இருட்டை விரட்டும் அரட்டை (2) மகளிர்தின சிறப்புத்தொடர்

இருட்டை விரட்டும் அரட்டை (2) மகளிர்தின சிறப்புத்தொடர்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

இருட்டை விரட்டும் அரட்டை (1) மகளிர்தின சிறப்புத்தொடர்

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

இருட்டை விரட்டும் அரட்டை (2) மகளிர்தின சிறப்புத்தொடர்
eஉரையாடலில் பங்கேற்ற ஐந்து பெண்களின் புகைப்படங்கள்

சித்ரா: பார்வையற்ற பெண்களின் திருமணத்தைப் பற்றிப் பேசலாம் என நினைக்கிறேன். பார்வையற்ற பெண்களின் திருமணத்திற்கு எவையெல்லாம் தடையாக இருக்கின்றன என்பத்உ பற்றிப் பேச வேண்டும்.

பார்வையற்ற பெண்களின் திருமணத்தைப் பொருத்தவரை, பார்வையற்ற பெண்ணே ஒரு தடையாக இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். அடுத்து அவளுடைய பெற்றோர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

செந்தமிழ்ச்செல்வி: இன்று நன்கு படித்த, சுயமாக வாழக் கற்றுக்கொண்ட இளம் பார்வையற்ற பெண்கள்கூட, “நான் ஏன் சமைக்கணும், நான் ஏன் வீட்டு வேலை செய்யணும்?” என்ற மனநிலையை அடைந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் தன் அம்மா பார்த்துக்கொள்வார்என்றோ, அல்லதுவேலைக்கு ஆள் வைத்துக்கொள்ளலாம் என்றோ எளிமையாக முடித்துவிடுகிறார்கள். இந்த மனநிலை என்பது பார்வையற்ற பெண்களின் திருமண வாழ்வில் மிகப் பெரிய தடைக்கல்லாக வந்து நிற்கும்.

முத்துச்செல்வி: செந்தமிழக்கா சொன்ன கருத்தோடு நான் கூடுதலாக ஒரு முக்கியப் பிரச்சனையைத் தொட விரும்புகிறேன்.

முத்துச்செல்வி
முத்துச்செல்வி

இன்றைய நிலையில், பார்வையற்ற பெண்களின் திருமண வாழ்க்கை என்பது மோசமான சூழலை அடைந்துகொண்டிருக்கிறதோ என நினைக்கத் தோன்றுகிறது. ஒரு காலத்தில், பார்வையற்றவர்கள் பார்வையற்றவர்களையே திருமணம் செய்துகொள்ள முன்வந்தார்கள். ஆனால், இப்போது இரு தரப்புமே பார்வையுள்ளவர்களையே தங்களின் தெரிவாகக்கொள்ள விரும்புகிறார்கள். இதை முழுக்க முழுக்க தவறென்று நான் சொல்லவரவில்லை. ஆனால், இந்த மனப்போக்கால் ஒப்பீட்டளவில் பார்வையற்ற ஆண்களைவிட பார்வையற்ற பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது எனது கருத்து.

ஒரு பார்வையற்ற ஆணுக்கு பார்வையுள்ள மணமகள் கிடைப்பதைவிட, பார்வையற்ற பெண்ணுக்கு பார்வையுள்ள மணமகன் கிடைப்பது மிகவும் அரிது. அப்படியே கிடைத்தாலும் அதில் பார்வையற்ற பெண்களாகிய நாம் நிறைய சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. விதிவிலக்குகளாக சிலர் சிறப்பாகவே வாழ்கிறார்கள் என்றாலும்,  பார்வையற்றவர்கள் பார்வையற்றவர்களையே திருமணம் செய்துகொள்ள முன்வர வேண்டும். அதற்கான உரிய விழிப்புணர்வை நாம் இரு சாராரிடமும் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

என்னுடைய குடும்பத்தையே எடுத்துக்கொண்டால், உறவுகளில் பார்வையுள்ள மணமகன்கள் எனக்குக் கிடைத்தபோது நான் தீவிரமாக மறுத்துவிட்டேன். நான் என் விருப்பத்தைச் சொன்னபோது, மறைமுகமாக எனக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன. “இவள் கண்பார்வையற்றவள், ஒரு கண் தெரிந்தவனை கட்டிக்கொள்ளலாமே? ஏன் அடம்பிடிக்கிறாள்? இப்படித் திமிராக இருக்கிறாளே!” என்றெல்லாம் முதுகுக்குப் பின்னால் பேசினார்கள். ஆனால், ஒரு பார்வையற்றவருடன்தான் என்னுடைய அலைவரிசை ஒத்து்ப்போகும் என்பதில் நான் உறுதியாகவே இருந்தேன்.

காரணம், பார்வையற்ற பெண்களாகிய நம்மைப் பற்றி போதிய விழிப்புணர்வு பார்வையுள்ளவர்களிடம் இருப்பதில்லை. “உங்களுக்கு காதல் உணர்வெல்லாம் வருமா? மாதவிடாய் எப்படி வரும்? உங்களால் ரொமாண்டிக்காக சிந்திக்க முடியுமா? உங்களுக்கு பாலியல் உணர்ச்சியெல்லாம் ஏற்படுமா” என்றெல்லாம் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், “இவுங்களையெல்லாம் ஒரு குழந்தையைப் பார்த்துக்கிறதுபோல கவனிச்சுக்கணும்” என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அதனால் நம்மை நன்கு புரிந்த பார்வையற்றவர்களையே நாம் மனமகன்களாகத் தெரிவு செய்ய வேண்டும் என்பது எனது கருத்து. மணமக்கள் பார்வையுள்ளவரா, பார்வையற்றவரா என்பது ஒரு பிரச்சனை என்றால், இப்போது பார்வையற்றவர்களுக்குள்ளும் சாதி நுழையத்தொடங்கிவிட்டது. திருமணத்தில் சாதி பார்ப்பதெல்லாம் நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் வட்டம் என்பதை நாம் உணர வேண்டும்.

திருமணம் என்ற விஷயத்தில் இருபால் பார்வையற்றவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றாலும், இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பார்வையற்ற பெண்கள்தான். ஆணாதிக்கம் நிறைந்த இந்தச் சமூகத்தில், பெண் என்ற வகையிலும், கூடுதலாக மாற்றுத்திறனாளிப் பெண் என்ற ரீதியிலும் நாம் இரட்டை பாதிப்புகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. எனவே பார்வையற்ற ஆண்களைவிட பார்வையற்ற பெண்களாகிய நாம் அதிக விழிப்புடன் செயல்பட வேண்டும்.

சித்ரா: சமூகத்தை விடுங்கள். பார்வையற்ற பெண்களின் திருமணம் குறித்து பார்வையற்ற பெண்களின் பெற்றோருக்கே எந்த அளவு விழிப்புணர்வு இருக்கிறது என்று தெரியவில்லை. நான் எங்கேயோ படித்ததாக நினைவு.

சித்ரா
சித்ரா

“அந்தப் பார்வை்யற்ற பெண்ணுக்கு

அரசு வேலை கிடைத்ததும்,

பெற்றோர் வரன் பார்க்கத் தொடங்கினார்கள்;

அவள் தங்கைக்கு.”

செலின்மேரி: அதையேதான் நானும் சொல்ல வந்தேன். பார்வையற்ற பெண்கள் படித்து பணிவாய்ப்பு பெற்ற பிறகு, இதுவரை நம்மைக் கஷ்டப்பட்டு படிக்கவைத்த நம் பெற்றோருக்கு நாம் துணையாக இருக்க வேண்டும் என்று நினைத்து கடைசிவரை அப்படியே இருந்துவிடுகிறார்கள். இன்னும் சிலர், தனக்கு திருமணம் செய்து குடும்பம் நடத்துகிற மனப்பக்குவம் இருக்கிறதா என்பதை ஆராயமலேயே காதலில் விழுந்து பிறகு திருமணம் செய்து துன்பப்படுகிறார்கள். காதலை நான் தவறென்று சொல்ல மாட்டேன். ஆனால், அதற்கான பக்குவம் நமக்கு இருக்கிறதா என்பதை நன்கு யோசித்தபிறகு நாம் அதில் இறங்கலாம். என்னைப் பொருத்தவரை, அடங்கியும் போக வேண்டாம், அவசரமும் கொள்ள வேண்டாம் என்பதையே வலியுறுத்த விரும்புகிறேன்.

நேற்றுகூட சுயவரம் நடந்திருக்கிறது. ஒரு பெண்கூடப் பங்கேற்கவில்லை எனக் கேள்விப்பட்டேன். உண்மையில் நாம் பெற்றோருக்காக வாழ்வது இருக்கட்டும், அவர்களின் காலத்துக்குப் பின்னால் நமது நிலை என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும்.

சித்ரா: எனக்கு என்ன விளங்கவில்லை என்றால், “படிக்கவச்சேன், படிக்கவச்சேன்” என்று சொல்கிறார்கள். ஆனால், குடும்பத்தில் நம்மைப்போலவே மற்ற பிள்ளைகளையும் தானே படிக்கவைத்து இருப்பார்கள்?

முத்துச்செல்வி: அதேதான். மற்ற பிள்ளைகள் படித்து வேலைக்குப் போனால், அவர்களுக்கு “வரன் பார்க்கணும், நல்ல இடத்தில கட்டிக்கொடுக்கணும்” என்றெல்லாம் உடனடியாகச் சிந்திப்பவர்கள் ஏனோ பார்வையற்ற பெண்கள் விஷயத்தில் அந்த சம்பாத்தியம் வெளியே போய்விடக்கூடாது, தாங்களே இறுதிவரை அதை அனுபவிக்க வேண்டும் என்கிற மனநிலையிலேயே பார்வையற்ற பெண்களின் பெரும்பாலான பெற்றோர் இருக்கிறார்கள்.

செந்தமிழ்ச்செல்வி
செந்தமிழ்ச்செல்வி

செந்தமிழ்ச்செல்வி: பார்வையற்ற பெண்களின் பெற்றோர் மட்டுமல்ல. பொதுவாகவே மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் என்றுதான் சொல்ல வேண்டும். மாற்றுத்திறனாளி ஆண்களும் இதே பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

செலின்மேரி: ஆனால், நாம் கொஞ்சம் கூடுதலாக எதிர்கொள்கிறோம்.

சித்ரா: சியாமலா சமீபத்தில்தான் திருமணம் முடித்திருக்கிறீர்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சியாமலா: நாமே ஒரு வரனைத்தேடி , போராடி பெற்றோரிடம் சம்மதம் பெற்றாலும், அவர்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். மீண்டும் அதேதான். சம்பாத்தியம் வெளியே போய்விடக்கூடாது.

நாம் அதற்கு சம்மதிக்காத பட்சத்தில், “உன் கல்யாணத்தை நீயே பார்த்துக்கோ. எங்களிடம் காசு இல்லை” என கைவிரிக்கிறார்கள். அப்படியானால், நாம் இவ்வளவு ஆண்டுகள் சம்பாதித்துக் கொடுத்ததெல்லாம் என்ன ஆனது? ஆனால் இதைக் கேட்க முடியாது.

சியாமலா
சியாமலா

ஏற்கனவே நீங்களெல்லாம் சொன்னதுபோல பார்வையற்ற பெண்கள் ஆண்கள் என இரு சாராருமே தங்களுக்கு குறைப்பார்வையுடைய அல்லது பார்வையுள்ள வரன்தான் வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது முழுப் பார்வையற்ற (totally blind girls) பெண்கள்தான். இன்னொன்று, நாம் படித்து பணிக்குச் சென்றபிறகும் ஏதோ ஒரு விடுதியில் இருந்துகொள்கிறோம். அப்படி இருக்கக்கூடாது. படிப்பை முடிக்கும்வரை விடுதியில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இப்போது பணிக்குச் சென்றபிறகும் நாம் ஏன் விடுதியில் இருக்க வேண்டும்? அப்படி விடுதியிலேயே தங்கிவிடுவதால், குடும்பத்தில் ஒரு பிணைப்பை நாம் இழக்கிறோம்.

அன்றாடம் நாம் செய்யும் வீட்டுவேலைகளைக்கூட நாம் பழகிக்கொள்வதில்லை. பெற்றோர் நமக்குத் திருமணம் செய்யாமல் தட்டிக் கழிப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்தான். ஏனென்றால், அவர்களுக்கு நாம் திருமணம் செய்து ஒரு குடும்பத்தைச் சமாலிக்கிற திறனோடு இருக்கிறோமா என்ற சந்தேகம் இருக்கிறது.

நம் குடும்பத்தோடு இணைந்து, குடும்பத்தில் அன்றாடப் பணிகளைச் செய்யப் பழகவேண்டும். குடும்பத்தின் அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் நாமும் பங்கேற்க வேண்டும். அப்போதுதான் நம் பெற்றோருக்கும் நம் மீது ஒரு நம்பிக்கை வரும்.

சித்ரா: கண்டிப்பாக. திருமணத்தைப் பொருத்தவரைக்கும் பெற்றோர் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கேட்டுக்கொண்டால் நம்மை அவர்கள் “கண்ணே மணியே” எனத் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். நாம் அவர்களின் விருப்பத்துக்கு எதிராக நடந்துகொண்டால், அவ்வளவுதான் ஒரு உலகப்போரே குடும்பத்தில் நடக்கும்.

செலின்மேரி
செலின்மேரி

செலின்மேரி: ஆனால், பெற்றோர் சொல்வதை அப்படியே கேட்கிறவர்களும் இருக்கிறார்கள் அக்கா. நிறைய பேர்இருக்கிறார்கள்.

முத்துச்செல்வி: ஆமாம். அவர்கள் வாழ் என்றால் வாழவேண்டும். இல்லை அவன் சரி கிடையாது விட்டு வந்துவிடு என்றால் விட்டு வர வேண்டும். இப்படித்தான் இருக்கிறார்கள்.

சியாமலா செலின் சொல்வதைக் கேட்கையில் எனக்கு ஒன்று தோன்றியது. தொடக்கத்திலிருந்தே பார்வையற்ற பெண்கள் பெற்றோரின் சரியான அன்பு கிடைக்காமல் விடுதியிலேயே இருப்பதால், திடீரென ஒரு ஆண் தோள் கிடைக்கையில், எது ஈர்ப்பு (crush) எது அன்பு, எது நட்பு என்ற வேறுபாட்டை அறியாமல் மிக எளிதாக காதலுக்குள் இறங்கிவிடுகிறார்களோ என்று தோன்றுகிறது. நான் இதை நியாயப்படுத்தவில்லை. அதேநேரம், அப்போதைய மனநிலை, வயது, ஹார்மோன் மாற்றம் என உளவியல் ரிதியாக இந்தப் பிரச்சனையை நாம் அணுக வேண்டியிருக்கிறது.

ஏனென்றால், எனக்குத் தெரிந்து பல பெற்றோர்கள் விடுமுறை முடிந்து வந்து விட்டுபோவதோடு சரி, வீட்டில் இருக்கும்போதும் எப்போது விடுதி திறப்பார்கள், கொண்டுபோய் தள்ளிவிட்டுவிடலாம் என்கிற ரீதியிலேயே யோசிப்பார்கள். இந்த விலக்கத்தை எதிர்கொள்கிற, அன்புக்காக ஏங்கும்  பார்வையற்ற பெண்கள், ஒரு ஆறுதலான தோள் கிடைக்கிறபோது எதையும் யோசிக்காமல் உடனே காதலில் விழுந்துவிடுகிறார்கள்.

என்னுடைய தோழி ஒருத்திக்கு அப்பா அம்மாவெல்லாம் கிடையாது. சிறுவயதிலிருந்தே ஆதரவற்ற இல்லத்தில்தான் வளர்ந்தாள். உண்மையான அன்பை சிறு வயதிலிருந்தே பெறும் வாய்ப்பு இல்லாதவள் என்பதால், ஒரு ஆணின் நட்பில் ஈர்க்கப்பட்டு, உடனே திருமணம் செய்துகொண்டாள். நல்ல படிக்கிற பெண், படிப்பை கைவிட்டு இப்போது வேலையும் இல்லாமல் அவள் வாழ்க்கையே மோசமான நிலையில் இருக்கிறது.

செலின்மேரி: காதலிப்பது தவறில்லை. கொஞ்சம் மூத்தவர்களின் ஆலோசனைகளையும் கேட்கலாமே?

முத்துச்செல்வி: அந்த நேரத்தில், யார் பேச்சையும் ஆலோசனையையும் கேட்கிற மனமோ பக்குவமோ நமக்கு இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

சித்ரா: நீங்கள் சொன்ன பிரச்சனையால் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களில் பார்வையற்ற பெண்களுக்கான பள்ளியில் (school for the blind for girls)படிக்கும்  பெண்களே அதிகம் என்று தோன்றுகிறது.

முத்துச்செல்வி: ஆமாம். கோஎட் என்றால் என்னவென்றே அறியாத பெண்கள் ஒரு இறுக்கமான சூழலில் வளர்வதால், கல்லூரிக்குள் நுழைந்த முதல் ஆண்டிலேயே ஒரு ஆணுடன் பழகுகிற வாய்ப்பைப் பெற்றதும், நட்பாகி காதலாகிவிடுகிறார்கள். இது குறித்தும் நாம் பள்ளிவயது பார்வையற்ற பெண் குழந்தைகளுடன் உரையாட வேண்டும். எது அன்பு, எது ஈர்ப்பு என வேறுபடுத்திப் பார்க்கும் பக்குவத்தைக் கற்றுத்தர வேண்டும். உளவியல் ரீதியிலான பிரச்சனை குறித்தும் நாம் அவர்களுக்கு சிறுவயதிலேயே ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

இந்தப் பிரச்சனையை பார்வையுள்ள பெண்களும் எதிர்கொள்கிறார்கள் என்றாலும், அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பார்வையற்ற பெண்கள்தான்.

செலின்மேரி: ஆமாம். பார்வையுள்ளவர்கள் எந்த வேலையையும் செய்து அன்றாடத்தை நடத்திவிடலாம். நமக்குத்தான் படிப்பும் இல்லாமல், வேலையும் கிடைக்காமல், குடும்பத்தை நடத்துவதெல்லாம் கடினம். திறமையான பெண்கள் இப்படிச் சிக்கிக்கொண்டு கஷ்டப்படுவதைப் பார்த்தால், நீங்கள் சொல்வதுபோல இது தொடர்பான உளவியல் வழிகாட்டல்களை நாம் பள்ளியிலிருந்தே தொடங்க வேண்டும் என்பதுதான் சரி.

சியாமலா: அந்தவகைக் காதலிலும் நிறைய ப்ரேக் அப் ஆகிவிடுகிறது. பெரும்பாலோர் தொடர்வதில்லை.

முத்துச்செல்வி: அதற்குக் காரணம், நான் ஆண்களைக் குறைசொல்லவில்லை. ஆனால், வேலை கிடைக்கும்வரை காதலிக்கிறார்கள். வேலை கிடைத்தவுடன் இந்தப் பார்வையற்ற ஆண்களுக்கு அத்தை பெண்கள், மாமன் பெண்கள் எனத் திடீரென முளைத்துவிடுவதால், பார்வையற்ற பெண்களைக் கழற்றிவிட்டுப் போய்விடுகிறார்கள்.

செலின்மேரி: ஆமாம். அதில் பெண்கள்கூட தைரியமாக வீட்டை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆனால், பையன்கள் தரப்பு இந்த விஷயத்தில் கொஞ்சம் பலவீனமாகத்தான் இருக்கிறது.

செந்தமிழ்ச்செல்வி: இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையான காரணம் என்ன தெரியுமா? விடுதியில் இருந்தும்கூட சுயமாக வாழக் கற்றுக்கொள்ளாததுதான்.

சித்ரா: ஒருவேளை, விடுதியில் இருக்கும் முழுப் பார்வையற்ற பெண்கள் (totally blind girls), குறைப்பார்வையுடைய பெண்களையே (low-vision girls) அதிகம் சார்ந்து இருந்துவிடுகிறார்களோ?

செலின்மேரி: ஆமாம். அதுவும் நடக்கிறதுதான்.

முத்துச்செல்வி: அக்கா! இதில் இன்னோரு முக்கியமான பிரச்சனையாக நான் பார்ப்பது, இந்தக் கல்வி நிறுவனங்கள் தங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வந்துவிடக்கூடாதே என்ற ரீதியில் பெண்களை முற்றிலும் அடக்கியே வைக்கிறார்கள். பாதுகாப்பு என்ற பெயரில், அவர்கள் இங்கே போகக்கூடாது, அங்கே போகக்கூடாது என்று அவர்களுக்கு ஒரு வடிகாலே இல்லாத வகையில் முற்றிலும் இறுக்கமான சூழலிலேயே வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் படிக்கும் பெண் பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி வைக்கிறார்கள்.

செலின்மேரி: உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்றாலும், சமூகமும் அப்படித்தானே இருக்கிறது. தைரியமாகவெல்லாம் பெண்கள் வெளியே போய்வரும்படியான சூழல்  சமூகத்தில் இல்லையே.

***தொடரும்.

எழுத்தாக்கம்: ப. சரவணமணிகண்டன்

பகிர

4 thoughts on “இருட்டை விரட்டும் அரட்டை (2) மகளிர்தின சிறப்புத்தொடர்

  1. மிகவும் மெச்சத்தக்க உறையாடல் வாழ்த்துகள்: சவால்முரசு. ///ஆமாம். அதில் பெண்கள்கூட தைரியமாக வீட்டை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆனால், பையன்கள் தரப்பு இந்த விஷயத்தில் கொஞ்சம் பலவீனமாகத்தான் இருக்கிறது./// இக்கறுத்தில் இருந்து கொஞ்ஜம் நான் முரன்படுகிறேன். பென்கள் தைரியமானவர்கள்தான் ஒத்துக் கொள்கிறேன் . ஆனால், பென்களும் கடைசிவரை காதலித்துவிட்டு கடைசியில் வீட்டாரின் பேச்சுகளையோ, நன்பர்களின் ப்பேச்சையோ கேட்டு ஆன்களை கழட்டி விட்டுவிட்டும் சென்றுவிடுகிறார்களே. இதையும் பரிசிலனையில் கொள்ளலாமே! எழுத்துக்கள் வழியே உறையாடலை சிறப்பாக தொகுத்தலித்த எழுத்தரசன் சரவனமனிகண்டன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

  2. பார்வையற்றோர் சமூகத்தில் நிலவி வரும் ,பல உண்மை சம்பவங்களையும் இச்சமூகத்தின் மாற்றத்திற்கான கருத்துக்களையும் தாங்கி வந்த இந்த தொடருக்கு நன்றிகள் பல.
    பார்வையற்ற நானும் பார்வை குறைபாடு உள்ள எனது மனைவியும் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பெண் வீட்டாரின் சம்மதமீன்றீ
    சாதிக்காக தன் பிள்ளையை உதறிய பெற்றோரை தன் காதலனுக்காக தூக்கி எரீந்தவள் என் மனைவி.
    என்னைப்பொறுத்தவரை காதலில் உண்மையாக இருப்பது என்பது ஆண்களும் சரி பெண்களும் சரி அவரவருக்கு இருக்கும் பக்குவமே காரணம்

  3. ஆண்ட்டிகளால் ஆண்ட்டிகளுக்காக! ஒரு பள்ளி கல்லூரி பெண்கள் கூட சிக்கவில்லையா சவால் முரசுக்கு?

  4. என்னுடைய ஒரு கோரிக்கை ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின்

    வழிகாட்டு நிகழ்ச்சி பன்னிரெண்டாம் வகுப்பிற்கு நடத்துவீர்கள் அதில் இந்த அன்பு ஈர்ப்பு பற்றியும் கொஞ்சம் பெண்களிடம் விளக்கமாக விளக்கங்களே உங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *