ஏமாற்றம் தந்த நிதிநிலை அறிக்கை, எதிர்பார்க்கப்படும் மானியக் கோரிக்கை: மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான அரசின் அறிவிப்புகள் யாவை?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
முதல்வரோடு நிதியமைச்சர்
முதல்வரோடு நிதியமைச்சர்

தமிழ்நாடு அரசின் 2021 22 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையினை இன்று (13-ஆகஸ்ட்-2021) தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு மாநில நிதியமைச்சர் திரு. P.T.R. பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேல் நீண்ட அமைச்சரின் நிதிநிலை அறிக்கை உரையில், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 32599 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்தோடு, மாநிலத்திற்கான தனித்த கல்விக்கொள்கை உருவாக்க நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக சில அறிவிப்புகளையும் வெளியிட்டார் அமைச்சர். அமைச்சர் தனது உரையில்,

“மிகவும் பாதிக்கப்படக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு பரிவு காட்டும் விதமாக, முத்தமிழறிஞர் கலைஞர் மாற்றுத்திறனாளிகளின் நலத்துக்காக ஒரு தனித்துறையை நிறுவி, அத்தகைய துறையைக் கொண்ட முதல் மாநிலம் என்ற தனித்துவத்தை தமிழ்நாட்டிற்குப் பெற்றுத் தந்தார். இதைப்போன்றே அக்கறைகொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டுள்ளார்.

  • மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தமது ஒரு உதவியாளருடன் மாநிலம் முழுவதும் இயங்கும் எந்த அரசுப் பேருந்துகளிலும் இலவசமாகப் பயணிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
  •  காத்திருப்புப் பட்டியலிலுள்ள 9173 தகுதியுள்ள நபர்களுக்கும் மாதத்திற்கு 1500 ரூபாய் பராமரிப்புத் தொகையை உடனடியாக வழங்குவதற்கு திருத்த வரவு செலவுத் திட்டத்தில் பராமரிப்புத் தொகையான ஒதுக்கீடு 404.64 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 2021 22ஆம் ஆண்டில் காத்திருப்புப் பட்டியலிலுள்ள 9185 நபர்களுக்கு அவர்கள் விரும்பும் கருவி வழங்கப்படுவதை உறுதிசெய்ய வரவு செலவு திட்டத்தில் கருவிகள் மற்றும் உபகரணங்களுக்காக 50.66 கோடி ரூபாயென உயர்த்தப்பட்டுள்ளது.
  • தகுதி வாய்ந்த நபர்களுக்கு அவர்கள் பயன்படுத்த விரும்பும் சாதனங்களை வகை மற்றும் மாதிரியில் தெரிவினை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தையும் இந்த அரசு அறிமுகப்படுத்தும்.
  • இத்துறையில் மற்றும் ஒரு முன்மாதிரித் திட்டமாக உலக வங்கியின் உதவியுடன் (rights) திட்டத்தை உரிமைகள் திட்டத்தை இந்த அரசு தொடங்க உள்ளது.
  • குறைபாடுகளை தொடக்க நிலையில் கண்டறிதல், தடுத்தல், பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் கல்வி சேவைகளை பெருமளவு அணுகுதல்.
  • மாற்றுத்திறனாளிகளுக்காகத் திறன் மேம்பாடு மற்றும் அவர்களால் அமைக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவித்தல்.
  • மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாய் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • இத்திட்டம் மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், உலகின் பிற நாடுகளுக்கும் முன்னோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஆறு ஆண்டுகளில் மொத்தம் 1702 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.” என்று முடித்தார் அமைச்சர்.

அமைச்சர் உரையின் ஆங்கிலப் பதிப்பைப் படிக்க

நிதிநிலை அறிக்கை வாசிக்கும் அமைச்சர்
நஇதிநிலை அறிக்கை வாசிக்கும் அமைச்சர்

மாநிலம் முழுவதும் உதவியாளருடன் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகப் பயணம் செய்ய முதல்வர் ஆணையிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவிக்கிறார். இது முதல்வரின் புதிய அறிவிப்பா அல்லது பேண்கள், மூன்றாம் பாலினத்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாதாரணக் கட்டணம் கொண்ட வெண்பலகைப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என ஏற்கனவே முதல்வர் அறிவித்ததைத்தான் தனது நிதிநிலை அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறாரா மாண்புமிகு அமைச்சர் என்பதே இப்போதைக்கு மாற்றுத்திறனாளிகளிடம் எழுந்திருக்கும் குழப்பம் கலந்த கேள்வியாக இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் பெரிதும் எதிர்பார்த்த கல்வி உதவித்தொகைகள் இரட்டிப்பு, சிறப்புப் பள்ளிகள் தரம் உயர்த்தல் மற்றும் புதிய பணிவாய்ப்புகள் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் அறிக்கையில் இடம்பெறாத நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது, துறையின் அமைச்சரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு. மு.க. ஸ்டாலின் இவற்றைப் புதிய அறிவிப்புகளாக வெளியிடுவார் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காய் செயல்படும் சங்கங்களின் பிரதிநிதிகள்

***

தொடர்புடைய பதிவுகள்:

நிதிநிலை அறிக்கை: 2021-22 ஆம் ஆண்டு தமிழக அரசின் வரவு செலவு மதிப்பீட்டு அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *