பிறவி காத்த பெருமான்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
இளையராஜா
இளையராஜா

என் நலம் விரும்பிகளின் கவனத்திற்கு:

ஒருவேளை வாழ்க்கையின் ஏதோ ஒரு கடினமான திருப்பத்தில் நான் நினைவுகள் தப்பி, கோமாவில் கிடக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். லட்சம் லட்சமாய் செலவழித்து, மருத்துவமனையின் ஒரு படுக்கையை நெடுநாட்களுக்கு வீணடிக்கத் தேவையில்லை. அந்த ராக ராட்சசனின் பாடல்களை என் காதோரம் ஒலிக்கவிட்டுப் பாருங்கள். ஏதேனும் மாற்றம் தெரிந்தால் தொடர்ந்து முயலுங்கள். இல்லையென்றால், மூச்சு ஓடிக்கொண்டிருந்தாலும் சரி, முடிந்தான்என்று முடிவெடுத்துவிடுங்கள்.

2010க்கு முன், பாடப் புத்தகங்கள் தாண்டி, பிரெயிலில் வேறு புத்தகங்களைப் படித்திராத சில தலைமுறைப் பார்வையற்றவர்களுக்கு சினிமாதான் நாவல், செவ்விலக்கியம், நாட்டார் கதைகள் எல்லாம். திரையிசைப் பாடல்கள்தான் நாங்கள் சுவைத்துச் சிலிர்க்கும் செவிநுகர்க் கவிதைகள். தமிழ்த்திரையிசை வரலாற்றில் பெரும்பாலும் ராகதேவன்தான் பார்வையற்றவர்களின் உணவுப்பசி, உள்ளப்பசி போக்கியவர், இப்போதும் போக்கிக்கொண்டிருப்பவர்.

மேடைக் கச்சேரிகளானாலும், மின்சார ரயில்கள் ஆனாலும் அவரது கடினமான சுரக்கட்டுகளைக்கூட  பிசிறு தட்டாமல் பார்வையற்றவர்கள் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டும், வாசித்துக்கொண்டும் இருக்கிறார்களே ஏன் தெரியுமா? அதில்தான் எங்களின் சூன்யம் நிறைக்கும் சூத்திரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எங்களை எப்போதும் அகலாது சூழ்ந்திருக்கும் இருளில் சுகந்தம் நிறைப்பது அந்த இசைதான். 85 விழுக்காட்டு அறிவினைப் பார்வைப்புலத்தால் மட்டும்தான் பெற முடியும் என்பது அறிவியல். அப்படியானால், அந்த 85ஐ கண்களிலிருந்து காதுகளுக்கு மாற்றி, எங்களுக்குள் தன் இசையைப்  பொழிந்துகொண்டிருப்பவர் இசைஞானி.

ஒரே ஒரு ‘புத்தம்புது காலை’ உதயத்தின் நலினம், மென்மை,  நிதான வருகை என லயித்து லயித்து அதன் மொத்த உருவத்தையும் நாங்களே எங்களுக்குள் வரைந்துகொள்ளத் தூரிகை தந்துவிடுகிறதே. ‘மார்மீது பூவாகி விடவா? விழியாகி விடவா?’, ‘தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு’, ‘உன்னை நான் அறிவேன், என்னை அன்றி யார் அறிவார்?’ தாய்க்குப்பிறகான தலைகோதல் மடிகளை ஏங்கி ஏங்கித் திரிந்த நாட்களில் இசைமடி கிடத்தி, ராகம் எனும் தீரா முலைப்பாலும், திணறத் திணறத் தலைகோதலுமாய் எத்தனை எத்தனை பாடல்கள்.

என்னிடம் அவர் இசையில் வெளிவந்த இருவேறு விதமான பாடல் தொகுப்புகள் உண்டு. ‘கண்ணில் ஏதோ மின்னலடிச்சிருச்சு, ஏதோ மோகம், ஏதோ தாகம், பூவாடைக் காற்று, இது கனவுகள் விளைந்திடும் காலம், ஒரு காவியம் அரங்கேறும் நேரம், பொன்வானம் பன்னீர்த் தூவுது, என்னுள்ளே என்னுள்ளே, இளமையெனும் பூங்காற்று, என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம்’ போன்ற பாடல்கள் இடம்பெற்ற அந்தத் தொகுப்புக்கு நான் ‘இராஜாவின் யாமம்’ எனப் பெயர் கொடுத்திருக்கிறேன்.

நேர்மாறாக, இன்னோரு தொகுப்பில், ‘என்ன என்ன கனவு கண்டாயோ, அப்பன் என்றும் அம்மை என்றும், எங்கேசெல்லும் இந்தப் பாதை, வார்த்தை தவறிவிட்டாய்’ போன்ற பாடல்கள் உண்டு. அதற்கு நிதர்சனம் ஒரு விமர்சனம் எனத் தலைப்பிட்டிருக்கிறேன்.

கொழுத்த கந்தமும், கொலுசுச் சந்தமுமாய் கடந்துபோகிற கன்னிகைகளின் உந்தியாழத்திலிருந்து அகழ்ந்தெடுத்த பனிக்கூழின் குளிர்ச்சியைத்  தேன் குழைத்து வெளித்தள்ளுகிற காற்றின் செயலுக்கு  செவி சில்லிடும், மனம் கிடந்தலையும். நக்கிப் பிழைக்க மனம் உக்கிரம் கொள்கையில், பின்னணியில் ஒரு கோரசை ஓடவிட்டபடி, ‘பவளமணித் தேரில் பருவம் அரங்கேற, மெழுகு திரிபோல கரைந்து உறவாட’ என ஒருபுறம் உசுப்பேற்றுகிற மூக்குபுடைத்த தோழன், ‘தட்டுக்கெட்டு ஓடும், தள்ளாடும் எந்நாளும் உன் உள்ளக்குரங்கு, கட்டுப்படக் கூடும் எப்போதும் நீ போடு மெஞ்ஞான விலங்கு’ மறுபுறம் சித்தனாய் நின்று பித்தம் தெளிவிக்கிறார்.

வெறும் பாடல்களில் மட்டுமா எங்கள் பார்வைப்புலம் மீட்டெடுத்தார்? இல்லை. எவர் உதவியுமின்றி மூன்றாம் பிறை, உதிரிப் பூக்கள், புன்னகை மன்னன் பார்த்துச் சிலிர்த்து, நீங்கள் பெற்ற  உணர்வுகளுக்குக் கொஞ்சமும் குறையாதபடிக்கு, காட்சி வர்ணனையைத் தன் பின்னணி இசையாலே எமக்குள்ளும் கடத்திவிடுவார். வேண்டுமானால் நீங்கள் கண்மூடிக் கொள்ளுங்கள், நான் கதை சொல்கிறேன் என்று நான் சவால்விடுகிற சாத்தியத்தைச் சமைத்துக் காட்டியதுஅவரின் பின்னணி இசைக்கோர்ப்பு.

தளபதி படத்தில் முதல்முறையாக மம்முட்டி ரஜினியிடம், “ரமனன் செஞ்சது தப்பு, நீ செஞ்சதுதான் சரி, ஆனா எனக்காக ஏன் அடிவாங்இன” எனக் கேட்பார். அப்போது, ரஜினி “ஏன்னா நீ என் நண்பன்” சொன்னதும் மிகச் சிறிய இடைவெளிக்குப் பிறகு ஒரு இசை கோர்த்திருப்பார். உண்மையில் திரையில் என்ன காட்சி என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு மொட்டு மெல்லத் திறந்து மலர்வதுபோல நட்பு மலர்வதாய் நான் உவமித்துக் கொள்வதுண்டு.

சலங்கை ஒலி படத்தில், ஜெயப்பிரதா கச்சேரிக்கான அழைப்பிதழை கமலிடம் காட்டி, குச்சுப்பிடிக்கு இவர், மோகினி ஆட்டத்திற்கு இவர் எனச் சொல்லிக்கொண்டு வருகையில், பரதநாட்டியம் பாலு என கமலின் பெயர் இருக்கும். கமல் நெஞ்சு விம்மும். கூடவே, நமது நெஞ்சும் விம்மும்படியாக ஆஆஆஆ என ஒரு கோரஸ் வைத்துக் கலங்கடித்துவிடுவார்.

அன்பை, நட்பை, பரிவை, பாசத்தை மட்டுமல்ல, மனிதன் அன்றாடம் கொள்ளும் காமம், குரோதம் அத்தனைக்கும் முகங்களை அவர் தன் வாத்தியங்களுக்குள் வைத்திருக்கிறார். உதிரிப்பூக்கள் விஜயனுக்குப் பின்னணியாக ஒரு இசை வருமே அம்மாடியோ நெஞ்சு அதிரும். முதல்மரியாதை வடிவுக்கரசிக்கு ஆகட்டும், செங்கோடன் “உங்க மருமகன் செல்லக்கண்ணுத்தேன்” சொல்லும்போதே எவ்வளவு காத்திரமாக சிவாஜியின் முகம் மாறுகிறது என்பதைக் கற்பனை செய்துகொள்ளும்படியாக ஒரு பயங்கரமான இசையை வைத்திருப்பார்.

அது மட்டுமா? கமலுக்கு, ரஜினிக்கு, விஜேகாந்துக்கு, மோகனுக்கு, என அவர் சிருஷ்டித்த எஸ்பிபிகள், ஏசுதாஸ்கள்  எத்தனை எத்தனை? கம்பீரமும் பரிவும் கொண்ட சிவாஜியின் மொத்த சொரூபத்தை நான் மலேஷியா வாசுதேவனின் குரலில் அல்லவா முற்றுமாய் உணர்ந்தேன். ஸ்ரீதேவியின் முகத்தை சைலஜாவின் குரல் குளிர்ச்சியிலும், துடுக்கும் மென்மையும் கலந்த ஸ்ரீப்பிரியாவின் கண் சிமிட்டலை வாணிஜெயராமின் தொண்டைக்குழி ஒலியோடு தொடர்புறுத்தியும், ராதா, ராதிகா, அம்பிகாவின் உதட்டுச் சிரிப்பு, கன்னக் குழைவு அத்தனையையும் ஜானகியின் அங்காத்தலிலும் இதழ் குவிதலிலும் பொருத்திவைத்தார்.

எனக்கென்று ஒரு ராகமாளிகை கட்டித் தந்து, காலத்திற்கு ஒன்றாய் நான் கைகோர்த்துத் திரிய எத்தனை எத்தனை ராக தேவதைகளை என் வனம் குதிக்கச்செய்திருக்கிறார்.

‘சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே! வார்த்தைகள் தேவையா? ஆ ஆஆஆ’ ஈரக் காற்று சுமந்து இதம் தரும் ஜென்சி,

‘கட்டழகப் பார்க்க, இரு கைகளிலே செர்க்க. மொட்டவிழும் நேரம் புது மோகத்திலே வாடும்’ குளிர்காற்றால் நெஞ்சுக்குழி விதிர்க்கும் சைலஜா,

‘கலங்கம் வந்தாலென்ன பாரு, அதுக்கும் நிலானுதான் பேரு’ எனக்காகவே அழ, சிரிக்க, என்னை ஆற்றுப்படுத்த ஜானகி,

‘இருட்டில்கூட இருக்கும் நிழல் நான், இறுதிவரைக்கும் தொடர்ந்து வருவேன்’ என் காதோடு மட்டுமே பேசிப் பேசி கணம் மறக்கச் செய்யும் உமா ரமனன்,

‘நீ பார்க்கும்போது பனியாகிறேன், உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்’ நீங்கா சகியென நேசம் கொள்ளும் சித்ரா,

‘உன் பெயர் உச்சரிக்கும், உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்; இங்கு நீ இல்லாது வாழ்வில் ஏது வேனில்காலம்தான்’ நானே கண்டுகொள்ளாவிட்டாலும் எனக்காகக் கரைந்தழியும் சொர்ணலதா என கற்பனையில் எனக்குத்தான் எத்தனை கதாநாயகிகள்.

துன்பக் கடலில் மூழ்கும்போது தோணியாவது கீதம் என ஒரு பழம்பாடல் உண்டு. உண்மையில் ராஜாவின் இசை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், பிறவி எனக்கு தந்துவிட்ட பெருஞ்சவாலை முட்டித் தள்ளி, முன்னேறும் எனது முயற்சியில் மூர்க்கம் வளர்ந்திருக்கும். உலகின் தர்க்கத்தைச் செவிகூர்ந்து, அறிவை வளமாக்கி, அதனால் பெற்ற படிப்பு, பதவி, பணம் அத்தனையும் நிறைந்திருக்கும். கூடவே, நெஞ்சில் துளியும் ஈரமில்லாத இறுமாப்பும்.

பிறவி காத்த பெருமானே! பிழைத்திருக்கிறேன் உம்மால்.

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு; vaazhgavalluvam@gmail.com

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *