கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்குப் பின், பார்வையாளர்களின் பேரமைதியுடன் அந்த முழக்கமும் சேர்ந்துகொண்டது. இப்போது அரங்கு சில கணங்களுக்கு ஒரு தியான மையம் போல அமைதிகொண்டிருந்தது. ஆனால் அது நீடிக்காது. யாரேனும் ஒருவர் உடனே களைத்துவிடத்தான் போகிறார். ஒரு கேள்வியால், ஒரு செறுமலால், ஒரு வெளியேறலால்.
அப்படி எதுவும் நடக்கவில்லை. பார்வையாளர்கள் அமைதிக்குப் பழகியிருந்தார்கள். ஒருமணி நேரம் என்பது ஒரு நல்ல பயிற்சிதான். கூடவே வியப்பு அவர்களை ஆட்கொண்டதும் காரணமாய் இருக்கலாம்.
உரை தொடங்கியபோதே அந்த வியப்பின் அமைதி அரங்கில் மெல்லக் குடியேறத் தொடங்கிவிட்டது. இல்லை அப்போது இல்லை. அவனைப் பற்றி அறிமுகம் தந்தபோதே பார்வையாளர்களின் கவனம் அவன்மேல் குவியத் தொடங்கியதில் தொடங்கிய அமைதி அது. அவன் பேச அழைக்கப்பட்டான். மேடையில் இருந்த சக ஏற்பாட்டாளர்களில் ஒருவர் அவனது கையைப் பற்றியபடி மைக் முன் வந்து நின்றார். அவன் முன்னால் நீண்டு சற்று தாழ்ந்திருந்த மைக் தண்டின்மீது அவன் கையை வைத்துவிட்டு விலகிக்கொண்டார்.
அவனுக்கு அவரது அணுகுமுறை பிடித்திருந்தது. பார்வையற்றவர்களைக் கையாள்வதில் இதுதான் சரியான ஓரியண்டேஷன். பலருக்கு இது தெரிவதே இல்லை. ஏதோ ஒரு சுமையைக் கைத்தாங்களாகத் தூக்கி வருவதுபோல அழைத்துவருவார்கள். இன்னும் சிலர், ஒரு கையைப் பற்றிக்கொண்டு, தங்களது இன்னோரு கையை முதுகுக்குப் பின்னால் கொடுத்து, அழைத்து வருவார்கள், சரியாகச் சொன்னால் நகர்த்திவருவார்கள்.
இது பற்றியெல்லாம் அவனுக்குள் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்ததில், சில வினாடிகள் கழிந்தன. இப்போது அவன் ஆரம்பித்தான். அவன் என்ன சொல்லி ஆரம்பித்தான், எதைப் பற்றிப் பேசப்போவதாகச் சொன்னான், யார் யாருக்கெல்லாம் எப்படி வணக்கம் சொன்னான் எதையுமே எவருமே கவனிக்கவில்லை. அவர்கள் அவனை மட்டுமே கண்கொட்டாது பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
பார்வையாளர்களில் சிலர் தாங்கள் அழைத்துவந்திருந்த தங்களின் குழந்தைகளிடம் அவனைச் சுட்டிக்காட்டினார்கள். “பார் அந்த அங்கிலுக்கு கண்ணு தெரியாது. ஆனால், அவர் பெரிய பேச்சாளரா இருக்கார். நீயும் பெரியவனாகி …”
“அந்த அங்கிலுக்கு கண்ணுதானப்பா தெரியாது.” உபதேசத்தைத் தொடங்கவிடாமலே செய்துவிட்ட குழந்தையின் துடுக்கான மறுமொழியால் வாயடைத்துப் போனார் ஒரு தகப்பன்.
அவன் பொதுத்தளத்தில், ஒரு பொதுப்பொருண்மையில் பேசுவது இதுவே முதல்முறை. மற்றபடி அவன் தன்னைப் போன்ற பார்வையற்றவர்கள் ஒருங்கிணைத்த கூட்டங்களில் பேசியிருக்கிறான். பெரும்பாலும் அவை உரிமை முழக்கங்களாகவே இருக்கும். உரத்துப் பேசினால் போதும். அதிலும் பார்வையாளர்கள் தன்னைப் போன்ற பார்வையற்றவர்கள் என்பதால், அவன் கருத்துகளைச் சொல்வதில் நகைச்சுவை, ரவுத்திரம் எனப் பல்வேறு குரல்வழி பாவனைகளோடே கரையேறிவிடுவான்.
ஆனால், இந்த மேடையில் அது மட்டும் போதாதே. சுமார் இருநூற்றுக்கும் அதிகமான கண்கள் தன் மீதே படிந்திருக்க எவ்வித அசைவுமின்றி ஒரு சிலைபோல நின்று எப்படிப் பேசுவது? சரி கையைக் கொஞ்சம் அப்படி இப்படி ஆட்டலாம் என்றாலும்கூட அது அத்தனை இயல்பாக இருக்குமா? பொம்மைபோலத் தோன்றிவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடுமே.
உள்ளுக்குள் குழம்பியபடியே தன் உரையைத் தொடங்கினான். சமத்துவக் காற்று என்பது தலைப்பு. இங்கும் நிகழ்த்தப்பட வேண்டியது வழக்கமான அதே உரிமை முழக்கம்தான் என்றாலும், ஒரு பார்வையற்றவனின் குரலாக அல்லாமல், பொதுச்சமூகத்தின் ஒரு தனிநபரின் குரலாக அது ஒலிக்க வேண்டும். சமத்துவம் கோரி ஒரு பார்வையற்றவனாகப் பொதுச்சமூகத்திடம் எப்போதும் முன்வைக்கிற இறைஞ்சல்களைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு, மனிதன் சக மனிதன்மீது கொள்ள வேண்டிய அக்கறைகள், பேண வேண்டிய கண்ணியம், பரஸ்பர மரியாதைகள் குறித்துப் பேசத் தொடங்கினான்.
சமத்துவத்தின் காற்று குடும்பச் சாளரங்களுக்குள்தான் முதலில் பீறிட்டுப் புக வேண்டும் என அவன் சொன்னபோது, அரங்கில் சில கைதட்டல்கள் எழுந்தன. அதனை வலியுறுத்திச் சொல்ல, கணவன் மனைவி பற்றி சூழலில் கிடந்தலையும் சில மொக்கையான நகைச்சுவைகளை அவன் எடுத்தாள வேண்டியிருந்தது. இப்போது அவன் குடும்பத்திலிருந்து மெல்ல வெளியேறி, பள்ளி, கல்லூரி, பணியிடங்கள் என நகர்ந்தான். அங்கே நிகழ்த்தப்படும் அசமத்துவங்களைச் சுட்டியபடி, இறுதியில் கோவிலுக்குள் நுழைந்துவிட்டான்.
இனி அவனுக்கு அலைச்சல் இல்லை. இருக்கும் எஞ்சிய கணங்களில் அவன் இங்கேயே உலவலாம். முழங்க வேண்டாம். எதிரொலிப்பே போதும். அந்த அளவுக்கு இரு தரப்பாரும் கோவிலின் நான்கு திசைகளிலும் இறுக்கமான காழ்ப்புச் சுவர்களைக் கட்டி, அதில் அவன் காலத்திற்கும் மேற்கோளாக எடுத்தாளும்படி எண்ணற்ற வசைகளை இயற்றி வைத்திருக்கிறார்கள். கிழக்கே ஆத்திகச்சுவர் என்றால் மேற்கே நாத்திகச்சுவர், வடக்கே ஆன்மீகச்சுவர் என்றால், தெற்கே பகுத்தறிவுச்சுவர்.
“நண்பர்களே! முன் எப்போதையும்விட இங்கு அசமத்துவம் எல்லாத் தளங்களிலும் தன் கோர முகத்தை வெளிப்படுத்தி நிற்கிறது. இனத்தால், மொழியால், மதத்தால் உருவாக்கப்படும் பெருமிதங்கள் யாவும் மறுதரப்பாரைப் பற்றிய காழ்ப்புகளாலேயே நிலைகொள்கின்றன.” அவன் அவ்வப்போது தன் வலக்கையை இலேசாக முன்னால் நீட்டிப் பேசினான். அறுதியிட்டுச் சொல்லப்பட வேண்டியவை என அவன் கருதிய கருத்துகளை தனக்கு முன்னால் இருந்த மேசையைத் தட்டி, அந்தத் தாள லயத்தோடே தன் சொற்களை இணைத்துச் சொல்லவும் செய்தான். வலக்கைப் பயன்பாட்டுக்கு வந்தபோதெல்லாம் அவன் இடக்கையால் அவ்வப்போது மைக் தண்டினைத் தொட்டுக்கொண்டான்.
“இப்போதெல்லாம் மானுட சமத்துவத்தை வலியுறுத்திப் பேசும் குரல்களில்கூட பக்கச் சார்பையும் அசமத்துவத்தையும் உணர முடிகிறது. அறிவு ஜீவிகள்கூட எப்போதும் ஒரே தரப்பில் நின்றே பேசுகிறார்கள். உண்மையை உரத்துச் சொல்வதைக்காட்டிலும்,தாங்கள் சார்ந்த தரப்பிற்குநியாயம் செய்யவே அவர்களின் மேலான அறிவைப் பயன்படுத்துகிறார்கள். தர்க்கத்தால் கூர்தீட்டப்பட்ட அவர்களின் சொற்களை ஆராயப் புகுந்தால் மிகமிகமிகக் கொச்சையான வசைகள் உள்ளே குடியிருப்பதைக் காணலாம். அத்தனையும் வரையறுக்கப்பட்ட அவதூறுகள்.
இங்கே எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள், எல்லா பிராமணர்களும் சதிகாரர்கள், கிறிஸ்துவர்கள் பிரிவினைவாதிகள், வட இந்தியன் என்றால் சோம்பேறிகள், திருடன்கள், தமிழர்கள் தேச விரோதிகள். இப்படிப் பேசிப் பேசியே ஒரு பிம்பத்தை சாமானியர்களாகிய நம் மனதிலும் கட்டியெழுப்பிவிடுகிறார்கள்.” அவன் எவ்வித முயற்சியுமின்றி தன்னியல்பாகவே சொற்களை அடுக்கிக்கொண்டிருந்தான்.
“இத்தனைக்கும் இந்த உலகம் பண்புடையாளர்களால் பட்டுண்டது. புத்தர், இயேசு, மார்க்ஸ், விவேகானந்தர், காந்தி, அம்பேத்கர், பெரியார் என எல்லா யுகங்களிலும் மானுடப் பற்றாளர்கள் தோன்றியபடியே இருந்திருக்கிறார்கள். சோகம் என்னவென்றால், பெரும்பாலான காழ்ப்புகள் இவர்கள் பெயராலேயே நிகழ்த்தப்படுகின்றன. ஆனால், இவர்கள் யாராவது ஒருவரை நாம் சமத்துவத்தின் எதிரி எனச் சொல்ல முடியுமா? சக மனிதன்மீது பேண வேண்டிய அன்பை வலியுறுத்துவதைத்தானே இவர்கள் தங்களின் வாழ்நாள் பணியாகச் செய்துகொண்டிருந்தார்கள்.” அவன் பேசிய எதுவும் புதியது இல்லை என்றாலும், தக்க குரல் ஏற்ற இறக்கங்கள், திக்கலில்லாத நடை அனைவரிடமும் கவனம் பெற்றது.
“ஆகவே நண்பர்களே! எச்சரிக்கையாக இருங்கள், எப்பக்கமும் சாயாத மனத்திண்மையை பழகுங்கள். எவர் குறித்தும் தப்பெண்ணம், முன்முடிவு, காழ்ப்பை வளர்ப்பதைத் தவிர்ப்பதுதான் நாம் சமத்துவத்தைக் கைக்கொள்வதற்கான முதற்படி. அதற்கு முதலில் சக மனிதனிடம் அன்பைப் பேணுங்கள். அன்புதான் அனைத்திற்கும் ஆற்றல் மூலம். எல்லா மதங்களும் கோட்பாடுகளும் அதைத்தானே எப்போதும் வலியுறுத்துகின்றன. எனவே அன்பென்ற ஒற்றைச் சொல்லைத் தாரக மந்திரமாய் நெஞ்சில் நிறுத்துங்கள்” எனத் தன் முழக்கத்தை முடித்தான்.
கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்குப் பின், பார்வையாளர்களின் பேரமைதியுடன் அந்த முழக்கமும் சேர்ந்துகொண்டது. இப்போது அரங்கு சில கணங்களுக்கு ஒரு தியான மையம் போல அமைதிகொண்டிருந்தது. ஆனால் அது நீடிக்காது. யாரேனும் ஒருவர் உடனே களைத்துவிடத்தான் போகிறார். ஒரு கேள்வியால், ஒரு செறுமலால், ஒரு வெளியேறலால்.
அப்படி எதுவும் நடக்கவில்லை. பார்வையாளர்கள் அமைதிக்குப் பழகியிருந்தார்கள். ஒருமணி நேரம் என்பது ஒரு நல்ல பயிற்சிதான். கூடவே வியப்பு அவர்களை ஆட்கொண்டதும் காரணமாய் இருக்கலாம்.
அரங்கில் நீடித்த அந்தப் பேரமைதி, கவிஞர் ஒருவர் மேடையேறியபோது முடிவுக்கு வந்தது. , பல்வேறு பொருண்மைகளில் தான் தீட்டியிருக்கும் கவிதைகளை பார்வையாளர்களிடம் வாசித்துக் காண்பித்தார் கவிஞர். ‘அடடா, சே, வாவ்’ என சொற்களின் வரிசையை மாற்றி மாற்றி அரங்கத்தார் அவற்றை அங்கீகரித்துக்கொண்டிருந்தார்கள், அதன் வழியே அவனைப் பற்றிய இறுக்கமான வியப்பெண்ணங்களிலிருந்து அவர்கள் தங்களை மீட்டுக்கொண்டார்கள்.
நிகழ்வில் பங்கேற்ற இருவருக்குமே நினைவுப் பரிசாகப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. கவிஞர் அங்கேயே பிரித்துப் பக்கங்களைப் புரட்டத் தொடங்கிவிட்டார். இவன், மேலட்டையின் வழவழப்பை விரல்களால் ஓரிருமுறை வருடிவிட்டுத் தன் பைக்குள் போட்டுக்கொண்டான்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் காரிலேயே அவன் கோயம்பேடு வந்து சேர்ந்தான். பேருந்து நிலையத்தின் முகப்பிலேயே காத்திருக்குமாறும், இன்னும் சில நிமிடங்களில் தான் வந்துவிடுவதாகவும் நண்பன் பழனி அவனுக்கு வாட்ஸ் ஆப்பில் செய்தி அனுப்பியிருந்தான். எனவே, ஏற்பாட்டாளருக்கு நன்றி சொல்லி அவரை அனுப்பிவிட்டு, அவன் பேருந்து நிலையத்தின் வாயிலில் ஒரு ஓரமாக நின்றுகொண்டான்.
தனக்கான பேருந்து இரவு ஒன்பது மணிக்கு என்பதால், இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கிறது. பழனி வந்ததும், ரெஸ்ட் ரூம் போய்விட்டு, சாப்பிட்டுச் சாகவாசமாகக் கிளம்பலாம். ஆனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சாப்பிடுவது என்பது அவனுக்கு உவக்காத விஷயம். திடமில்லாத காகிதத் தட்டில் நெருக்கிப் பிடித்துப் பரிமாறப்பட்டுள்ள பதார்த்தங்கள். அலையலையான மக்கள் கூட்டத்திற்கு நடுவே உணவை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, நின்றுகொண்டோ, இடம் வாய்த்தால் அமர்ந்தும் சாப்பிடலாம். “சட்டினி வடிகிறதா, சாம்பார் ஊற்றுகிறதா?” என்ற பதட்டத்தோடே சாப்பிடுவதெல்லாம் என்ன பிழைப்பு? உள்ளுக்குள் பலவாறு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, ஊன்றுகோலை மடக்காமல் தரையில் ஊன்றி நின்றிருந்தான்.
நிலையத்தின் வாசலிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தபடியே இருந்தது. வலப்பக்க வாசலின் முகப்பில் பொருத்தப்பட்டிருந்த சோதனைக்கருவி கீங், கீங் என்று அடிக்கடி ஒலியெழுப்பி, மக்கள் உள்ளே வருவதும் வெளியேறுவதுமாக இருக்கிறார்கள் என்பதை அவனுக்குச் சொன்னது. ஆட்டோக்கள், கார்களின் கூச்சல்கள், படியேறுபவர்களின் காலணிகளிலிருந்து புறப்பட்ட மெத்தென்ற அடுக்கிய நடைச் சத்தம், பயணிகளோடே தானும் ஒரு பயணியாக உருண்டோடும் டிராலிகள், புதியவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என விடாமல் தொடர்ந்து நிலையத்தின் உள்ளே இருந்து எழும் ஒலிபெருக்கிக்குரல் என சந்தடிகளுக்குப் பஞ்சமே இல்லை.
வந்து ஐந்து நிமிடங்கள்கூட போயிருக்காது என்றாலும், பழனி இன்னும் எவ்வளவு தொலைவில் இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ள விரும்பினான் அவன். வீட்டில் கிளம்பிக்கொண்டே “ஆட்டோ ஏறிட்டேன்” என்று சொல்லும் ஆசாமிதான் பழனி என்பது தெரிந்தும்கூட ஒரு மன குறுகுறுப்பு. உடனே தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த செல்போனை எடுத்து பழனிக்கு போன் செய்தான். ரிங் போய்க்கொண்டே இருந்தது. அப்போது அவன் கை மணிக்கட்டை யாரோ பற்றினார்கள்.
“எங்க் போணும்?” கெந்திய தமிழில் வாயில் குதப்பியிருந்த புகையிலை எச்சில் தெறித்தபடி அவனை அணுகியது ஒரு பாமர ஹிந்திக்குரல் என்பதை அவன் அறிந்தான். மறுகணமே அனிச்சையாகத் தன் செல்போனை அவன் இறுகப் பிடித்துக்கொண்டான். தன் இடக்கையின் மேல்பக்கத்தால் சட்டைப் பாக்கெட்டுக்கு முட்டுக்கொடுத்தபடி “waiting” என்று மட்டும் சொன்னான்.
அவனை அறியாமலேயே அவனுக்குள் ஒரு பீதியும் அச்சமும் பரவியிருந்தது. மேலும் கீழும்ஆக ஏறி இறங்கிய அவனது மூச்சுக்காற்று சில வினாடிகளுக்குப் பின்
சமநிலையை அடைந்தது.
Be the first to leave a comment