ஆலோசனை: மாற்றுத்திறன் மகளிரும் திருமண பந்தமும்

ஆலோசனை: மாற்றுத்திறன் மகளிரும் திருமண பந்தமும்

ஆக்கம் ஆ. செந்தமிழ்ச்செல்வி வெளியிடப்பட்டது

பெண்கள் என்றாலே வாழ்க்கையில் சவால்கள் அதிகம். அதிலும் குறிப்பாக, மாற்றுத்திறனாளிப் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம். படாத பாடுபட்டு, தம் வாழ்வைச் செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வொரு அடியிலும் சவால்களைச் சந்தித்து,அதை முறியடித்து சாதனை புரிந்து தம் வாழ்வை செம்மைப்படுத்திக்கொண்டபின், திருமண பந்தம் என்கின்ற ஒன்று ஒரு நிலையை அடைகின்றபொழுது, மாற்றுத்திறனாளிப் பெண்கள் சந்திக்கின்ற அநேக சவால்களைப் பற்றிக் காண்போம்.

மாற்றுத்திறனாளிப் பெண்கள் உணர்வுடன் வாழ்கிறார்களா?

பெண்களுக்கு உணர்வுகள் அதிகம். ஆணைவிடப் பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் என்று கவிஞர் வைரமுத்து குறிப்பிடுகிறார். ஆனால், சமூகம் இந்த மாற்றுத்திறனாளிப் பெண்களை உணர்ச்சி மிக்கவர்களாகக் காண்பதே இல்லை என்பது சொல்லமுடியாத துயரங்களுள் ஒன்று. அநேகர் வாயிலிருந்து வரக்கூடிய சொற்கள், அவர்களுக்கெல்லாம் உணர்வுகள் இருக்காது; அவர்களுக்கு எதற்குத் திருமணம்? அவர்களுக்கு எதற்கு பந்தம்? அவர்களெல்லாம் திருமணம் செய்துகொண்டு என்ன செய்யப் போகிறார்கள்? போன்ற சொற்கள் தான் இன்றளவும் நம் சமூகத்தின் சொல்லாய் இருந்துவருகிறது. 

கல்வி கற்றவர்களாய் இருந்தாலும் சரி, கல்லாதவர்களாய் இருந்தாலும் சரி இல்லறத்தில் மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு எதுவுமே பங்கில்லை என்பது போலத்தான், இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்தச் சவால்களைக் கடக்க மாற்றுத்திறனாளிப் பெண்கள் பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. அந்தப் போராட்டங்களில் சிலவற்றைக் காண்போம்.

பெற்றோரே இப்படிக் கேட்டால்?

ஒரு பெண் தன்னுடைய வாழ்விலே முக்கியமான ஒரு கட்டம், சொந்தக் காலிலே நின்று சுயமாய் சம்பாதிக்கத் தன்னைத் தகுதிபடுத்திக் கொண்டபின், தன் வாழ்க்கைத் துணையைத் தேட வேண்டுமென்று முயல்கின்றபொழுது பல நிபந்தனைகள் வருகின்றன. அவ்வளவு நாள் தன் பெண்குழந்தையைப் பாராட்டி சீராட்டி வளர்க்கின்ற பெற்றோர்கள்கூட, “உனக்கு எதற்குத் திருமணம்? உனக்கு நாங்களே பாதுகாவலர்களாக இருக்கின்றோம் அல்லவா?” என்று கேட்கிறார்கள். இவ்வளவு ஏன்? என்னைப் பெற்றவர்கள்கூட, என்னிடம், “நீயெல்லாம் திருமணம் செய்து என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார்கள். 

இந்த நிலையில்தான் நானும் என்னுடைய திருமண வாழ்க்கையைத் தொடங்கினேன். சிலர் தைரியமாகத் தங்கள் வாழ்வைத் துவங்குகிறார்கள் என்றாலும், அநேகர் அப்படியா? ஒருவேளை அதுவும் உண்மையோ? என்று நினைக்கத் துவங்கிவிட்டார்கள். இது மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது. 

சரி இதுமட்டும் தான் பிரச்சனையா என்று கேட்டால், இல்லை என்ற பதில்தான். வேறென்ன சவால்கள் என்று பார்த்தால், பெண் என்பவள் திருமணத்திற்குப் பின், இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும், இதையெல்லாம் தெரிந்துவைத்திருக்க வேண்டும்என்று பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 

“கோலம் போடத் தெரியுமா?”

சரி, அந்தச் சவால்களையெல்லாம் எப்படியாவது நாம் தெரிந்துகொண்டாலென்ன என்று யோசித்து முடிவெடுத்து அவற்றைத் தெரிந்துகொள்வதிலே சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. கோலம் போடத் தெரியுமா? ஏன் கோலம் போடவில்லை என்றால் வாழ்வில் ஏதாவது கெட்டுவிடுமா என்ன? அதையெல்லாம் ஒரு நிபந்தனையாக வைக்கிறார்கள். என்ன செய்ய? அடுத்த கேள்வி சமையல் தெரியுமா? அடுத்த கேள்வி வீடு வாசலைச் சுத்தம் செய்யத் தெரியுமா? மாவறைக்கத் தெரியுமா? தண்ணீரெடுக்கத் தெரியுமா? என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்துக்கொண்டே செல்கிறார்கள். குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்கத் தெரியுமா? இப்படியெல்லாம் நாம் முக்கியமான சில விஷயங்களை கற்றுக்கொள்ள முயற்சி செய்யும்பொழுது, தோற்றுப்போகிறோம். என்னவென்றால், பெற்றோர்களே அந்த மாற்றுத்திறனாளிப் பெண்குழந்தைகளுக்குச் சவாலாகிப் போய்விடுகிறார்கள். குழந்தையை வளர்க்கிறார்கள்; பணியைச் சொல்லிக்கொடுக்க மட்டும் தயங்குகிறார்கள். 

ஏன் என்று கேட்டால், எனக்குத் தெரியவில்லை. “உன்னால் செய்ய முடியாது, உன்னால் இதனை எடுக்க முடியாது, நீ குழந்தையைத் தூக்க முடியாது, கீழே போட்டுவிடுவாய், அல்லது உனக்குப் பெருக்க வரவில்லை, உனக்கு சுத்தம் செய்ய வரவில்லை, கேஸ் பத்தவைக்கத் தெரியாது, வேண்டாம், உன்னை நீயே பற்றவைத்துக்கொள்வாய்”. இப்படியெல்லாம் சொல்லி, பாவம் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை அலைக்கழிக்கிறார்கள். 

சரி, இந்தச் சவால்களையெல்லாம் கடந்து வந்தாலும், திருமணம் செய்துகொள்வதிலே சிக்கல் ஏற்படுகிறது. சாதாரணப் பெண்கள் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் வெற்றிகொள்வது என்பதே சவாலான விஷயம்; மாற்றுத்திறனாளிப் பெண்கள் திருமணம் செய்துகொண்டு தங்கள் வாழ்வை வெற்றிகொள்ள வேண்டுமே. என்ன செய்வது? என்று சிந்திக்கின்றபொழுது, சற்று பயமாகத்தான் இருக்கிறது. 

துணையைத் தேர்ந்தெடுக்கும்பொழுதுகூட, அந்த ஒரு தயக்கமும் தடுமாற்றமும் காணப்படுகிறது. ‘துணையைத் தேர்ந்தெடுத்து, நம் வாழ்வில் தோற்றுவிடுவோமோ?’ என்கின்ற பயம். ஏனென்றால், எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி அல்லவா துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அந்த வகையிலேயும்கூட, நாம் வாழ்விலே பெரும் சவாலைச் சந்திக்கிறோம். தேர்ந்தெடுத்த துணை நன்றாக அமைந்துவிட்டால், தப்பித்தோம். இல்லாதுபோனால், பயம். “ஐயோ! நாம் அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வாழ வேண்டுமா?” என்று நினைத்து, அவர்கள் தங்களையே பயத்தில் ஆழ்த்திக்கொள்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். 

மாற்றுத்திறனாளிப் பெண்கள் எழுச்சி பெறவேண்டும். நம் பெற்றோர்கள் என்பவர்கள் இன்னும் எத்தனை காலங்களுக்கு நம்மைப் பேணிப் பாதுகாக்க முடியும்? அதன் பின்னர் நம் நிலை என்ன? என்பதை உணர்ந்து தயவுசெய்து மாற்றுத்திறனாளிப் பெண்கள் திருமணத்திற்குத் தயாராகுங்கள். 

நிறைய விடுதிகளிலே படித்த காலங்களில் நாம் நம் பணிகளைச் செய்யக் கற்றுக்கொள்கிறோம். இப்பொழுதெல்லாம் சில விடுதிகளில், நமக்கு சமையல் உட்படச் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. வரவேற்புக்குரிய விஷயம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால், Lotus போன்ற பெண்களுக்கான பிரத்தியேகமான விடுதிகளில் சிறப்பாகச் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. நாங்களெல்லாம் படிக்கின்ற காலத்திலே, பர்கூர், திருப்பத்தூர் போன்ற சிறப்புப்பள்ளிகளில்கூட, சமையல் உட்பட எல்லாப் பணிகளும் எல்லோருக்கும் சொல்லிக்கொடுக்கப்பட்டன. அந்த நிலை தற்போது குறைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். 

எனவே, தயவுசெய்து பெண்கள் திருமண வாழ்விலே தங்களை ஈடுபடுத்திக்கொள்ளத் தயாராகிக்கொள்ளுங்கள். ஏனென்று சொன்னால், தாய் தந்தையருக்குப் பின் நம் நிலை என்ன என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அப்பொழுது தெரியும். தாய் தந்தையரும் இல்லாமல்,வேறெந்த உறவுகளும் இல்லாமல் நாம் கைவிடப்பட்ட நிலையிலே, நாம் ஒவ்வொருவரையும் தேடி அலைகின்ற பொழுதுதான், நம்முடைய நிலை நமக்குப் புரியும். என்றாலும் பயனென்ன? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று சொல்வார்களே, அந்த நிலை ஆகிவிடும் அல்லவா? எனவே தயவுசெய்து நாம் நம் வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமையையும் பெற்று, நமக்கென ஒரு பந்தத்தையும் நமக்கென ஒரு உறவையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 

அநேகப் பெண்கள் இன்று பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆகட்டும், மற்ற மாற்றுத்திறனாளிகள் ஆகட்டும், தங்களைப் போன்றவர்களையே தேர்ந்தெடுத்து, வாழ்க்கைத் துணையாக்கி, வாழ்விலே வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். 

இதற்கு மட்டும் போராடத் தயக்கமா?

குடும்பம் என்ற ஒன்று நமக்கு சிறப்பான பாதுகாப்பு வளையமாக இருக்கும். நாளெல்லாம் சுற்றி வளைய வந்தாலும் குடும்பம் என்கின்ற ஒரு கூட்டுக்குள் வந்து அடைகின்றதுதான் நமக்குப் பெருமை என்பதை மறந்துவிடாதீர்கள். தாய் தந்தையருக்குப் பின் கணவன். ஒருவேளை கணவனுக்கும் ஏதோ ஒன்று என்றால்கூட, நமக்கென பிறக்கின்ற குழந்தைகள் அடுத்து நமக்குத் துணை நிற்பார்கள். எனவே, நம் குழந்தைகள் எல்லாருமே, நல்ல நல்ல பணிகளைச் சிறப்பாக ஆற்றிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், ஏன் திருமணம் என்றவுடன் மட்டும் விலகுகிறீர்கள்? வேண்டாம். திருமணம் செய்து இல்லறத்திலே சிறந்து விளங்கி வெற்றிவாகையைச் சூட வேண்டும். எல்லாவற்றையும் போராடிப் பெருகிறோமெ. இதில் மட்டும் ஏன் போராட வேண்டுமென்ற குணத்தை இழந்துவிடுகிறீர்கள்? இழக்க வேண்டாம்.

தயவுசெய்து வாருங்கள். போராடுவோம். வெற்றி பெறுவோம்!

திருமண பந்தம் என்பது உங்களுக்கு வெறும் இல்லற வாழ்க்கைக்கு மட்டுமல்ல; உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் அதுவே துணையாக அமையும் என்பதை மறந்துவிடாதீர்கள். தயவுசெய்து இளம் தலைமுறையினர் திருமணத்தை வெறுக்காதீர்கள். தேர்ந்தெடுப்பதை சரியான முறையில் தேர்ந்தெடுங்கள். வெற்றி பெறுங்கள். 

கணவர்தான் கையில் ஏந்தினார்

இன்னும் சொல்ல வேண்டுமானால், வெற்றி பெற்றோருடைய வாழ்க்கையில் சில உதாரணங்களைக்கூட உங்களுக்கு எடுத்துக்கூறுகிறேன். என் பெயர் செந்தமிழ்ச்செல்வி. நான் திருமண பந்தத்திலே ஈடுபட்டு என் கணவரோடு, 13 ஆண்டுகளை முடித்து 14வது ஆண்டிலே மகிழ்ச்சியோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். குழந்தை பிறந்ததுமுதல், குழந்தை பிறப்புக்குக்கூட தலைப் பிரசவம் என்பது தாய் வீட்டில் நடக்க வேண்டும். ஏனென்றால், அது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்றெல்லாம் சொல்லிப் பிதற்றிக்கொண்டிருந்தார்களே, நம்புவீர்களோ மாட்டீர்களோ எனக்குத் தெரியாது. நான் என் கணவர் மட்டுமே அருகிருக்க, தலைப்பிரசவத்திந்போது என் குழந்தையைப் பெற்றெடுத்தேன். பெற்றெடுத்த குழந்தையைக் கையில் வாங்கக்கூட யாருமில்லாத சூழலில் என் கணவரே அதைக் கையில் வாங்கிக்கொண்டார்.

இரண்டு குழந்தைகளையுமே அப்படித்தான் பெற்றோம். குழந்தைகளை வளர்ப்பதிலே எங்களுக்கு எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை. நாங்களேதான் வளர்த்தோம். குழந்தையைக் குளிக்கவைப்பதிலிருந்து எல்லாப் பணிகளையும் நாங்களேதான் செய்துகொண்டோம். கொஞ்சம் முயற்சி மட்டும் தேவையாக இருந்தது. அவ்வளவுதான். அந்தச் சிறுசிறு முயற்சிகளைச் செய்துகொடுக்க நமக்கென யாரும் இல்லாமல் போய்விடமாட்டார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். 

அடுத்தபடியாக சொல்ல வேண்டுமானால், அதுபோல இருவராகச் சேர்ந்து, யாருடைய துணையுமின்றி, வெற்றிபெற்ற இன்னொரு தம்பதி என்று பார்க்க வேண்டுமேயானால், திரு. செல்வராஜ், திருமதி. மதீனா செல்வ ராஜ். இருவரும் முழுப் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். இவர்கள் இருவருமே யாருடைய துணையுமின்றி, தங்கள் குழந்தையை வளர்த்தெடுத்தவர்கள். இவர்கள் என்னுடைய ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 

அதேபோல், திரு. மற்றும் திருமதி. ணசுருதீன். இவர்கள் இருவரும் பார்வை மாற்றுத்திறனாளிகள். தங்கள் குழந்தையை அழகுற செம்மையாக வளர்த்து வருகிறார்கள். 

திரு. வெங்கடேசன், திருமதி. தீனா எழிலரசி தம்பதியினர். தங்கள் இரண்டு ஆண் குழந்தைகளையும் அழகுற வளர்த்துவருகிறார்கள். 

இவ்வாறு இருவரும் ஒரே மாதிரியான குறைபாடுடையவர்களாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, தங்களுடைய குறைபாட்டைப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், இல்லறத்திலே வெற்றி பெற்றிருக்கிறார்கள். வெற்றி பெறவும் இயலும். இது நாங்கள் கண்ட உண்மை.

நிறைய பேர் கேட்கின்ற கேள்வி என்ன தெரியுமா?“ இருவருமே பார்வையற்றவராக இருக்கிறீர்களே, உங்களுக்கும் பார்வையற்ற குழந்தைகள் பிறந்துவிட்டால் என்ன செய்ய?” என்பதுதான். நான் அவர்களிடம் கேட்கிற ஒரே கேள்வி என்ன தெரியுமா? “ஐயா! பார்வைக்குறைபாடு என்றால் என்னவென்று தெரியாத நீங்களே எங்களைப் பெற்றெடுத்து வளர்த்துவிட்டீர்கள். எங்க போகணும், என்ன படிக்க வைக்கணும் என்று எதுவுமே தெரியாத நீங்களே எங்களை வளர்த்துவிட்டீர்கள். இப்பொழுது பார்வையின்மை என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியும். அவர்களை எப்படிப் படிக்கவைக்கலாம் என்பது எங்களுக்குத் தெரியும். ஒருவேளை அப்படித்தான் பிறந்தால் என்ன செய்துவிட முடியும்? நாங்கள் பிறந்தோமே உங்களால் என்ன செய்ய முடிந்தது? எங்களைத் தூக்கி எறியவா செய்தீர்கள்? இல்லையே. அப்படியிருக்க, நாங்கள் மட்டும் என்ன செய்துவிட முடியும்? அப்படித்தான் நடந்தால் நடந்துவிட்டுப் போகட்டுமே.” என்று தைரியமாக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இல்லறத்திலே நல்லறம் கண்டு,வெற்றி பெறுங்கள். வாழ்த்துக்கள்!

***தொடர்புக்கு: selvithiyagu105@gmail.com

எழுத்தாக்கம்: X. செலின்மேரி

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *