உள்ளது உள்ளபடி

உள்ளது உள்ளபடி

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளிகள் என்ற பொதுமைப்படுத்தலில், பார்வையற்றோரின் நலன் மெல்லப் பின்னுக்குத் தள்ளப்படுவது குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டிய தருணம் இது. ஊனமுற்றோருக்கான தனிச்சட்டங்கள் எதுவும் கொண்டுவரப்படாத 1995களுக்கு முன்பாகவே பல்வேறு காத்திரமான போராட்டங்களின் வழியே ஊனமுற்றோரின் தேவைகள் குறித்து அரசிடம் உரத்துப் பேசியவர்கள் பார்வையற்றவர்கள். அவற்றின் மரபு வழாமல், 2023லும் மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற முற்றிலும் உரிமைசார் பிரச்சனைகளை அதிகம் முன்வைத்துப் போராடுபவைகளாகப் பார்வையற்ற சங்கங்களே இருக்கின்றன.

ஆனால், இப்போது மரபார்ந்த போராட்ட வழிமுறைகள் சாதிப்பதைக் காட்டிலும், தனிநபர் லாபிகள் அதிகம் சாதித்துவிடுகின்றன. நிர்வாக மட்டங்களில் தனிப்பட்ட நபர் ஒருவருக்கு இருக்கிற செல்வாக்கின் ரேகைகள் அப்பட்டமாக அரசுப் பிரகடனங்களில் இடம்பெறுவதே இன்றைய அன்றாடம். அப்படி ஒரு செல்வாக்கான ஆளுமை பார்வையற்றவர்களிடையே தற்போது இல்லை. மிகச் சிலருக்கு அங்கும் இங்குமென ஒட்டிக்கொண்டிருக்கும் செல்வாக்குகளால் அவர்கள் தங்களின் தனிப்பட்ட நலன்களைச் சாதிப்பதில் மும்முரமாகிவிட்டார்கள். இன்னும் சில செல்வாக்கான பார்வையற்றவர்கள் உள்ளீடற்று உரத்து மட்டுமே பேசிக்கொண்டிருப்பார்கள். ஒரு சிறு புன்னுறுவலுடன் அவர்களின் ஆவேசமான சொற்பொழிவுகளையெல்லாம் கடந்து செல்ல எப்போதோ பழகிவிட்டார்கள் உயர் அலுவலர்கள்.

இத்தகைய கையறு தருணத்தில், தன் முகநூல்ப் பதிவின் வழியே அரசு பற்றிய பெரும்பான்மைப் பார்வையற்றவர்களின் குரலை அப்படியே எதிரொளித்திருக்கும் பார்வையற்றவனின் துணிச்சல் போற்றுதலுக்குரியது. தன் கருத்தை மிக நிதானமாகவும், வலுவாகவும் ஆள்வோருக்குச் சொல்லியிருக்கும் பார்வையற்றவனின் எழுத்தை நம்மவர்களைக் காட்டிலும் பொதுத்தளத்தில் அதிகம் படிக்கிறார்கள் என்பது நமக்கான கூடுதல் நல்வாய்ப்பு. ஆனாலும், களத்தில் தீவிரமாக இயங்கும் பார்வையற்றவர்கள் சிலர், தங்கள் வழக்கமான புறக்கணிப்பின் வழியே அதையும் கடந்துசெல்ல முயற்சிக்கிறார்களோ என்று தோன்றுகிறது. “நல்லது நடக்க வேண்டும், அதையும் நான்தான் செய்ய வேண்டும்” என்ற மனநிலை கொண்டவர்களிடம் ஒரு சமூகம் சிக்கிக்கொண்டால், அது எத்தகைய தேக்கத்தைச் சந்திக்கும் என்பதற்கு நாம்தான் சமகால சான்றோ என மனம் அங்கலாய்க்கவே செய்கிறது.

களத்தில் இறங்கிப் போராட்டத்தைச் சந்திப்பவர்கள்தான் உண்மையான செயல்வீரர்கள், முகநூலிலும் வாட்ஸ் ஆப்பிலும் சமூகம் சார்ந்து கருத்துகளை எழுதிக்கொண்டிருப்பவர்கள் பொழுதுபோக்குபவர்கள் என்ற தவறான  மனச்சித்திரம் நம்மவரிடம் ஆழ வேரூன்றியிருக்கிறது. களப்போராளிகளின் தியாகமும், அர்ப்பணிப்பு உணர்வும் ஒருபடி மேலே வைத்துப் போற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எவ்வித கருத்துமுரணும் கிடையாது. அதேசமயம், ஒரு சமூகத்தின் தொடர்ச்சியான போராட்டத்தில் தொடர் உரையாடல்கள் அவசியமான ஒன்று. அத்தகைய  ஆரோக்கியமான உரையாடலைப் புறக்கணித்துவிட்டு ஒரு சமூகம் நேர்கோட்டுப் பாதையில் முன்னேறிவிடவே முடியாது.

பார்வையற்றவனின் இந்தப் பதிவால் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் ஏற்படாமல்கூடப் போகலாம். ஆனால், தற்போதைய சூழலில், மாற்றுத்திறனாளிகள் என்ற பொதுமைப்படுத்தலின் வழியே பார்வையற்றோர் எதிர்கொள்ளும் நுட்பமான புறக்கணிப்பைச் சொல்லும்  நாளைய வரலாற்று ஆவணமாக இது மட்டும்தான் எஞ்சும். ஒரு சாமானியப் பார்வையற்றவருக்கு இந்த அரசிடம் இருக்கும் நியாயமான மனத்தாங்கல் உள்ளது உள்ளபடியே வெளிப்பட்டிருக்கும் அச்சு அசலான பதிவு இது. எனவே, முதலில் அது நம்மவர்களின் பரவலான கவனத்தைப் பெறவேண்டும் என்பதால், அவரின் பதிவை அப்படியே  வெளியிடுகிறது தொடுகை.

***

“வணக்கம் முதல்வரே…
எனது தந்தை வைத்திருந்த துறையை நானும் வைத்திருக்கிறேன் என தாங்கள் சொன்னபோது, அதன் அருமை தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்றுதான் நினைத்தோம். வெறும் பெருமைக்காகத்தான் வைத்திருக்கிறேன் என உங்கள் செயல்களின் வழி உணர்த்திவிட்டீர்கள்.
2021ல் தேர்தலுக்கு முன்பு பார்வை மாற்றுத்திறனாளிகள் 20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினார்கள். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்” என்று சொன்னீர்கள். அவை எங்கள் மீதான அக்கறையில் உதிர்த்த வார்த்தைகள் என்று நினைத்தோம். அவை, தாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக உதித்த வெறும் சர்க்கரை தடவிய வார்த்தைகள் என்பதை இப்போதுதான் புரிந்துகொண்டோம்.
தங்களது தந்தையார் ஆட்சியில் இருந்த காலத்தில், பார்வை மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள் என்பதை அறிந்ததுமே, காலை உணவைக்கூட முடிக்காமல் நேரடியாக களத்திற்கே வந்து, அவர்களது கோரிக்கைகளைப் பெற்று, சட்டமன்றத்தில் உடனடியாக அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றினார். அந்நிகழ்வை, ஒவ்வொரு பார்வை மாற்றுத்திறனாளியும் இன்றும் சொல்லி புலகாங்கிதம் அடைகிறார்.
ஆனால், தனையன் நீங்கள் என்ன செய்தீர்கள்?
ஒன்றரை ஆண்டுவரை பொறுத்திருந்து பார்த்த பார்வை மாற்றுத் திறனாளிகள், அமைதி வழியில் டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மனிதாபிமானமற்ற வகையில், அவர்கள் கழிவறை செல்லக் கூட அனுமதிக்காமல் அதன் கதவுகளை அடைத்தீர்கள்.
நேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்ற பார்வை மாற்றுத் திறனாளிகள் மீது தடியடி நடத்தியிருக்கிறீர்கள். முதல்வரே இவற்றையெல்லாம் செய்தது தங்களின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை.
தாங்கள் நிறைவேற்றுவதாகச் சொன்ன கோரிக்கைகளை வலியுறுத்தியே பார்வை மாற்றுத் திறனாளிகள் போராடுகிறார்கள். அதிலும் சமூக நீதி அடிப்படையில் அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டின்படி நிரப்பப்பட வேண்டிய பணி வாய்ப்புகளை கேட்டே போராடுகிறார்கள். அதற்கு, தாங்கள் கொடுத்த பரிசு, நான் மேல் குறிப்பிட்டது.
இப்போது, இரண்டு ஆண்டுகள்தானே ஆகியிருக்கிறது. எஞ்சிய காலத்தில் நிறைவேற்றுவார்கள் என்று உங்கள் ஆதரவாளர்கள் கூறக்கூடும். ஏற்கனவே நாங்கள் காலம் கடந்ததினால்தான் வீதிக்கு வந்தோம் என்பதை அவர்களிடமும் சொல்லுங்கள்
இவற்றையெல்லாம் ஊடகங்கள் கண்டும் காணாமல் போகலாம். இந்த பதிவுகூட மிகக் குறைவான பேரயே சென்று சேரலாம். ஆனால் காலம் கடந்தும் ஒவ்வொரு பார்வை மாற்றுத் திறனாளியும் இக்கொடுமைகளை நினைவில் வைத்திருப்பர்.
எங்கள் சத்தம் சிறியது, எங்கள் கோரிக்கை நியாயமானது ,அதனினும் எங்கள் கண்ணீர் கொடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
புறக்கணிப்பைக் கூட தாங்கிக் கொள்வோம். ஏமாற்றமும் நம்பிக்கை துரோகமும்தான் எங்களுக்கு வலியைத் தருகிறது.”

பார்வையற்றவன்.

பகிர

1 thought on “உள்ளது உள்ளபடி

  1. யாரைத்தான் குத்தம் சொல்வது அரசை குறை சொல்வதா அல்லது நம்முடைய அதிகாரிகளின் அலட்சியத்தை குத்தம் சொல்வதா???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *