முகம் பார்த்துப் பேசுபவர்கள், அகம் பார்க்கவும் பழகலாமே!

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
புல்லாங்குழல் வாசித்தபடி இருக்கும் பார்வையற்றவரின் படம்
புல்லாங்குழல் வாசித்தபடி இருக்கும் பார்வையற்றவர்

நான் முன்பு பணியாற்றிய சிறப்புப் பள்ளியில் சில கூத்துகள் அன்றாடம் நடப்பதுண்டு. தூரத்தில் வரும்போதே நான் அணிந்திருக்கிற கண்ணாடியை உற்றுப் பார்த்து எனக்குப் பார்வையில்லை என்பதை அறிந்துகொள்பவர்கள், என்னைத் தாண்டிச் சென்று ஒரு பார்வையுள்ளவரைத் தேடுவார்கள். காரணம் அவர்கள் முகம் பார்த்து என்னிடம் விஷயத்தைச் சொல்லிப் புரியவைக்க முடியாது, அதற்குக் கொஞ்சம் நேரம் பிடிக்கும், அந்த சிரமம் எதற்கு என நம்புவார்கள். இத்தனைக்கும் விஷயம் என்னவாக இருக்கும் தெரியுமா? “சார் இன்னக்கி எனக்கு அல்லது என் மனைவிக்கு பிறந்தநாள், அல்லது எங்க கல்யாண நாள், இந்தக் குழந்தைங்களுக்கு சாப்பாடு போடணும்”

அவ்வளவு ஏன், நானும் ஒரு பார்வையுள்ளவரும் கடைக்குப் போய் சில பொருள் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நான் கொஞ்சம் பேரம் பேசத் தொடங்கிவிட்டால், “சார் கொஞ்சம் இவருக்குப் புரியவைங்க” தொனியில் என்னை விட்டுவிட்டு என்னோடு வந்தவரிடம் கடைக்காரர் பேசத் தொடங்கிவிடுவார். அட! இதுகூடப் பரவாயில்லை. நான் கணினியை மிக லாவகமாகப் பயன்படுத்திக்கொண்டிருப்பதைப் பார்க்கும் ஒரு பார்வையுள்ளவர், அருகே இருக்கும் என் ஆறு வயது மகளிடம், “உங்க அப்பாவுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்” எனக் கேட்பார். மகளுக்குச் சொல்லத் தெரியாது. ஆனால், இதே கேள்வியை என் இணையரிடம் கேட்பார்கள். அவரோ, “சார் அவர்கிட்டேயே கேளுங்க, அவருக்குக் கண்ணுதான் தெரியாது, பேச்சு நல்லா வரும்” என்பார் புன்னகைத்தபடி. என் இணையருக்கும் பார்வையில்லை என்றாலும், அவருடைய தோற்றம் மற்றும் கண் அமைப்பு ஒரு பார்வையுள்ளவரைப் போல இருக்கும் என்பதால், நிறைய நபர்கள் அவரைப் பார்வையுள்ளவராகவே நினைத்துக்கொண்டு பேசுவார்கள். ஒரு ஆசாமி பேஸ்புக்கில் அவருக்கு நிறைய நாட்கள் அம்புவிட்டு, தொலைபேசி எண் கண்டுபிடித்து, பிரபோஸ் எல்லாம் செய்து, கண் தெரியாது என அழுத்தமாய் சொன்னபிறகு, “I am sorry sister” என்று தலைதெரிக்க ஓடிய கதையெல்லாம் நடந்திருக்கிறது.

பல அரசு அதிகாரிகள், ஏன் துறை அமைச்சர்கள் கூட நாங்கள் கோரிக்கை என்று அவர்களை நாடினால், கொஞ்சம் சத்தமாகப் பேசத் தொடங்கிவிடுவார்கள். அதாவது எங்களிடம் eye to eye contact செய்ய முடியாதாம். அதனால் உரத்துப் பேசிஎங்களுக்குப் புரியவைக்கிறார்களாம். ஒரு முன்னால் சமூகநலன் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சரும் இந்த ரகம்தான். இத்தனைக்கும் அவர் மகப்பேறு மருத்துவர்.

இதைவிடவெல்லாம் கொடுமை நடப்பது எங்கு தெரியுமா? எங்களின் குறை தீர்ப்பதற்கென்றே செயல்படும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில்தான். நாங்கள் எங்கள் சக மாற்றுத்திறனாளிகளான உடல்ச்சவால் கொண்டவர்களோடு துறைத்தலைவரைச் சந்திக்கிறோம் என்றால், நாங்கள் பேச்சால் நெருங்குவதைக் காட்டிலும் கண்களால் துறைத்தலைவரும் அந்த உடல்ச்சவால் மாற்றுத்திறனாளிகளும் அதிகம் நெருக்கமாகி இருப்பார்கள். அவ்வளவுதான் நாங்கள் எது சொன்னாலும், தலைவர் அவர்கள் முகத்தைத்தான் பார்ப்பார். சிலர் எங்களிடமே கேட்கும்படி சொல்ல முன்வந்தாலும், பல நண்பர்களுக்கு நம்மை மதித்துக் கேட்கிறார் என்ற கெத்தும் கூடவே வந்துவிடும்.

பேருந்தில் பாஸ் என்று நீட்டினால், பல நடத்துனர்களுக்கு அடிமுதல் முடிவரை அவ்வளவு எரியும். அதிலும் சென்னை, கோவை என தூரப் பயணங்களில் பெரும்பாலும் உச் கொட்டியபடிதான் கால் டிக்கெட் போடுவார்கள். சிலர் இதை எப்படியாவது மறுத்துவிடலாம் என்றநினைப்பில், “இது ஸ்பெஷல் வண்டி, இதுலைலாம் பாஸ் செல்லாது” எனத் தொடங்குவார்கள். பதிலுக்கு நாமும் அவர் குரல் வந்த பக்கமாக முகம் திருப்பி, “நீங்க சொல்றதை அப்படியே எழுதித் தந்திருங்க”னு மென்மையாகக் கேட்போம். அவ்வளவுதான் வேறு வழியின்றி டிக்கெட் போடத் தொடங்கிவிடுவார் ஆனால் புலம்பலும் தொடங்கிவிடும். இந்த இடத்தில் எங்கள் உடன் பயணிப்பவரின் கதிதான் அதோகதி. காரணம் நடத்துனரின் புலம்பலெல்லாம் அவரின் முகம் பார்த்துத்தான். அதிலும், “சார் இது எனக்குத்தான் வினையா வந்து முடியப்போகுது. என் சம்பலத்தில் பிடிக்கப் போறான். இது ஸ்பெஷல் வண்டினா இவருக்குப் புரியவே மாட்டேங்குது” என்று புலம்புவது நம் மண்டையைச் சூடேற்றும். பதிலுக்கு நாம் வாய் எடுத்தால், நம் உடன்வருகிற அந்த நல்லவர் இருக்கிறாரே, “சரி விடு விடு” என்று நம்மை ஆற்றுவார். காரணம், அவர் நடத்துனர் முகம் பார்க்கிற தர்ம சங்கடத்தில் இருக்கிறாராம்.

இந்த முகம் பார்த்துப் பேசுதல், eye to eye contact போன்ற சம்பிரதாயங்களால் பார்வையற்றவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் அவமதிப்புகளும் சிறுமைகளும்  அதிகம். ஆனால், இதெல்லாம் மனிதர்கள் சும்மா சொல்லிக்கொள்ளும் சால்ஜாப்புதான். அவர்களால் முகமே பார்க்காமல்கூட மணிக்கணக்கில் எவ்வளவு தீவிரமாகவும், எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் உரையாட முடியும் எனப் போட்டுடைத்திருக்கிறது க்லப் ஹவுஸ். இதன் பல அறைகளில், சினிமா என்கிற விஷுவல் மீடியாவை விஷுவலே இல்லாமல் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

‘வாயோடு வாய்ச்சொற்கள் மோதிவிடின், கண்பார்வை

கடுகு பயனும் இல.’

ஆனால், இதே க்லப் ஹவுஸை எங்களால் அணுக முடியவில்லையே என செவித்திறன் குறையுடைய தோழர்கள் ஆதங்கப்படுவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, உரையாடலை வரிவடிவிலும் காட்டும் வசதியை க்லப் ஹவுஸ்ஸ் ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளை சக போட்டியாளர்களாக, சம வாய்ப்பு உடையவர்களாக சக மனிதர்களிடம் முன்நிறுத்துகிற தொழில்நுட்பங்கள் ஒருபோதும் மாற்றுத்திறனாளிகளுக்குள்ளேயே அசமத்துவத்தை விதைக்கக்கூடாது.

வாழ்க க்லப் ஹவுஸ்!,

வாழ்க மனிதர்கள்!,

வளர்க சமத்துவம்!.

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com

பகிர

2 thoughts on “முகம் பார்த்துப் பேசுபவர்கள், அகம் பார்க்கவும் பழகலாமே!

  1. தங்களுடைய நீண்டகால மனக்குமரலை படம் பிடித்துக் காட்டியது போல தோன்றுகிறது

  2. தங்களுடைய நீண்டகால மனக்குமரலை படம் பிடித்துக் காட்டியது போல தோன்றுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *