நம் வாழ்வில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம், அது எவ்விதமாக இருந்தாலும் நாம் அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டு அந்த ஆனந்தக் களிப்பில் திளைத்து, நம் மனதில் உற்சாகத்தை வரவழைத்து, நம் புத்துணர்ச்சியை அதிகரித்து, நம்மையும் அக்காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும் அந்தக் குழந்தைப் பருவம்தான் நாம் மறக்க முடியாதது. அப்பருவம் நமக்காக காத்திருந்து அந்த இயற்கை அன்னை நமது மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் பார்த்து இன்புறுவதற்கென்ரே காத்திருப்பாள் போலிருக்கிறது! அந்தப் பருவத்தில் நம் சந்தோஷங்கள் நமக்குக் கிடைப்பதற்காக அந்த இயற்கையின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு எந்த சொந்தபந்தமும், ரத்த சம்பந்தமும் இல்லாதிருந்தால் கூட நம் நலனின் அக்கரை கொண்டு எவ்விதப் பிரதி பலனையும் எதிர் பாராததுதான் நட்பு! அதைப் போல நட்புகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை! அந்த அதிர்ஷ்ட்டத்தை நான் அடைந்திருக்கிறேன்! அடைந்திருக்கிறேன் என்பதைவிட அடைந்திருந்தேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். அப்படி எனக்குக் கிடைத்த அறிய வாய்ப்புதான் என் தோழி தேவசேனா!! அவளைப் பற்றிதான் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்!
தேவி என்னைவிட இரண்டு வயது பெரியவள், பார்வை உள்ள பெண். அவளுக்குத் தனியாகவே நடக்க வராது, என் கையைப் பிடிக்காமல்! அந்த அளவுக்கு என்னுடன் நெறுக்கமாகப் பழகியவள்! எனக்கு நிறைய சிறுவர் கதைகள் படித்துக் காட்டுவாள்! அதில் பார்வையில்லாதவர்கள் என்று ஏதாவது ஒரு பாத்திரம் வந்துவிட்டால்,
“இந்தக் கதை அவ்வளவு நல்லாயில்லை கௌரி! நாம வேற கதை படிப்போம்! சரியா?” என்று தர்ம சங்கடமான சூழ்நிலையை சமாளிக்க எவ்வளவொ பாடுபடுவாள்! இத்தனைக்கும் அப்போது வயது 12 அல்லது 13 தான் இருக்கும்!
எனக்குப் போகப் போகத்தான் அந்த விஷயமே புரிந்தது! அதே கதையை இன்னொரு தோழியைப் படிக்கச் சொல்லும்போதுதான் தேவியின் மன உணர்வு எனக்கு அவள் மீது மிகுந்த அன்பையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியது! எனக்கு இப்போது நினைத்தாலும் கண்களில் நீர் பெருகுகிறது!
இப்படித்தான் ஒருமுறை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு அழகான இயற்கை சூழல் ஆட்சி செய்யும் ஒரு இடத்திற்குப் போனோம். அங்கே நிறைய ஆண் மயில்கள் அழகான தோகையுடன் காணப்பட்டன. அதில் சில தங்கள் தோகையை விரித்தபடி கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தளித்துக் கொண்டிருந்தன! அப்போது எல்லோரும் ஒரே கூச்சலாக,
“எய்… அங்கே பாருங்க… மயில் என்னமா அழகா ஆடுது! ஆஹா! இவ்வளவு அற்புதமான காட்சியை நாங்க இதுவரைக்கும் பார்த்ததே இல்லை!” என்று கோரஸாகக் கத்தினார்கள். தேவி என்னிடம், “எங்க தெரியுது? இவங்களெல்லாம் எதையோ பார்த்துட்டு மயில் அப்டின்னு சொல்றாங்க! ஏதோ ரொம்ப தூரத்திலே என்னவோ சின்னதா தெரியுது!” என்று தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவாறு கூறியவுடன், “என்ன தேவி, உனக்குத் தெரியலேங்கற? இவ்வளவு அழகா மயில் ஆடறது உன் கண்ணுக்குத் தெரியலயா?” என்று கூற, சிறிது நேரத்தில் அவர்களும் சேர்ந்து, “ஆமா! அது மயில் இல்ல, நாங்க எதையோ பார்த்திட்டு தப்பா சொல்றோம்! வாங்க போகலாம்!” என்று கிளம்பிவிட்டார்கள். இவள் அவர்களிடம் ஜாடையில் ஏதோ சொல்லியிருப்பாள் போலிருக்கிறது! அந்த சின்ன வயதில் எப்படிப் பட்ட ஒரு சகிப்புத் தன்மை, என்னமாதிரியான புரிந்துணர்வு, எத்தனை நல்ல குணம்?
நான் என்றுவது தனியே போனால் என் அம்மாவிடம், “நானிருக்கும்போது அவளை ஏன் தனியா விடறீங்க?” என்று கோபித்துக் கொண்டு உடனே என்னைத் தேடி வந்துவிடுவாள்.
எனக்கும் அவளின்றிப் பொழுதே போகாது! அன்போடும் பாசத்தோடும் நாங்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் இருந்தோம். நான் ஒருமுறை அவளிடம் கேட்டேன்,
“தேவி! நாம ரெண்டு பேரில யாராவது ஒருத்தர் செத்துப் போயிட்டோம்னா என்ன செய்யறது? எப்டித் தாங்கிக்கப் போறோம்?” என்று. அதற்கு அவள், ”[நான் மொதல்ல செத்துப் போயிட்டா உன்னையும் கூட்டிட்டுதான் போவேன்! ஏன்னா இங்க உன்னை யார் எல்லா இடங்களுக்கும் கூட்டிப் போவாங்க?” என்று என்னைக்கட்டிப் பிடித்துக் கொண்டு அழுவாள்! நானும் அழுதுவிடுவேன்!
இவ்வளவு ப்ரியமாகப் பழகிய நாங்கள் ஒரு சில அற்ப காரணங்களுக்காகப் பிரிய நேர்ந்தது! அது முதல் என் வாழ்வின் சுவாரஸ்யத்தையும் உற்சாகத்தையும் இழந்து என் உடலின் சக்தி முழுவதையும் அவளே எடுத்துப் போய்விட்டதாக உணர்ந்தேன்! அது முதல் தீபாவளியன்று புதுத் துணிகள் அணிவதை நிறுத்தினேன்! அந்தப் பழக்கம் எனது திருமணத்தின் பின்புதான் நான் புதுப் புடவை ஏதோ பேருக்குக் கொஞ்ச நேரம் அணியும் படி இருந்தது. பிறகு அவளை ஒருமுறை சந்திக்கும் அதிஷ்ட்டம் கிடைத்தது! எங்கள் இருவர் கண்ணீரும் ஒன்றாக சங்கமமாகின.
அவள் ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாள். அவளின் திருமணமும் பலத்த எதிர்ப்பிற்கிடையேதான் நடந்தது. கணவர் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியர், நல்ல மனிதர். அவள் குணத்திற்குதான் அப்படிப்பட்ட இடத்தில் மாப்பிள்ளை அமைந்தது என்றுதான் நாங்கள் நினைத்துப் பெருமைப் பட்டுக் கொண்டோம், ஆனால் காலம் எங்களைப் பார்த்து கேலிச் சிரிப்பு சிரித்ததை நாங்கள் அறிந்துகொள்ள இயலவில்லையே? அவள் தனது மாமியாரால் மிகவும் கொடுமை படுத்தப் பட்டுத் தன் பிரசவ காலத்தில் முறையான பராமரிப்பின்றி அதுவும் இரட்டைக் குழந்தைகள் பெற முடியாமல் அவள் என்னிடம் சொன்னதைக் கூட மறந்து அவள் மட்டும் தனியாக என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாளே…!
கடைசியாக அவள் ஆசை என்ன தெரியுமா? “கௌரியைப் பார்க்கணும், கௌரியைப் பார்க்கணும், கௌரியைப் பார்க்கணும்”. இதுதான்! இவ்வாறு அவளின் சகோதரிகள் சொல்லக் கேட்டு நான் மனம் உடைந்து போனேன்! இவ்வளவு மட்டுமல்ல, இன்னும் எவ்வளவோ சுவாரசியமானதும், மிகவும் உருக்கமான சம்பவங்களும் கூட எங்களது சிறிய வயதிலேயே நாங்கள் மனமுதிர்ச்சி பெறும் வகையில் எங்களுக்கு அனுபவப் பாடமாகவும் நாங்கள் கற்றுக் கொண்டு பயன் பெறும் வகையிலும் நடந்திருக்கிறது, அதையெல்லாம் பிரிதொரு சமயங்களில் பகிர்ந்துகொள்கிறேன்.
என் வாழ்வின் ஓர் அங்கமாய், என் வளர்ச்சியின் ஆதாரமாய், என் சுக துக்கங்களில் உரிமையோடும் உண்மையோடும் பங்கெடுத்துக் கொண்ட, என்னுயிர்த் தோழி என்னை விட்டுவிட்டு அவள் மட்டும் இறைவனிடம் சென்ற இழப்பை என்னால் 7 வருடங்களாகியும் மறக்க இயலவில்லை! இன்று இந்த நொடி கூட என் கண்ணீரில் அவளின் உண்மையான பிரியத்தை நினைத்துப் பார்க்கச் செய்து கொண்டிருக்கிராள்! அவளின் மரணம் என்னை அந்த அளவிற்கு நிலை குலையச் செய்து விட்டது! அதன் தாக்கமே இக்கவிதை! இதை அவள் எங்கிருந்தாவது உணர்ந்து ரசிப்பாளா?
என்னுயிர்த் தோழி!
கண்ணே என் கற்பகமே,
காலம் தந்த அற்புதமே!
பொன்னே நல் பூச்சரமே,
போனதெங்கே சொல் தோழி!
காலம் அழைத்ததென்று
கண்மூடிச் சென்றாயோ,
கருணை சிறிதுமின்றி
கலங்க வைத்துப்பிரிந்தாயோ!
கண்ணீர்க் கடலினிலே,
கவலைப் படகினிலே
கதரும் மனதுடனே,
கலைந்தே அலைகின்றேன்!
பள்ளிப் படிப்பினிலே
பகிரும் உணவினிலே
அள்ளிக் கொடுப்பதிலே
அனைத்திலும் இணைந்திருந்தோம்!
துள்ளித் திரிந்திருந்தோம்,
துன்பங்களை மறந்திருந்தோம்,
வெள்ளிக் கொலுசொலியாய்,
வேண்டும் மட்டும் சிரித்திருந்தோம்!
பிறந்தது நாள் முதலாய்,
பிரிவுதனை அறிந்ததில்லை,
பேசிய கதைகளிலும்
பிரிவு என்ற சொல்லு மில்லை!
பறந்தது ஏனடியோ,
பறிகொடுத்தேன் நானடியோ!
மறந்தும் நீ சென்றதும் ஏன்,
மண்ணகத்தை வெறுத்ததும் ஏன்?
இலக்கியத் தகவல்களை
இசையின் நுணுக்கங்களை!
துலக்கியே தெரிந்து கொண்டோம்,
துயரத்தைப் பகிர்ந்துகொண்டோம்!
பறவைகள் பறப்பதுபோல்,
பறந்தே திரிந்திருந்தோம்,
பாடிய வண்டுகளாய்,
பாடியே சுற்றி வந்தோம்!
சிறந்திடும் கலைகளையும்
சீராய்ப் பயின்று வந்தோம்,
சுறந்திடும் அன்பினையே
சுகமாய்ப் பகிர்ந்தளித்தோம்!
தெரிந்தே சென்றிருந்தால்,
தொடர்ந்து வந்து தடுத்திருப்பேன்,
தெரியாமல் சென்றாயே,
தேடுவது சாத்தியமா?
விவரம் அறிந்தமுதல்,
விளையாட்டாய் விணையமின்றி,
தவறோ சரியதுவோ,
தலையாட்டிச் சொன்னதொரு
வார்த்தை நீ மறந்தாய்,
வந்ததை நான் மறக்கவில்லை!
தோழி நீ மறைந்தால்,
தயக்கமின்றிப் பின் தொடர்வேன்,
தேவி நான் இறந்தால்,
தேடி நீயும் வந்திடடி!
கடமை முடிந்திருந்தால்,
களிப்புடனே வந்திருப்பேன்,
உடமை ஏதுமில்லை,
உலகினிலே எதுவுமில்லை!
இருக்கும் உறவுகளும்,
இன்னல் தீர்க்கவில்லை,
ஈடாய் உனக்கு என்றும்,
இது வரையில் யாருமில்லை!
கண்ணாய் நீ இருந்தாய்,
கவலை இன்றி நானிருந்தேன்,
மண்ணுள் மறைந்துவிட்டாய்,
மகிழ்வைக் கொண்டு சென்றுவிட்டாய்!
ஓரூரில் நாம் பிறந்தோம்,
ஒன்றாய் நாம் வளர்ந்தோம்,
வாழ்தல் முடிவு மட்டும்
வேறு வேறாய் வருவதுண்டோ?
தோழி காத்திருப்பாய்,
தொடர்ந்தே வருகின்றேன்,
தொல்லை எதுவுமில்லை,
தோல்வியென்று ஏதுமில்லை!
கள்ளம் சிறிதுமின்றி,
களிப்புடனே மகிழ்ந்திருப்போம்!
காணும் இடமெங்கும்,
கவலையின்றி சிறகடிப்போம்!
கருணை முகமிருக்கும்,
களங்கமில்லா மனமிருக்கும்!
கடவுள் மடியிருக்கும்
கரங்கள் நம்மை அணைத்திருக்கும்!
***தொடர்புக்கு: gowri.sgg@gmail.com
Be the first to leave a comment