ஒரு காலம் உருவாகும்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

நான் முன்பு பணியாற்றிய புதுக்கோட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளியில் நான்காம் வகுப்பில் வந்து சேர்ந்த குறைப்பார்வையுடைய மாணவி செந்தியா. அப்பா லாரி ஓட்டுநர், அம்மாவும் பார்வையற்றவர். மூத்த சகோதரனும் மாற்றுத்திறனாளி.

படிப்பில் கவனம் செலுத்தாமல், துருதுருவென எதையாவது கொஞ்சும் குரலில் பேசிக்கொண்டும், மற்ற பிள்ளைகளைச் சீண்டிக்கொண்டிருப்பாள். அதனால் எங்களிடம் அடிக்கடி திட்டுவாங்குவாள். அப்படிப்பட்டவளுக்குப் பாடும் திறமையிருக்கிறது என்பதை நாங்கள் கண்டுபிடித்தது ஒரு தற்செயலான நிகழ்வு. “குறையொன்றும் இல்லை, ஓடி விளையாடு பாப்பா” என பாடல்கள் சொல்லித்தருகிறோம் என்ற பெயரில் சிறப்புப் பள்ளிகளில் காலங்காலமாக அரைத்த மாவை அரைத்துக்கொண்டிருப்பார்கள். பிள்ளைகளும் அதைப் பாரம்பரியமாகத்தங்களின் இளையவர்களுக்குக் கடத்திவிட்டு பள்ளியைவிட்டு வெளியேறியிருப்பார்கள்.

அந்தப் பாடல்ல்களில்  நிறைய சொற்கள் உச்சரிப்பு மாறி, எழுத்துகள் மாறி புரியாத ஒரு மந்திரமாகத் தொடர்ந்து மிகுந்த சோர்வுடனும் ஆர்வமின்றியும் மாணவர்களால் பாடப்படுவதுண்டு. இந்த அலுப்பூட்டும் பாரம்பரியத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் என நினைத்தேன். திரைப்படங்களில் அவ்வப்போது வெளியாகும் புரட்சிகர கருத்துகள் கொண்ட மற்றும் மனிதம் பொங்கும் பாடல்களைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன். அது மாணவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

‘கணவினைக் கேள் நண்பா- தேசியகீதம், இன்னும்  என்ன தோழா-ஏழாம் அறிவு, இழப்பதற்கு எதுவும் இல்லை-சாட்டை, பச்சைக்கிளிகள் தோளோடு-இந்தியன், மனிதன் என்பவன்-சுமைதாங்கி’ என  இன்னும் பல.

மாணவர்களின் காலை மாலை வழிபாட்டுக் கூட்டங்களிலும் அந்தப் பாடல்களையே பாடுமாறு பணித்ததில் அந்தப் பாடல் வரிகள் மாணவர்களின் நினைவடுக்கில் நன்கு தங்கிவிட்டன. அந்தவகையில் நான் கற்றுக்கொடுத்த ஒரு முக்கியமான பாடல் ‘வாழும்வரை போராடு-பாடும் வானம்பாடி.’

இந்தப் பாடலில் சிறுமி பாடுவதுபோல ஒரு குரல் பாடியிருக்கும். அந்தக் குரலை அச்சு வார்த்தது போல கூட்டத்திலிருந்து தனித்து ஒலித்தது செந்தியாவின் குரல்.

“மாடிவீட்டு ஜன்னலும்கூட

சட்டையைப் போட்டிருக்கு,

சேரிப்புள்ள சின்னப்புள்ள

அம்மனமா இருக்கு.”

அனைவரையும் அமைதிப்படுத்திவிட்டு செந்தியாவை மட்டும் மீண்டும் மீண்டும் பாடச்சொல்லிக் கேட்டு மெய்சிலிர்த்தபடியே இருந்தேன். சின்னச் சின்னத் திருத்தங்கள் செய்து மாணவர்கள் பங்கேற்கும் முக்கிய வெளி நிகழ்வுகளில் செந்தியாவை அந்தப் பாடலைப்பாட வைத்தோம்.

அதன்பிறகு மாணவி நடுநிலைக்கல்விக்காக தஞ்சைப் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றுவிட்டாள். சில ஆண்டுகளுக்குப் பின் முகநூலில் அவள் பாடிய ஒரு காணொளியைப் பார்த்துவிட்டு விரல்மொழியர் மின்னிதழ் நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க விரல்மொழியர் 25ஆம் இதழ் வெளியீட்டு விழாவில் பாடவைத்தோம்.

இப்போது சந்த்யா ஃபோக்ஸ் என்ற வலையொளித்தளம்ப் வழியாக செந்தியா பாடிய இரண்டு பாடல்களைக் கேட்டேன். வியப்பாக இருந்தது. குரலிலும் பாவத்திலும் நல்ல முன்னேற்றம். வரிகளைப் புரிந்து மெருகேற்றிப் பாடுகிறார். குரலில் கலப்படமற்ற கிராமிய மணம்.

உரிய வாய்ப்புகள் கிடைத்தால் தமிழ்த்திரையிசையில் தனித்துவமான குரலோடு சிறந்த பாடகியாக மிளிர்வாள். அதுவரை செந்தியாவுக்குத் தோள்கொடுக்கும் உள்ளூர் நண்பர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

‘ஒரு காலம், உருவாகும்,

நிலைமாறும், உண்மையே!

வாழ்த்துகள் செந்தியா.

***ப. சரவணமணிகண்டன்

பகிர

1 thought on “ஒரு காலம் உருவாகும்

  1. உங்களைப் போன்ற ஊடக நண்பர்கள் செந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ளீர்கள் என்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *