வரலாறு: மார்ச் 8-ன் மகத்தான கதை

வரலாறு: மார்ச் 8-ன் மகத்தான கதை

ஆக்கம் சிதம்பரம் இரவிச்சந்திரன் வெளியிடப்பட்டது

மற்றுமொரு மார்ச் 8 கூட வந்துவிட்டது. சமுதாயத்தில் ஆணைப்போலவே பிறப்பெடுக்கும் பெண்ணுக்கும் அவளைப் பற்றியும், அவளுடைய உரிமைகளைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் அறிவித்த தினம் தான் சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8. இன்று சமூகத்தில் பெண் அபலை இல்லை  என்றாலும். நாடுகளின் எல்லைகளையும் தாண்டி, நாடு, இனம், மொழி, மதம், சாதி, பொருளாதாரம் போன்ற மதில் சுவர்களை எல்லாம் தாண்டி பெண்களுக்காக சமர்ப்பணம் செய்யப்பட்ட தினம்தான் சர்வதேச பெண்கள் நாள்.

வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட, பெண்களின் முன்னேற்றத்தினுடைய அங்கீகாரமாக பரிணமித்த ஒரு நாள் தான் இது. வேலை பார்க்கும் இடத்தில் பரிபூரணமான சுதந்திரமும், வசதிகளும் பெறுவதற்காகப் பெண்கள் நடத்திய போராட்டங்களின் விளைவும், தொழில்களின் ஏகாதிபத்தியத்தை வியர்வையாலும், கண்ணீராலும் எழுதிய பெண்களுடைய வெற்றியின் கதைதான் இந்த நாள்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொழில்வளர்ச்சியை நோக்கி வீறுநடை போட்ட பல நாடுகளில் குறைந்த கூலிக்கும், மோசமான நிலைமைகளிலும் வாழவேண்டி வந்த பெண்களுடைய உறுதியான எதிர்ப்புப் போராட்டங்களின் நினைவுதான் இப்படி ஒரு தினத்துக்கான எண்ணத்தை ஏற்படுத்தியது.  1887ல் நியூயார்க்கில் பெண்கள் நடத்திய எதிர்ப்புப் போராட்டமும் தான் பெண்கள் தினம் என்ற ஒரு சிந்தனையை தோற்றுவித்தது.

நியூயார்க்கில் துணி மில்களில் வேலை பார்த்து வந்த ஆயிரக்கணக்கான பெண்கள் குறைந்த சம்பளத்துக்கு எதிராகவும், நீண்டநேரம் வேலை பார்க்கும் பழக்கத்தை ஒழிப்பதற்காகவும், முதலாளித்துவத்துக்கும் எதிராக ஓட்டு போடுவதற்கு உரிமை வேண்டியும் முதல்முறையாக குரல் எழுப்பியபோது அது வரலாற்றின் பாகமாக மாறியது. இந்த போராட்ட நெருப்பு உலகம் முழுவதும் பரவ பிறகு தாமதம் இல்லாமல் உலகத்தின் பல பாகங்களிலும் பெண்கள் அவர்களுடைய உரிமைகளுக்காக குரல் எழுப்ப இது வழிவகுத்துக் கொடுத்தது.

அமெரிக்காவில் அமெரிக்கன் சோசியலிஸட் கட்சியின் கோரிக்கையின்படி, 1909ம் ஆண்டு பிப்ரவரி 28ல்தான் முதல் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. 1910ல் கோபன்கனில் நடந்த இரண்டாவது சோஷியலிஸட் இன்டர்நேஷனல் மாநாட்டில் பெண்கள் தினம் சர்வதேச அளவில் அனுசரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்தது.  ஜெர்மனியில் சோஷியல் டெமாக்ரெடிக் கட்சியின் பெண்கள் பிரிவின் தலைவரும், பிற்காலத்தில் கம்யூனிஸட் தலைவராகவும் மாறிய டாரா பெட் என்பவர் தான் இதற்கான முன்முயற்சி எடுத்தது. அன்று 17 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பலனாக 1911ம் வருடம் மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்களின் தினமாக அனுசரிக்கப்பட தொடங்கியது. தொடர்ந்து 1977ல் ஐக்கிய நாடுகளின் அங்கீகாரம் கிடைத்தது.  அன்று முதல் மார்ச் 8 என்ற நாள் எல்லா வருடமும் சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாட அறிவிப்பும் வெளியானது.

தாயாகவும், மகளாகவும், சகோதரியாகவும் வாழ்வுக்கு வெளிச்சம் தரும் பெண்களின் மகத்துவத்தை இந்த ஒரு நாள் கொண்டாட்டங்களால் மட்டும் கொண்டாடி, நினைந்து தீர்த்துவிட முடியாது. உலகம் எங்கும் போற்றப்படும் பெண்களின் மாதிரிகளாக பாரதம் கண்ட பெண்மணிகள் எத்தனையோ பேர் உண்டு. மனித நாகரீக வளர்ச்சியின் தொடக்கத்தில் பெண்களே சமூகத்தை ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களாக இருந்தார்கள். ஆண்கள் அவர்களுக்கு துணையாக இருந்து வந்தார்கள். ஆனால் பிற்காலத்தில் பெண்கள் மீது ஆணாதிக்கம் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தது.

இந்தியாவின் இதிகாச காவியங்களான ராமாயணமும், மகாபாரதமும் வித்தியாசமான தளங்களில் காட்டப்பட்ட பெண் முக்கியத்துவத்தின் உதாரணங்கள் ஆகும். ராமாயணத்தில் சீதை பொறுமையின் பிரதிபலிப்பாக இருந்தபோது, மகாபாரதத்தில் திரௌபதி அநீதியை எதிர்த்து குரல் கொடுக்கும் பெண்மணியாக திகழ்ந்தாள். வேதகாலங்களில் இருந்து மாறி சமூக அமைப்புகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு சமுதாயம் வளர்ந்து பந்தலிட்டுப் படர்ந்தபோது, பெண்கள் படும் வேதனைகள் வேறுபட்டவைகளாக மாறத்தொடங்கின.  அவர்களின் நிலைகளும் மாறின.

ஐரோன் ஷர்மிலா
ஐரோன் ஷர்மிலா

ஜான்சிராணியும், ஜீஜா பாயும், சரோஜினி  நாயுடுவும், இந்திராகாந்தியும் அடங்கிய பழைய தலைமுறை பெண்களுக்கு எடுத்துக்காட்டுகளாக இருந்தபோது, கிரன்பேடியும், ஐரோன் ஷர்மிளாவும் புதிய தலைமுறை பெண்களின் மாதிரிகளாக விளங்குகிறார்கள். தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை எதிர்த்து தன்னம்பிக்கையுடன் போராடும் சுனிதா கிருஷ்ணனும், அன்வாரி தேவியும் இன்றைய உதாரணங்களாக விளங்குகிறார்கள்.

சினிமா, கலை, இலக்கியம், அறிவியல் என்று பல துறைகளிலும் பெண்கள் முன்னேறியுள்ளனர். பெண்களின் திடமான இருப்பு இவற்றின் மூலம் சமுதாயத்தில் நிலைநிறுத்திக் காட்டப்பட்டு வருகிறது. பையோலி எக்ஸ்பிரஸ் என்று வர்ணிக்கப்படும் பி.டி.உஷா, ராஜீவ்காந்தி விளையாட்டுக்கான விருது பெற்றவரும், அர்ஜுனா விருது பெற்றவருமான அஞ்சு பாபி ஜார்ஜும், பத்மா விருது பெற்ற தீபிகா பல்லிக்கல், ஒலிம்பிக்ஸ் வெண்கல பதக்கம் சூடிய மேரிகோன், வெள்ளி விருது பெற்ற ஷைனா நெய்வால், பளு தூக்கும் சாம்பியன் கர்ணம் மல்லேசுவரி என்று விளையாட்டுத்துறையில் ஒளிரும் நட்சத்திரங்களாக மின்னும் தாரகைகளும் பெண்களுக்கு உத்தம உதாரணங்கள் ஆகும்.

சினிமாவில் கேமராவுக்கு முன்னாலும், பின்னாலும் ஏராளமான பெண்கள் இன்று தங்கள் திறமைகளை காட்டி வருகிறார்கள். விமான கேபினுக்கு உள்ளேயும், வெளியேயும்கூட பெண்கள் தங்கள் திறமைகளை காட்டுகிறார்கள். கான் திரைப்படவிழாவில் இந்தியாவில் இருந்து முதல்முதலாக நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உலக அழகி ஐஸ்வரியா ராய் பச்சன் இளம்பெண்களுக்கு மனது வைத்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை எடுத்துக் காட்டியுள்ளார். தீபா மேத்தா, அஞ்சலி மேனன், கீது மோகன் தாஸ் போன்றவர்கள் பெண்களுக்கு மாதிரிகளாக விளங்குபவர்கள் ஆவார்கள்.

ஐஷ்வரியா ராய்
ஐஷ்வரியா ராய்

அறிவியல் உலகத்தில் அக்னி ஏவுகணை திட்டத்தின் திட்ட இயக்குனர் டாக்டர்.சி.தாமஸ், காவல் துறையின் உயர் பதவிகளில் பணியாற்றும் பெண்கள், அல்கரதா மருத்துவ குழுக்களின் இயக்குனர் டாக்டர்.வந்தனா பாஸ்கரன் போன்றவர்கள் பெண்களுக்கு குறிக்கோளுடன் வாழ வழிகாட்டுபவர்கள் ஆவார்கள். 

வணிகத்துறையில் சகுந்தலா தேவி, விண்வெளியில் கல்பனா சாவ்லா, தொண்டில் அன்னை தெரசா போன்றவர்களும் சிறந்த உதாரணங்கள் ஆகும். அறிவியல் துறையில் பெண்களின் சதவிகிதம் இந்தியாவில் மிகவும் குறைவாகவே உள்ளது. வெறும் 18% பெண்கள் மட்டுமே அறிவியல் ஆராய்ச்சி  துறையில் ஈடுபட்டுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (CSIR- Counsil of Scientific and Industrial Research) மற்றும் தேசீய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி கழகம் (National Institute of Science and Industrial development research) ஆகிய நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளின்படி இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிகளில் வெறும் 3.4% பெண்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இப்போதுள்ள சூழ்நிலையை பயன்படுத்தி பெண்கள் அறிவியல் துறையில் அதிகமாக ஈடுபடவேண்டியது நமது நாட்டின் சகலதுறை வளர்ச்சிக்கு முக்கியமானதாகும்.

தீபாமேத்தா
தீபா மேத்தா

வீட்டுச்சிறைகளுக்குள் எல்லா அடிமைத்தனங்களையும் வாய் மூடி மௌனியாக சகித்து யுகயுகமாக வாழ்ந்தோம் என்ற பெயரில் வெந்து வெந்து கழித்து வரும் பிள்ளை பெறும் இயதிரங்களாக, வருடத்துக்கு ஒரு தர்மத்திற்கு கர்ப்பப்பையை நிரப்பும் மோகப்பொருள்களாக, வாழ்வெனும் கதையில் எந்த பாத்திரமும் ஏற்காத அடுப்புப்பாத்திரங்களையும், கர்ப்பப் பாத்திரங்களையும் தினம் தினமும், வருடந்தோறும் நிரப்பி வாழும் கொத்தடிமைகளாக இருந்த பெண்கள் தங்கள் விலங்குகள் பூட்டிய வரலாற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டு லட்சியுமும், சுதந்திரமும் கொண்ட சமத்துவ மனித உயிரினமாக இன்று மாறியிருக்கிறார்கள்.  எழுத்தாளர்கள் என்று தொடங்கி விமானிகளாக பரிணமித்து இருக்கிறது இன்றைய பெண்ணியம்.

சாதி, மத, இன, பாலியல் வேறுபாடுகளை கடும் எதிர்ப்புடன் இன்று குரல் கொடுக்கும் வீராங்கனைகளாக பெண்கள் மாறியிருக்கிறார்கள். கல்யாணம் கட்டிக்கொடுத்து புகுந்தவீட்டுக்கு அனுப்ப, அதிகம் படிப்பறிவுகூட இல்லாத உத்தரப்பிரதேசத்தின் ப்ரியங்கா பாரதி அவள் புகுந்த இடத்தில் கழிப்பறை வசதி இல்லை என்ற ஒரே காரணத்துகாக்க தன் மாமியார் வீட்டில் வாழமுடியாது என்று நெஞ்சுரத்துடன் கூறிவிட்டு, கழிப்பறை கட்டித்தந்தால் மறுபடி வாழவருவேன் என்று துணிச்சலுடன் மாமியார் வீட்டை விட்டு வெளியேறி கணவனையும், புகுந்தவீட்டையும், ஊரையும் மட்டுமல்ல நாட்டையே பிரமிக்க வைத்தார். இது போன்ற பிரியங்காக்கள் மாதிரிகளாக இன்று பயந்து நடுங்கி வீட்டின் ஒரு ஔரத்தில் ஒடுங்கிக்கிடக்கும் பெண்களுக்கு தைரியம் சொல்லட்டும்.

தாயுடைய கர்ப்பப்பாத்திரத்தில் கருவாக உருவம் பெறும் நிமிடம் முதல் ஆறடி நிலத்துக்குள் ஒடுங்கும் வரையும் அடிமைத்தனத்துடைய, அவமானங்களுடைய, பலாத்காரங்களுடைய உலகத்தில் காலத்தை கழித்த பெண்களுடைய பலவீனமான காட்சிகள் மறைந்து கொண்டிருக்கின்றன. கல்வியறிவும், அறிவியல் சிந்தனையும், தொழில்நுட்ப அறிவையும் கைக்குள் வசமாக்கிக்கொண்டு எந்த உயரத்துக்கும் தன்னால் போக முடியும் என்று இன்று பெண்கள் உலகம் போட்டி போடுகிறது.

மேரி கோம்ஸ்
மேரி கோம்ஸ்

கடந்துபோன தண்ணீரை எப்படி பார்க்க முடியாதோ அதுபோலவே இன்றைய பெண்கள் கடந்த நூற்றாண்டின் பெண்கள் இல்லை.  இனிமேல் அவர்களை ஒருபோதும் நம்மால் காணவும் முடியாது.  பெண்கள் மிகவும் மாறிவிட்டார்கள்.  இன்று அவர்களின் உலகம் பரந்துவிரிந்ததாகும்.  நான்கு சுவர்களுக்குள், படுக்கையறை போதைப்போருள் இல்லை அவள்.  பொருளாதார ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும் பெண்களிடம் இன்று பலப்பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த நூற்றாண்டில் புனிதமான தங்கள் மார்பகங்களைக்கூட மூடமுடியாத அவலநிலையில் அடுத்த மாநிலமான கேரளத்தில் வாழ்ந்த பெண்கள் இந்தியாவிற்கே உத்தம உதாரணங்களாகத் திகழ்கிறார்கள்.  நகைகள் போட்டுக்கொள்ள, ஆடைகள் உடுத்திக்கொள்ள, நாட்டியமாட, பாட, விருப்பப்பட்ட ஒருவனை கல்யாணம் செய்துகொள்ள, ஓட்டுப்போட, உயர்ந்த பதவிகளை பிடித்து உட்கார என்று இப்படி எல்லா விதங்களிலும், எல்லா இடங்களிலும் பெண்கள் கடந்த இருநூற்றாண்டுகளில் உயிரைக் கொடுத்து நடத்திய போராட்டங்களின் வழியாக எவரெஸ்ட்டையும்கூட பெண்கள் எட்டிப்பிடித்துள்ளார்கள்.

பல துறைகளிலும் தங்கள் இருப்பை வலுவுடன் பெண்கள் இன்று நிரூபித்து வருகிறார்கள். பெண் என்றால் எவராலும் தவிர்க்க முடியாத சமூகத்தின் ஒரு அங்கமாக இன்று மாறியிருக்கிறாள். எந்த நம்பிக்கையும் இல்லாத, கல்வி அறிவு இல்லாத, பொருளாதாரத்தில் எந்தப் பங்கும் இல்லாத, எல்லாவற்றுக்கும் ஆண்களையே நம்பி இருந்த நிலை இன்று மாறிவிட்டது .

ஆனால் இன்று காணப்படும் கேவலங்கள் இப்படி சிரமப்பட்டு உருவாக்கிய சுதந்திரம் எங்கே இழக்கப்பட்டுவிடுமோ என்ற கவலையை சமூக விழிப்புணர்வு உள்ள ஒவ்வொருவரிலும் ஏற்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னமும் எத்தனையோ விடுதலைகளைப் பெண்கள் பெறவேண்டியுள்ளது.  உண்மையை சொல்லப்போனால் பெண்களுக்கு முதல் எதிரியாக இருப்பது பெண்களே தான். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில் 85% கொடுமைகளும் வீட்டுக்குள்ளேதான் நடைபெறுகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.  வீடு என்ற இடம் பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பானதாகவும், சுதந்திரம் தரும் இடமாகவும் இருந்துவந்ததோ அந்த இடம் இன்று அவர்களுக்கு எதிரான நம்பகம் இல்லாத ஒரு சிறையாக மாறிவருகிறது.

சகுந்தலா தேவி
சகுந்தலா தேவி

ஆண்கள் ஒரு போதைப்பொருளாக பார்க்கும் நேரத்தில், வீட்டில் இருக்கும் வயது முதிர்ந்த, அனுபவமும் உடைய மாமியார் சிலர் தங்கள் மகளைப்போல நடத்த வேண்டிய மருமகள்களை கொடுமைப்படுத்தும் அவலம் இந்தியாவில் மட்டும் தான் இன்னமும் நடந்துவருகிறது. முன்பெல்லாம் பெண்களை திருமணம் செய்துகொள்ள ஆண்கள் வரதட்சணை கொடுக்கவேண்டி இருந்த காலம் இருந்தது.  ஆனால் இன்று இது தலைகீழாக மாறிவிட்டது. பணத்தைப் பார்க்கும் மனிதர் குணத்தைப் பார்ப்பது இல்லை. வீட்டுக்குள் சுதந்திரமாகவும், பரிபூரணமான உரிமையோடும் வாழமுடியாத அவலநிலையில் இன்று பெரும்பாலான இடங்களில் இந்தியப்பெண்கள் வாழ்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் குழந்தை பிறப்போடு சம்பந்தப்படுத்தியும், பிறந்த குழந்தையுடைய தோலின் நிறத்தை வைத்தும் படித்த குடும்பங்களில்கூட பெண்கள் வாழாவெட்டிகளாக ஆக்கப்படுகிறார்கள். பல கொடுமைகளுக்கும், அவமானப்பேச்சுக்களுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

பிறக்கும் குழந்தை ஆணாகவும் பெண்ணாகவும் பிறப்பதற்கு ஆண்களில் இருக்கும் XY குரோமோசோம்கள் தான் காரணம் என்ற அறிவியல் உண்மை கூறப்பட்டு பல பத்தாண்டுகள் கடந்துபோய்விட்டன.  இதற்கிடையில் பெண்களுக்கு AIDS போன்ற கொடும்நோய்கள் வந்துவிட்டாலோ அவ்வளவுதான்.  ஆனால் இதையும் மீறி பல பெண்கள் துணிச்சலுடன் வாழ்ந்து காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

வீரத்தையும், தீரத்தையும் சமூகத்தில் புகழும், பெயரும் பெற்ற உயர்ந்த இடங்களுக்கு சென்று உட்கார்ந்த பெண்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. சாதாரணப்பெண்களிடம் இருந்தும், அவர்களின் வாழ்க்கையில் இருந்தும் தாராளமாக நம்மால் கற்க முடியும். இன்னும்  மூலைகளில் முடங்கிக்கிடக்கும் பெண்கள் துணிச்சலுடன் எழுந்திருக்க வேண்டும்.  விழிப்புணர்வு பெறவேண்டும்.  தைரியமாக முன்னேறவேண்டும்.

அடித்தால் திருப்பி அடிக்கமாட்டார்கள் என்ற தைரியத்துடன்தான் பல இடங்களில் பெண்கள் அடியும், உதையும் வாங்கும் கேவலத்துக்கு உள்ளாகிறார்கள்.  திருப்பி அடித்தால்?

    பெண்குழந்தையை வளர்க்கும் பெண்கள் அதாவது அவர்களுடைய அம்மாக்கள் தங்கள் பெண் குழந்தைகளை நல்லவர்களாக மட்டும் வளர்த்தால் போதாது.  வல்லவர்களாகவும், வலிமையுடையவர்களாகவும் வளர்க்கவேண்டும்.  ஒரு சமூகம் முன்னேற்றமடைய வேண்டும் என்றால் அது பெண்களின் முன்னேற்றத்தோடு நெருங்கிய சங்கிலி உறவு கொண்டதாகும்.  பெண்களை விட்டுவிட்டு எந்த ஒரு வளர்ச்சியும் எங்கும் நடந்துவிட முடியாது. ‘ஒவ்வொரு         ஆணின் முன்னேற்றத்தின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்’ என்று சொல்வதுண்டு.  ஆனால் ஒவ்வொரு பெண்ணின் பின்னேற்றத்திற்கும் ஒரு ஆண் காரணமாக இருக்கக் கூடாது என்பது தான் இன்றைய காலகட்டத்தின் அத்தியாவசியம் ஆகும். மாறாக ஒவ்வொரு பெண்ணின் வளர்ச்சிக்கு பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறான் என்று மாற வேண்டும்.  அப்போது தான் பெண் சமத்துவம் பெற்றதாக அர்த்தமாகும்.  புராணத்திலேயே சிவபெருமான் தன் உடம்பின் ஒரு பகுதியைப் பார்வதிக்குக் கொடுத்து அர்த்தநாரீசுவரராகக் காட்சி தந்தார். புராணத்தை ஏற்றுக்கொள்ளும் பழமைவாதிகள் இதையும் ஏற்க வேண்டும்.

காந்தி சொன்னதுபோல நள்ளிரவில் எங்கே ஒரு பெண் சுதந்திரமாகவும், பயமில்லாமலும் நடந்து செல்கிறாளோ அங்கு தான் பெண் சமத்துவம் அடையப்பட்டதாகப் பொருள்.

ஆணின் இடுப்பில் இருந்துதான் கடவுள் பெண்ணைப் படைத்ததாக பைபிளில் கூறப்பட்டுள்ளது.  எதற்காகப் பெண்ணை ஆணின் இடுப்பெலும்பில் இருந்து இறைவன் படைக்க வேண்டும்? ஆணின் இடுப்பெலும்பாக அவளே விளங்குகிறாள் என்பதால்தான். சட்டதிட்டங்களால் மட்டும் பாதுகாக்கப்பட வேண்டியவள் இல்லை பெண் என்பவள்.  பரிபூரணமான உரிமைகளோடும், சமத்துவத்தோடும் போற்றப்பட வேண்டியவள்  அவள்.  மொழியையும், நாட்டையும், நதியையும், பூமியையும் என்று எல்லாவற்றையும் தாய் வடிவாக, பெண் ரூபமாக தரிசித்து வாழும் பண்பாட்டில் வந்த பாரத நாட்டவரான நாம் என்று பெண்களுக்கு அவர்களுக்குரிய நியாயமான உரிமைகளை கொடுக்கிறோமோ அன்றுதான் உண்மையில் நாடே விடுதலை பெற்றதாக கூற முடியும். தாய்மையின் வடிவமாகத் திகழும் பெண்கள் இன்று கொடுமையைக் கண்டால் அக்னிஜுவாலைகளாக, தீயாக மாறிவருகிறாள்.  அந்த நெருப்பு மாற்றங்களையுடைய, வளர்ச்சியுடைய, முன்னேற்றத்தையுடைய ஒரு புது உலகை படைப்பதற்குத் தேவையான புது வெளிச்சமாக திடமனதுடன் பெண்கள் ஒற்றுமையாகக் கரம் கோர்க்கிறார்கள்.  அவர்களுடைய சின்னச் சின்ன  சத்தங்கள் சேர்ந்து ஒன்றாகி உருவாக்கும் பேரிகை முழக்கங்கள், புரட்சி முழக்கங்கள் இனியும் தொடர்ந்து நம்மால் கேட்க முடியும். 

        வளைக்கரங்களை வாழ்த்தி வாழ்வில் அவர்கள் இல்லாமல் வாழ்வில்லை என்பதை உணர்ந்து மார்ச் 8ம்தேதியை எல்லோரும் ஒரு நெஞ்சம் நிறைந்த விழாவாக நெகிழவைக்கும் திருவிழாவாகக் கொண்டாடுவோம்.

மலர் சூடும் மலர்கள் வாழ்க. வளை சூடும் வளைக்கரங்கள் வாழ்க. ஆணின் வாழ்வின் வசந்த காலத்தென்றல் வாழ்க..  மகாகவி பாரதியின் வாக்கில் சொல்லப்போனால் பெண்மை வாழ்க என்று கூத்திடுவோம்!

***தொடர்புக்கு: nrvikram19@gmail.com

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *