சமூக ஊடகங்களில் சவால்முரசு

சமூக ஊடகங்களில் சவால்முரசு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

வெற்றித்தடாகம் என்ற இணையதளம் சவால்முரசு என்று பெயர் மாற்றம் பெற்றவுடனேயே சவால்முரசு வலையொளித்தளமும் (youtube channel)தொடங்கப்பட்டது. தங்கை மோனிஷா பங்கேற்ற கரோனா காலங்களில் கைகளைக் கழுவும் முறை பற்றிய காணொளி பார்வையற்றோரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நண்பர் சுரேஷ், தங்கை சோஃபியாமாலதி மற்றும் சித்ராக்கா மூவரும் இணைந்து இந்தியக் குடிமைப்பணிகளில் தேர்ச்சிபெற்ற மதுரையைச் சேர்ந்த பார்வையற்றவரான செல்வி பூரணசுந்தரியிடம் கண்ட நேர்காணல், இன்றளவும் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு, சவால்முரசு வலையொளித்தளம் வெளியிட்ட காணொளிகளிலேயே  முதல் இடத்தில் இருக்கிறது.

தங்கை ஷியாமலா பங்கேற்று வழங்கிய அலுவலகங்கள்தோறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை குறித்த காணொளி, தளத்திற்கு நிறைய வாசகர்களைப் பெற்றுத்தந்தது.

மேலும், சவால்முரசு வலையொளித்தளத்தின் ஒரு சிறப்பு முயற்சியாக, தளத்தின் இணை  ஒருங்கிணைப்பாளர் தம்பி கிரிஸ்டோபரின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் ‘keep on telling’ என்ற மொபைல் மூலம் பதிவுசெய்யப்பட்ட குறும்படம் கடந்த 2020 அக்டோபர் 15 வெண்கோல் தினத்தன்று வெளியிடப்பட்டது. பார்வையற்றோரால் நடத்தப்படும் வலையொளித்தளங்கள் வெளியிடும் காணொளிகளிலேயே முதன்முறையாக, ஆங்கிலமொழி எழுத்து விவரணைகள் (captions) தாங்கி வெளிவந்த காணொளி இந்தக்குறும்படம் என்பதில் பெருமிதம்கொள்கிறது சவால்முரசு. ஒருநாள் இரவு முழுக்கக் கண்விழித்து இதைச் சாத்தியமாக்கினார் தங்கை மோனிஷா.

இதுதவிர, ஸ்பர்ஷ் ஹிந்தி திரைப்படம் தொடர்பாகநண்பர் கா. செல்வம் அவர்கள் பங்கேற்ற உரையாடல், தமிழ்ப்பசங்க யூட்டூப் சேனலுக்கு பார்வையற்றோர் சமூகத்திடமிருந்து எழுந்த எதிர்வினை, ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வெளியிடும் பாடவாரியான காணொளிகள், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் அவ்வப்போது முன்னெடுக்கும் நிகழ்வுகளில் ஊடகத்தோழமையாகப் பங்கேற்று ஒளிபரப்பப்படும் நேரலைகள், என முக்கியச் செய்திகளைத் தாங்கியபடி சவால்முரசு தொடர்ந்து வலையொளித்தளம் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

சவால்முரசு இணையதளத்தில் வெளியிடப்படும் பதிவுகள், உடனுக்குடன் அதன் முகநூல், ட்விட்டர் மற்றும் கூகுல் செய்திகள் பக்கங்களிலும்   அன்றையதினத்திலேயே வெளியாகிவருகின்றன. சவால்முரசின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் தொய்வுகளைச் சந்தித்தாலும், அதன் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்்களை நூற்றுக்கணக்கானோர் பின்தொடர்ந்து ஆதரவு வழங்கிவருகிறார்கள்.

படைப்பாக்கங்கள் வழங்குதல், பக்க வடிவமைப்பு, கட்டுரைகள் பிழைதிருத்தல் என எங்களோடு நீங்களும் இணைந்து பயணிக்க விரும்பினால், உங்கள் விருப்பத்தை mail@savaalmurasu.com என்ற மின்னஞ்சல் வழியே எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

கைகோர்த்துப் பயணிப்போம், காலங்களைப் பதிவுசெய்தபடி.

***ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *