Categories
காணொளிகள் பேட்டிகள்

ஒரு பெருமிதத் தருணம்

எனக்கு சித்ராக்காவின் ஆளுமை நன்கு தெரியும். அவர் மனிதவளத்தை ஒருங்கிணைப்பதில் கெட்டி்க்காரர்

கடந்த 2020 ஆம் ஆண்டு பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் இரண்டாவது ஜூம் கூடுகை, ‘பார்வையற்றோருக்கான பணிவாய்ப்பும் சவால்களும்’ என்ற தலைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டது. அந்தக் கூடுகையின்போது, திரு. கணேஷ் அவர்கள், பணிவாய்ப்பு நாடும் பார்வையற்ற இளைஞர்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளம் இல்லை என வருத்தப்பட்டு சொன்னார். அது என்னை மிகவும் கலங்கடிப்பதாக இருந்தது. ஆனால், அது எனது கைமீறிய செயல் என்றே நான் நினைத்த்உக்கொண்டேன். ஓரிரு மாதங்களில் பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்களுக்காக இணையவழியில் போட்டித்தேர்வுகளுக்கான தொடர் பயிற்சி வகுப்புகளை முன்னெடுக்கப்போகிறேன் என சித்ராக்கா சொன்னபோது, கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

முடியுமா என்ற கேள்வி உள்ளுக்குள் உறுத்தினாலும், கணேஷின் கேள்விக்குப் பகுதியளவேனும் பதில் கிடைத்துவிட்டதாக நினைத்தேன். காரணம், எனக்கு சித்ராக்காவின் ஆளுமை நன்கு தெரியும். அவர் மனிதவளத்தை ஒருங்கிணைப்பதில் கெட்டி்க்காரர். நான் நினைத்ததைவிடவும் கூடுதலாக அக்கறையும் சிரத்தையும் மேற்கொண்டு ஹெலன்கெல்லர் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை ஓராண்டு நடத்தி முடித்து, அதன் ஆண்டுவிழாவினை முன்னெடுக்கிறார்.

இப்படிப்பட்ட ஆக்கபூர்வமான முன்னெடுப்பிற்குத் தொடக்கப் புள்ளியை வைத்ததில் தங்கை ஷியாமலாவிற்கும் முக்கியப் பங்கு உண்டு. தானே முன்வந்து பயிற்றுனராகத் தன்னை இணைத்துக்கொண்ட திரு. சௌண்டப்பன் அவர்களையும் இந்த நேரத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

பயிற்சி மைய வகுப்புகள் தொய்வின்றி நடைபெறப் பெரிதும் உதவியவர், நண்பர் திரு. பாலநாகேந்திரன் (இந்தியக் குடிமைப்பணிகள்) அவர்கள். ஆண்டின் பல மாதங்கள் மாணவர்களுக்கு வகுப்பெடுத்து, போட்டித்தேர்வுகளுக்கு மட்டுமின்றி, மாணவர்களை ஆளுமை உடையவர்களாக உருவாக்குவதையும் அவர் தனது கற்பித்தலின் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார் என்பதை அவர் வகுப்பில் பங்கேற்றவர்கள் நன்கு அறிவார்கள்.

வெளியே நின்று வேடிக்கை பார்த்தவனாய் எனக்கே இந்தப் பயிற்சி மையம் குறித்து சொல்வதற்கு இவ்வளவு இருக்கிறது எனும்போது, அதனைக் கடந்த ஓராண்டு காலமாக ஒருங்கிணைத்து நடத்திக்கொண்டிருக்கும் சித்ராக்காவிடம் தன்னுடைய சக குழுவினர், பயிற்றுனர்கள் மற்றும் வகுப்பில் பங்கேற்கும் பயிற்சி மாணவர்கள் குறித்து சொல்வதற்கு நிறைய இருக்கும் என்ற உந்துதலில்தான் அவரிடம் சவால்முரசு சார்பாக பேட்டி காண்பது என முடிவு செய்தேன். பயிற்சி மாணவர்களுக்கும் சித்ராக்காவிடம் சொல்வதற்கும் ஏதேனும் இருக்கும் என்ற எண்ணத்தில்தான் நந்தினி மற்றும் கார்த்திகேயன் இருவரையும் உடன் இணைத்துக்கொண்டேன்.

இந்த முயற்சி மேலும் பல ஆண்டுகள் தொடர வேண்டும். இந்த இணையவழிப் பயிற்சியின் மூலம், பல புதியதலைமுறைப் பார்வையற்றவர்கள் பணிவாய்ப்பு பெறவேண்டும்என்பதே எனது ஆவலாக இருக்கிறது.

***

ப. சரவணமணிகண்டன்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

2 replies on “ஒரு பெருமிதத் தருணம்”

உண்மையில் பெருமிதமாக உள்ளது குன்றின் மேலிட்ட விளக்காக நம்முடைய தலைவி திகழ்கிறார். இவரைப் போன்ற ஒரு தீக்குச்சியை வைத்துக்கொண்டு பார்வைத்திறன் குறையுடைய பல ஆயிரம் இளஞ்சர்களின் வாழ்வில் இருளைப் போக்க முடியும்.

Like

Leave a reply to கவிதை: “யார் நீ எனக்கு?” சந்தோஷ்குமார் – சவால்முரசு Cancel reply