கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர
நேற்று காலையில் நடந்த டிஆர்பி தேர்வில் கேட்கப்பட்ட வினா ஒரு பார்வையற்றவனாக என்னைத் திடுக்கிட வைத்தது என்றார் நண்பர். “சார் உங்ககிட்ட அந்த கேள்வியக் கேட்குறேன், பார்வையற்றோருக்கான விவசாயப் பயிற்சி மையம் எங்குள்ளது? எனக்கும் தெரியவில்லை. விவசாயத்துக்கெல்லாம் பயிற்சி கொடுக்கிறாங்கலா என ஆச்சரியமாக இருந்தது.
இன்று காலை கூகுல் செய்து பார்த்தேன். ஆம் கொடுக்கிறார்கள். அதுவும் 1960லிருந்து.
குஜராத் மாநிலம், வால்சாத் மாவட்டத்திலுள்ள ஒரு கடல் நகரம் உமர்காம். இதை உம்பர்காவூன் ஏன்றும் அழைக்கிறார்கள். இங்குதான் டாட்டா அக்ரிகல்ச்சர் அண்ட் ரூரல் ட்ரைனிங் செண்டர் என்ற மையம் பார்வையற்றோருக்கு விவசாயம் தொடர்பான பயிற்சிகளை வழங்கிவருகிறது. இதுகுறித்த ஒரு கட்டுரையை வாஷிங்டன் போஸ்ட் கடந்த 1993லேயே வெளியிட்டுள்ளது.
எனக்கெல்லாம் விவசாயம் என்பது செவிவழிச் செய்திதான். நாற்று நடுதல், களைபறித்தலெல்லாம் அறிமுகம் இல்லை. சிறுவயதில் நண்பர்களோடு சேர்ந்து கொடிக்காய் புள்ளி விதைகளை மண்ணில் இட்டுச் செடி வளர்த்ததோடு சரி. கதிரடிக்கும் இயந்திரத்தையெல்லாம் நான் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையிலுள்ள அரசு வேளாண் மையத்தில்தான் பார்த்தேன். பள்ளி சார்பாக நாங்கள் சென்றிருந்த சிறிய பிக்னிக் அது.
ஒவ்வொன்றாக பாஸ்கர் சார் எனக்கு விளக்கிக்கொண்டிருக்க, என்னிடம் படிக்கும் மாணவர்களில் சிலரும் அதுகுறித்த கூடுதல் தகவல்களைச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். எனக்கு வியப்பும் வெட்கமுமாக இருந்தது. பார்வையற்ற விவசாயிகள் குறித்து விரல்மொழியர் மின்னிதழில் ஒரு பேட்டி படித்ததாக நினைவு. நான் அறிந்த பார்வையற்ற விவசாயிகள் இருவர். சின்னக்காடன், பாண்டி. இருவருமே என் பள்ளிகாலத் தொழர்கள். இருவருமே மிகத் திறமையானவர்கள். மாடு மேய்ப்பது, அவைகளைப் பராமரிப்பது, மரம் ஏறுவது என உழவுசார் அனைத்து செயல்களும் அவர்களுக்கு அத்துபடி. அதிலும் பாண்டி விவசாயம் மீதுகொண்ட அபார நம்பிக்கையால் பள்ளியோடு தன் படிப்பைக் கைவிட்டான்.
இன்று விவசாயம் குறித்து அறியாத தலைமுறையாகப் பொதுச்சமூகம் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களும்கூட ஒரே ஒரு காணொளி மூலம், விவரணைகளுடன் கூடிய விளக்கப்படங்களின் வழியே விவசாயம் குறித்த அடிப்படைப் புரிதலை வளர்த்துக்கொள்வது சாத்தியம்.
நானும்கூட என் பள்ளிகால நண்பன் பாண்டியின் வீட்டில் ஒரிரு வாரங்கள் தங்கி விவசாயம் பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொள்ளலாம் என்று நினைத்ததுண்டு. ஆனால், அதற்கான வாய்ப்புகள் அமையவே இல்லை. காலம் அவனையும் விவசாயத்திலிருந்து வெளித்தள்ளிவிடவே இன்று வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டான்.
இதுபோன்ற நிறுவனங்கள் என்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்காக குறுகிய கால வகுப்புகளை நடத்திட வேண்டும். பிற மாநில மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சியை ஒப்பிடுகையில், போக வேண்டிய தூரமும், அடைய வேண்டிய இலக்கும் அதிகம் என்றாலும், தமிழகம் உதவித்தொகைகள், அரசுப்பணிகள், உதவி உபகரணங்கள் போன்ற பாதையில் கொஞ்சமே கொஞ்சம் முன்னேறியிருக்கிறது. ஆனால் இவையெல்லாமே புறம் சார் வளர்ச்சிகள். நம் அகப்பரிணாம வளர்ச்சிக்கு அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது? அல்லது நமக்காக இயங்கும் அரசு சாரா தொண்டுநிறுவனங்களிடம் ஏதேனும் புதுமையான பயிற்சித் திட்டங்கள் இருக்கின்றனவா?
அப்படி இருந்தாலும்கூட அவற்றைப் பயில்வதில் நம்மவர்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? கணினி தெரிந்தால் உண்மையில் ஒரு பார்வையற்றவர் தற்சார்பு பெற்றுவிடலாம். ஆனால், தன்னை ஓர் முழுமையடைந்த மனிதனாக, உள்ளநிறைவு கொண்ட சமூகத்தின் ஒரு அங்கத்தினனாக உணரவைப்பது இயற்கையும் அதுசார்ந்த அறிதலும்தான். அத்தகைய அறிதல்களை வளர்த்துக்கொள்ள இதுபோன்ற பயிற்சிகளும், பயணங்களும் உதவும். நம்மில் ஆர்வமுள்ள பார்வையற்றவர்கள் இணைந்து அதுபோன்ற பயிற்சிப் பட்டறைகளை, பயணங்களை ஒருங்கிணைக்க முன்வரலாம். தொழில்நுட்பமும் அதற்கு நன்றாகவே கைகொடுக்கும்.
பெங்களூரில்கூட ஒரு தன்னார்வத் தொண்டுநிறுவனம் பார்வையற்றோருக்கென்றே சுற்றுலாக்களைத் திட்டமிட்டு ஒருங்கிணைக்கிறார்கள் என்று படித்திருக்கிறேன். ஆனால் நான் சொல்வது சுற்றுலாக்கள் அல்ல பயணங்கள். அதை நமக்காக நாம்தான் வடிவமைக்க வேண்டும். அதுவரை இதுபோன்ற கேள்விகள் நம்மைத் துரத்திக்கொண்டுதான் இருக்கும்.
பார்வையற்றோருக்கான விவசாயப் பயிற்சி மையம் குறித்து வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட பதிவு
***ப. சரவணமணிகண்டன்
சிறப்பான பதிவு தகவல் புதிது