உரிமைக்குரல்கள்

உரிமைக்குரல்கள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

EVM

தமிழகத்தில் 60 விழுக்காடு வாக்குப்பதிவுகளுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்திருக்கிறது. அதாவது ஐந்தில் மூன்று பங்கு வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைஆற்றியிருக்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நிகழ்வுகளைத் தவிர தேர்தல் பொதுவாகவே அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது.

480 பேரூராட்சிகள், 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள் என மொத்தம் 640க்கும் மேற்பட்ட நகர்ப்புறங்கள். சுமார் 12500 பதவிகளுக்கு 57780க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்ட களம். 31000 வாக்குச்சாவடிகளில் 19 பிப்பரவரி 2022 காலை ஏழு மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ஆறு மணிக்கு நிறைவடைந்தது.

இந்தச் செய்திகளெல்லாம் நேற்றைய தினசரிகளின் முன்பக்கத்தில் இடம்பெற்றவை. கூடவே பிரெயிலில் வேட்பாளர் பட்டியல் (Ballot Sheet) வழங்கப்படவில்லை என்ற முக்கிய செய்தியையும் முன்னணி ஊடகங்கள் தந்திருந்தன.

பார்வையற்ற வாக்காளர்களாகிய நாம் நமது  தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களைப் படித்துத் தெரிந்துகொண்டு வாக்களிக்கும் வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி நடுவண் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்தல்களிலுமே பிரெயிலில் வேட்பாளர் பட்டியல் வாக்குச்சாவடியில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் வரிசை எண், வேட்பாளர் பெயர், அவர் சார்ந்த கட்சி மற்றும் சின்னம் என அனைத்தும் மேடுறுத்தப்பட்ட பிரெயில் புள்ளிகளாக அச்சடிக்கப்பட்டிருக்கும்.

இதேபோல மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஒவ்வரு தெரிவுப் பொத்தான்களுக்கு இடப்பக்கமாகவோ அல்லது வலப்பக்கமாகவோ 1 முதல் 16 எண்கள் பிரெயிலில் பொறிக்கப்பட்டிருக்கும். வேட்பாளர் பட்டியலில் நாம் வாக்களிக்க விரும்பும் வேட்பாளருக்கான வரிசை எண்ணை நாமே ஒப்பிட்டுப் பார்த்து, அதே எண்ணுக்கு நேராக உள்ள பொத்தானை அழுத்தி நமது வாக்குரிமையை முழுக்க முழுக்க எவரையும் சார்ந்திராமல் செலுத்தும் உரிமையை கடைசியாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் நாம் பெற்றிருந்தோம்.

ஆனால், மாநிலத் தேர்தல் ஆணையத்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக்கொண்டு நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் இந்த வசதி செய்து தரப்படாதது பார்வையற்றவர்களாகிய நமக்கு பெருத்த ஏமாற்றம்தான். இது நமது சுதந்திரமான வாக்களிக்கும் உரிமையைப் பரித்ததோடு, நமது வாக்களித்தல் தொடர்பான இரகசியம் காக்கும் உரிமையையும் இல்லாமல் செய்துவிட்டது. பல இடங்களில் பார்வையற்றவர்கள் இதுகுறித்து விசாரித்துத் தங்கள் அதிர்ப்தியை வெளிப்படுத்திய பிறகே வாக்குகளைச் செலுத்தியிருக்கிறார்கள்.

மதுரையில் ஒரு பார்வையற்ற பெண் தன் அம்மாவின் உதவியோடு தனது வாக்கினைச் செலுத்தும்படி வாக்குச்சாவடி அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். இதேபோன்ற ஒரு வற்புறுத்தல் அகில இந்திய பார்வையற்றோர் சம்மேளனத்தின் துணைத்தலைவர் திருமதி. முத்துச்செல்விக்கும் நிகழ்ந்துவிட, அவர் கோபமடைந்து வாக்குச்சாவடியிலேயே 45 நிமிடங்கள் அங்குள்ள அலுவலர்களிடம் தனக்கு பிரெயில் வேட்பாளர் பட்டியல் வழங்கும்படி வாதிட்டிருக்கிறார்.

அனைத்திற்கும் மேலாக, தனக்கு பிரெயில் வேட்பாளர் பட்டியல் வழங்காமல், தனது சுதந்திரமான வாக்குரிமையைப் பறித்துவிட்ட மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயலைக் கண்டித்து, சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி உயர்நிலைப்பள்ளியில் தான் செலுத்தவிருந்த வாக்கினைச் செலுத்தாமல், இந்தத் தேர்தலைத் தன்னளவில் புறக்கணிப்பதாக, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் முனைவர். அரங்கராஜா காணொளி ஒன்றினை வெளியிட்டு வாக்குச்சாவடியிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

ஒரு தனிநபராக திரு. ராஜா வெளிப்படுத்திய எதிர்ப்புக்குரல் வரவேற்புக்குரியது. இதேபோன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 30 பார்வையற்றவர்களேனும் புறக்கணிப்பைச் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இது மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு சிறு நெருக்கடியைத் தந்திருக்கும்.

அணுகத்தக்க வாக்குரிமை (Access to Voting) என்பது மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016ல் அடங்கியிருக்கிற முக்கிய கூறு. இச்சட்டம் இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேறி ஆறு ஆண்டுகள் கடக்கப்போகின்றன. இன்னமும்கூட மாநிலத் தேர்தல் ஆணையத்தாலேயே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறித்து வியப்பதா, வேதனைகொள்வதா தெரியவில்லை. சரி, பார்வையற்றோருக்கு பிரெயில் வேட்பாளர் பட்டியல் வழங்கப்படவில்லை என்று செய்தி வெளியிட்ட முன்னணி ஊடகங்கள் ஒன்றுகூட இது தொடர்பான விளக்கத்தினை மாநிலத் தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற முயற்சிக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, நடைபெறவிருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பங்கேற்பு குறித்து, துறை அளவிலான எவ்வித கலந்தாலோசனைகளும் மாநிலத் தேர்தல் ஆணையத்தோடு நிகழ்த்தப்படவில்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல் நமக்கு உணர்த்துகிறது.

இனிவரும் காலங்களில் மாநிலத் தேர்தல் ஆணையம் தனது குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு, பார்வையற்றோருக்கான தற்சார்பு வாக்குரிமையை நிலைநாட்டும் என நம்புவோம். அந்த மாற்றத்தின் தொடக்கப்புள்ளிதான் கடந்த 19 பிப்பரவரி அன்று நம்மவர்கள் சிலர் எழுப்பிய நியாயமான எதிர்ப்புக்குரல்கள். அவை வெறும் எதிர்ப்புக்குரல்கள் அல்ல, நமக்கான உரிமைக்குரல்கள்.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *