தொடுகை: பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம்

நான்காம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் நமக்கான ஊடகம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

வெற்றித்தடாகம், சவால்முரசு என பெயர்கள் மாறிவந்தாலும், மாற்றுத்திறனாளிகளுக்கான செய்தித்தளமாக நான்காவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது சவால்முரசு. பார்வையற்றோரால் நடத்தப்படும் விரல்மொழியர் மின்னிதழ் மாதாந்திர இதழாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டபோது, தினசரி செய்திகளைத் தாங்கியும் அதே விரல்மொழியர் பக்கத்தில் ஒரு வசதியை ஏற்படுத்தலாம் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது. அதற்கு வழியில்லாத நிலையில், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான செய்திகளைத் தொகுக்கும் நோக்கத்தோடு, ப்லாகர் தளத்தில் www.maatruthiran.com என்ற டொமைனை வாங்கி இணைத்து அந்தத் தளத்திற்கு வெற்றித்தடாகம் எனப் பெயரிட்டு, கடந்த டிசம்பர் 18 2018 அன்றுமுதல் தளத்தைச் செயல்படுத்தத் தொடங்கினேன்.

உண்மையில் ப்லாகர் தளத்தைப் பயன்படுத்துவது குறித்து எனக்கு எவ்வித முன்னறிவும் இருக்கவில்லை. ஆனால், முழுப்பார்வையற்றவனான எனக்கு இணைய வடிவமைப்பில் தனிப்பட்ட முறையில் வெகு நாட்களாகவே ஆர்வம் இருந்தது. எனவே, ப்லாகர் தளத்தில் ஒரு புதிய கணக்கைத் தொடங்கி, தளத்தை வடிவமைப்பது, சரிபார்ப்பது, பிறகு அழிப்பது, மீண்டும் புதுப்பிப்பது என நிறைய நேரங்களைச் செலவிட்டு ப்லாகரில் இணைய வடிவமைப்பை ஓரளவு கற்றுக்கொண்டேன்.

வெற்றித்தடாகம் லோகோ

வெற்றித்தடாகம் என்ற பெயரில் ஒரு லோகோவை வடிவமைத்துத் தந்தார் ஈரோடு செவித்திறன் குறையுடையோருக்கான உயர்நிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியரான நண்பர் செல்வம். அவரிடம் அவ்வப்போது தளத்தைக் காட்டி, பார்வைக்குத் தளம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வேன். மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களைச் செய்து மீண்டும் அவரிடமே காண்பிப்பேன். நண்பரும்கூட, எங்களதுசென்னைப் பயணத்தின் ஒரு அதிகாலையில் அமர்ந்து என்னோடு இணையவடிவமைப்பில் பங்கேற்று பல மாறுதல்களைச் செய்திருக்கிறார்.

பல்வேறு செய்தி ஊடகங்களில் வந்த மாற்றுத்திறனாளிகள் தொடர்புடைய செய்திகள், பொதுத்தள செய்தி ஊடகங்களில் இடம்பெறாத, அதேவேளை மாற்றுத்திறனாளிகளிடையே நிகழ்ந்தேறும் முக்கிய நிகழ்வுகள், அவ்வப்போதைய எனது கட்டுரைகள் என தளம் ஒன்றரை ஆண்டுகள் சிற்சில தொய்வுகளைக் கடந்து செயல்பட்டுக்கொண்டிருந்தது. இந்நிலையில், விரல்மொழியர் மின்னிதழின் பொறுப்புகளிலிருந்து வெளியேறியிருந்த நான், இன்னும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் செயல்ல்பட வழிவகுத்தது 2020 மார்ச் மாதத்தின் இறுதி கட்டத்தில் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட கரோனா ஊரடங்கு காலம்.

கரோனா ஊரடங்கு காலத்தில் ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் ரயில் வணிகத்தைத் தங்கள் அன்றாடமாகக்கொண்டிருந்த பல பார்வையற்றவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதுகுறித்து நானும் சித்ராக்காவும் மிகுந்த விசனத்தோடு பேசிக்கொண்டிருப்போம். அப்படியான ஒரு ஆற்றாமையில் எழுந்ததுதான் மிகப்பெரும் மாற்றத்திற்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்த ‘அன்புத் தோழமைகளே’ எனத் தொடங்கும் எனது முகநூல் கட்டுரை. கட்டுரையில் ஊரடங்கு காலத்தில் பார்வையற்ற இரயில் வணிகர்களுக்கு உதவும்படி பொதுச்சமூகத்திடம் உருக்கமாக மன்றாடினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

கட்டுரை பார்வையற்றவர்களிடையே வாட்ஸ் ஆப் வழியாகப் பரவி, பல்வேறு உதவும் குழுக்களாக அவர்களை ஒருங்கிணைத்தது. தனது எள்ளலும் எழுச்சியும் கொண்ட எழுத்து நடையால், முகநூல் தளத்தில் பொதுச்சமூகத்தின் கவனத்தைப் பெருமளவு தன்னகத்தே ஈர்த்துவைத்திருக்கிற பார்வையற்றவனும் தனது பக்கத்தில் எனது கட்டுரையைப் பகிர்ந்து பொதுச்சமூகத்தின் பரவலான கவனத்தையும் பங்களிப்பையும் பெறக் காரணமாக இருந்தார்.

நான் சார்ந்திருக்கிற ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்திற்கு உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் நிதி உதவிகள் வந்தன. அத்தோடு சங்க உறுப்பினர்களும் தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், கொடையாளர்களிடமிருந்து பெற்றுத் தந்த பெருநிதிகளால் ஏறத்தாழ தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டத்தைச் சேர்ந்த 550 பார்வையற்ற குடும்பங்களுக்கு ரூ. 1000 கரோனா உதவித்தொகையாக எங்களால் வழங்க முடிந்தது. இந்த நிகழ்வுகள் குறித்த பதிவுகள், கரோனா தொற்றுக்கு் பலியான முதல் பார்வையற்றவரான திரு. அருணாச்சலம் அவர்களின் மறைவு என வெற்றித்தடாகம் தளம் அன்றாடச் செய்தித்தளமாகப் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.

இத்தனைக்குப் பிறகும் என் மனதில் வெற்றித்தடாகம் என்ற பெயர் மட்டும் சிறிய ஒவ்வாமையை அவ்வப்போது ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. நம்பிக்கை தும்பிக்கை என்று பேசி எதார்த்தத்தை மறைக்கும் கிளுகிளுப்புகளில் எனக்குப் பொதுவாகவே ஆர்வம் கிடையாது. அதனாலேயே இந்தப் பெயர் எனக்குள் ஏதோ நெருடலைத் தந்துகொண்டே இருந்தது. தளத்தின் பெயரை மாற்றியே ஆகவேண்டும், ஆனால், என்ன பெயரிடுவது?

உண்மையில் உடல்க்குறைபாடு என்பது பிறவியிலேயே ஒருவருக்கு விதிக்கப்பட்டிருக்கிற சவால். அதனை ஒருவர் எப்படி எதிர்கொண்டு, வாழ்கிறார், அல்லது வாழ வேண்டும், அப்படி எதிர்கொள்கையில் தான் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் அவர் சந்திக்கும் சிக்கல்கள், அதைக் கடக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள், அதற்கு தன்னளவிலும் சமூகத்திடமும் பெறும் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பதைத்தான் நான் எப்போதும் பேச, பதிவுசெய்ய விழைகிறேன். எனவே, தளத்திற்கான புதுப்பெயரில் சவால் என்ற வார்த்தை நிச்சயம் இடம்பெற வேண்டும் என்று கருதினேன்.

அப்படித்தான் சவால்முரசு என்ற பெயர் மனதுக்குள் உதித்தது. இன்று நீங்கள் பார்க்கும் சவால்முரசு லோகோவை வடிவமைத்துத் தந்தவர் தம்பி கிரிஸ்டோபர். நண்பர் செல்வமும் லோகோவை வெகுவாகப் பாராட்டியதில் என் உத்வேகம் அதிகரித்தது. தொடக்கத்தில் வெற்றித்தடாகம் பெயரை நீக்கிவிட்டு maatruthiran.com தளத்திலேயே சவால்முரசு என்ற பெயரில் ஒரு மாதம் தளம் இயங்கியது.

விரல்மொழியர் ஆசிரியர் நண்பர் பாலகணேசன் “சவால்முரசு என்ற பெயரிலேயே டொமைன் வாங்கிவிடலாமே” என்றார். எனக்கும் அது சரியெனப்பட்டது. உடனே சவால்முரசு என்ற பெயரில் டொமைனை வாங்கி அதை ப்லாகரில் இணைத்தேன்.

மாதாந்திரப் பதிவுகளைத் தொகுக்க எண்ணியும், சில மணிநேரங்கள் செலவிட்டு நாம் சொந்தமாகப் படைக்கும் ஆக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கும்வகையிலும், தளத்தை இரண்டாகப் பகுத்து, அன்றாடச் செய்திகளுக்கென news.savaalmurasu.com என்ற பெயரில் ஒரு இணை டொமைனையும் தளத்தில் இணைத்தேன்.

மூன்று மாதங்கள் ப்லாகரில் இயங்கிக்கொண்டிருந்த தளத்திற்கு ப்லாகர் மேம்படுத்தல் (updation) காரணமாக ஒரு சிக்கல் எழுந்தது. மேம்படுத்தப்பட்ட ப்லாகர் வடிவமைப்பில் ஒரு முழுப்பார்வையற்றவரால் செய்திக்கான புகைப்படத்தைச் சேர்த்து அதற்கு மாற்று உரை (alt text) இடுவது மிகக் கடினமான செயலாக மாறிப்போனது. எனவே வேர்ட்ப்ரஸில் தளத்தைத் தொடங்குவது என முடிவு செய்தேன். அப்படி இணைத்தால் இதுவரை தளத்திற்குக் கிடைத்த பார்வையாளர் எண்ணிக்கையை (views) நான் இழக்கக்கூடும். வேறு வழியில்லை. மாற்று உரை இடப்படாத புகைப்படங்களோடு பதிவுகளை வெளியிடுவதில் எனக்கு விருப்பமில்லை என்பதால் வேர்ட் ப்ரஸுக்கு மாறுவது என்ற முடிவைச் செயல்படுத்தினேன்.

ப்லாகர் போலவே வேர்ட் ப்ரஸ் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. பிறகென்ன? மீண்டும் அதே அடித்தல், திருத்தல், உருவாக்கல், அழித்தல்தான்.

கடந்த செப்டம்பர் 2020 முதல் இன்றுவரை தொடர்ச்சியாகப் பற்பல மாற்றங்களைச் செய்து வேர்ட்ப்ரஸில் தளம் வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

அவ்வப்போது எழும் சலிப்பு, எனது தனிப்பட்ட விருப்பார்வங்கள், சூழல்கள் என சவால்முரசு தொடர்ச்சியாக வெளிவருவதில் சில சிக்கல்கள் இருப்பது உண்மை. சில நேரங்களில் இவை எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு இணைய உலகிலிருந்தே வெளியேறிவிடலாம் என்பதாகக்கூட மனம் வெறுமைகொள்வதுண்டு. அப்போது உலகின் ஏதோ ஒரு மூலையில் நிகழ்ந்தேறும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சம்பவங்கள் என்னைத் தட்டியெழுப்பி, “இதைப் பதிவுசெய்யாமல் விட்டால் எப்படி?” என்ற உந்துதலை எனக்குள் ஏற்படுத்திவிடுகிறது.

இந்த நான்காண்டுப் பயணத்தில் தளத்திற்குத் தங்கள் படைப்புகளைத் தந்தவர்கள் வெகு சிலரே என்றாலும் அனைவரையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன். மேலும், “இதையெல்லாம் திருத்த முடியாது” என்று முனகிக்கொண்டே என் குடும்பப் பொறுப்புகளைத் தன்னளவில் சுமக்கிற என் இணையர் விசித்ரா, சரியோ, பிழையோ, என் முயற்சிகளில் தனக்கு ஆர்வமில்லாதபோதும் நிபந்தனையின்றி உடன் நிற்கிற சித்ராக்கா, தங்கை மோனிஷா, தம்பி கிரிஸ்டோபர் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

இன்று மாற்றுத்திறனாளிகள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் அனைத்து முன்னணி ஊடகங்களும் ஆர்வம் காட்டத்தொடங்கிவிட்டன. பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சம்பவங்களை மட்டுமே அந்தச் செய்திகள் பதிவுசெய்கின்றன, நமது உள்ளார்ந்த சங்கடங்களுக்கு அங்கே இடமில்லை. புள்ளிவிவரங்கள் நிறைந்திருக்கின்றன என்றாலும், பொருட்படுத்தத்தக்க நமது குரல்கள் அங்கே எழும்புவதே இல்லை.

அதனால்தான் வெற்றித்தடாகம், சவால்முரசு எனத் தளம் பெயர் மாற்றம் பெற்றாலும், மாற்றம் காணாத ஒன்றாய் தொடர்கிறது அந்த ஒற்றை வாக்கியம்.

அது, ‘நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.’

கைகோர்த்துப் பயணிப்போம், காலங்களைப் பதிவுசெய்தபடி.

***ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *