பெறுநர்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம்
சென்னை 5.
ஐயா,
பொருள்-புதுக்கோட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு
நடுநிலைப்பள்ளியைப் பின்பற்றி எஞ்சிய 4 பார்வைத்திறன்
குறையுடையோருக்கான அரசுத் தொடக்கப்பள்ளிகளை
நடுநிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்த வேண்டுவது தொடர்பாக:
பார்வை-1 அரசாணை நிலை எண் 18.மா.தி.ந.துறை நாள் 18.மே.2017.
2 மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களின் செயல்முறை ஆணைகள் 6999 நாள் 07.ஜூன்.2017
பார்வை 1 மற்றும் 2ல் கண்டுள்ள அரசாணை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களின் செயல்முறை நடவடிக்கைகளின்படி, தொடக்கநிலைப் பள்ளியாக (primary level) இயங்கிவந்த புதுக்கோட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளியானது, எந்தவித கூடுதல் நிதி ஒதுக்கீடுமின்றி, இருக்கும் வளங்களைப் பயன்படுத்திக்கொள்வது என்ற நிபந்தனைக்கிணங்க, 6,7,8 ஆகிய வகுப்புகளை நடத்திக்கொள்ள அனுமதியைப் பெற்று, அப்பள்ளி தொடக்கநிலையிலிருந்து நடுநிலைப்பள்ளியாகத் (middle level) தரம் உயர்த்தப்பட்டது.
மேற்கண்ட பள்ளியானது கடந்த 2017 ஆம் கல்வியாண்டு முதல் அதிக மாணவர் சேர்க்கையைப் பெற்று நடுநிலைப்பள்ளியாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அரசின் இந்த நடைமுறையை முன்னுதாரணமாகக்கொண்டு, தற்போது தொடக்கநிலைப்பள்ளிகளாக இயங்கிவரும் கடலூர், சிவகங்கை, தர்மபுரி மற்றும் கோவை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்திட ஆவன செய்யுமாறு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களை எமது சங்கம்வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தரம் உயர்த்தப்பட வேண்டியதன் அவசியம்:
தற்போது அனைவருக்கும் கல்வித்திட்டம், (SSA) உள்ளடங்கிய கல்வி (inclusive education) போன்ற கல்வித்திட்டங்களின் மூலம், பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாகவே வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்து வயது நிறைவடைந்த பெரும்பாலான பார்வையற்ற குழந்தைகளின் பெற்றோர், தனது குழந்தையின் வயதைக் காரணமாகச் சொல்லி, விடுதிசார் சிறப்புப்பள்ளிகளில் சேர்க்கத் தயங்குவதோடு, தனது வீட்டிற்கு அருகாமையிலுள்ள சாதாரணப் பள்ளிகளிலேயே சேர்த்துவிடுகின்றனர்.
தொடக்க நிலையில், 50 சாதாரண பள்ளிக் குழந்தைகளோடு பயிலத் தொடங்கும் ஒரு பார்வையற்ற குழந்தையானது, புறக்கணிப்பு, பொருத்தப்பாடின்மை மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் உளவியல் ரீதியாகப் பாதிப்படைகிறது. இத்தகைய உளவியல் பாதிப்புகள் மற்றும் நடுநிலைக் கல்வியின் கடினத்தன்மை காரணமாகவும், சாதாரண நடுநிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்படாத நிலையில், பெரும்பாலான பார்வையற்ற குழந்தைகள் தனது நடுநிலைக் கல்விக்காகப் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளை நாடுகின்றனர்.
இந்நிலையில், பார்வையற்றோருக்கான அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளிகள் (Govt. Aided Schools) அனைத்தும், குறைந்தபட்சம் நடுநிலைப்பள்ளிகளாக உள்ளன. காதுகேளாதோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளும் குறைந்தபட்சம் நடுநிலைப் பள்ளிகளாகவே உள்ளன. நடுநிலைப்பள்ளிகளாக இயங்கும் அனைத்து சிறப்புப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கையானது, 1 முதல் 5 வரையிலான தொடக்கநிலைகளில் மிகக்குறைந்தும், 6 முதல் 8 வரையிலான நடுநிலை வகுப்புகளில் மிக அதிகரித்தும் காணப்படுகிறது என்பது நடைமுறை உண்மை.
எனவே, பார்வையற்ற மாணவர்களின் நடுநிலைக்கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மேற்கண்ட அரசாணைகளை முன்னுதாரணமாகக்கொண்டு, புதுக்கோட்டை பள்ளியைப் பின்பற்றி, தொடக்க நிலையிலுள்ள சிவகங்கை, கடலூர், கோவை மற்றும் தர்மபுரி ஆகிய நான்கு பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளை பள்ளிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர் , ஆசிரியர் மற்றும் இதரப் பணியாளர்களின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமுமின்றி, மேற்கண்ட அனுமதிகளோடு எந்தவித கூடுதல் நிதி ஒதுக்கீடுகளுமின்றி, ஆறு , ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளைக் கொண்ட நடுநிலைப்பள்ளியாக இயங்க அனுமதி வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி,
இவள், U. சித்ரா
தலைவர்
நாள்: 16.நவம்பர்.2021
இடம்: சென்னை.
சங்கத்தின் ஆக்கப்பூர்வமான செயல்கள் நிச்சயம் வெற்றிபெறட்டும் தங்களுடைய புதுப்புது முயற்சியால் பார்வை சவால் கொண்ட மாணவர்களின் எதிர்காலம் வளமுடன் அமையும் என்று நம்புகிறோம் வாழ்த்துகள்.
சங்கத்தின் ஆக்கப்பூர்வமான செயல்கள் நிச்சயம் வெற்றிபெறட்டும் தங்களுடைய புதுப்புது முயற்சியால் பார்வை சவால் கொண்ட மாணவர்களின் எதிர்காலம் வளமுடன் அமையும் என்று நம்புகிறோம் வாழ்த்துகள்.
சங்கத்தின் ஆக்கப்பூர்வமான செயல்கள் நிச்சயம் வெற்றிபெறட்டும் தங்களுடைய புதுப்புது முயற்சியால் பார்வை சவால் கொண்ட மாணவர்களின் எதிர்காலம் வளமுடன் அமையும் என்று நம்புகிறோம் வாழ்த்துகள்.