“பள்ளிக்கல்வித்துறையோடு இணைத்திடுக”: சங்கக் கடிதம்

“பள்ளிக்கல்வித்துறையோடு இணைத்திடுக”: சங்கக் கடிதம்

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது

தமிழக அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஓர் அறிவிப்பானது அனைத்துத் தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. “பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகள் ஒருங்கிணைக்கப்பட்டுப் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும்” என்கிற அறிவிப்பால் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை, வனத்துறை, இந்து அறநிலையத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சீர்மரபினர் நலத்துறை பள்ளிகள் போன்ற அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறை என்கிற ஒரு குடையின் கீழ் திரளும்.

மேற்கண்ட அறிவிப்பினைப் பல ஆண்டுகளாக கோரிக்கையாக வலியுறுத்தி வருகிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். இது தொடர்பாக அச்சங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தைக் கவனத்துடன் படித்தால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் சிறப்புப்பள்ளிகளைப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவருவது என்கிற கோரிக்கையில் இருக்கிற அடிப்படை நியாயங்களைப் புரிந்துகொள்ளலாம். எனினும் இது தொடர்பான மாற்றுக் கருத்துகளையும், மேலான ஆலோசனைகளையும் விரிவாக விவாதிக்க விரும்புகிறோம். தங்களதுமேலான கருத்துகளைப் பின்னூட்டங்களாக எதிர்பார்த்து, இந்தக் கடிதத்தினை  விவாதத்தின் தொடக்கமாக வெளியிடுகிறது தொடுகை.

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

பெறுநர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள்,

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம்,

சென்னை 5.

அம்மா,

பொருள்: மாற்றுத்திறனாளிகளுக்கான  அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சிறப்புப் பள்ளிகளைக் கண்காணித்து, கற்றல் கற்பித்தல்

நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டுவது – சார்பு.

பார்வை: மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர், சென்னை அவர்களின்

சுற்றறிக்கை ந.க.எண். 5585/சிப/2019 நாள் 16.07.2019.

வணக்கம். பார்வையில் குறிப்பிட்டுள்ள கடிதமானது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் சிறப்புப் பள்ளிகளைக் கண்காணித்து மேம்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையாகும். இதன்படி சிறப்புப் பள்ளிகள் அந்தந்தப் பகுதியின் கல்வித் துறை அதிகாரிகளின் வழிகாட்டல் மற்றும் உத்தரவை ஏற்றுச் செயல்பட வேண்டும் என்றும் அதனை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்பு சிறப்புப் பள்ளிகள் எவ்வாறு கண்காணிக்கப்பட்டன என்பன பற்றிய விவரங்கள் பின்வருமாறு உள்ளன.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மாநில ஆணையரகம் தொடங்கி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வரையில் கல்வியியல் தொடர்பான, கல்வியியல் படிப்பில் தகுதிபெற்றவருக்கான பணியிடங்கள் எதுவுமில்லை. இந்நிலையில் சிறப்புப் பள்ளிகளைக் கண்காணிப்பதற்காக உதவி இயக்குநர் (சிறப்புப் பள்ளிகள்) என்ற ஒரேயொரு பணியிடம் உருவாக்கப்பட்டது. அந்தப் பணியிடமும் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் ஏதோ ஒரு அலுவலரிடம் கூடுதல் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. கூடுதல் பொறுப்பாகக் கவனிக்கும் அலுவலர், மாநில ஆணையர் அலுவலகத்தின் அலுவலகப் பணிகளைச் செய்கிறாரே தவிர, சிறப்புப் பள்ளிகளைப் பார்வையிடும் பணியை மேற்கொண்டதோ அல்லது பொறுப்பை ஏற்றுக்கொண்டதோ இல்லை. இவ்வாறாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் சிறப்புப் பள்ளிகள் கேட்பாரற்ற நிலையில் தான் இயங்கிவருகின்றன.

கடந்த பத்தாண்டுகளில் கல்வித்துறை படிப்படியாக கணினிமயமாகி வருகிறது. இதன் காரணமாக அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள சிறப்புப் பள்ளிகள் கல்வித்துறையின் பட்டியலில் இடம்பெற்று, விலையில்லாப் பாடநூல்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் கிடைத்துவருகின்றன. கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளைப் போன்றே சிறப்புப் பள்ளிகளிலும் அனைத்து உதவிகளும் பெற்று வழங்கப்படுகிறது என்பதை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்கின்றனர். இதில் எந்தவொரு இடத்திலும் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் அலுவலகமோ அல்லது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமோ பொறுப்பேற்பதில்லை என்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது. அதாவது விலையில்லாப் பாடநூல்கள் வழங்குவது தொடங்கி, இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியிடுவது வரையில் சிறப்புப் பள்ளிகளை கல்வித்துறையின் அலுவலர்கள் மட்டுமே இயக்குகின்றனர் என்பது முழுமையான உண்மையாகும். ஆகவே மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் சிறப்புப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு தவிர, கல்வியியல் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பங்களிப்பு துளியளவு கூட இல்லை.

இந்நிலையில் பார்வையில் குறிப்பிட்டுள்ள மாநில ஆணையர் அவர்களின் சுற்றறிக்கையானது, சிறப்புப் பள்ளிகளின் செயல்பாடுகளில் கல்வித்துறையின் பங்களிப்பை உறுதி செய்வதாகவும் அவசியத்தை ஏற்றுள்ளதாகவும் அமைந்துள்ளது. ஆகவே கல்வித்துறையின் கீழ் பல்வேறு நலத்துறையின் பள்ளிகள், உண்டு உறைவிடப் பள்ளிகள் இயங்கிவருகின்றன; அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளையும் கல்வித்துறையின் கீழ் இயங்கச் செய்தால் பின்வரும் மேலும் பல நன்மைகள் கிடைக்கும்.

1) அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் உள்ளடங்கிய கல்வி மற்றும் ஒருங்கிணைந்த கல்வி மூலமாக கல்வித்துறையின் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை, சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் எண்ணிக்கையைவிடப் பல மடங்கு அதிகம். அதிகமான குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்புப் பள்ளிகள் மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்றாலும் இன்னொரு துறையாக இருக்கும் கல்வித்துறையின் பள்ளிகளிலிருந்து சிறப்புப் பள்ளிக்கான மாணவர்களைப் பரிமாறிக்கொள்ள முடிவதில்லை. அதேநேரத்தில் சிறப்புப் பள்ளிகளும் கல்வித்துறையின் கீழ் வந்துவிட்டால், சிறப்புப் பள்ளிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்புக் கல்வி வழங்குவது எளிதாக இருக்கும்.

2) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் உதவி இயக்குநர் (சிறப்புப் பள்ளிகள்) நீண்ட காலமாக கூடுதல் பொறுப்பில் விடப்பட்டுள்ள நிலையில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடங்கிய கல்விக்கென தனித்தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் தோறும் மட்டுமின்றி ஒன்றியங்கள் அளவிலும் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் கல்வித்துறையின் கீழ் இயங்குவதே மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி நலனை உறுதி செய்வதாக இருக்கும்.

3) இப்பொழுது சிறப்புப் பள்ளிகள், கல்வித்துறையின் வழியாக பெற்றுவரும் விலையில்லாப் பாடநூல்கள் உள்ளிட்ட உதவிகளை உரிமையுடனும் உரிய நேரத்திலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பெற்றுவழங்க முடியும். மேலும் செயல்வழிக் கற்றல், கணினி வழிக் கற்றல் போன்ற புதிய கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவதும் அவை முறையாக நிறைவேற்றப்படுகிறது என்பதை உறுதி செய்வதும் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டால் மட்டுமே சிறப்புப் பள்ளிகளுக்கும் அத்தகைய நன்மைகள் கிடைக்கும்.

4) பள்ளிக்கல்வியில் ஆண்டுதோறும் படிப்படியான மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அந்த மாற்றங்கள் சிறப்புப் பள்ளிகளுக்கு வருவதற்குள் பல ஆண்டுகள் கடந்து விடுகின்றன. பல மாற்றங்கள் சிறப்புப் பள்ளிகளின் மாற்றுத்திறனாளி மாணவர்களை எட்டாமலேயே நின்றுவிடுகின்றன. உதாரணமாக ஒன்று முதல் எட்டு வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர் என்று இருந்தது பாடத்திட்டத்தின் தரம் காரணமாக ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கு மட்டுமே இடைநிலை ஆசிரியர் எனவும் ஆறு முதல் எட்டு வகுப்புகளுக்குப் பட்டதாரி ஆசிரியர் எனவும் மாற்றப்பட்டது. இந்த நடைமுறை கடந்த பதினைந்து ஆண்டுகளாக கல்வித்துறையில் பின்பற்றப்படுகிறது. ஆனால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்புப் பள்ளிகளில் இன்னமும் ஒன்று முதல் எட்டு வகுப்புகளுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். அதாவது மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விநலன்கள் கவனிக்கப்படாமல் உள்ளன. மேலும் ஆண்டுதோறும் பள்ளிகளைத் தரம் உயர்த்துவது, புதிய பாடப்பிரிவுகளைக் கொண்டுவருவது, அதற்கான கட்டமைப்பையும் ஆசிரியர் பணியிடங்களையும் உருவாக்குவது போன்ற முன்னேற்றங்களும் சிறப்புப் பள்ளிகளில் ஏற்படும்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் சிறப்புப் பள்ளிகளில் மனவளர்ச்சிக் குறைபாடு உடையோருக்கான சிறப்புப் பள்ளிகள் தவிர, பார்வைத் திறன் குறைபாடு, செவித் திறன் குறைபாடு, உடல் இயக்கக் குறைபாடு உடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பொதுப் பாடத்திட்டமும் பொதுத் தேர்வு முறையுமே பின்பற்றுகின்றன. ஆகவே பள்ளிக்கல்வியில் கொண்டுவரப்படும் சீர்மிகு மாற்றங்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் உரிய நேரத்தில் கிடைத்து, சமூகத்தில் சமத்துவமான நிலையைப் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் மனவளர்ச்சிக் குறைபாடு உடையோருக்கான சிறப்புப் பள்ளிகள் தவிர்த்து மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளை கல்வித்துறையின் கீழ் கொண்டுவர ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம்.

நகல்:

1) மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் தனிப்பிரிவு.

2) மாண்புமிகு சமூக நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் அவர்கள்.

3) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்.

4) அரசுச் செயலாளர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.

5) அரசுச் செயலாளர் அவர்கள், பள்ளிக்கல்வித்துறை.

6) பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள்.

இணைப்பு:

1) பார்வையில் குறிப்பிட்டுள்ள கடித நகல்.

பகிர

1 thought on ““பள்ளிக்கல்வித்துறையோடு இணைத்திடுக”: சங்கக் கடிதம்

  1. இந்த அறிவிப்பு வெளியான போதே மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறைக்குள் கொண்டுவரப்படும் என்றுதான் நானும் எதிர்பார்த்தேன். இது உடனடியாக செய்யப்பட வேண்டிய ஒன்றாகவே நான் பார்க்கிறேன். இது காலத்தின் தேவை. அரசாங்கம் பாராமுகமாக மாற்றுத்திறனாளிகள் துறையின் கீழ் இயங்கக்கூடிய சிறப்பு பள்ளிகளை அணுகுகிறபோக்கு அதிகரித்து வருவதால் இது மட்டுமே நிரந்தர தீர்வாகவும் மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கிற ஒன்றாகவும் இருக்க முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதனை வலியுறுத்தி எதிர்வரும் மானிய கோரிக்கை கூட்டத்தொடரில் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு உள்ளிட்ட வற்றை செய்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கிற முயற்சியில் இறங்கினால் ஒரு வேலை இந்த துறையை கவனிக்கும் முதல்வர் இதனை பரிசிளித்து இந்தக் கூட்டத்தொடரிலேயே அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருக்கிறது அல்லது அவ்வாறு அவரை செய்ய வைக்க இயலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *