செய்தி உலா

செய்தி உலா

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
முன்னணி செய்தி ஊடகங்களின் முகப்புப் படங்கள்

கடந்த ஒரு மாதத்தில் தமிழகம் தொடங்கி, உலக அளவில் முக்கிய ஊடகங்களில் பார்வையற்றோர் தொடர்பாக வெளியான செய்திகளின் தொகுப்பு இது.

“பார்வையற்ற அரசு ஊழியர்களுக்கு விலக்கு:” ஆந்திர அரசின் உத்தரவு என்ன?

தி இந்து

ஆந்திராவில், அரசு ஊழியர்களுக்கான முகம் அடையாளம் காணும் வருகைப் பதிவேட்டு முறையிலிருந்து தற்காளிகமாகப் பார்வையற்ற அரசு ஊழியர்களுக்கு விலக்கு வழங்கி அம்மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநில அரசின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களின் வருகைப்பதிவை உறுதிசெய்ய, முகம் அடையாளம் காணும் முறை (Facial Recognition Base Attendance System FRBAS) தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த முறையானது பார்வையற்றவர்கள் எளிதில் அணுகத் தக்க வகையில் மாற்றப்படும் எனவும், அதுவரை இந்த முறையின் மூலம் வருகைப்பதிவு செய்வதிலிருந்து பார்வையற்ற அரசு ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும் ஆந்திர அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

“பார்வையற்றோருக்கான தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்ப் பற்றாக்குறையைக் களைந்திடுக”: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்தியன் எக்ஸ்ப்ரஸ்

வடக்கு டெல்லியின் கிங்ஸ் வே கேம்ப் பகுதியில்  அரசின் சார்பில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப்பள்ளி (ஆண்கள் மட்டும்) செயல்பட்டு வருகிறது. போதிய வசதிகளோ, பாடங்களைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்களோ இல்லாமல் இருப்பதாகவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள டெல்லி அரசுக்கு உத்தரவு வழங்க வேண்டும் என தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பின் (NFB) சார்பில் கடந்த 2018ல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஜனவரி 20 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநிலத்தில் செயல்படுகிற பார்வைத்திறன் குறையுடையோருக்கான அனைத்துப் பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வீடில்லாத ஏழைக்  குழந்தைகளுக்கு சொந்த செலவில் வீடுகட்டித் தரும் பார்வையற்ற ஆசிரியர்: குவிகிறது பாராட்டு

டைம்ஸ் ஆஃப் இந்தியா

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், நள்ளாலம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பார்வையற்ற ஆசிரியர் முகமது முஸ்தபா. இவர் மீன்சந்தாவில் செயல்பட்டு வரும் பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் (Government Vocational Higher Secondary School)படித்துவரும்  ஆறு குழந்தைகளுக்கு வீடு கட்டித் தந்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டின் ஒருநாள், வீட்டுப்பாடம் முடிக்காமல் வகுப்புக்கு வந்த மாணவியிடம் காரணம் கேட்டிருக்கிறார் முஸ்தஃபா. பருவமழை காரணமாக தன்னுடைய வீட்டின் கூரை சேதமடைந்து, புத்தகங்கள் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகிவிட்டதாகக் கூறியுள்ளார் அந்த மாணவி. மாணவியின் வீட்டிற்கே சென்று அவரின் வறுமையான சூழலை அறிந்த முஸ்தஃபா, அன்றுமுதல் வீடில்லாத பார்வையற்ற குழந்தைகளுக்கு வீடுகட்டித்தரும் அனுகிரகாபவன் என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார்.

பார்வையற்ற மாணவர்களிடம் ஸ்டெம் பாடத்திட்டம் அறிமுகம்: கர்நாடக மாநிலத்தில் விஷன் எம்பவர் முன்னெடுக்கிறது

டைம்ஸ் நவ்

தன்னார்வத் தொண்டு நிறுவனமான விஷன் எம்பவர், மைக்ரோசாஃப்ட் இந்தியா மற்றும் சங்கரா கண் மருத்துவமனையுடன் இணைந்து, கர்நாடக மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் பயிலும் பார்வைத்திறன் குறையுடைய குழந்தைகளுக்கு ஸ்டெம் (Science and Technology Engineering Mathematics) பாடங்களைக் கற்பிக்கவிருக்கிறது. மாணவர்களின் எளிமையான புரிதலைக் கவனத்தில்கொண்டு, இந்தப் பாடங்கள் அனைத்தும் ஒலிப்பதிவு, பிரெயில் மற்றும் தொட்டறியும் வரைபடங்களாக (tactile diagrams) வழங்கப்படும் என விஷன் எம்பவரின் துணை நிறுவனர் வித்யா Y. தெரிவித்தார்.

“பள்ளியை மூடக்கூடாது” மாணவர்களுடன் இணைந்து பெற்றோரும் போராட்டம்:

தெலுங்கானா டுடே

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் செயல்பட்டு வருகிறது பார்வையற்றோர் நலன் மற்றும் முன்னேற்ற சங்கத்தால் (Development and Welfare Association of the Blind) நடத்தப்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப்பள்ளி. போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததால்,  இந்த ஆண்டோடு பள்ளி மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துவிட்டது.

இந்தச் சூழலில், பள்ளியை அரசே எடுத்து நடத்த வேண்டும் என 30க்கும் மேற்பட்ட பார்வைத்திறன் குறையுடைய குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் இணைந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிகளில் அலெக்சா: அமேசானோடு இணைந்து 34000 பள்ளிகளில் திட்டத்தைச் செயல்படுத்துகிறது என்ஏபி:

அமேசான் இந்தியா

உத்தரப்பிரதேச மாநிலப் பள்ளிகளில், உள்ளடங்கிய கல்விமுறையை முன்னெடுத்துவரும் என்ஏபி (National Association of Blind) அமேசான் நிறுவனத்தோடு இணைந்து, பள்ளிகளில் அலெக்சா மூலம் கற்றல் நடவடிக்கைகளை அறிமுகம் செய்துள்ளது.

முதலில் லக்னவ், கோரக்பூர் மற்றும் பாஸ்டி ஆகிய மூன்று மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாணவர்களிடையே கிடைத்த வரவேற்பின் காரணமாக, தற்போது மாற்றுத்திறனாளிகள் பயிலும் 93 பள்ளிகளில், 34000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறது என்கிறார் என்ஏபி உத்தரப்பிரதேச மாநிலத்தின் பொறுப்பாளர் எஸ்.கே. சிங்.

கிரிக்கெட் பார்க்க வந்த பார்வையற்ற ரசிகர்கள்: உடன் வந்த உதவியாளர்களை அனுமதிக்காததால் சலசலப்பு:

டெக்கன் ஹெரால்ட்

கடந்த ஜனவரி 24 அன்று, மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் அமைந்துள்ள ஹோல்கர் மைதானத்தில் இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியினை நேரில் காண்பதற்கா,க ஆஷிஷ் சௌவ்கான், அபிஷேக் நாம்தேவ் ஆகிய இரு பார்வையற்ற ரசிகர்கள் தங்கள் பார்வையுள்ள உதவியாளர்களுடன் வந்தனர்.

நுழைவுச் சீட்டு இல்லாததால், பார்வையுள்ள உதவியாளர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனையடுத்து அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. உடனே, காவல்த்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, மனிதநேயத்தின் அடிப்படையில் இரண்டு உதவியாளர்களையும் அனுமதித்துப் பிரச்சனையை முடித்துவைத்தனர்.

வழிகாட்டி நாயோடு இருந்ததால் காரில் ஏற்ற மறுத்து புக்கிங்கை ரத்து செய்த டாக்சி ஓட்டுனர்: குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது நாட்டிங்காம் நீதிமன்றம்:

பிபிசி

இங்கிலாந்தின் நாட்டிங்கம் நகரைச் சேர்ந்த பார்வையற்ற தம்பதியரான கிரிப்த்ஸ், மெல் இருவரும் நாட்டிங்கம் ரயில்நிலையம் செல்ல உபர் டாக்சி புக் செய்து காத்திருந்தனர். செயலி மூலமாக டாக்சியை ட்ராக் செய்துகொண்டிருந்தவர்கள், டாக்சி தங்களைக் கடந்து வேகமாகச் சென்றுவிட்டதையும், செயலியில் தங்கள் புக்கிங் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வந்ததையும் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

விசாரணையில், டாக்சி ஓட்டுனரான அன்வர், தம்பதியோடு காரில் ஏறவிருந்த இரண்டு வழிகாட்டி நாய்களைக் காரில் ஏற்றிக்கொள்ள விருப்பம் இல்லாததால், நிறுத்தாமல் அவர்களைக் கடந்து சென்றது நிரூபிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டாக்சி ஓட்டுனருக்கு 288 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டதோடு, மனதளவில் காயப்படுத்தியதாக 34 பவுண்டும், நிவாரணத்தொகையாக 100 மற்றும் வழக்கு செலவுக்காக 500 பவுண்டும் பாதிக்கப்பட்ட பார்வையற்ற தம்பதிக்கு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

வழக்கிற்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டுவதற்குத் தாங்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டதால், கிடைக்கப்போகும் நிவாரணத்தொகையைக் கொண்டு, உடலோடு அணிந்துகொள்ளும்படியாக ஒரு கேமரா வாங்கித் தங்களோடு வைத்துக்கொள்ளப் போவதாகவும் சொல்கிறார் கிரிஃப்த்ஸ்.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *