தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (3)

தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (3)

ஆக்கம் சித்ரா U. வெளியிடப்பட்டது

தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க:

பெற்றோருடன் சித்ரா

நான் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கதையை இப்பொழுது கூறினால் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். நான் பதினோராம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதியபின் இரண்டு வாரத்தில் எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் எங்களைத் தொடர்புகொண்டு பெற்றோரை அழைத்துவருமாறு கூறினார். நானும் என் அப்பாவும் சென்றோம்.

தலைமை ஆசிரியர் என் அப்பாவிடம், “அக்கவுண்டன்சியில் மதிப்பெண் மிகவும் குறைவாக எடுத்திருக்கிறாள்; இவளால் தொடர்ந்து படிக்க இயலாது, கடினமாக இருக்கும் அதனால் இப்பொழுதே வேறு பிரிவில் சேர்ந்து படிக்கவையுங்கள்” என்று  கூறினார். அப்போது நான், “இல்லங்க மேடம்! நான் எப்பாடுபட்டாவது படித்து தேர்ச்சி பெற்றுவிடுவேன் அதனால் தயவுசெய்து என்னைப் படிக்க அனுமதியுங்கள்” என்று மன்றாடினேன். அதற்கு அவர், “நீ படிக்கவில்லை என்ற காரணத்தினால் நாங்கள் withheld செய்யவில்லை. உன் பார்வைக்குறை காரணமாகவே இப்படிச் சொல்கிறோம். நீ மிகுந்த சிரமப்பட்டுப் படிக்க வேண்டியிருக்கும்” என்றார்கள். அதற்கு நான், “இல்லை இது என் அப்பாவின் கனவு; என்னை எப்படியாவது அரசுப்பணியில் சேர்க்க வேண்டும் என்று சிரமப்பட்டு இதில் என்னை சேர்த்தார். எனவே என் அப்பாவின் ஆசையை எப்படியாவது நான் நிறைவேற்றுவேன்; என்னால் முடிந்த அளவு நான் படித்து கண்டிப்பாகத் தேர்ச்சி பெற்று உங்களுக்கும் பெருமை சேர்ப்பேன்” என்று கூறினேன். பின்பு என்னைப் போன்று மூன்று மாணவர்களுக்கு result withheld செய்யப்பட்டது.

எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் “சரி உங்களுக்கு ஒரு மாதம் 12-ம் வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்படும். நடத்தி முடித்தபிறகு உங்கள் மூவருக்கும் அக்கவுண்டன்சியில் ஒரு தேர்வு வைப்போம். அதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் பன்னிரெண்டாம் வகுப்பில் இணையலாம்” என்று கூறினார். சரி என்று நானும் ஒப்புக்கொண்டேன். பின்பு ஒரு மாத காலத்திற்குப் பிறகு அக்கவுண்டன்சி தேர்வு வைக்கப்பட்டது. அதில் நானும் இன்னொரு மாணவனும் தேர்ச்சி பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் சேர்ந்தோம்.

12 ஆம் வகுப்பில் இறுதித் தேர்வு நடைபெற்றது. நாங்கள் எழுதிய அந்த ஆண்டுதான், 1993ல் முதல்முறையாக multiple question paper முறை கொண்டுவரப்பட்டது. அதாவது, ஒவ்வொரு தேர்விற்கும் நான்கு கொஸ்டின் பேப்பர்கள் A,B,C,D எனக் குறிப்பிடப்பட்டு கொடுக்கப்படும்.

விரிவாகச் சொன்னால், எனக்கு முன், பின், இடம், வலம் என அனைத்துப் பக்கங்்களிலும் அமர்ந்து தேர்வெழுதும் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு வினாக்கள் அடங்கிய வினாத்தாள் கொடுக்கப்படும். இது தேர்வில் ஒருவரையொருவர் பார்த்து எழுதுவதைத் தடுக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டதாகும்.

அனைத்துத் தேர்வுகளையும் முடித்துவிட்டு, என்னுடைய அக்காவின் திருமணம் மே மாதம் இருந்ததால் நாங்கள் அனைவரும் ஊருக்குச் சென்றுவிட்டோம். நான் ஊரில் இருந்து திரும்பி வந்தவுடன், என்னுடைய தோழிகள் எல்லோரும் என்னை அழைத்து “ரிசல்ட் வந்துவிட்டது; நாங்கள் எல்லாம் மதிப்பெண் சான்றிதழ் வாங்கிவிட்டோம்” என்றனர். ஒவ்வொருவருடைய மதிப்பெண்ணையும் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். இருப்பினும் எனக்கு உள்ளுக்குள் பயம். நான் தேர்ச்சி பெற்றிருப்பேனா? என்றுதான் யோசித்துக்கொண்டே இருந்தேன்.

சித்ரா

நானும் என் அப்பாவும் பள்ளிக்குச் சென்றோம். உள்ளே நுழைந்ததும், என் தலைமை ஆசிரியர் என்னை ஓடிவந்து கட்டி அணைத்து, “நீ சொன்னதை நிரூபித்து விட்டாய், மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 412 மதிப்பெண்கள் பெற்று 82% தேர்ச்சி பெற்றிருக்கிறாய்” என்று மிகுந்த ஆரவாரத்துடன் சந்தோஷப்பட்டு கூறினார். எனக்கு மகிழ்ச்சியில் ஒன்றும் புரியவில்லை.

நான் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தபின் கல்லூரி செல்ல ஆசைப்பட்டேன். ஆனால் என் அப்பா “உனக்கு எப்படியும் எல்ஐசியில் (LIC) வேலை கிடைத்துவிடும், அதனால் நீ ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம்” எனச் சொல்லிவிட்டார். நானும் வீட்டிலேயே இருந்தேன். அப்போது எங்கள் சர்ச்சில் Youth Fellowship தொடங்கப்பட்டது. அதில் நானும் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். அந்த நண்பர்கள் கூட்டம், ஆலயப்பணி, வழிபாட்டுக் குழுவில் உறுப்பினர் போன்றவற்றில் நான் தொடர்ந்து ஈடுபட்டதால் என்னுடைய கல்லூரிக் கல்வி ஆசையெல்லாம் டைவர்ட் ஆகிவிட்டது.

அதன்பிறகு 1995இல் எல்ஐசியில் இருந்து எங்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்தது. அந்த நேர்முகத் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில், 118 மாணவர்களில் 58ஆவது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டேன். காலிப்பணியிடங்கள் வரவர தேர்ச்சிபெற்றவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அப்படி என்னுடைய முறை 2000மாவது ஆண்டில் வந்தது. நெல்லூருக்குப் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

பணிநியமன ஆணையோடு மருத்துவத் தகுதித் தேர்வுக்குமான ஆணை வந்தது. அதன்படி அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மருத்துவரைச் சென்று பார்த்தோம்.

முதல்கட்ட பரிசோதனைகள் மற்றும் கேள்விகளுக்குப் பிறகு, இறுதியாக “வேறு ஏதேனும் குறை இருக்கிறதா?” என மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டார். அப்போது என் அப்பா, “கண்ணில் சிறிய பிரச்சனை இருக்கிறது அவளால் க்லோஸ் ரீடிங் தான் செய்ய முடியும்” என்று கூறினார். அதற்கு அந்த மருத்துவர், “அதனால்தான் நான் கேட்டேன். ஏனெனில் அவள் உள்ளே நுழைந்து வரும்போதே அவள் கண்ணில் ஏதோ குறைபாடு இருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன்” என்றார். “கண்ணில் குறைபாடு உள்ளது என்பதை நான் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்” என்று கூறி அதை அக்குறிப்பில் பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, எனக்கு எல்ஐசியிலிருந்து சிறப்பு கண் பரிசோதனை அறிக்கை ( (special opthemical report) கேட்கப்பட்டது. அவர்கள் அதில் குறிப்பிட்ட ஒரு கண் மருத்துவரின் பெயரைக் குறித்துத் தந்தார்கள். அந்தக் கண் மருத்துவரிடம் சென்று கடிதத்தைக் காண்பித்து, அந்த அறிக்கையைத் தரும்படி கேட்டோம். அவர் என் கண்களைப் பரிசோதித்துவிட்டு, “தகுதிச் சான்றிதழ் வழங்க முடியாது. இந்தப் பார்வையை வைத்துக்கொண்டு எப்படி உன்னால் வேலை செய்ய முடியும்” என்று கேட்டார்.

 நானோ, “என்னால் படிக்க முடிகிறது. கிட்டவைத்துப் படிப்பேன் சார். பதினொன்றாம் வகுப்பில்கூட ஒருமாத காலம் செய்முறைப் பயிற்சியாக எல்ஐசி அலுவலகத்தில் பணியாற்றினேன். எனவே என்னால் மேனேஜ் செய்ய முடியும். தயவுசெய்து எனக்கு தகுதிச் சான்றிதழ் தாருங்கள்” என்று கேட்டேன். ” சாரி என்னால் முடியாது” எனச் சொல்லிவிட்டார் அவர்.

பிறகு எல்ஐசி அலுவலகத்திற்குச் சென்று ஒரு அதிகாரியைச் சந்தித்து எங்கள் நிலைமையை விளக்கி, என்ன செய்யலாம் எனக் கேட்டோம். “நாங்கள் குறிப்பிட்டுள்ள கண் மருத்துவரிடம் இல்லையென்றாலும் பரவாயில்லை, வேறு ஏதாவது அரசு கண் மருத்துவரிடமாவது தகுதிச் சான்று பெற்று வாருங்கள்” என்று கூறினார். அப்பாவும் சித்தப்பாவுமாக மாறிமாறி பல அரசு கண் மருத்துவர்களிடம் என்னை அழைத்துச் சென்று இந்த அறிக்கையை வழங்கும்படி கேட்டனர்.

சில மருத்துவர்கள் பொறுமையாக, “இதெல்லாம் சாத்தியமில்லை, நடைமுறையில் நிறைய சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என விளக்கிச் சொல்லித்  தர மறுத்துவிட்டனர். சில மருத்துவர்களோ, “அப்படி இந்தப் பெண்ணை வேலைக்கு அனுப்பிவைத்து நீங்கள் உட்கார்ந்து சுகம் காணலாம் என நினைக்கிறீர்களா?” என்று கடுமையாகத் திட்டினார்கள். அப்போதெல்லாம் எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருக்கும்.

அதன்பின், எல்ஐசியிலுள்ள யூனியன் அலுவலகத்துக்குச் சென்று அங்குள்ள தலைவரைச் சந்தித்தோம். நிலைமையை விரிவாக எடுத்துக் கூறினோம். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அவர், “எப்படியாவது +14 அல்லது +15 பவர் என்று குறிப்பிட்டுப் பெற்று வாருங்கள். பணியில் சேர்ந்தவுடன் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றார். மீண்டும் எங்கள் தேடல் படலத்தைத் தொடர்ந்தோம். ஆனால், மிஞ்சியது ஏமாற்றம் மட்டும்தான்.

ஏழாண்டு காலமாக எப்படியாவது இந்தப் பணி கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்புடன் நாட்களை நகர்த்திக் கொண்டுவந்த எனக்கு பெருத்த ஏமாற்றமும் மன அழுத்தமும்தான் பரிசாகக் கிடைத்தது. லயோலா கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த எங்கள் சர்ச்சின் உறுப்பினர் ஒருவர், அந்தக் கல்லூரியில் நிறைய பார்வையற்றவர்கள் படிப்பதாகவும், நானும் அங்கு இணைந்து மேற்படிப்பு படிக்கலாம் என்று ஆலோசனை சொன்னார். ஆனால், என் அப்பா அம்மா இருவருமே என்னை படிக்க அனுமதிப்பதாக இல்லை. எப்படியும் எலைசியில் வேலை கிடைத்துவிடும் என்று சொல்லியே என்னை அமைதிப்படு்த்திவிட்டனர். எனவே அப்போதைய அந்த ஏமாற்றமும் மன அழுத்தமும் என் பெற்றோர்மீது கோபமாக வெளிப்பட்டது. என்னால் இயல்பாக இருக்க முடியவி்ல்லை. எதற்கெடுத்தாலும் கோபமும் எறிச்சலும் அடைந்தேன். இந்த நிலை எப்படி மாறியது?

என் வாழ்வில் நிகழ்ந்த அந்த மாற்றங்கள் யாவை?

சொல்கிறேன், அடுத்த இதழில்!

***தொடர்புக்கு: anbirkiniyaval@gmail.com

***வாசகர்களே! பிறவியில் அல்லாமல், என்னைப்போல இடையில் பார்வையை இழந்தவர்கள் தங்கள் அனுபவத்தை இத்தொடரின் வாயிலாகப் பகிரலாம். தங்களுடைய மனம் திறந்த பகிர்வுகள் ஒவ்வொன்றும் இன்றைய நிலையில் இதே சூழலில் துன்புற்றுக்கொண்டிருக்கும் நம் தம்பி தங்கைகள், அவர்களின் பெற்றோருக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும்.

உங்கள் அனுபவங்களை என்னோடு பகிர விரும்பினால், anbirkiniyaval@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

அல்லது 9655013030 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மூன்று நிமிடங்களுக்கு மிகாத சிறு சிறு குரல்ப்பதிவுகளை அனுப்புங்கள்.

பிரெயில் வழியே எழுத விரும்புபவர்கள், ஐந்து பக்கங்களுக்கு மிகாத வகையில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி,

தொடுகை மின்னிதழ்,

G1 சுனில் மெசியா,

30 டெலிபோன் காலனி,

2ஆவது தெரு,

ஆதம்பாக்கம்,

சென்னை 600088.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *