இங்கே சிலம்பம், அங்கே கராத்தே

இங்கே சிலம்பம், அங்கே கராத்தே

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

இந்தியாவிலேயே முதல் முயற்சியாக தஞ்சை பார்வைத்திறன் குறையுடைய அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் சொல்லித் தந்து அசத்தியிருக்கிறது கொற்றவை என்னும் தன்னார்வ அமைப்பு. அதற்காக கம்பின் முனையில் மணியொன்றைக் கட்டி, அது எழுப்பும் ஓசையைக் கேட்டுக்கேட்டு சிலம்பம் ஆட பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்குப் பழக்கப்படுகிறது.

ஒரு கலையை அல்லது விளையாட்டை பார்வைத்திறன் குறையுடையவர்களிடம் எடுத்துச் செல்கையில் பார்வைத்திறன் குறையுடையவர்களின் தேவைகளுக்கேற்ப அதனைத் தகவமைக்க வேண்டும் என யோசித்த கொற்றவை அமைப்பின் அங்கத்தினர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். ஒருபுறம் பொதுச்சமூகம் இப்படி மாற்றுத்திறனாளிகளை ஆக்கபூர்வமாக அணுகத் தொடங்கியிருக்கிறது என்றால், மறுபுறம் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் அலட்சியத்தால் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அனாதைப் பிள்ளைகளாகவே ஆகிவிட்டன அரசு சிறப்புப் பள்ளிகள்.

கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடங்கி, குழந்தைகளை கவனத்துடன் பராமரிக்க வேண்டிய விடுதிப் பணியாளர்கள் என எதுவுமே போதிய அளவில் இல்லாமல், பெரும்பாலான சிறப்புப்பள்ளிகள் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கின்றன. தஞ்சை பார்வைத்திறன் குறையுடைய அரசு மேல்நிலைப்பள்ளியும் அவற்றுள் ஒன்று. சில பள்ளிகளில் மனிதவளம் பிரச்சனை என்றால், பூவிருந்தவல்லி போன்ற பள்ளிகளில் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் இருக்கும் வகுப்பறைகள், புதர் மண்டிய சுற்றுப்புறத்தின் உபயத்தால், விஷப் பாம்புகள் மற்றும் வெறிநாய்களுடன் குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கும் பார்வையற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள். ஆயினும், ஏதோ சில ஆர்வமுள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் புதுப்புது முயற்சிகள், ஆக்க சிந்தனைகளால் ஆங்காங்கே சிறப்புப் பள்ளி மாணவர்கள் இதுபொன்ற பயன்களை அனுபவித்து வருகிறார்கள்.

அந்தவகையில் தஞ்சைப் பார்வைத்திறன் குறையுடைய அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தின் முயற்சி பாராட்டுக்குரியது. இதன்மூலம், பாடம் சார்ந்த கற்றல், மனனம் செய்தல் போன்றவற்றால் உளச்சோர்வடைந்திருந்த மாணவர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய புத்தாக்கம் கிடைத்திருக்கும். இதுபோன்ற பயிற்சிகள் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களின் உடல்மொழியில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உடனடிப்பயன். மாணவிகளும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

இந்த புதுமையான முயற்சி குறித்தோ, அதில் பங்கேற்றுச் சிறப்பித்த மாணவர்கள் குறித்தோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் அதிகாரிகளுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. இங்கே மாணவர்கள் சிலம்பம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள், அங்கே அதிகாரிகளோ, அதிகார பீடங்களை எப்படி யார் யார் கைப்பற்றுவது எனத் தங்களுக்குள் கராத்தே போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மைதானத்தில் நடுவரே இல்லை. அப்படியானால், பார்வையாளர்கள்? வேறு யார், பரிதாபத்துக்குரிய சிறப்புப்பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள். அதாவது, சவால்முரசு மொழியில் சொல்வதென்றால், ‘நமக்கு நாமே’.

என்று விடியுமோ?

***ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *