அரசு சிறப்புப்பள்ளிகளில் கல்விச்சுற்றுலா: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர்

அரசு சிறப்புப்பள்ளிகளில் கல்விச்சுற்றுலா: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

அருவிய்ல் விளையாடும் பார்வையற்ற மாணவர்களின் புகைப்படம்
சுற்றுலாவில் பங்கேற்ற பார்வையற்ற மாணவர்கள்

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு சிறப்புப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி  மாணவர்களைக் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் வெளியிட்டிருக்கிறார். அரசு சிறப்புப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கல்விச்சுற்றுலாவுக்கு அனுமதி வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள அந்தக் கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.

***

“அரசு சிறப்புப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களின் அழுத்தம் மற்றும் மனச்சோர்வு நீங்கவும், மாணவர்கள் நலன் கருதி பெற்றோர்களின் ஒப்புதலுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வாயிலாக, கல்விச் சுற்றுலா சென்றுவரவும் மற்றும் மாணவர்களை எவ்வித இடையூறுமின்றிப் பாதுகாப்பாக அழைத்து வருவோம் என தெரிவித்து உரிய அனுமதி வழங்குமாறு கோரியுள்ளனர்.

மேற்படி, தலைமை ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, கீழ்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

கல்விச் சுற்றுலா செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்:

  1. இச்சுற்றுலா தொடர்பான ஏற்பாடுகளை செய்யவும், இதை செயல்படுத்தவும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான குழுவினை அமைக்க வேண்டும்.
  2. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் தலைமையாசிரியர் ஆகியோர் சுற்றுலா செல்ல உகந்த இடம், நாள், வாகனம், உணவு வசதி, இதர சேவைகள் ஆகியவைகள் குறித்து கலந்து ஆலோசித்து மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் மற்றும் ஒப்புதலோடு செயல்படுத்திட வேண்டும்.
  3. முடிந்த அளவிற்கு சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்படும் இடம், கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரம் குறித்த இடமாக மற்றும் மாணவர்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் இடமாகத் தேர்வு செய்யப்பட வேண்டும்.
  4. சுற்றுலா செல்வதற்கு முன் அந்தந்த மாணவ, மாணவியர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று பின்பு அனுப்பப்பட வேண்டும்.
  5. 100 கீ.மி.க்குள் செல்லும் வகையில் ஒரு நாள் சுற்றுலாவாக இந்த நிகழ்வு இருத்தல் வேண்டும்.
  6. நீர் நிலைகள், வனவிலங்குகள் உள்ள இடங்களுக்கு செல்லும்போது தகுந்த பாதுகாப்புடனும், முன் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும். நீச்சல் தெரிந்தவர்கள் உடன் செல்வது உள்ளிட்ட இதர பாதுகாப்பினை உறுதி செய்த பிறகே இது போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும். அபாயகரமான இடங்களைக் கண்டிப்பாகத் தெரிவு செய்யக் கூடாது.
  7. 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் மாணவ, மாணவிகளைப் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லுதல் வேண்டும்.
  8. தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கான ‘கல்வி சுற்றுலா’ என்ற வாசகங்களை உடைய பேனர், பள்ளியின் பெயர், பேருந்தின் முகப்பில் அமைக்கப்பட வேண்டும்.
  9. தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளின் நலனில் மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் செயல்பட்டு, சுற்றுலாவைச் சிறப்பாக முடிக்க வேண்டும்.
  10. ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்லும்போது, அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் உள்ளூர் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
  11. அம்மாதிரி வசதிகள் இல்லாத இடத்தில் எத்தகைய புகாருக்கும் இடமளிக்காத வகையில் தனியார் வசதிகளை தனியார் தொண்டு நிறுவனங்கள் அல்லது சுற்றுலாத் துறையிடமிருந்து ஒப்புதலைப் பெற்று நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.
  12. சுற்றுலா சென்று வந்த பின்பு சுற்றுலா சென்ற இடம் அதன் சிறப்பு மாணவர்கள் இதனால் புதியதாகப் பெற்ற அனுபவம் இவற்றுடன் சென்று வந்த மாணவர் பெயர்பட்டியல் முக்கியப் புகைப்பட விவரத்துடன் முடிவான சுருக்கமான அறிக்கையை சுற்றுலா முடித்த 15 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
  13. மாணவர்களின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு அரசுப் பொதுத்தேர்வுக்கு குந்தகம் விளைவிக்காமல் சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்லுதல் வேண்டும்.” என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

***

100 கி.மீ.க்குள், ஒருநாள் சுற்றுலா போன்ற புராதனக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து துறை பரிசீலிக்க வேண்டும்.

ஒரு பார்வையற்ற மாணவனைப் பொருத்தவரை கல்விச்சுற்றுலா என்பது, அவன் நினைவடுக்கில் நீங்காமல் நின்று நிறைய கற்றலைச் சாத்தியமாக்குகிற நேரடி அனுபவ வாய்ப்பு. ஆகவே, அவற்றைச் சம்பிரதாய நடவடிக்கைகளாகப் பார்க்காமல், மேலும் சுற்றுலாவை ஆக்கபூர்வமாகவும், பார்வையற்றவர்கள் அணுகத்தக்க வகையில் எப்படி வடிவமைக்கலாம் என்பது பற்றிய சிந்தனைகளும், உரிய அறிவுரைகளும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும்.

 மே மாதத்தில் பொதுத்தேர்வு, ஆகவே மார்ச் ஏப்ரல் மாதங்களில் திருப்புதல் தேர்வு என மாணவர்கள் பரபரப்பும் பதட்டமும் அதிகம் கொள்ளும் கல்வியாண்டின் இறுதிக் கணங்கள் இவை. ‘பொதுத்தேர்வுகளுக்குக் குந்தகம் விளைவிக்காமல்’ என்ற வாசகம் அடங்கிய அனுமதியைப் பொதுத்தேர்வுக்கான ஆயத்தகாலத்தில் கொடுத்திருப்பது பற்றி துறை சிந்திக்க வேண்டும். இனிவரும் காலங்களில், கல்விச்சுற்றுலாக்களுக்கான அனுமதியைக் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே தந்துவிடுவது பயனுடையதாக இருக்கும்.

கடிதத்தைப் பதிவிறக்க

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *