உளம்கொண்டு படியுங்கள்! உண்மையென்றால் பகிருங்கள்!

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
ஒலிப்புத்தகம் கேட்கும் பார்வையற்றவர்
ஒலிப்புத்தகம் கேட்கும் பார்வையற்றவர்

நான் இப்போது சொல்லப்போகும் உண்மைச் சம்பவத்தை உளம்கொண்டு படியுங்கள். உண்மையென்று உங்களுக்குப் பட்டால், உலகத்துக்கும் பகிருங்கள்.

2012 ஆகஸ்ட் 30. அன்று எனது 29ஆவது பிறந்தநாளை நான் முன்பு பணியாற்றிய பார்வையற்றோருக்கான அரசு  சிறப்புப் பள்ளி மாணவர்களோடு கேக் வெட்டிக் கொண்டாடினேன். பிறகு நானும் பள்ளித் தலைமை ஆசிரியரும் புதுக்கோட்டைக்கு அருகே ஒரு கிராமத்துக்கு ஹோம் விசிட்டிங் (Home Visiting) கிளம்பிவிட்டோம். நிற்க! ஹோம் விசிட்டிங் என்பது, சிறப்புப் பள்ளியில் சேர்க்கப்படாத அல்லது பெயரளவில் தன் வீட்டிற்கு அருகாமையிலிருக்கிற ஒரு சாதாரணப் பள்ளியில் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிற குழந்தைகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று, அவர்கள் பெற்றோரிடம் பேசி, சிறப்புப் பள்ளியில் சேர்க்க முயற்சிப்பது. அப்படி ஒரு பார்வையற்ற சிறுவனைப் பார்க்கத்தான் நாங்கள் கிளம்பினோம். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அவன் வீட்டுக்குப் படையெடுத்துக்கொண்டிருந்தோம். பலன், இன்று அவன் புதுக்கோட்டையில் எட்டாம் வகுப்புவரை படித்து, தற்போது தஞ்சைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறான்.

அன்று, பள்ளியில் சேர்க்க அவன் அம்மாவுக்கு விருப்பம். அப்பா என்கிற குடிமகனுக்கு நாங்கள் சொல்வது பற்றியெல்லாம் அக்கறையே இல்லை. களைத்துப்போன நாங்கள் திரும்பி நடந்தோம். வரும் வழியில் அந்தப் பார்வையற்ற பெண்ணை எதார்த்தமாகப் பார்த்தார் தலைமைஆசிரியர்.

“செல்வி நல்லா இருக்கியா?” (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அந்தப் பெண்ணுக்கு அதிர்ச்சி. எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதே என்ற யோசனை.

“நான் வளர்மதி டீச்சர், ஞாபகம் இல்லையா?”

அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சி. “டீச்சர் நல்லா இருக்கீங்கலா?” குனிந்த தலையும், சற்று கோணல் உடல்மொழியுமாய் அவள் எங்களை நெருங்க, நாங்கள் அவள் அருகில் சென்று அவளின் கூரை வீட்டு முற்றத்தில் உட்கார்ந்தோம். அவள் வீட்டார் தலைமை ஆசிரியரை நலம் விசாரித்து, எங்கள் இருவருக்கும் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்கள்.

“உங்க ஊருல உன்னப்போலவே ஒரு பையன் இருக்கான். உங்க பக்கத்து தெருதான். உன்னைய மாதிரியே ஸ்கூலுக்கு வர அடம் பிடிக்கிறான். அவனத்தான் பார்க்க வந்தோம்.” தலைமை ஆசிரியர் சொன்னார்.

“இந்தப் பொண்ணும் அப்படித்தான் சார். வந்து ரெண்டே நாள்தான் இருந்துச்சு. ஒரே அடம். அழுது புரண்டு அவுங்க அப்பா வீட்டுக்கே கூட்டிட்டு போயிட்டாரு. அப்புறமா வரவே இல்ல. இவ திருச்சில லெக்சரரா இருக்காலே அந்த பொண்ணு, அவ பேரு கூட,,,  ஊம் கார்த்திகா அவளோட செட்டு” பழைய நிகழ்வை தலைமை ஆசிரியர் என்னிடம் சொல்லிக்கொண்டே, “செல்வி இது நம்ம ஸ்கூல்  சார். அவருக்கும் உன்ன மாதிரித்தான்” சொல்லிக்கொண்டே அந்தப் பெண்ணின் கையை என் கை மீது வைத்தார்.

கொஞ்சம் அழுத்திப் பிடித்தாலும் முறிந்துபோகும் நிலையில் நரம்பென இருந்தது அவளின் கை.

“அப்பா எப்படி இருக்காரு செல்வி?”

“அவரு இறந்துட்டாரும்மா. விரக்தியாகச் சொன்னார் செல்வியின் அம்மா.

“டீச்சர் இப்போ நான் ஸ்கூலுக்கு வாறேன். என்ன சேர்த்துக்கிறீங்களா? எனக்குப் படிப்பெல்லாம் சொல்லித் தரவேண்டாம் டீச்சர். குளிக்க மட்டும் சொல்லித்தாங்க ” சர்வ சாதாரணமாக அவள் சொன்னதில் நான் அதிர்ந்துவிட்டேன்.

“என்ன சொல்லுறீங்க?”நான் அதிர்ச்சியில் கேட்டேன்.

“ஆமா சார். அது தெரியலைனுதான் என்னை எங்கேயும் சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க.” வெள்ளந்தியாகச் சொன்னாள்.

“இப்போ எப்படிக் குளிக்…” நான் பாதியிலேயே தடுமாறி நிறுத்த,

“எங்க அம்மாதான் எனக்கு எல்லாமே செஞ்சுவிடுது.”

“அவுங்களுக்கு அப்புறம்?”

“எங்க அம்மா போகும்போதே எனக்கும் ஏதாச்சும் கொடுத்துக் கூடவே கூட்டிட்டுப் போயிடுமாம். எங்க அம்மாவே சொல்லிருக்கு.”

“இப்போ உங்களுக்கு என்ன வயசு?” தயங்கியபடியே கேட்டேன்.

“29”

எனக்கு வெடித்து அழ வேண்டும்போல் இருந்தது.

“இங்க பாருங்கமா! சும்மா டிரீட்மண்ட் டிரீட்மண்ட்னு அவன் வாழ்க்கைய வீணடிச்சிறாதீங்க. இனிமேல் அவனுக்குப் பார்வை வரும்போது வரட்டும். அவனுக்குன்னு சில ஸ்கூல்ஸ் எல்லாம் இருக்கு. அங்க கொண்டுபோய் சேர்க்கப் பாருங்க.” அரவிந்த் கண் மருத்துவமனையின் ஒரு மருத்துவர் கண்டிப்போடு சொன்னதும்,

“கௌசல்யா! எத்தனை நாளைக்குத்தான் புள்ளைய உன் கைக்குள்ளேயே வச்சிருப்ப. அவன் அறிவாப் பேசுறான், பாடுறான். அவன எங்கேயாச்சும் சேர்த்துப் படிக்கவை”னு திமுகவைச் சேர்ந்த கமுதி வீரசேகரன் மாமாவும் அன்போடு கேட்டுக்கொண்டதே என் வாழ்வின் பெருந்திருப்பத்துக்கு முதல் வித்தாய் அமைந்தவை.

சற்றென்று அந்த இருவரையும் உளமார நன்றியோடு நினைவு கூர்ந்தேன். உற்ற காலத்தில் அவர்கள் வழிகாட்டியிருக்காவிட்டால், கல்வி எனும் கண்ணொளி எனக்கு உரிய வயதில் கிடைத்திருக்காவிட்டால், இன்று நானும் ஒரு செல்விதான்.

அன்புத் தோழமைகளே!

இன்றும் கூட, உங்கள் அண்டை வீட்டில், உங்கள் தெருவில், ஊரில், உங்களின் உறவுகளில் என  எத்தனையோ பார்வையற்ற அல்லது வாய் பேச இயலாத செல்விகளும், கண்ணாயிரம்களும் போதிய விழிப்புணர்வு இன்மையால், பிறந்துவிட்டதாலேயே, ஆயுளுக்கும் தூக்கிச் சுமக்கிற பாரமாய் அவர்களின் குடும்பத்தில் ஒட்டிக்கொண்டிருப்பார்கள். அப்படி ஏதேனும் ஒரு குழந்தையை நீங்கள் சந்திக்க நேர்ந்தால், அவர்களுக்கான அத்தனை வசதிகளையும் இலவசமாகத் தந்து அவர்களை வாழ்வில் முன்னேற்ற சுமார் இருபதுக்கும் மேற்பட்ட அரசு சிறப்புப் பள்ளிகள் தமிழ்நாடெங்கும் அரசால் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்ற தகவலை அவர்களின் பெற்றோருக்குச் சொல்லுங்கள். மேலதிகத் தகவல்களுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களைத் தொடர்புகொள்ளுங்கள். பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகள் பற்றி அறிய:

செல்வி. சித்ரா:9655013030

திரு. சுரேஷ்குமார்:9585757661

திருமதி. விசித்ரா:9789533963

திரு. சுப்பிரமணியன்:9043822751

திருமதி. சோஃபியாமாலதி:9629495808

செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகள் பற்றி அறிய:

திரு. செல்வம்:9786513435

திரு. செபாஸ்டின்9150597755

உங்களின் சில வார்த்தைகள், எங்களின் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை கொண்டது.

விழிப்புணர்வு பரப்புவோம், விடியட்டும் விளிம்புநிலை மக்களின் உலகம்.

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com

பகிர

2 thoughts on “உளம்கொண்டு படியுங்கள்! உண்மையென்றால் பகிருங்கள்!

  1. உளம்கொண்டு படியுங்கள் உண்மையென்றால் பகிருங்கள் தலைப்பே மிகவும் அருமை. இந்த உண்மை சம்பவத்தை மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகின்ற சரியான சமயத்தில் கூறியது அதைவிட அருமை கௌசல்யா போன்ற பெற்றோர்கள் இருந்தால் இது போன்ற செல்வி உருவாகமாட்டார்கள் நிச்சயம் அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

  2. உளம்கொண்டு படியுங்கள் உண்மையென்றால் பகிருங்கள் தலைப்பே மிகவும் அருமை. இந்த உண்மை சம்பவத்தை மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகின்ற சரியான சமயத்தில் கூறியது அதைவிட அருமை கௌசல்யா போன்ற பெற்றோர்கள் இருந்தால் இது போன்ற செல்வி உருவாகமாட்டார்கள் நிச்சயம் அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *