Categories
சவால்முரசு வரலாறு books

சகாக்கள்: ஓர் அழுத்தமான கைகுலுக்கல், அப்பட்டமான கையளிப்பு

மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக எழுதப்படும் பெரும்பாலான புத்தகங்களில் இடையீடாகவோ அல்லது பிற்சேர்க்கை என்ற பெயரிலோ, தரவுத்தாள்கள் திணிக்கப்பட்டிருக்கும். ஆங்காங்கே அட்டவணைகள் அட்டணக்கால் போட்டு அமர்ந்திருக்கும்.

சகாக்கள் அட்டைப்படம்

சகாக்கள் வாங்க:

‘சகாக்கள்’ எனத் தன் நூலுக்குத் தலைப்பிட்டு, ஓர் அழுத்தமான கைகுலுக்களோடுதான் தோழர் நிர்மல் இந்த நூலைத் தொடங்கியிருக்கிறார் என்றெண்ணிப் படித்துக்கொண்டிருந்தேன். 215 பக்கங்கள் முடிந்து மெல்ல என் கையை அவர் கையின் பிடியிலிருந்து விடுவித்தபோதுதான் அது வெறும் கைகுலுக்கல் மட்டுமல்ல, ஓர் ஆயுதக் கையளிப்பும் அங்கே  நடந்தேறியிருப்பதை உணர்ந்தேன். மொழிவனத்தில் அலைந்து திரிந்து தேர்ந்த சொற்பூக்கள் கொண்டு தொடுக்கப்பட்ட கருத்து மாலைகளை மிகுந்த கவனத்தோடுதான் வாங்கிக்கொண்டிருந்தேன். அனைத்து மாலைகளுக்கிடையேயும் ஓர் அரூபத் தொடர்பாய் அந்த ஆயுதம் இருந்திருக்கிறது என்பது இப்போதுதான் உறைக்கிறது.

மாற்றுத்திறனாளிகளாகிய நம்மைக் குறித்து தான் அறிந்துகொண்டது போலவே தன் நண்பர்கள், பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தோழர் நிர்மல் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கக்கூடும் என நினைத்தேன். ஆனால், படித்து முடித்தபோதுதான் இந்தப் புத்தகம் பொதுச்சமூகத்துக்கு மட்டுமானது அல்ல, உரிமைக்காய் அன்றாடம் ஏதோ ஒரு வழியில் குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மாற்றுத்திறனாளி செயல்பாட்டாளருக்குமானது என்பது புரிந்தது.

இந்த நூல் என் செயல்பாட்டு முறையில் இல்லாத ஓர் மெல்லிய ஒழுங்குக்கு என்னை அழைக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைப் போராட்டங்கள் குறித்த எவ்வித வரலாற்று முன்னறிவோ, உலகலாவிய பார்வையோ இதுவரை என்னிடம் இருந்ததில்லை. சுயத்தின் அன்றாடப் பாடுகள் தரும் உந்துதலே நான் எழுப்பி வந்த உரிமைக்குரலின் அடிநாதம். என் எழுத்துகளாகட்டும், களச் செயல்பாடுகளாகட்டும் எல்லாம் என் உள் உணர்வுக்குள் இருந்து கிளைத்தவை. மேலும், தரவுகளைத் திரட்டித் தர்க்கிக்கிற தரமான சம்பவக்காரன் அல்ல நான். அது என் இயல்புக்கு ஒத்தும் வராது. அதனால்தான் இந்தப் புத்தகம் எனக்கானது என்கிறேன்.

மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக எழுதப்படும் பெரும்பாலான புத்தகங்களில் இடையீடாகவோ அல்லது பிற்சேர்க்கை என்ற பெயரிலோ, தரவுத்தாள்கள் திணிக்கப்பட்டிருக்கும். ஆங்காங்கே அட்டவணைகள் அட்டணக்கால் போட்டு அமர்ந்திருக்கும். இவை எதுவுமே இந்தப் புத்தகத்தில் கிடையாது. அதேநேரம் அத்தனையும் உண்மைக்கதைகள். சில மயிலிறகு இதம், சில மயிர்க்கூச்சரியும் பதம்.

நூலின் முகவுரையில் தொடங்குகிற ஆசிரியரின் செறிவான சொற்சேர்க்கை நமக்குள்ளும் ஒரு அனலைப் பற்றவைக்கிறது. “தகிக்க வேண்டாம் தணிந்து சுடர்ந்தாலே போதும்” என ஆசிரியர் நினைத்திருக்கக்கூடும். முதல் சில அத்தியாயங்களில் புராண இதிகாச உதாரணங்களோடு பயணத்தை மெல்ல நகர்த்திச் செல்கிறார். எல்லாம் ஏற்கனவே எங்கெங்கிருந்தோ வந்து செவி வழியே சிந்தை நிறைத்திருந்தவை என்பதால் கொஞ்சம் சாகவாசமாய் படித்தேன். ஆனாலும், ஒட்டுமொத்தமாய் அப்படியும் படித்துவிட முடியாது. காரணம்,

மதிப்பிற்குரிய

சுபோத் சந்திர ராய்

மற்றும் நமது

பெரியதுரை

அவர்களின் புத்தகங்களை ஒரு புள்ளியில் இணைத்திருப்பதும், அவற்றின் உள்ளடக்கங்களிலிருந்து எடுத்து ஆசிரியர் தந்திருக்கிற தகவல்களும் கதைகளும் மிகச் சுவாரசியமானவை.

பார்வையற்றவர்கள் தொடர்பான தேசியக் கணக்கெடுப்பைக்  கோரும் திரு. ராய் அவர்களின் உரிமைக்குரலை ஓயவிடாமல், 70 ஆண்டுகளுக்குப் பிறகும் அதனை நமக்குள்ளும் கடத்தி அதன் அமரத்துவம் காக்கும் அடடே அரசுகள் நம்முடையவை எனும்போது சிரிப்பதா நோவதா தெரியவில்லை. இன்னும் நம்மை ‘வெள்ளைக்கொக்குக் குருடன்களாகவே சிந்திக்கிற அதிகாரபீடத்தின் அறியாமை குறித்தும் ஏதேனும் வாய்மொழிக்கதை இருக்கிறதா என பெரியதுரை அவர்கள்தான் ஆய்ந்து சொல்ல வேண்டும்.

நூலின் பயணம் கற்கால ஆஸ்தரேலியாவின் பாறை ஓவியத்தில் தொடங்கி, எகிப்து, பாபிலோன் என வரலாற்றுச் சாலையில் மெல்லப் பயணிக்கிறது. முடிமன்னர் காலம், தொழில்புரட்சி நாட்கள் எனக் காலத்தை வரலாற்றின் வழியே பகுத்துக்கொண்டு, அந்தந்த காலகட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் எவ்வாறெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நிகழ்வுகளாய், நிதர்சனக் கதைகளாய் சொல்லிச் செல்கிறது.

முதல் தட்டச்சுக்கருவி கண்டுபிடிப்பிற்குப் பின்னே இருந்த காதல், சைகைமொழித் தொற்றத்துக்குப் பின் நின்ற பாசம், பாரா ஒலிம்பிக் என்ற வித்துக்கு உரமாய் இருந்த ஒரு மருத்துவரின் மனிதம் என அத்தனையும் தர்க்கம் சார்ந்தவை அல்ல, தார்மீகம் சார்ந்தவை என்பதே நூலுக்கும் எனக்குமான நெருக்கத்தை மேலும் கூட்டிக்கொண்டே போனது. அத்தோடு, ‘Survival of the Fittest’ என்ற டார்வின் கோட்பாட்டின் மீதான ஆசிரியரின் அணுகுமுறை,  உண்மையில் மானுடத்தின் மீது அவர்கொண்ட மாறா அன்பிற்கும் நம்பிக்கைக்கும் சான்று.

திரைப்படம் போலவே இங்கும் இடைவேளை என ஆசிரியர் ஒரு கட்டையைப் போட்டபோது எனக்குள் கொஞ்சம் தயக்கம் மேலிடத் தொடங்கியது. காரணம், ஒரு திரைப்படம் என்றால், அங்கே முதல் பாதி சோபிக்கவில்லை என்றாலும், இரண்டாம் பாதியில் வேகமும் விருவிருப்புமாய் அந்தக்குறை ஈடுசெய்யப்பட்டுவிடும். ஆனால், நான் படித்துக்கொண்டிருப்பது ஒரு புதினம்கூட இல்லை, ஒரு வரலாற்றுப் புத்தகம். முதல்ப்பாதி எங்கும் செவிவழிக் கதைகள், புராண புரோகிதங்கள், ஆங்காங்கே நம்பிக்கை விழுமியம் சுமந்த நல்வழிக் கொன்றைவேந்தன் நிகழ்வுகள். ஆசிரியர் வேறு, கலைத்திட்டத்தின் சொல்லாட்சியில் கண்டதுபோல மாதிரிகள் என்றெல்லாம் பீடிகை போட்டு நான்காம் அத்தியாயத்தைத் தொடங்கியதில் கொஞ்சம் அசிரத்தைதான் எனக்கு. ஆனால், அப்படி எதுவும் நிகழவே இல்லை. ஷேஷையர் இல்லம் (Cheshire Home) தொடங்கி, கேப்பிட்டல் ஹில் வரை விரைவாகவும் செறிவாகவும் மொழியின் துணைகொண்டு பயணத்தை முடுக்கியபடியே இருந்தார் ஆசிரியர்.

இன்று நாம் உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கிற உரிமை முழக்கங்களின் கர்த்தாக்களை வழியெங்கும் நமக்கு அறிமுகம் செய்தபடியே இருந்தார் ஆசிரியர்.

விக் ஃபிங்கேல்ஸ்டைன் (Vic Finkelstein),

பால் ஹண்ட் (Paul Hunt),

ஜூடிட் ஹியூமன் (Judith Heumann)

அவர்களுள் முக்கியமானவர்கள். 1970களில் தீர்க்கமும் தெளிவும் கொண்டு அவர்கள் முழங்கியவற்றைத்தான் இன்றைய 2022லும் இந்தியாவில் நாம் எதிரொலித்தபடியே இருக்கிறோம் என்பதில் வியப்பு ஒருபுறம், விரக்தி மறுபுறம்.

அக்கினிப் பிழம்பு அகத்துக்குள் எரிந்துகொண்ட்இருக்க, நூலின் இறுதிப் பக்கங்களை நெருங்கிக்கொண்டிருந்தேன் நான். அங்கே தோழர் நவீன் டேனியல் அவர்களின் கடிதம் ஒன்றை இணைத்து, அந்தப் பிழம்பை அகலாக்கி, என் கைகளிலேயே கொடுத்துவிட்டார் ஆசிரியர். அதுதான் நான் மேற்சொன்ன ஆயுதம். அது அன்பெனும் நெய்யிட்ட புரட்சி எனும் ஒளி மங்கா அகலாயுதம். இது எதிர்பட்டவரை குத்திக் கிழிக்காது, மாறாக உடன் சேர்ந்து பயணிக்க அழைக்கும். மறுத்தால் மற்றொரு பாதையை பிறருக்குக் காட்டியபடியே தன் பாதையில் முன்னேறும்.

இது நூல் விமர்சனமா என்றால் நிச்சயமாக இல்லை. ஆசிரியரின் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியின் முக்கியத்துவத்தை சவால்முரசு வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவலில் இரண்டுமுறை படித்துவிட்டு என் மனதில் தோன்றியதைச் சொல்லியிருக்கிறேன். அப்படியே முத்தாய்ப்பாக நூலாசிரியருக்கும் ஒன்றிரண்டைச் சொல்லியும் விடுகிறேன்.

பார்வையற்றோருக்கான முதல்    சிறப்புப்பள்ளியைத் தொடங்கிய பிரான்சைச் சேர்ந்த வாலண்டைன் ஹாய் பற்றியோ, உலக அளவிலோ அல்லது இந்திய அளவிலோ பார்வையற்றோர் எழுப்பிய உரிமைக்குரல்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெறாதது சிறு ஏமாற்றத்தைத் தந்தது. அத்தோடு, நூலில் ஆறு முதன்மைத் தலைப்புகள் இருந்தும்,கிண்டில் வடிவமைப்பில் அவற்றைப் பொருளடக்கமாகத் (Table of Contents) தராதது சில தலைப்புகளை மீள் வாசிப்பு செய்வதில் சிரமத்தை ஏற்படுத்தியது. மற்றபடி, சகாக்கல் ஓர் அழுத்தமான கைகுலுக்கல் வழியே நிகழ்ந்திருக்கிற அப்பட்டமான ஆயுதக் கையளிப்பு.

***ப. சரவணமணிகண்டன்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

2 replies on “சகாக்கள்: ஓர் அழுத்தமான கைகுலுக்கல், அப்பட்டமான கையளிப்பு”

அழகான நூல் பற்றிய அற்புதமான பார்வை சூப்பர்,, சிறு விண்ணப்பம்

சகாக்கல் : என தலைப்பில் இருப்பதை சகாக்கள் என மாற்றவும், ,,நன்றிpi

Like

Leave a reply to பிச்சைக்காரன் Cancel reply