தொடர்: விழியறம் விதைத்தோர் – (2), உஷா ராமகிருஷ்ணன்

தொடர்: விழியறம் விதைத்தோர் – (2), உஷா ராமகிருஷ்ணன்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

தொடர்: விழியறம் விதைத்தோர் – (1), உஷா ராமகிருஷ்ணன்

தூத்துக்குடியை விட்டு நாங்கள் மீண்டும் சென்னைக்குக் குடிபெயர்ந்தோம். அது 2007. மீண்டும் சிறு வெற்றிடம். எப்படி நிரப்புவது என்று யோசிப்பதற்குள் ஒரு வாய்ப்பு.

பதிலி எழுத்தர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு, திருமதி. மகேஸ்வரி அவர்கள், ‘I Scribe Organisation’ என்ற அமைப்பைத் தொடங்கினார்கள். அந்த அமைப்பில் பார்வையற்றவர்களுக்கு மட்டுமல்ல, நிறைய உடல்ச்சவால்கொண்ட (Physically Handicapped) தேர்வர்களுக்காகவும் பதிலி எழுத்தர்களை ஒருங்கிணைத்தார்கள். எனது வீடு தி.நகரில் இருந்ததால், நான் லயோலா கல்லூரி, சாரதா வித்யாலயா என அருகிலிருக்கும் இடங்களைக் கேட்டுப் பெற்றுத் தேர்வெழுதச் செல்வேன். அப்போதுதான் முதன்முதலாக உடல்சவால்கொண்டவர்களுக்காகவும் தேர்வெழுதத் தொடங்கினேன்.


உஷா ராமகிருஷ்ணன்
திருமதி. உஷா ராமகிருஷ்ணன் பற்றி தி இந்து

2009ல், ‘I Scribe Organisation’ அமைப்பின் சார்பில் நான் உட்பட 10 தன்னார்வ வாசிப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கிற வித்யாசாகர் பள்ளியில் ஒரு பயிற்சி கொடுத்தார்கள். டிஸ்லெக்சியா (dyslexia) குழந்தைகள், ஆட்டிஸ்டிக் (autistic children)  கற்றல் குறைபாடு (Learning Disability) குழந்தைகளுக்கு எப்படித் தேர்வெழுதுவது, அவர்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்து எங்களுக்குக் கற்பிக்கப்பட்டது.

அந்தக் குழந்தைகளுக்கு எப்படி வாசிப்பது, எந்த நிலையில் அமர்ந்து படிப்பது, அவர்களில் சிலருக்கு வாசிக்கவரும், சிலருக்கு எழுத மட்டுமே வரும். இப்படி வெவ்வேறு திறன் கொண்ட குழந்தைகளை எப்படிக் கையாள்வது, மீத்திறன் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்வது போன்ற நிறைய விஷயங்களை நாங்கள் அந்தப் பயிற்சியின் மூலம் அறிந்துகொண்டோம்.

மூன்றுமுறை வாசிக்க வேண்டும்

நாங்கள் தாம்பரத்தில் குடியேறியபோது, டிஸ்லெக்சியா, மீத்திறன் (Hyper Active) குழந்தைகளுக்கான பள்ளி ஒன்று இயங்கியது. மேற்கு தாம்பரத்தில் அமைந்திருந்த அந்தப் பள்ளியின் பெயர் ‘Good Earth School.’

அங்கே அந்தப் பிள்ளைகளுக்கு கற்றல் சார்ந்து எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அவர்கள் எங்கு அமர்ந்து வேண்டுமானாலும் படிக்கலாம், என்ன வேண்டுமானாலும் விளையாடலாம். ஒரு புதுமாதிரியான பள்ளி அது.

அடுத்து ‘வள்ளுவர் குருகுலம்.’ கிழக்குத் தாம்பரத்தில் அமைந்திருந்த பள்ளி அது. அங்கே ஒரு மீத்திறன் குழந்தைக்குத் தேர்வெழுதினேன். நான் எங்கு யாருக்குத் தேர்வெழுதச் சென்றாலும், ஸ்கேல் உட்பட தேர்வுக்கான அனைத்து உபகரணங்களையும் கொண்டு செல்வதுதான் வழக்கம். ஆனால், அங்கே என்னுடைய பொருட்கள் அனைத்தையும் வெளியே வைத்துவிடச் சொன்னார்கள். அந்தப் பையனின் கவனத்தைச் சிதைக்கும் என்பதால், பேனா மூடியைக்கூட நான் வெளியேதான் வைக்கவேண்டியிருந்தது.

வினாத்தாளை மூன்றுமுறை அவனுக்குப் படித்துக்காட்ட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அப்படியே நானும் செய்தேன். முதல்முறை வாசித்தேன் அவன் கவனித்தான், இரண்டாம் முறை ஏற்பதுபோல் சின்னதாக ஒரு பாவனை செய்தான். மூன்றாம் முறை அவன் பதிலளிக்க முடிவு செய்தான். எப்படி தெரியுமா?

நான் கேள்வியை வாசித்ததும், அவன் குடுகுடுகுடுவென ஓடிப்போய், அந்த அறையின் எதிர்முனைச் சுவரைத் தொட்டு மீள்வான். பிறகு பதில் சொல்வான். இப்படித்தான் ஒவ்வொரு வினாவுக்குமான விடைகளை அவன் ஓடிக்கொண்டே சொல்லி முடித்தான். அந்த அனுபவம் எனக்குப் புதிதாக இருந்தது.

நாங்கள் வசித்த கிழக்குத் தாம்பரத்திலேயே அதுவும் எங்கள் வீட்டுக்கு எதிரே மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி எனப் பெயர்ப்பலகை இருந்தது. உள்ளே சென்று பார்த்தேன். மிகச் சிறிய பள்ளி, பத்தே பத்து மாற்றுத்திறன் குழந்தைகளை வைத்துக்கொண்டு, இரண்டு உதவியாளர்கள் சகிதம் ஒருவர் மட்டும் அவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் பெயர் மிருணாளினி. சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்திய பள்ளியில் பணியாற்றியவர். அவரிடம் சென்று நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.

அவருடைய பணியில் நான் அவருக்கு ஏதாவது உதவலாமா எனக் கேட்டேன். பிறகு ஹரி என்கிற ஆட்டிஸ்டிக் குழந்தைக்குக் கற்பிக்கத் தொடங்கினேன். ஹரிக்கு 14 வயது. எழுதச் சொல்லிக்கொடுத்தால் எழுதுவான். அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி, ஹரிக்கு என்னவெல்லாம் தெரியும் என்பதைத் தெரிந்துகொண்டு அதைத் தொகுக்க விரும்பினேன். அவனுடைய நோட்டுப் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று தொகுத்தேன்.

ஹரிக்கு நூறு வார்த்தைகள் தெரிந்திருந்தது. 100 வரை எண்களையும் ஒப்பித்தான். இப்படி பத்து குழந்தைகளுக்கும் என்னென்ன தெரியும் என்பதை அவர்களின் நோட்டுப் புத்தகங்கள் வாயிலாக நான் தொகுத்துத் தந்ததில் மிருணாவுக்கு சந்தோஷம். ஹரியின் அம்மாவுக்கோ வார்த்தைகளே வரவில்லை. தன் குழந்தைக்கு இவ்வளவு தெரியுமா என அவர் வியந்தார். பிறகு ஹரி சாதாரணப் பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டான்.

என்னுடைய செயல்கள் எதுவுமே என் குடும்பம் சார்ந்த அன்றாட நடவடிக்கைகளில் குறுக்கிடாதபடிப் பார்த்துக்கொள்வதில் நான் மிகவும் கவனமாக இருப்பேன். தேர்வெழுதுவதைக் காரணம் காட்டி, குடும்பத்தைக் கவனிக்கவில்லை என்று என் கணவரோ, பிள்ளைகளோ என்னை ஒருநாளும் குறை சொன்னது கிடையாது. நானும் ஓராண்டின் அந்த 25 தேர்வு நாட்களைக் கணக்கிட்டு, அவற்றிற்கு முன்பிருந்தே தயாராகிவிடுவேன். 25 நாட்கள் என்றால், பள்ளிகளுக்கான காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு நாட்களான 15 நாட்கள் மற்றும் கல்லூரிகளுக்கான இருபருவத் தேர்வுகளுக்கு பத்து நாட்கள்.

செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளில் காலாண்டு என்றால், ஆகஸ்டிலேயே என் வீட்டின் முக்கிய வேலைகளை முடித்துவிடுவேன். தேர்வு நாட்களில்கூட என் கணவர் மற்றும் பிள்ளைகளுக்குக் காலை உணவு வழங்கி, அவர்களை அனுப்பிவிட்டுத்தான் நான் தேர்வுக்கே புறப்படுவேன். சில நேரங்களில் வாசித்தல் தொடர்பான பணிகள் இருக்கும். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தேர்வு கருதி விரைந்து பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதுபோன்ற சூழலில், என் மகள்கூட வாசித்துப் பதிந்து கொடுத்திருக்கிறாள். என் கணவர்தான் என்னைத் தேர்வு மையங்களில் விட்டுச் செல்வார். ஆகவே என் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் என் குடும்பத்தின் முழு ஒத்துழைப்பும் எனக்கு எப்போதுமே உண்டு.

கோபியின் பணத்தைக்கூட நான்தான் வைத்திருப்பேன். அவருக்கு வரும் மணி ஆர்டர் (MO) என் முகவரிக்குத்தான் வரும். “இது கோபிக்கு வந்த மணி ஆர்டர், நீங்கள் கோபிக்கு யார்?” என்று தபால்க்காரர் கேட்பார். “நான் கோபியின் டீச்சர்” என்று சொல்லிவிடுவேன். ‘scribe’ என்றால் யாருக்கும் புரியப்போவதில்லையே.

மீண்டும் தக்கர்பாபா வளாகத்தில்

2015 சென்னைப் பெருவெள்ளத்தை மறக்கவே முடியாது. அந்தச் சமயத்தில்தான் என் மகளுக்குத் திருமணம் நடந்தது. நான் தக்கர்பாபா வளாகம் போனபோது, தண்ணீர் உள்ளுக்குள் புகுந்து எல்லாவற்றையும் நாசம் செய்திருந்தது. செய்வதறியாது தன்னந்தனியாக நின்றிருந்த உத்திராபதி சாரைப் பார்த்தேன். பிறகு பலரிடமும் உதவிகள் பெற்று நிலைமையைச் சரிசெய்தோம். அப்போதிலிருந்து நானும் என் கணவரும் தொடர்ந்து தக்கர்பாபா செல்லத் தொடங்கினோம். அங்கே எங்களுக்காக நிறைய பணிகள் ஒதுக்கப்பட்டிருக்கும். நானும் என் கணவரும் மாலை 6.30 மணிக்கு வளாகத்துக்குள் நுழைந்தால், இரவு 9, 9.30 கூட ஆகிவிடும். நாங்கள் தக்கர்பாபா சென்றுவிட்டால், எங்கள் பிள்ளைகள்கூட எங்களுக்கு போன் செய்ய மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும், நாங்கள் அங்கே பிஸியாக இருப்போம் போனை எடுக்க மாட்டோம் என்று.

பார்வையற்றவர்களுக்கு வாசித்துக் காட்டும் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள்
திரு. ராமகிருஷ்ணன் அவர்கள்

கூட்டங்களுக்கான தீர்மானங்களை தொகுத்து எழுதுவது, கணக்கு வழக்குகளை எழுதுவது, விழாக்கள் தொடர்பான பல்வேறு முன்னேற்பாடுகளில் ஈடுபடுவது என இருவரும் நிறைய பணிகள் செய்தோம்.

அப்படித்தான் ஒரு விழா மேடையில் கிட்டத்தட்ட 13 சிறப்பு விருந்தினர்கள் இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு அன்பளிப்பும், பொன்னாடையும் சரியாக ஒழுங்குபடுத்தி வழங்க வேண்டிய பொறுப்பு என்னுடையது. நான் ஒவ்வொருவருக்காய் அதை வழங்குவதில் ஈடுபட்டிருந்தேன். அந்தச் சிறப்பு விருந்தினர்களில் ஒருவர் எழுந்து, தான் பார்வையற்றவர்களுக்காக இணைய நூலகம் வைத்திருப்பதாகப் பேசினார். அதன்பெயர் ‘வாசிப்போம் வாருங்கள்’. 25 வயதே ஆன அந்த இளைஞரை கூட்டம் முடிந்ததும் ஓடிச் சென்றுசந்தித்தேன். என்னிடம் இருக்கும் நிறைய புத்தகங்களை அவர் தனது நூலகத்துக்கு்ப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றேன். அவர்தான் வாசிப்போம் இணைய நூலகத்தை நடத்திவரும் திரு. ரவிக்குமார் அவர்கள்.

திரு. ரவிக்குமார் அவர்கள் என் வாசிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் என்றுதான் சொல்ல வேண்டும். உத்திராபதி சாரைப் பொருத்தவரை “நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வாசித்துப் பதிவு செய்யுங்கள். எங்களுக்கு content தெரியும் என்பதால் பிரச்சனை இல்லை” என்று சொல்லிவிடுவார். ஆனால், ரவிக்குமாரைப் பொருத்தவரை, வாசிப்பதற்கான பிரத்யேக நெறிமுறைகளை எனக்குச் சொல்லிக்கொடுத்தார். ஏசி அறையில் அமர்ந்து படிக்க வேண்டும். தாள் திருப்பும் சத்தம்கூடக் கேட்கக்கூடாது போன்ற பல நுணுக்கங்களை அவரிடம் நான் கற்றுக்கொண்டேன். வாசிப்போம் நூலகத்துக்காக நாங்கள் நிறைய ஒலிப்பதிவுகள் செய்தோம்.

வாசிப்புதான் என் stress free

திருமணமாகி என் மகன் மற்றும் மகள் இருவருமே வெளிநாட்டில் இருந்தார்கள். மகனுக்காகப் பெரும்பாக்கத்தில் வாங்கிய அடுக்ககத்தில் நானும் என் கணவரும் குடியிருந்தோம். கணவரின் பணி ஓய்வுக்குப் பின், நாங்கள் உறவினர்கள் அதிகம் இருக்கிற எங்கள் சொந்த ஊரான சிவகாசிக்கே போய்விடலாம் என்று முடிவு செய்தோம். ஆனால், என் மகன்தான் “அங்கே போய் இரண்டு மாதங்கள் உங்கள் உறவுகளுடன் நீங்கள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கலாம், அதன்பிறகு என்ன செய்வீர்கள்? இங்கே சென்னையில் உங்களின் பணி நிறைய பிள்ளைகளுக்குத் தேவையாக இருக்கிறது. நீங்கள் இங்கேயே இருந்து உங்கள் வாசிப்பை ஒலிப்பதிவை தொடர்ந்து செய்யுங்கள்” என்று அறிவுறுத்தினான். எப்போதாவது நான் கொஞ்சம் மனம் சோர்வாக இருப்பதைப் பார்த்தாலே, “அம்மா புத்தகம் வாசிங்க ரெக்கார்ட் பண்ணுங்க” என்று என்னை ஆற்றுப்படுத்துவான்.

ஒருமுறை எனக்குக் காலில் அடிபட்டு, நான் கட்டு கட்டிக்கொண்டு நடக்க இயலாமல் இருந்தேன். அப்போது என் கணவர் தூத்துக்குடியில் வேலை செய்துகொண்டிருந்தார். மகன் நவீன்தான், வீடு பெருக்குவது, தோசை சுடுவது என எல்லாவற்றையும் செய்து என்னைச் சாப்பிட வைத்துவிட்டு காலை 11 மணிக்கு வேலைக்குப் போவான். மாலை 3.30 மணிக்குக் கல்லூரியின் கடைசி வகுப்பில் அனுமதி பெற்று என் மகள் வரும்வரை நான் கழிப்பறைகூடப் போகாமல் அப்படியே அமர்ந்திருப்பேன். ரொம்பவும் மனதாலும், உடலாலும் முடங்கியிருந்த நாட்கள் அவை. அந்தச் சமயத்தில் என் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

நாகர்கோவிலிலிருந்து பேசுவதாகச் சொன்னார் அந்த நபர். பொதுவாக போன் எண் என் குடும்பத்தைத் தாண்டி யாருக்குமே தெரியாது. எப்படியோ கண்டுபிடித்து போன் செய்த அவர் ஒரு பார்வையற்றவர். தனக்கு முக்கியமான தேர்வு இருப்பதாகவும், நான்தான் அவருக்குப் புத்தகத்தைப் பதிவு செய்து தர வேண்டும் எனவும் அவர் கேட்டார். என்னால் முடியவே முடியாது என்றுதான் நினைத்தேன். அப்படியே அவரிடம் சொல்லிவிடலாம் என்றும் தோன்றியது. ஆனால், என் பிள்ளைகள் இருவரும் “இப்போதுதான் நீங்கள் வாசிக்க வேண்டும், இதுதான் சரியான தருணம்” என்று என்னை உற்சாகப்படுத்தினார்கள். நானும் அவருக்கு வாசித்துப் பதிவு செய்து கொடுத்தேன். உண்மையில் அவருக்கு வாசிக்கத் தொடங்கியதிலிருந்து என் கால்வழி மெல்லக் குறையத் தொடங்கியது. 45 நாட்கள் கழித்துக் கட்டுப் பிரித்தபோது, எல்லாம் நார்மல் என்று வந்தது. அந்த நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது.

நினைவுப் பெட்டகம் பிறந்த கதை

வாசிப்போம் இணைய நூலகத்துக்காக ஏராளமாக ஒலிப்பதிவுகள் செய்துகொண்டிருந்த நேரத்தில் முதல் கோவிட் லாக்டவுன் வந்தது. எல்லாமே முடங்கிவிட்டது. யாரையும் சந்திக்க முடியாமல், எங்கேயும் போக வழியில்லாமல், உலகமே சுருங்கி ஒரு அறைக்குள் வாழ்க்கை என்றாகிவிட்டது. வெளிநாட்டிலிருக்கும் என் பிள்ளைகளைக்கூட மீண்டும் பார்ப்பேனா என்றெல்லாம் மனம் அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. 2020 ஜனவரியில் உடலைப் பரிசோதித்தபோது எனக்கு எல்லாமே இயல்பு என்று வந்தது. ஆனால், ஏப்ரலில் மீண்டும் பரிசோதனை செய்தால், இரண்டு மூன்று வியாதிகள் குடியேறத் தொடங்கியிருந்தன. அப்போது, “நீங்கள் உங்கள் மனதில் பல்வேறு கவலைகளோடு அலைக்கழிந்துகொண்டிருக்கிறீர்கள், உங்கள் வாசிப்பை மீண்டும் தொடங்குங்கள்” என்று என் மருத்துவர் என்னை அறிவுறுத்தினார். ஆனால், எப்படிச் செய்வது? உலகமே முடங்கிக் கிடக்கிறது என்று யோசித்தேன்.

லாக் டவுன் நாட்களில் அவ்வப்போது கோபி எனக்கு போன் செய்து பேசுவார். ஒருநாள், “மேடம், இப்போ என்ன புத்தகம் படிக்கிறீங்க? உங்களால முடிஞ்சா நீங்க படிச்சு ரெக்கார்ட் பண்ணின புத்தகங்களை எனக்கும் போடுங்க. எனக்கு ரொம்ப போரடிக்குது” என்றார். இரண்டு மூன்று நாட்களில் சிங்காரவேலனும் அதையேதான் சொன்னார். “என்னால எதுவுமே படிக்க முடியல மேடம். எங்கேயும் வெளியே போகவும் வழியில்ல. எங்க ஊரு குக்கிராமம். எனக்கும் ஏதாவது படிச்சு அனுப்புங்களேன்” என்றார்.

எப்படி அனுப்புவது என்று கேட்டபோது, டெலகிராம் ஆப் பற்றி கோபி சொன்னார். எனக்கு மொபைலில் அதிகம் பரிட்சயம் கிடையாது. அதிகம் போனால், வாட்ஸ் ஆப்பில் போட்டோ பார்ப்பேன், மெசேஜ் அனுப்புவேன் அவ்வளவுதான். பிறகு என் பையனிடமும் அதுபற்றிக் கேட்டு, டெலகிராமில் ஒரு குழுவைத் தொடங்கினேன். அதற்கு ‘நினைவுப் பெட்டகம்’ என்று பெயரிட்டோம்.

முதல் சில நாட்கள் கோபியும் சிங்காரவேலனும் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தார்கள். பிறகு ஒவ்வொருவராகச் சேர்ந்து, இன்று 236 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 12 வாசிப்பாளர்களில் நான், வித்யா,  வித்யாவின் தோழி பாரதி, பாரதியின் தோழி சாரதா, என்னுடைய கல்லூரித் தோழி திலகவதி, திலகவதியின் அக்கா இந்திராணி மற்றும் என்னுடைய அக்கா மகள் ஸ்ரீதேவி ஆகியோர் ஆக்டிவாக இருக்கிறோம். இதுதவிர, திருமதி. கண்மணி, திருமதி. மீரா, திருமதி. செந்தாமரை ஆகியோர் தேர்வு காலங்களில் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறார்கள். நந்தினி என்கிற பெண் அவ்வப்போது தொழில்நுட்பம் சார்ந்து எங்களுக்கு உதவுகிறார்.

இங்கே நான் வித்யாவைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். 2016 அல்லது 17 என நினைக்கிறேன். ‘I Scribe’ மகேஷ்வரி மேடம் என்னை தி இந்து நாளிதழுக்கு ஒரு பேட்டி தரச் சொன்னார்கள். “மேடம் நீங்கள்தான் ‘I Scribe’ அமைப்பை நடத்தி வருகிறீர்கள். நீங்கள் பேட்டி கொடுப்பதுதான் சரியாக இருக்கும்” என்றேன். அவரோ நான்தான் பேட்டி கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதன்படியே தி இந்துவில் எனது புகைப்படத்தோடு பேட்டியும் வந்தது.

அந்தப் பேட்டியில்  reading service, writing exams போன்ற அனைத்து குறித்தும் விளக்கியிருந்தேன். எனது பேட்டியைப் படித்துவிட்டு முதன்முதலில் ஒரு ஐஏஎஸ் போன் செய்து என்னைப் பாராட்டினார். தொடர்ந்து பல அழைப்புகள் என்னைப் பாராட்டியும், என்னோடு இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தும் வந்தபடியே இருந்தன. கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள். எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்.

விஷயத்தை கோபியிடம் சொன்னேன். “அப்படியா மேடம் மிக்க மகிழ்ச்சி. ஆனால், இந்த நூறுபேரில் ஒருவர் தேருவார்களா பாருங்கள் என்று சொன்னார். நான் கோபியிடம் அப்படியெல்லாம் இருக்காது என வாதாடினேன்.

“மேடம், உங்களுக்குப் பேசின நூறுபேர்ல இரண்டாவது முறையா எத்தனைபேர் பேசுறாங்கனு பாருங்க, மூன்றாவது முறையும் பேசுறவுங்கதான் நிச்சயம் வருவாங்க” என்று அடித்துச் சொன்னார். உண்மையிலேயே கோபி சொன்னபடிதான் நடந்தது. முதலில் பேசிய நூறுபேரில் வெறும் 10 பேர் மட்டுமே இரண்டாவதாகப் பேசினார்கள். மூன்றாவது முறையாகவும் பேசியவர் வித்யா மட்டும்தான். தன்னார்வ வாசிப்புப் பணியில் என்னோடு அவர் இணைந்துகொள்ள விரும்புவதாகச் சொன்னார். நாங்கள் நேரில் சந்தித்தோம். அன்றிலிருந்து  இன்றுவரை கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் என்னுடைய எல்லாச் செயல்பாடுகளிலும் உடனிருப்பவர் வித்யாதான்.

திருமதி. உஷா ராமகிருஷ்ணன் அவர்களின் குரலைக் கேட்க:

நினைவுப்பெட்டகம் டெலகிராம் குழு பற்றி விரிவாகச் சொல்கிறேன் அடுத்த இதழில்.

***திருமதி. உஷா ராமகிருஷ்ணன் அவர்களின் அலைபேசி எண்: 9710581208
மின்னஞ்சல்: usharamki5@gmail.com
***தொகுப்பு: U. சித்ரா,
எழுத்தாக்கம்: சகா.
***அன்பு வாசகர்களே! வாசிப்பாளர்களாய், பதிலி எழுத்தர்களாய்த் தங்கள் விரலாலும் குரலாலும் விழியாலும் பார்வையற்றோரின் வாழ்வில் ஒளியேற்றிய தன்னார்வலர்கள் குறித்து உலகுக்கு அறிவிக்கும் சிறு முயற்சியே ‘விழியறம் விதைத்தோர்’ என்ற தொடர். தங்களுக்குத் தெரிந்த தன்னார்வ வாசிப்பாளர் குறித்துப் பதிவிட விரும்புவோர்,
thodugai@gmail.com என்ற எங்களின் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.
அல்லது 9080079481 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மூன்று நிமிடங்களுக்கு மிகாத குரல்ப்பதிவுகளாக அனுப்பிவையுங்கள்.
பிரெயில் மடல் எழுத விரும்புவோர், ஐந்து பக்கங்களுக்கு மிகாதவாறு எழுதி, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
தொடுகை மின்னிதழ்,
G1 சுனில் மெசியா,
30 டெலிபோன் காலனி,
2ஆவது தெரு,
ஆதம்பாக்கம்,
சென்னை 600088

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *