இலக்கு: நன்றி அறிவித்தல், நல்லுள்ளம் கொண்டோரை நல்கைக்கு அழைத்தல்

இலக்கு: நன்றி அறிவித்தல், நல்லுள்ளம் கொண்டோரை நல்கைக்கு அழைத்தல்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கடந்த மார்ச் 24ஆம் நாள், டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தேர்வு முடிவுகள் வெளியாகின. 10500 காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் ஏறத்தாழ 19 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதுபோன்ற அரசுத் தேர்வுகளைப் பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்களும் உரிய முறையில் எதிர்கொள்ளும் வகையில், கடந்த 2020 ஆம் ஆண்டுமுதல் ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் (Anne Sullivan Coaching Centre for Competitive Exams for Visually Impaired) என்ற பெயரில் இணையவழியில் பயிற்சி வகுப்புகளை ஒருங்கிணைத்து வருகிறோம். எங்களின் இணைய வகுப்புகளில் இணைந்து பயிற்சி பெற்ற பல பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்கள் பொருட்படுத்தத்தக்க மதிப்பெண்களைப் பெற்றிருப்பது உளநிறைவை அளிக்கிறது.

குறிப்பாக, எமது பயிற்சி மாணவர் செல்வி. ஜெயஸ்ரீ அவர்கள் ஒட்டுமொத்த பார்வைத்திறன் குறையுடையோருக்கான பட்டியலில் 8ஆவது இடத்தைப் பிடித்துச் சாதித்துள்ளார். அதேபோல, மாணவர் செல்வன். ஜெகன்நாதன், அந்தப் பட்டியலில் 24ஆம் இடம் பிடித்துப் பெருமை சேர்த்துள்ளார்.

மேலும், எங்களுடைய பயிற்சி மையத்தின் வழியே பயின்ற மாணவர்கள் செல்வி. நந்தினி, செல்வன். கார்த்திகேயன், செல்வன். பரமசிவம் ஆகியோரும் முறையே 72, 91, 109 என பொருட்படுத்தத்தக்க வரிசையைப் பெற்றிருப்பதில் மகிழ்கிறோம்.

தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு எங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேசமயம், தற்காளிகமாக வெற்றி வாய்ப்பை இழந்திருப்பவர்கள் இன்னும் தங்களைக் கூர்மைப்படுத்திக்கொள்ள தொடர்ந்து நாங்கள் உறுதுணையாய் நிற்போம் எனவும் உறுதியளிக்கிறோம்.

இத்தகைய சின்னச்சின்ன மகிழ்ச்சித் தருணங்களையும், பெரிய பெரிய கனவுகளையும் சாத்தியமாக்குவதில் எங்களோடு எப்போதும் உடன் நிற்பவர்கள் எங்களின் பெருமதிப்பிற்குரிய தன்னார்வப் பயிற்றுனர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தத் தருணத்தில் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளைப் பகர்கிறோம்.

மேலும், எங்களால் நடத்தப்படும் இணையவழி மாதிரித் தேர்வுகளுக்கான பதிலி எழுத்தர்களை ஏற்பாடு செய்வது தொடங்கி, எங்களுடைய ஒவ்வொரு அசைவிலும் உடன் நிற்கும் இமை ஃபவுண்டேஷனின் நிறுவனர் திருமதி. கண்மணி அவர்களுக்கு ஓர் இனிய கைகுலுக்கலும் இதயப்பூர்வ நன்றிகளும்.

பார்வை மாற்றுத்திறனாளிகளின் பொதுச்சமூக ஒருங்கிணைப்பே (social integration) ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் அடிநாதக் கொள்கை. அந்தவகையில், அமைப்பைத் தொடங்கிய காலம் முதலாகவே, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான முன்னெடுப்புகளில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம்.

அந்த வகையில், போட்டித்தேர்வுகள் மட்டுமல்லாது, உயர்கல்வி பயிலவிருக்கும் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் அறிவுரைப் பகர்தல் நிகழ்வை ஆண்டுதோறும் எவ்வித சுணக்கமுமின்றி இணைய வழியில் ஒருங்கிணைத்து வருகிறோம். மேற்கண்ட நிகழ்வில் பங்கேற்று வழிகாட்டுபவர்களும் பல்வேறு துறையைச் சார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி வல்லுநர்கள் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த ஆண்டும், கடந்த ஏப்ரல் 14 முதல், ஏப்ரல் 19 வரை இணைய வழியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தினோம். மாநிலத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்தும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்றுத் தங்கள் ஐயங்களில் தெளிவு பெற்றனர். அத்தோடு அந்நிகழ்வு மாணவர்களுக்கு என்றும் பயனளிக்கும் ஓர் இணைய ஆவணமாய் இருக்கட்டும் என்ற நோக்கத்தோடு, நிகழ்வை தொடுகை வலையொளி வாயிலாக நேரலை செய்தோம்.

அதற்கான இணைப்பு:

எங்களின் இதுபோன்ற முயற்சிகளை மேலும் செறிவூட்டவும், சீரிய முறையில் கூடுதலாகப் பல பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்களை இந்தப் பயிற்சி வகுப்புகள் சென்று சேரும் வகையிலும், Anne Sullivan CCC என்ற வாட்ஸ் ஆப் குழு ஒன்றை ஏற்படுத்தி, மாநிலமெங்கும் இருக்கிற பார்வையற்ற பணிநாடுனர்களை ஒரு குடையின்கீழ் ஒருங்கிணைத்து வருகிறோம். அந்தக் குழுவின் நிர்வாகிகளாக போட்டித்தேர்வு தொடர்பான துறையில் கைதேர்ந்த பார்வையற்ற பணிநாடுனர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளில் வென்று பணியில் இருக்கும் பார்வையற்றவர்களும் பங்கேற்று வழிநடத்துகிறார்கள்.

எங்களின் முயற்சியை மேலும் பரவலாக்கிட, நல்லுள்ளம் கொண்ட பல மனிதர்களின் மேலான ஒத்துழைப்பை நாடி நிற்கிறோம். கற்பித்தல், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, தன்னார்வ வாசிப்பு என நீங்களும் இந்த முயற்சியில் உங்களை ஒரு ஆன்சலிவனாக இணைத்துக்கொள்ள விரும்பினால் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

வாருங்கள்! தங்களின் பிறவி இருள் ஓட்டும் பெருவெளிச்சமான அரசுப்பணிகளைப் பெறுவதில் பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்கள் கற்றல் சார்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உற்ற துணையாய் நிற்போம்.

***சித்ரா,

தலைமை ஒருங்கிணைப்பாளர்,

ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம்.

தொடர்புக்கு: sullivanccc21@gmail.com

அலைபேசி: 9655013030

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *