காலத்தின் முன்னே ஒரு கம்பீரச் சிற்பம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
புஷ்பநாதன்
புஷ்பநாதன்

அந்திம காலம்வரை பசுமையோடு மனிதன் தன் மனதுக்குள் பற்றியிருப்பது பள்ளிகால நாட்களைத்தான். எத்தனை உதறியும் அவை தாய்ப்பாலின் தித்திப்பைப் போல இறப்புவரை மனதால் சப்புக்கொட்டி சுவைக்கப்படுபவை. முதலும் கடைசியுமாய் அவன் நிபந்தனையின்றித் துள்ளித் திரியும் பருவம் அதுதானே. எனக்கும் அப்படித்தான். என் நினைவடுக்கின் ஆழத்தில் தங்கியிருந்து எப்போதும் தொலைவுக்கும் ஒளிர்வது இரண்டு விடயங்கள். ஒன்று இசை ஞானியின் இசை. மற்றொன்று என் திருப்பத்தூர் பள்ளி நாட்கள். அதிலும் பழைய கிரவுண்ட் புது கிரவுண்ட் ஆடிடோரியம் மூன்றும் அந்தப் பள்ளி மாணவர் ஒவ்வொருவருக்குமான தியான வெளிகள்.

அங்கேதான் மனனம் தந்த சோர்விலிருந்து மடைமாறினோம். “படிக்கவே லாயக்கில்லை” என்ற வகுப்பாசிரியர்களின் வசவுகள் எதிரொளிக்காத இடங்கள் அவையெனக் கண்டோம். புள்ளிகளை தடவித் தடவியும், கணக்குக் குச்சிகளில் உரசி வீங்கியும் பருத்த விரல்நுனிகள் விடுதலை உணர்ந்ததும் அந்த இடங்களில்தான். அவற்றுள்ளும் பள்ளிக் கட்டடத்தின் முதலாம் தளத்தில் இருக்கும் ஆடிட்டோரியம் மற்றும் பள்ளிக்கு இடப்புறமாக ஆசிரியர்கள் வீட்டைக் கடந்து புற்கள் மண்டிக் கிடந்த புதுகிரவுண்டுக்கும் இடையே நாங்கள் சொல்லாமலேயே எங்கள் கால்கள் விரைந்தோடிக்கொண்டிருந்தன. அங்கே எப்போதும் எழுந்தருளும் உச்சவ மூர்த்தியாய் எங்கள் உடற்கல்வி ஆசிரியர் திரு. எபிநேசர் என்கிற புஷ்பநாதனை நாங்கள் அறியாமலேயே எங்கள் அகம் கண்டுகொண்டது போலும். சொல்லப்போனால், துடிப்பான கம்பீரமான நடை, உடை, குரல் என எங்கள் அப்பன்களில் உணராத ஏதோ ஒன்றை நாங்கள் அவரில் கண்டடைந்தபடியே இருந்தொம்.

உடற்பயிற்சி வகுப்புகளில் பயிற்சி முறைகளோடு அவரிடமிருந்து அதிர்ந்தபடி அப்பழுக்கற்ற கூழாங்கற்கலாய் புறப்பட்டு எங்களை நோக்கிவந்து, செவிமோதித் திரும்பும் அட்டென்ஷன் ஸ்டாண்ட் அட் ஈஸ் என்கிற ஆங்கிலக் கட்டளைச் சொற்களையும் சேர்த்துத்தான் கற்றோம். ஒருவகைத் துள்ளலோடு, நீண்டு ஒலிக்கும் அட்டேஏஏன் ஷன், வகுக்கப்பட்ட இடைவெளிகளோடு கம்பீரமாய்த் தொடங்கி, குரல் இறக்கத்தோடு முடியும் ஸ்டாண்ட் அட் ஈஸ் என்ற அந்த இரு வார்த்தைகளைக் கையாள்வதில் திருப்பத்தூர் மாணவர்களுக்கும் பிறருக்குமான வேறுபாடு அவரின் தனித்துவத்திற்குச் சான்று.

விறைப்பும், கம்பீரமும், விசில் சத்தமுமாய் எங்களை எப்போதும் அவர் விரட்டிக்கொண்டிருந்தார் இல்லை இல்லை விதைத்துக்கொண்டிருந்தார். கைப்பந்து, ஜிம்னாஸ்டிக், கபடி போன்றவற்றைக் கற்பித்து, பிறரின் கழிவிரக்கத்தால், பார்வையற்றோராகிய எங்களிடமிருந்து விலக்கப்பட்டிருந்த எங்களின் வீறாண்மையை நாங்களே உணரும்படிச் செய்தார்.

“in loyal competition, respecting the regulation பட்டை தீட்டப்பட்ட வைரக்கல் பளிங்குத் தரையை வெட்டி மோதுவது போன்ற கனமும் துல்லியமும் ஸ்பஷ்டமும் கலந்த குரலில் அவர் சொல்லித் தந்த ஸ்போர்ட்ஸ் வோத் என்கிற விளையாட்டு உறுதிமொழியை எங்கள் வகுப்புத் தோழிகள்ள் முன்னால் போய்ச் சொல்லி நாங்கள் விறைப்பு காட்டி அலைந்த நாட்கள் நினைவாடுகின்றன. ஒவ்வொரு வாரத் திங்கள் கிழமை கொடியேற்றத்துக்காக அவர் எடுத்துக்கொள்ளும் சலிப்பில்லாத முன் தயாரிப்பு நேரங்களில் அருகிருக்க மாணவர்கள் விரும்புவோம். எட்டரை மணி காலை வெயிலில், எதையாவது பேசத் தொடங்கி, எங்களைச் சிரிக்கவைத்தபடி, பூக்களைக் கொடித்துணியில் சுற்றி மேலே கட்டுவது, பள்ளி மாணவத்தலைவன் மார்ச் ஃபாஸ்ட் செய்யக் கோடுகள் வரைவது என ஓடி ஒடி கொடிக்கம்பத்தின் முன்னால் ஒரு ரசனைக்குரிய நாட்டியத்தையே நிகழ்த்திக்கொண்டிருப்பார்.

பள்ளி வழிபாட்டுக் கூட்டங்களில், மற்ற ஆசிரியர்கள் விவிலியத்திலிருந்து ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு, “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!” என்கிற தொனியில் உரையாற்ற, பள்ளிச் சிறார்கள் என்றாலும் என்றேனும் தங்கள் நினைவடுக்கிலிருந்து மீட்டிக் கொணர்ந்து புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு, அன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகளை அரசியல், சமூகம் என ஏதாவது ஒரு பொருண்மையோடு கலந்து எங்களுக்குச் சொல்வார். அந்தவகையில், மற்ற ஆசிரியர்களில் அவர் விதிவிலக்கு. அவர்தான் கலைஞரையும் திமுகவையும் எங்களுக்கு அறிமுகம் செய்தவர். அதன் தொடர்ச்சியை அவரின் ஓரியன்டேஷன் மொபிலிட்டி வகுப்புகளில், அவர் கைபிடித்து, நகரின் வங்கிகள், தபால் நிலையங்கள் எனச் செல்கையில் நாமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். பாடம் தாண்டி மாணவர்களிடம் காணப்பட்ட அந்த நாட்டத்தை அவர் பெரிதும் மதித்தார். ஒரு சிறு குழந்தைபோல தன்னை மறந்து அவர் எங்களுக்கு அரசியல், சமூகப் பொருளாதார வகுப்பெடுக்கத் தொடங்கிவிடுவார்.

கல்விச் சுற்றுலாவில் நாங்கள் திட்டமிட்டு இறங்கிப் பார்க்கும் இடங்கள்  மட்டுமல்லாது, பயணத்தில் பேருந்து கடந்து செல்லும் எல்லா ஊர்கள் பற்றியும்  ஏதேனும் ஒரு சுவையான தகவல்களை சிரிப்பும், சிலிர்ப்புமாய் மிகச்  சுவாரசியமாகப் பகிர்ந்தபடியே எங்களோடு பயணிப்பார். ஒரு சிறப்புப் பள்ளி ஆசிரியனாய் இதை நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டு, என் மாணவர்களிடம் நடைமுறைப்படுத்தி வருகிறேன்.

உண்மையில், திருப்பத்தூர் பள்ளியின் சிறப்பான பொற்காலத்தை வடிவமைத்ததில் போஸ், புஷ்பநாதன் என்ற இரண்டு ஆசிரியர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. முன்னவர் வழிதவறிய ஆட்டுக்குட்டிகளாகிய எங்களைத் தூக்கிச் சுமக்க, விண்ணகப் பிதாவால் அனுப்பப்பட்ட தேவகுமாரன். பின்னவர் எங்களின் பெருங்கொண்டாட்டங்களை சிருஷ்டித்து, ஆயுளுக்கும் நாங்கள் மீட்டிப் பார்க்கும் குழலிசையை எங்களுக்குக் கையளித்த கிருஷ்ண பரமாத்மா.

மதிநுட்பமும், உள்ளார்ந்த ரசனையும் கொண்ட திறமையான ஆளுமை அவர். உண்மையில் அவர் இல்லாத பள்ளி விளையாட்டுப் போட்டிகளைக் கற்பனை செய்ய முடியாது. மாணவர்கள் மீதான அவரின் கண்டிப்பு என்பது, இரண்டடிகளும், இரண்டு நிமிடக் கோபம் மட்டுமே. மற்றபடி, முரடும், கீச்சும் கலந்து காற்றை வெளித்தள்ளும் சிரிப்பாகத்தான் அவர் எங்களில் நிழலாடுகிறார். நான் படித்த எட்டாண்டுகளில், அவர் சொர்வுற்று நான் பார்த்ததில்லை. இத்தனைக்கும் அவர் நிர்வாகம் வழங்கிய மிக மிகக் குறைந்த ஊதியத்திலேயே பல ஆண்டுகள் எதற்காகவும், எவர் மீதும் குறைகாணாதவராகப் பணியாற்றினார்.

ஆனால், இன்று நான் கேள்விப்படுபவை அத்தனை உவப்பானவையாக  இல்லை. முதுமை காரணமாக அவர் உடல் முடங்கிவிட்டது. அவருக்கான உரிய சிகிழ்ச்சையைப் பெறவிடாமல்,  காலம் முழுக்க அவரைத் துரத்திக்கொண்டிருக்கும் வறுமை தடுக்கிறது. ஒரு கம்பீரச் சிற்பம் காலத்தின் முன்னே அதன் பொலிவை இழந்து , நிற்க வலுவின்றிக் கிடந்த நிலையில் பரிதவிக்கிறது. உண்மையில்,  பேராற்றலும் பெருங்கருணையும் கொண்ட மனிதர்களிடம்கூட கருணை காட்டாத கொங்காப் பயல்களா, இந்தக் காலமும் கடவுளும் என அவர் வார்த்தைகளைக்கொண்டே வசைபாடத் தோன்றுகிறது.

நண்பர்களே! உரியவர்களைத் தொடர்புகொண்டு உகந்ததைச் செய்வீர்கள் என நம்புகிறேன். இது நன்றிக்கடன் இல்லை. மகன் தந்தைக்குச் செய்யும் பணிவிடை.

***

ப. சரவணமணிகண்டன்

பகிர

6 thoughts on “காலத்தின் முன்னே ஒரு கம்பீரச் சிற்பம்

  1. அதிகம் உணர்ந்து, உறைந்து எழுதியிருக்கிறீர்கள். இப்படியோர் ஆசிரியரிடம் கற்க வாய்ப்பு பெறாததை நினைக்கையில் சிறிது வருத்தமே.
    அவர் விரைவில் சுகம்பெற இறைவன் அருள் புரியட்டும்.

    1. உணர்ந்ததில் பாதியை மட்டும்தான் பகிர்ந்திருக்கிறேன் என்று சொல்லவேண்டும். உங்களுடைய வேண்டுதலுக்கு நன்றி.

  2. Myself Nesi.. Thank you brother Saravana Manikandan for sharing your golden memories of my father,Late Mr.Bose H.M, Blind school,Thiruppathur and My parents colleague Mr.pushpanathan.I could remember the sacrifice and commitment of their services to beloved blind children.They are the role models to many young generations.We salute for their kind hearted services..I have talked with pushpanathan uncle today. He is very sick due to paralysis.His haemoglobin level is 3 GM’s only.No one is ready for blood donation..He is in bed only and not even perform his self activities,.May the God grant him peace and complete healing

    1. தங்களுடைய பாராட்டுகளுக்கும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அக்கா.

  3. முதலில் வாழ்த்துகள் சரவணன் அவர்களே! எனது பள்ளி வாழ்க்கையை மீளவும் ஒருமுறை அசைபோடச் செய்தமைக்கு. இவர்களின் பேராளுமைகளுக்குமுன் எவரையும் என்னால் எப்போதுமே ஒப்பிட இயலாது. இப்படிப்பட்ட மனிதர்களை இவ்வுலகு காண்பதறிது என்றுதான் கூறத்தோன்றுகிறது. குறிப்பாக நம்போன்ற பிள்ளைகளை எப்படி வளர்த்தெடுக்கவேண்டும் என்பதில் இவர்களுக்கிருந்த அக்கறை மற்றும் சுயநலமற்ற பேரன்பு வேறெங்கும் காணக்கிடைக்காது. இன்னும் நிறைய இருக்கிளது. சொல்ல நேரம்தான் அனுமதிப்பதில்லை. இப்பதிவு உள்ளபடியே என்னை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டதென்றே சொல்லத்தோன்றுகிறது. பேராசிரியர் ஞானகுரு புதுவை. நன்றிகளுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *