்க்குள் பொதிந்திருப்பதை நான் காண்கிறேன். இது இன்றும் என் மனதில் நிலைத்திருக்கிறது. இந்த புத்தகமும் நிறைய வரலாற்று அம்சங்களோடு வாழ்வியல் கருத்துக்களையும் நமக்கு தொடர்ந்து விளக்குகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது பெற்றுப் படித்து மகிழுங்கள்” 

ரா. பாலகணேசன், முதுகலைத் தமிழாசிரியர்,

அரசு மேல்நிலைப்பள்ளி, ஜோகில்பட்டி:

“நான் அண்மையில் படித்து ரசித்த புத்தகம்

‘சிந்துவெளிப் பண்பாட்டில் திராவிட அடித்தளம்’

என்னும்

R. பாலகிருஷ்ணன்

அவர்கள் எழுதிய புத்தகமாகும்.  இவர் தமிழில் இளங்கலை முதுகலை படித்து, தமிழிலேயே ஐஏஎஸ் தேர்வெழுதி ஒடிசா மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தன் பணி நிமித்தமாகப் பயணித்துக்கொண்டிருந்தபொழுது, தமிழி என்ற பெயர்ப்பலகையைப் பார்க்கிறார். இந்த  நூலுக்கான அடித்தளம் அங்கேதான் உருவாகிறது.

சங்க இலக்கியங்களில் தமிழ்ப் பெயர்களை  ஊர்ப் பெயர்கள், மனிதப் பெயர்கள், விலங்கு பெயர்கள், பறவைப் பெயர்கள் என வகைப்படுத்தி  ஆராயத் தொடங்குகிறார். ஆராய்ச்சியின்போது,  எண்ணற்ற  பெயர்களை கண்டுபிடிக்கிறார். நன்னன் என்ற தமிழ்ப்பெயர்,  கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற இடப்பெயர்கள் இவற்றோடு புறநானூறு மற்றும் திருக்குறள் நூல்கள் சுட்டக்கூடிய கவரிமான் விலங்கு இமையமலை அடிவாரத்தில்  வாழ்ந்திருப்பதை உறுதி செய்கிறார்.\

 சமஸ்கிருத திசைப்பெயரான மேற்கு என்பது  இறுதியையும், கிழக்கு என்பது பூர்விகத்தையும் குறிப்பிடுகின்றன.  இங்கு, கிழக்கு என்பது கீழ் என்பதையும், மேற்கு என்பது மேல் என்பதையும் குறிப்பிடுவதாக வரையறுத்து, திராவிடர்கள் மலை மேலிருந்து வந்தவர்கள் என்ற கருத்தைத் தெளிவாகப் பதிவுசெய்கிறார். இது சங்க இலக்கியங்களில் திராவிட அடித்தளத்தை ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்.  இந்தப்   புத்தகத்தைப் புத்தகப்ப் புதையல்  என்ற குழுவில் சில நண்பர்கள் அச்சு நூலை வாங்கி, ஓசிஆர் மூலம் நாம் படிக்கும்படி மின்னூலாக  மாற்றித்  தருவார்கள். 20 பேர் சேர்ந்து பயணிக்கும் குழுவில் பெற்று படித்த நூல் இது.”

 விழிச்சவால்,  விரல் மொழியர்  பத்திரிகைகளின் ஆசிரியர் என்ற வகையில் பார்வையற்றோரை படிப்பாளிகளாகவும் படைப்பாளிகளாகவும் பொதுத்தலத்திற்கு அறிமுகம் செய்து, சிறப்பாக வழிகாட்டி வருபவரின் தெரிவும் சிறப்பாகவே இருக்கிறதல்லவா?

கோபாலகிருஷ்ணன், தமிழ்ப்பேராசிரியர்,

அரசு கலைக்கல்லூரி, மன்னார்குடி:

“இளங்கலை மூன்றாம் ஆண்டு பிரிவு உபசார விழாவிற்காக “வானம் வசப்படும்” என்ற சில அறிஞர்களின் வரலாறுகள்  தொகுக்கப்பட்ட அச்சுப்புத்தகத்தை படிக்க நேர்ந்தது. இது ஆடியோ வடிவில் கிடைப்பதால் நம் நண்பர்கள் பலரிடம் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை அறிஞர்களுடைய  வரலாறுகளுமே வியப்பாகவும், புதிய புதிய கருத்துக்களைச் சொல்வனவாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்திருக்கும். அவற்றுள், முதல் வகுப்பிற்குச் செல்லாமல், அரசியல், வர்த்தகம், இலக்கியம்,  அறிவியல் என நான்கு துறைகளில் சிறந்து விளங்கிய ஆகச்சிறந்த ஆளுமை

பெஞ்சமின் பிராங்கிளின்

என்ற தகவல்  மெய்சிலிர்க்க வைத்தது.

1706இல், அமேரிக்காவின் பாஸ்டன் நகரில், 17  குழந்தைகளில் பத்தாவதாக பிராங்கிளின் பிறந்த குடும்பத்தில் வறுமையே ஆட்சி செய்து கொண்டிருந்தது. சோப்புக்கட்டி மற்றும் மெழுகுவர்த்தி தயாரித்து விற்ற தந்தை வியாபாரத்தில் பங்கேற்றபடி, நான்கு மொழிகளைக் கற்றுத் தேர்கிறார். அடுத்தடுத்து நிறைய புத்தகங்களைத் தேடித்தேடி, புழுபோல வரிவரியாகப்  படித்து அறிவை வளர்த்துக்கொள்கிறார். சிறுவயதிலே கவிதைகளை எழுதுகிறார். தாம் எழுதிய கவிதைகளைப் பெயர்  குறிப்பிடாமல் அண்ணனின் அச்சகத்தில் அச்சுக்கு அனுப்புகிறார்.

1720இல் பென்சில்வேனியா கெஜட் என்ற பத்திரிக்கையை விலைக்கு வாங்குகிறார். 1724இல் பேர் ரிச்சர்ட்ஸ் பத்திரிக்கையைப் பதிப்பித்து உலகப்புகழ் பெறுகிறார். இதுதவிர அறிவியலில் அவர் செய்த சாதனை அளப்பரியது. இடிதாங்கி, முதியோர் பயன்படுத்தும் கிட்டப்பார்வை மற்றும் எட்டப்பார்வையைச்  சரி செய்யும் கண்ணாடி, செயற்கை உரங்களின் பயன்பாடு, குறைந்த  எரிவாயுவில் அதிக வெப்பம் தரும் அடுப்பு  உள்ளிட்ட பல அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் மிகப் பெரும் சாதனையாளராகத் திகழ்கிறார்.

நடமாடும் நூலகத்தை அறிமுகம் செய்கிறார். முதல் மருத்துவமனையை உருவாக்குகிறார். அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை உருவாக்குகிறார். சுதந்திர அமெரிக்காவின் அரசியல் சட்ட வரைவுக்குழுவில் முக்கியப் பங்கு வகிக்கிறார். சுதந்திர அமெரிக்காவின் வெளியிடப்பட்ட இரண்டு அஞ்சல் தலைகளில் முதலாவது ஜார்ஜ் வாஷிங்டன் அவருடையது; இரண்டாவது பிராங்கிளினுடையது. அவரது எந்தக் கண்டுபிடிப்பிற்கும் காப்புரிமம் பெற விரும்பவில்லை.

அவரது மேற்கோள்கள் இன்றளவும் பல பேச்சாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. நான் ரசித்த ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ‘இறந்த பிறகும் ஒருவர்  மறக்கப்படாமல் வாழ வேண்டுமென்றால், சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டும்; அல்லது பிறர் படைக்கும் அளவுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் .’

பொதுவாகப் பார்வையற்றோருள் பெரும்பாலோருக்கு செந்தமிழ் பேச்சு இயல்பாகவே வசப்பட்ட போதும், தம் வசீகர பேச்சால் அரங்கையே கட்டிப்போடும் திறமை ஒரு சிலருக்கு மட்டுமே உண்டு. அந்த வகையில் நான் கண்டு வியந்த பேச்சாளர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள்.

தாம்  படிக்க விரும்பிய புத்தகத்தைத் தேடி பல மைல்கள் சென்ற ஆபிரகாம் லிங்கன் போல, மேற்சொன்ன பிரபலங்கள்முதல் புத்தக வாசிப்பை நேசிக்கும் அத்தனை பார்வையற்ற உறவுகளும், தாம் விரும்பும் புத்தகத்தைப் படிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றுவிடுகின்றனர். அச்சுக்குத் தயாராகும் எல்லா  நூல்களும் கருத்தில்கொள்ளப்பட்டு, மின்னூலாகத் தொழில்நுட்பத்தின் உதவியோடு வடிவமைக்கப்பட்டு, பார்வையற்றோர் வாசிக்கப் பயன்படுத்தும் வலைதளங்களில் அச்சேற்றும்போதுதான் அந்தப் புத்தகம் முழுமையான வெற்றியை அடைவதாக நான் கருதுகிறேன். புத்தக வாசிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பட்டியலிட்டால் பல புத்தகங்களே எழுதிவிடலாம். தொழில்நுட்பம் சாதகமாகி வருகின்ற இன்றைய காலகட்டத்தில், புத்தக வாசிப்பு பார்வையற்றோருக்கும் சாத்தியமாக்கப்பட  வேண்டியதன் அவசியம் ஊடகங்களுக்கும்  உணர்த்தப்பட வேண்டும். வாசகர்கள் இருக்கும் வரை வாசிப்பு முடியப்போவதில்லை  என்ற ஆஸ்கார் ஒ்ய்ல்டின் கனவு கைகூடிட,  வாசகர்களும், புத்தகங்களும், அச்சகங்களும், வலைதளங்களும், எழுத்தாளர்களும் மொத்தத்தில், இலக்கியப் பணி செய்யத் தம்மை அற்பணித்த அனைத்து இதயங்களும்  ஒருசேர உழைக்கட்டும்.

***தொடர்புக்கு: celinmaryx@gmail.com


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

2 replies on “பேட்டி கட்டுரை: புத்தாக்கத் தோழர்கள்!”

பலருடைய படைப்பு திறமையை ஒரே இடத்தில் பார்க்க முடிந்தது. அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள் மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகள் 🎂🍎❤🌹

Like

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.